வெளிச்சத்தின் மறுபக்கம் 6 (2)

“நேத்தைக்கு அவன் பேசுன பேச்சுக்கு இந்நேரம் கால்ல விழுந்து கெஞ்சிட்டு இருப்பான்” சிரிப்பினூடே வித்யுத் சொல்ல, அதை ஆமோதிப்பதை போல் தலையாட்டினான் அதிரன். அவர்கள் கூறியதை போல் கெஞ்சிக்கொண்டு தான் இருந்தான் சியான்.

“மேடம்! ப்ளீஸ் மேடம்! இந்த ஒரு தரம் என்ன மன்னிச்சிடுங்க மேடம்! இனிமேல் நீங்க இருக்குற திசை பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன். ப்ளீஸ் ப்ளீஸ் மேடம்” தடயவியல்  தலைமை மருத்துவர் மதிவதனாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் சியான். அவளோ அதை சிறிதும் சட்டை செய்யாமல் காதில் விரலை விட்டு ஆட்டியபடி அமர்ந்திருந்தாள்.

முந்தைய தினம் முழுவதும் அலைந்து திரிந்து, கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களிடம் கெஞ்சி கூத்தாடி, தொண்டர்களுக்கு ஐஸ் மேல் ஐஸ் வைத்து, இரவோடு இரவாக நல்லடக்கம் செய்த உடலை தோண்டி எடுத்து தடயவியல் வருவதற்குள், “ஐயோ” என்றானது அவனுக்கு. “சப்பா! எப்படியோ அதிரன் சார் கொடுத்த வேலை முடியப் போகுது” என்று நிம்மதி பெருமூச்சு விட துவங்கியவனின் மூச்சு அதிர்ச்சியில் இறங்க முடியாமல் அந்தரத்தில் தொங்கியது, அங்கு இருந்தவளை பார்த்து. “ஐயோ! மறுபடியும் இவளா?” சத்தமின்றி கதறியது அவன் மனம். பின்னே சத்தமிட்டால் அதற்கும் சேர்த்தல்லவா வைத்து செய்வாள். அவன் இங்கே கதறிக் கொண்டிருக்க, அவளோ அவன் கதறல் வீண் என்பது  போல் தன் பணியாளரைக் கொண்டு உடலை உள்ளே எடுத்து சென்றவள், நல்ல பிள்ளையாய் போஸ்ட் மார்டத்தை செய்து முடித்தாள். அவன் கூட, “என்ன சரவெடி அமைதியா போகுது? இந்த அமைதிக்கு பின்னாடி ஏதும் உள் குத்து இருக்குமோ?” என்று நினைத்தான். அவன் கணிப்பு சரியே என்றதாய், பிரேத பரிசோதனை அறிக்கையை கொடுக்காமல் அவனை கெஞ்ச விட்டு ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவன் கெஞ்ச கெஞ்ச, “ம்! எனக்கு பத்தல சியான். இன்னும் நல்லா கெஞ்சு” என்று அவன் உயிரை வாங்கிக் கொண்டிருக்க, பொறுத்துப் பார்த்தவன், “அம்மா தாயே! என்னால முடியல. விட்டிடு. அப்படியே ஓடிடுறேன். இந்த பக்கம் இனி வரவே மாட்டேன்” என்று சொல்லவும் வித்யுத்தும் அதிரனும் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.

உள்ளே வந்த அதிரன், “நீ போடா, போய் ரெஸ்ட் எடு” அவன் ஓய்ந்து போன தோற்றத்தை கண்டு கூற, விட்டால் போதும் என்று ஓடியே விட்டான் அவன். சியானின் தலை மறைந்ததும் வதனாவை முறைத்த வித்யுத், “உனக்கு வர வர சேட்டை கூடிட்டே போகுது. என்னைக்கு என் கைல இருந்து வாங்க போறேன்னு தெரியல” என்று அதட்ட, “மச்! விடுடா, சின்ன பொண்ணு தானே” என்று அதிரன் அவளுக்கு சாதகமாய் பேச, “நீ குடுக்குற செல்லத்துல தான் அவ இந்த ஆட்டம் ஆடுறா. உனக்கு இரண்டு போட்டா அவ தானா சரி ஆய்டுவா” கோவமாய் கூறியவனை பார்த்து சிரித்து வைத்தனர் ஏனைய இருவரும்.

“ஓகே கய்ஸ் ஜோக்ஸ் அபார்ட், வதனா ஆடோப்சி ரிப்போர்ட் என்ன சொல்லுது. கேஸ்க்கு சாதகமா ஏதாவது எவிடென்ஸ் இருக்கா?” என்ற அதிரனுக்கு, உதட்டை பிதுக்கி இல்லை என்று தலையாட்டியவள், “அட்டாக்னால் தான் இறந்திருக்காரு. வேற எந்த எவிடென்சும் இதுல இல்ல” என்றாள்.

“ஹே! என்ன நீ? பொசுக்குனு இப்படி சொல்லிட்ட? நீ நிறையா சொல்லுவேன்னு எதிர் பார்த்தேன்” அதிரன் குறைபட்டுக் கொள்ள, “இது என்னடா வம்பா போச்சு? இருக்குறத தானே சொல்ல முடியும்” என்றவள் வித்யுத்தின் புறம் திரும்ப அவனோ, பிரேத பரிசோதனை அறிக்கையை பல ஆங்கிளில் மாற்றி மாற்றி வைத்து எதையோ செய்து கொண்டிருந்தான். அதை கண்டவளுக்கு தலையை எங்கேனும் கொண்டு முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

“ஹலோ பாஸ்! நீங்க எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் அதுக்குள்ள இருக்குறது ஒரே ஒரு விஷயம் தான். கிருஷ்ணமூர்த்தி சார் ஹார்ட் அட்டாக் வந்ததுனால தான் இறந்திருக்காரு போதுமா?” அவள் அலுத்துக்கொள்ள, அறிக்கையிலிருந்து தலையை உயர்த்தி அவளை கர்ண கொடூரமாய் முறைத்த வித்யுத்,  பொட்டென அந்த அறிக்கையை மேஜை மேல் போட்டு அதன் மேல் தலை கவிழ்த்தவன், “போடி! நீ ஒருநாளும் எங்களுக்கு சாதகமா பதில் சொல்லவே மாட்ட. யு பார்ட் கேர்ள்” என்றவன் அழுவது போல் செய்து அந்த இடத்தை ரணகளப் படுத்திக் கொண்டிருக்க, வதனாவோ, கண்ணத்தில் கைவைத்தபடி அமர்ந்து விட்டாள்.

இது இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றே. தங்களுக்கு சாதகமான பதில் வராத பட்சத்தில் இப்படி தான் அவளை படாத பாடு படுத்தி, அந்த இடத்தை ரணகளப் படுத்தி விடுவார்கள் இருவரும்.

……………………………………

வதனாவிடமிருந்து  விடை பெற்றவர்கள் நேராக சென்றது வியாஸ் மருத்துவமனைக்கு தான். முந்தைய நாள் போல் யாரிடமும் அனுமதி கேட்காமல் நேராக அவளின் அறையை நோக்கி அவர்களின் கால் பயணிக்க, அங்கே, தன் அறை வாசலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த வேதாவின் பார்வையில் விழுந்தான் அதிரன். புருவம் சுருக்கி அவனை பார்த்தவளின் விழிகள் சில பல நொடிகள் அவனிடமே நிலைத்திருக்க, எதோ யோசித்தவள், சட்டென தன் தலையை சிலுப்பி, “ச்ச! அப்படி எல்லாம் இருக்காது” தனக்கு தான் கூறியவள், அவர்களை பார்த்தபடி தன் அறைக்குள் நுழைந்தாள்.

அதிரனும் வேதாவின் முக பாவனைகளை படித்தபடி தான் முன்னேறிக் கொண்டிருந்தான். “நேத்தைக்கு என்னடானா பயந்து தலைதெறிக்க ஓடுனா. சரி இன்னைக்காவது ஒழுங்கா இருப்பான்னு பார்த்தா இவ நம்மல ஒரு மார்கமா பார்த்திட்டு போறா! என்னடா நடக்குது இங்க?” அதிரனின் பார்வையில் சற்று புதிராக தான் தெரிந்தாள் வேதா.

“குட் மார்னிங் டாக்டர்” என்றபடி அறைக்குள் நுழைந்தவன், அவள் கூறும் முன்பே இருக்கையில் அமர்ந்தான். தான் அமர்ந்தது மட்டுமல்லாமல் அமரவா வேண்டாமா என்று நின்றுக்கொண்டிருந்த வித்யுத்தையும் அமர வைத்து அவன் முறைப்பையும் வாங்கிக்கொண்டான்.

“நீங்க எதுக்காக வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” அழுத்தமாக வெளிவந்த வார்த்தைகளே தங்களின் வரவு அவளுக்கு பிடித்தமானதாய் இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியது அதிரனுக்கு.

அடுத்த பக்கம்

Advertisements