வெளிச்சத்தின் மறுபக்கம் 6

“அதிரன்! அதிரன்! அதிரன்! யாருடா அந்த அதிரன்?” என்று அந்த பங்களாவே அதிரும்படி கர்ஜித்தவனை மிரட்சியோடு அங்கிருந்தவர்கள் பார்த்திருக்க, “கேஸ் எந்த லெவெல்ல இருக்குன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டானாமா? எவ்வளவு எகத்தாளம்? எல்லாத்துக்கும் காரணம் நீ தான். அவன் கேஸ் முடிஞ்ச பிறகு தான் குற்றவாளியை பற்றி சொல்லுவேன்னு சொன்னதுக்கு மண்டைய மண்டைய ஆட்டிட்டு வந்துட்ட. அதை சாதகமா வச்சிட்டு நம்மள இப்படி அலைய விடுறான்” தன் எதிர் இருக்கையில் இங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றது போல் அமர்ந்திருந்த தங்கை சாருலதாவிடம் கத்திக் கொண்டிருந்தான் கௌதமன்.

கிருஷ்ணமூர்த்தியின் வழக்கை அதிரனிடம் கொடுத்து முழுதாய் ஒருநாள் முடிந்திருந்த நிலையில், வழக்கின் விசாரணை எந்த அளவில் உள்ளது என்று தெரிந்துக்கொள்ள தன் ஆட்களை அனுப்பியிருந்தான் சாருலதாவின் தமையனும் கிருஷ்ணமூர்த்தியின் புதல்வனுமான கௌதமன். அதிரனோ, தனக்கே உரித்தான பாணியில் அவர்களை விரட்டிவிட, அதை தவறாமல் தன் சின்னையாவிடம் கூறி, தற்போது ஏன் கூறினோம் என்று அவர்களே நினைக்கும்படி நடு வீட்டில் நின்று கர்ஜித்துக் கொண்டிருந்தான் அவர்களின் சின்னையா.

“அந்த வேதா ஒரு சைக்கோ. அந்த சைக்கோ எங்கேயோ தொலஞ்சு போய்ட்டா, இனி அவளால எந்த பிரச்சனையும் இல்லைன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா இப்ப, பல மடங்கு வஞ்சத்தோட, திரும்பி வந்து, நம்ம அப்பாவையே கொன்னுட்டா! இவ்வளவு தூரம் பழி தீர்த்தவளுக்கு நம்ம உயிர எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?” உயிர் பயம் அவன் கண்களில் அப்பட்டமாக தெரிய, அவன் தங்கையோ சர்வ சாதாரணமாக பயம் என்பது சிறிதுமின்றி அமர்ந்திருந்தாள்.

“சரி, இதுக்கு பதில் சொல்லு. யார கேட்டு கேஸ அதிரனுக்கு மாத்துன? அந்த சோமசுந்தரம் கைல கேஸ் இருந்த வரைக்கும் கேஸ் பத்தின எல்லா அசைவுகளும் நமக்கு அத்துபடியா இருந்தது. ஆனா இப்ப..!” என்றவன் கோவத்தில் தன் பற்களை நறநறவென கடித்து, “அவனை விட மாட்டேன். அவனாகவே என் கிட்ட வந்து கேஸ் பத்தி சொல்ல வைக்குறேன். அவன என் காலடில வந்து விழ வைக்குறேன். அப்புறம் இருக்கு அவனுக்கு” சூளுரைத்தவன் சாருலதாவை பார்த்து, “இத்தனை கேள்வி கேட்குறேன் கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்திருக்க?” என்று எகுறியவனை அமைதியாய் பார்த்த சாருலதா, அந்த கூடத்தை சுற்றி தன் பார்வையை சுழல விட்டு, “இங்க என்ன கண்காட்சியா நடக்குது? ‘பே’ன்னு பார்த்திட்டு இருக்கீங்க? கிளம்புங்க இங்க இருந்து” அமைதியாய் என்றாலும் சற்று அழுத்தமாகவே வெளிவந்தது அந்த வார்த்தைகள்.

ஒரு குறிப்பிட்ட பிரமுகர்களை தவிர மீதமிருந்தவர்கள் வெளியேறியிருக்க, தமையன் புறம் கோவமாக திரும்பியவள், “எதை? எங்க? யார் முன்னாடி வச்சு பேசுறோம்னு யோசிச்சிட்டு பேசமாட்டியா? அந்த அதிரன் ஒண்ணும் லேசுப்பட்டவன் இல்ல. நீ சொன்னது மட்டும் அவன் காதுல போச்சுன்னா, அடுத்த நிமிஷம், உன்ன அவன் காலுல விழ வச்சிடுவான். எதிரி யாரு? எப்படி பட்டவன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி காய நகத்துறது தான் புத்திசாலித்தனம்” என்றவள், “சரி, என்ன சொன்ன? சோமசுந்தரம் குழு கிட்ட கேஸ் இருந்திருந்தா கேஸ் பத்தின எல்லா அசைவுகளும் உனக்கு தெரிஞ்சிருக்குமா? நல்லா கேட்டுக்கோ, அவங்க கிட்ட கேஸ் இருந்திருந்துனா கேஸ் பத்தி மட்டும் தான் தெரிஞ்சிருக்கும் குற்றவாளி யாருன்னு அவங்களோ நாமளோ தலைகீழா நின்றிருந்தாலும் தெரிஞ்சிருக்காது. ஏன்னா அவங்க விசாரிச்ச லட்சணம் அப்படி” என்ற தங்கையை புரியாமல் பார்த்தான் கௌதமன்.

அதை கண்டவள், “அண்ணா! இறந்தது நம்ம அப்பா மட்டுமில்ல தமிழ் நாட்டோட முதலமைச்சர். அவரோட இறப்பினால பாதிக்கப் படப்போறதும் நாம தான். பலன் பெறப் போறதும் நாம தான்” என்றதும் மேலும் குழம்பி போனான் அவன்.

“என்ன இன்னும் புரியலையா? அப்பாவோட இறப்பு நமக்கு ரொம்ப பெரிய இழப்பு தான். அவரோட இடத்தை யாராலையும் நிரப்ப முடியாது அதேநேரம், அப்பா தன்னோட அரசியல் வாரிசு யாருன்னு இதுவரைக்கும் அறிவிக்கல. இந்த மாதிரி சூழ்நிலையில், அவரோட அரசியல் வாரிசுகள் யாருங்குற கேள்விக்கு பதிலா இந்த உலகம் நம்மள தான் கைக்காட்டும். இந்த வகையில் அப்பாவோட இறப்பு நமக்கு முதலமைச்சர் என்ற முக்கியமான பதவியை தரும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். இந்த சூழல்ல போலீஸ் முதல்ல சந்தேகப் படுறது நம்மளையா தான் இருக்கும். ஆனா சோமசுந்தரம் குழு இதுவரைக்கும் அப்படி ஒரு கண்ணோட்டத்துல நம்மள பார்க்கவே இல்லை. நீ என்ன சொன்னியோ அத தான் கேட்டு நடந்தாங்க. நீ வேதா மேல சந்தேகம் இருக்குன்னு சொன்ன, அவங்க அவ தான் குற்றவாளின்னு கைது செய்ய வாரென்ட் ரெடி பண்ணிட்டு உட்கார்ந்திருந்தாங்க. இதான் அவங்க கேஸ் டீல் பண்ணுற லட்சணமா?” என்றதும் சற்று யோசித்தவன், “அப்படி பார்த்தா, அந்த அதிரனும் இது வரை நம்மள விசாரிக்க வரலையே. அப்பாவோட எதிரிகளை பத்தி தானே விசாரிச்சிட்டு போனாங்க. அதுவும் அவன் வரல அவன் டீம் மெம்பர் அஸ்வந்த்ன்னு ஒருத்தன் தானே வந்தான்?” அவனின் சந்தேகத்தை சிறு புன்னகையுடன் ஏற்றவள், “நிச்சயம் வருவான். நாம நினைக்காத நேரம் வருவான். அவனுக்கு ஏற்கனவே நம்ம மேல சந்தேகம் இருக்கு” என்றவள் முதல் நாள் சிபிஐ அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் கூறி, “நமக்கு தேவை உண்மையான குற்றவாளி. உண்மையோ பொய்யோ! அந்த குற்றவாளியோட அடுத்த டார்கெட் நாமளா கூட இருக்கலாம். அதிரன் உண்மையான குற்றவாளியை நிச்சயம் கண்டு புடிப்பான். அது யாருன்னு தெரியட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு” தன் தந்தையை கொன்றவனை கொலை செய்யும் வெறியில் இருந்தாள் அவள்.

“ஆனா குற்றவாளி யாருன்னு அந்த அதிரன் சொன்னா தானே நமக்கு தெரியும். அவன் தான் வாயையே திறக்க மாட்டேன்குறானே” கௌதமன் ஆதங்கத்தில் கூற, “நிச்சயம் சொல்லுவான். சொல்ல வைப்பேன்!” என்றவள் அவள் அருகில் நின்றிருந்தவனை அழைத்து, “மாரி! நான் சொன்ன காரியத்தை செஞ்சுட்டியா? எல்லாம் ஓகே தானே?” என்று கேட்க, “எல்லாம் ஓகேமா! இன்னும் கொஞ்ச நேரத்துல துடங்கிடும்” என்றான். பின், தன் தமையனிடம் திரும்பியவள், “நாம கேட்டா தானே சொல்ல மாட்டான். மக்கள் கேட்டா சொல்லி தானே ஆகணும்!” கண்களில் வெற்றி களிப்போடு கூறியவளை வியப்பாக பார்த்தனர் அனைவரும்.

…………………………………………

மடிக்கணினியில் ஓடிக் கொண்டிருந்த அந்த குறிப்பிட்ட சிசிடிவி பதிவையே மீண்டும் மீண்டும் பார்த்தபடி இருந்தான் அதிரன். அதை காண காண வெற்றி களிப்பு கூடிக்கொண்டே இருந்தது.

முந்தைய தினம் வேதாவை பார்த்துவிட்டு வந்தவர்களிடம், அதிரனின் உத்தரவின்படி, தாங்கள் சேகரித்தவைகளை அவர்கள் முன் வைத்தனர். அவர்கள் மூலம் அனைத்தையும் கேட்டறிந்து சிசிடிவி பதிவுகளை ஆராய துவங்கியவனுக்கு கிடைத்தது தான் அந்த குறிப்பிட்ட பதிவு. அதை கண்டு தனக்கே உரித்தான மாய புன்னகையை வெளியிட்டு, “வேதா யுவர் சாப்ட்டர் இஸ் கோயிங் டு என்ட்” என்றவன் சட்டென ஏதோ நினைவு வர, “சியான் எங்க? இன்னுமா ஆடோப்சி ரிப்போர்ட் கிடைக்கல?” ஏதோ வேலையில் மும்முரமாக இருந்த வித்யுத்திடம் கேட்க, கேள்வியின் பொருள் புரிந்த அடுத்த நொடி பட்டென சிரித்து விட்டான் வித்யுத். முதலில் வித்யுத் சிரிப்பதன் காரணம் புரியாமல் விழித்த அதிரன், புரியவும் விழுந்து விழுந்து சிரித்தான்.

அடுத்த பக்கம்

Advertisements