வெளிச்சத்தின் மறுபக்கம் 5

மாநிறத்திற்கும் சற்றே கூடிய நிறத்திற்கு எடுப்பாய் இருந்த சாதாரண காட்டன் சுடிதார், சேர்த்து பின்னப்பட்ட சிகை, சிறிதும் ஒப்பனையில்லா முகத்தில் சிறிதாய் ஒரு பொட்டு என மிகச் சாதாரணமாய் தெரிந்தாள் அவள். இருந்தும், ஏதோ ஒன்று அவளை திரும்பி பார்க்க வைத்தது அதிரனை. அவனை மாத்திரம் அல்ல, பார்க்கும் அனைவரையும் ஒருமுறை திரும்பி பார்க்க வைத்தது, அவளின் அந்த அழகு; ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான திருத்தமான அழகு. என்ன, சிறிது சிரித்தால் எடுப்பாய் இருந்திருக்கும். ஆனால் அவளுக்கும் அதுக்கும் எட்டா தூரம் போல் நின்றிருந்தாள் பெண். அப்படியே அவள் சிரித்தாலும், “அவ்வளவு தானா?” என்று கேட்க தோன்றும், மில்லிமீட்டர் அளவு சிரிப்பு அது.

அந்த வயதானவரிடம் பேசிக்கொண்டிருந்தவளை ஆராய்ந்தான் அதிரன். “யார் அவள்? ஏன் அவளை ஆராய்கிறாய்?” என்று கேட்டால், அதற்கு நிச்சயம் அவனிடமிருந்து பதில் வரப் போவதில்லை. ஏனெனில், பதில் அவனே அறியாததல்லவா?

தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவனின் கவனம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நந்தகுமார், வித்யுத் புறம் திரும்ப, அவனும் அதையே தான் செய்துகொண்டிருந்தான். என்ன அவன் அவள் யாரென்று அறிந்து கொண்டு ஆராய்ந்தான், அதிரனோ அறியாமல் ஆராய்ந்தான். அவ்வளவே வித்யாசம்.

“அட! வேதாவே வந்துட்டா! அதிரன், அது தான் வேதா” அந்த வயதானவரிடம் பேசிக்கொண்டிருந்த பெண்ணை வேதா என்று கைகாட்ட, சற்று அதிர்ந்து திரும்பியவன், “அ.. அவங்களா?” என்று கேட்டு வைக்க, “ஆம்” என்றபடி அங்கிருந்து சென்றார் மனிதர்.

“விது! நிஜமாவே இவங்க தான் டாக்டர் வேதாவா?” நந்தகுமார் கூறியதை நம்ப முடியாமல் நண்பனிடம் மேற்கண்ட கேள்வியை கேட்டான். ‘ஆம்’ என்ற தலையாட்டல் மட்டுமே வந்தது வித்யுத்திடமிருந்து. பின், இருவரும் தங்கள் பார்வையை வேதாவின் புறம் திருப்பினர்.

வயதானவருடன் பேசிமுடித்து நிமிர்ந்த வேதாவின் கண்களில், அவளையே பார்த்தபடி நின்ற இவர்கள் விழுந்ததும், தங்களை அவள் பார்த்து விட்டாள் என்று புன்னகைக்க போனவர்கள் அப்படியே தேங்கி நின்றுவிட்டனர் அவளின் செயலைப் பார்த்து.

முதலில், தன்னை பார்த்தபடி நின்றவர்களை, “யார்” என்ற யோசனையில் பார்த்தவள், சடுதியில் என்ன நினைத்தாளோ! அடுத்தநொடி, அவளின் முகம் பயம் என்னும் கவசத்தை பூசிக் கொண்டது. அதுவும் சாதாரணமான பயம் இல்லை! உடல் நடுங்கி கண்ணீர் கட்டிவிட்ட அளவு பயம்! “ஏன் இந்த பயம்?” என்று சிந்தித்தவர்களுக்கு பதில் தான் கிடைக்கவில்லை. “சரி! அவளிடமே கேட்டு விடுவோம்” என்று நெருங்கியவர்களை, அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் செய்தது, அவள் செய்கை. ஆம்! அவர்கள் தன்னை நெருங்குவதை கண்டவளின் உடல் மேலும் நடுங்க, வேகமாய் தன் அறைக்குள் ஓடி, கதவை அடைத்து விட்டாள்.

குழம்பி போனவர்கள், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நிற்க, அந்த பக்கமாய் வந்த செவிலி, “என்ன சார் இங்க நிக்குறீங்க? வேதா டாக்டர் சர்ஜரி முடிச்சிட்டாங்கலே” என்றவளுக்கு மூடிய கதவை காட்ட, “ஒஹ்! ஒரு நிமிஷம்” என்றவள், வேதாவின் அறைக் கதவை தட்டி, “டாக்டர், உங்கள பார்க்க இரண்டு பேர் வந்திருக்காங்க.” ம்கும்! அவள் கதவை திறந்தால் தானே! குழம்பி போனவள், “டாக்டர், அவங்க சிபிஐ ஆபீசர்ஸ். உங்கள விசாரிக்குறதுக்காக வந்திருக்காங்க” என்றதும் தான் தாமதம், பட்டென கதவை திறந்து விட்டாள் அவள். வெளியே நின்ற அனைவருக்கும் இது ஆச்சரியமே! அதுவும், தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்பதால் தான் இந்த பயம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு, வேதாவின் இந்த செய்கை பலத்த ஆச்சரியமே!

கதவை திறந்தவளின் முகத்திலிருந்த பயம் சிறிது சிறிதாய் விலகுவதை இருவருமே நன்கு உணர்ந்தனர். அவர்களை அமர சொன்னவள், எதிரிலிருந்த தன் இருக்கையில் அமர்ந்தாள்.

அமர்ந்தவர்கள், எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தனர். அதிரனும் சரி வித்யுத்தும் சரி, நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. அகவே, எந்த வழக்கிலும் ஆதாரம் கையில் கிடைக்கும் வரை காத்திருக்க மாட்டார்கள். விசாரணையில் முன்னமே இறங்கி விடுவார்கள். அதே போல் தான் இன்றும். காலையிலேயே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள், இந்த வழக்கிற்கு முக்கியமான சிலரிடமும் விசாரித்து விட்டு தான் இங்கே வந்திருந்தனர். இங்கு வேதாவைப் பற்றி அனைவரும் கூறியதைக் கேட்டதாலும் சற்று முன் சிபிஐ அதிகாரிகள் என்றதும் பயம் நீங்கிய அவளின் முகமும் குழப்பத்தை விளைவிக்க, பேச்சின்றி அமர்ந்திருந்தனர்.

முதலில் சுதாரித்த அதிரன், “ஹலோ! ஐ ஆம் அதிரன் அண்ட் ஹி இஸ் மிஸ்டர் வித்யுத், ஃப்ரம் சிபிஐ” தங்களை அறிமுகப்படுத்தியவனுக்கு, புன்னகையை வெளியிட்டாள், அவளது பாணியில். அதே நேரம், அவள் நெற்றி யோசனையில் சுருங்கியது. அதை புரிந்தவன், “இந்த வழக்கு இன்னைக்கு கலையில் தான் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஏன் அது உங்களுக்கு தெரியாதா?” தகவல் கொடுத்தவன், கூடுதலாக கேள்வியையும் அத்தோடு இணைத்திருந்தான்.

“இல்லை. நான் நேத்தைக்கு ராத்திரில இருந்து ஆபரேஷன் தியேட்டர்ல இருந்தேன். இப்ப தான் வெளியே வந்தேன்”

“ஒஹ்! சரி சொல்லுங்க, கிருஷ்ணமூர்த்தி சார ஏன் கொலை செய்தீங்க?” பட்டென வந்த அதிரனின் கேள்வியை, “நான் கொலை செய்யல சார்” எவ்வித சலனமுமின்றி ஏற்றாள் அவள்.

“அத நாங்க எப்படி நம்புறது? இப்போதைக்கு எல்லாரோட சந்தேகப் பார்வையும் உங்க மேல தான் இருக்கு. அது உங்களுக்கு தெரியுமா? சந்தேகத்தின் பெயர்ல உங்கள இப்பவே எங்களால கைது செய்ய முடியும். அப்புறம் எங்க விசாரணை வேற மாதிரி இருக்கும். சோ! அதுக்கு முன்னாடியே உண்மையை ஒத்துகிட்டா நல்லா இருக்கும்” வரி கணக்கில் வசனம் பேசியவனுக்கு அவள் பாணியில் சிறு புன்னகை புரிந்து, “அஸ் யூ விஷ். ஆனா, என்னால சொல்ல முடிஞ்சது ஒன்னு தான். நான் தப்பு செய்யல” அவளிற்கே உரித்தான மெல்லிய குரலில், திடமாய் வெளிவந்தது அவள் வார்த்தைகள்.

மெச்சுதலாய் அவளை பார்த்தான் அதிரன். எனினும் அவளிடம் இறங்கி போக மனம் வரவில்லை. “இரண்டு நாள் போலீஸ் விசாரணைல பயப்படாம பதில் சொல்ல கத்துகிட்டீங்க போல” என்றவனுக்கு, “ம், அப்படியும் இருக்கலாம்” அசராமல் பதிலளித்து இருவரையும் அசர வைத்தாள். “என்ன ஒரு திடம். சிபிஐ ஆபீசர்ஸ் கிட்டையே எப்படி பேசுறா?” நினைக்காமல் இருக்க முடியவில்லை அவர்களால்.

“ம், நாங்க வந்ததும் எதுக்காக எங்களை பார்த்து பயந்தீங்க?” வந்ததிலிருந்து கேட்க வேண்டும் என்றிருத்த கேள்வியை கேட்டு விட்டான் அதிரன். என்ன பதில் வேண்டி நின்றவனுக்கு புன்னகை தான் பதிலாய் கிடைத்தது. இதற்கு மேல் இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்த அதிரன், “நாங்க கிளம்புறோம். பட், ஒரு விஷியத்த மனசில வச்சிக்கோங்க. கூடிய சீக்கிரம் வருவேன். அதுவும் உங்களுக்கு எதிரான ஆதாரத்தோட. அப்ப என் கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லி தான் ஆகணும் அண்ட் ஒரு சிபிஐ அதிகாரியா என் கணிப்பு என்னைக்குமே தப்புனது இல்ல டாக்டர் வேதா. சி யூ சூன்” என்றவன் கூட, தான் சொன்னது வெகுவிரைவில் அரங்கேறப் போகிறது என்று நினைத்திருக்க மாட்டன்.

“அப்படி நீங்க என்னை குற்றவாளின்னு ப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா ஒரு சிபிஐ அதிகாரியா நீங்க தோற்று போயிட்டீங்கன்னு அர்த்தம்” என்று தன் வார்த்தைகளால் அதிரனையே அதிர வைத்தாள் பெண். அவளின் வார்த்தையில் மாத்திரம் அல்ல அவள் பார்வையிலும்  அத்தனை திடம் இருந்தது. எனினும் அந்த முகத்திலிருந்த சாந்தத்தில் இம்மியளவும் மாற்றமில்லை. புன்னகையுடன் அவளின் கூற்றை ஏற்றவன், அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

“நீ ஏன் எந்த கேள்வியும் கேட்காம அமைதியா இருந்த?” எதோ யோசனையின் பிடியில் இருந்த வித்யுத்திடம் கேட்டான் அதிரன். யோசனையிலிருந்து மீண்டவன், “நீ எப்படி வேதா கொலை செய்தாங்கன்னு ப்ரூவ் பண்ண போற?” கேள்விக்கு பதிலாய் கேள்வி கேட்டான் வித்யுத். “ம், தெரியல! அப்ப அப்படி சொல்லனும்னு தோணிச்சு சொன்னேன். அவ்வளவு தான். மோர்ஓவர், வேதாக்கும் இந்த வழக்குக்கும் நிச்சயம் எதோ சம்மந்தம் இருக்குன்னு என் உள் உணர்வு சொல்லுது. அதான்” நண்பனின் பதிலில் புன்னகை அரும்பியது வித்யுதிற்க்கு. மருத்துவமனை பணியாளர்கலும் நந்தகுமாரும் வேதாவை பற்றி  கூறியதை கேட்டவர்களுக்கு அவளின் பெயரில் நன்மதிப்பு உருவாகியிருந்தது. அதனால் தான் ஆரம்பத்தில் பேச்சு வராமல் அமர்ந்திருந்தனர். அப்படியிருக்க, வேதாவின் பெயரில் ஆதாரம் ஏதுமின்றி சந்தேகம் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அதிரனிடமிருந்து வெளிவந்த கேள்விகள் சற்று வியப்பை அளித்தது வித்யுதிற்க்கு. அதனால் தான் மேற்கண்ட கேள்வியை கேட்டிருந்தான் வித்யுத்.


அடுத்த பக்கம்