துளி தீ நீயாவாய் penultimate (6)

இவள் அனுமதிக்கப்பட்ட அறையில் நரேனும் நின்று கொண்டிருந்தானோ, “நீ செய்த எதையும் என்னால ஒத்துக்க முடியும்டா நாயே! ஆனா பொண்ணு மேல கை வச்சுட்டியேடா நீ, என்னடா செஞ்ச அவள? இத மட்டும்தான் நீ செய்துடக் கூடாதுன்னு அத்தனை அத்தனை பாதுகாப்பு போட்டனே, அத்தனைலையும் மண் அள்ளிப் போட்டுட்டியே,

அந்த ஒட்டுப் பொறுக்கி வாசன்ட்ட அவன் உன்ட்ட வந்து சொல்லட்டும்னு அழுத்தி அழுத்தி சொல்லிவிட்டனே வேணி என் தங்கைன்னு, எதுக்குடா? என் வீட்டு பொண்ணு அவ, மேல கை வச்சிடாதன்றதுக்குதான?

அவ என் தங்கைன்னு சொல்லியும்,  நீ அப்பான்னு சொல்றவர நான்தான் காப்பாத்தி விட்டேன்னு வரை தெரிஞ்சும், என் வீடு புகுந்து எங்க வீட்டு பொண்ண தூக்குவன்னா, வெறிநாயே உன்னையெல்லாம் எதுக்குடா எவனாவது காப்பாத்தணும்? காப்பாத்துறவன் வீட்டுக்கு கொள்ளி வைக்கவா?

மிருகம்டா நீ! உன்ட்டல்லாம் எதுக்குடா எவனாவது மனுஷனா நடந்துக்கணும்?” என்றபடி ப்ரவி இவனை வாக்கியத்துக்கு வாக்கியம் அடித்து துவைத்தது அரை மயக்க நிலையில் இவள் காதில் விழுந்த கடைசி செய்தி.

ப்ரவி அத்தனை அடித்தும் நரேன் பதில் கூட சொல்லாமல் அனைத்தையும் எதிர்ப்பின்றி வாங்கிக் கட்டிக்கொள்கிறான் என்பதும் இவளுக்கு அப்போது புரிந்தது.

“விடு ப்ரவி, இங்க வச்சு எதுவும் செய்யாத, எனக்கு பார்க்க முடியல” என இடையிட்ட பவியின் குரலும்,

“வேணியோட எங்கயோ போய்ட்ட, இனி இங்க வர மாட்ட, காதல ஒத்துக் கொள்ளாதவள வலுக்கட்டாயமா தூக்கிட்டுப் போனா, அவள அடச்சு வச்சு எத்தன காலத்துக்கு என்னதெல்லாம் செய்வியோன்னு என்னதெல்லாமோ யோசனை, எங்களால தாங்கவே முடியல, அவங்கல்லாம் தூங்கி மூனு நாளாச்சு” என அவள் நரேனிடம் சொல்லியதும், பவியின் குரலில் இருந்த அழுகையில் இவளை மீறி இவளுக்கு கண்ணில் நீர் வந்ததும்,

மூனு நாளா? ரெண்டு நாள்தான? என இவள் நினைத்ததும் அந்த மொத்த நிகழ்வில் இவளது கடைசி நினைவு.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த மருத்துவமனையில் தீ பிடித்து பெரிதாய் பரவியிருக்கிறது மறு ஓரம். அது புரியவும் இவளையும் பவியையும் பத்திரமான இடத்துக்கு மாற்றிவிட்டு ப்ரவி முடிந்தவரை சேதாரத்தை குறைக்க ஓட, நரேன் ப்ரவியை பாதுகாக்கவென பின்னால் போக, இருந்த சூழலில் தான் மறைக்க நினைத்திருந்த சுறாவை வைத்தே பெரிய பெரிய அளவில் மண்ணையும் நீரையும் அள்ளி எறிந்து தீயை அணைத்திருக்கிறான் நரேன்.

“அண்ணா சாரிண்ணா நான் நிஜமாவே மாறிட்டேன், எடுத்த பணத்த கூட எல்லார்ட்டயும் திரும்ப கொடுத்துட்டேன், வேணிய கூட ஹர்ட் செய்ய நான் கொண்டு போகல” என அடுத்து இவன் காலில் விழ,

“அவள தூக்கிட்டுப் போனாலே உங்க வீட்ல இவ்ளவு டிஸ்டர்ப் ஆகும்னு எனக்கு உறைக்கலண்ணா, அதோட ஃப்யூ அவர்ஸ்ல திரும்பி வந்துடுவான்னு நினச்சேண்ணா, அவளுக்கு உடம்பு முடியாம இருக்குன்னு எனக்கு தெரியாது, ஆனா எப்படி பார்த்தாலும் வேணிக்கு மட்டுமில்ல, வேணி விஷயத்தில் உங்களுக்குமே நான் செஞ்சது தப்புதான், எந்த விஷயத்திலும் என்னை கானர் பண்ணாத நீங்க, அண்ணிட்ட பழக, உங்க வீட்டுக்கு வந்து போகன்னு அத்தனை அனுமதியும் கொடுத்தவங்க, வேணி பக்கத்தில் மட்டும் நான் போகக்கூடாதுன்னு அத்தனை எஃபெர்ட் எடுத்தப்ப, என் அப்பாவ காப்பாத்தினவங்க, தன் வீட்டு பொண்ண என்ட்ட இருந்து காப்பாத்த இத்தன போராடுற மாதிரி வச்சிருக்கமேன்னு எனக்கு தோணி இருக்கணும்தான்.  உன்னை எதுக்குடா காப்பாத்தணும்? காப்பாத்தினவன் வீட்டுக்கு நீ  கொள்ளி வைக்கவான்னு நீங்க கேட்டது 100% சரிதான்ணா, அதான் மாணிக்கம்பாவுக்கு உதவி வந்தப்ப நேர்மையா தப்பி வர எனக்கு வழி இல்லாம போச்சோ என்னவோ!” இப்படியுமே அவன் அழ,

சரணடையும் படலம் அப்படி நிகழ்ந்திருக்கிறது.

அதில் அந்த தீ விபத்தில் சுறாவை முழுதாக அழிந்துபோக விட்டுவிடச் சொல்லியிருக்கிறான் ப்ரவி, நரேன் அதைச் செய்ய, அடுத்து மீதி விஷயங்களையும் நரேனிடம் அமர்ந்து பேசி விசாரித்துக் கொண்ட ப்ரவி

“இவ்வளவு டீடெய்லா பணத்தை திருப்பி கொடுத்துருக்கியா? வெரிகுட். இதுக்கு மேல எவன் கேஸ வாபஸ் வாங்காம இருக்க? நீ செய்து வச்சிருக்க வேலைக்கு, கேஸ்ன்னு ஒன்னு நடந்தாலே 5 மடங்கு பணம் திரும்பி வந்த விஷயம் வெளிய வந்து, அந்த பணத்தை அவங்க கோர்ட்ல செட்டில் செய்ற போல ஆகிடும்னு அவங்க லாயர்ஸ்க்கு தெரியும், இல்லனா கூட நம்ம ஆட்கள லைட்டா நியாபகப்படுத்தி விடச் சொல்லிடலாம்” என  இப்போது சின்னதாய் சிரிக்க,

“இன்னும் நாலஞ்சு நாளைக்குள்ள உன் மேல ஒரு கேஸ் இல்லாம எல்லாம் வாபஸாகிடும்” என அவன் அறிவிக்க,

எங்க எப்போ எதுக்கு நம்மள போட்டுத் தள்ளப் போறாங்களோ என இருந்த நரேனுக்கு இது எப்படி இருக்குமாம்? எழுந்து ப்ரவியை இறுக அணைத்தபடி அழத் துவங்கி இருந்தான் அவன். என்ன இருந்தாலும் அவனுக்குமே வயது இருபது தானே முடிந்திருக்கிறது!

“டேய் ஓவரா அவசரப்படாத! அவங்கல்லாம் விட்டுடலாம், ஆனா என் கேஸ் இருக்குடா, பொண்ண கிட்நாப் பண்ணா வீட்ல இவ்வளவு ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரியாதா? ஆக வீட்ல உள்ளவங்களுக்காகத்தான் பொண்ண கிட்நப் செய்யாம இருக்கணும்? மத்தபடி அந்த பொண்னோட இஷ்டம் மனசுன்னு எதுவும் இல்ல என்ன?  உனக்கு ஹெல்ப் வேணும்னா அவட்ட ரெக்வெஸ்ட் செய்து கேட்கணும்னு தோணினா நீ மனுஷன். என் இஷ்டபடி இழுத்துட்டுப் போவேன், அவ நான் கேட்டதெல்லாம் செஞ்சு தரணும்னா இதுக்கு பேர் என்ன? உன்னையெல்லாம் சும்மா விட்டா என்ன தப்பு செய்தாலும், சாரி கேட்டா வெளிய வந்துடலாம்னு உனக்கு செட் ஆகிடும், அது உனக்கும் நல்லதுகில்ல, யாருக்கும் நல்லதில்ல, ஒரு ஒன்னு ரெண்டு வருஷம் அட்டெம்ட் ஆஃப் கிட்நாப்னு உள்ள போய் இருந்துட்டு வா, தப்புன்னு ஒன்னு செய்தா தண்டனைன்னு ஒன்னு கண்டிப்பா கிடைக்கும்னு தெரியணும்.

குடோன் கேஸ் வாபஸ் ஆகிட்டாலும் , எவன் எதை வச்சு திருடினான்? அது நமக்கு கிடச்சா நல்லா இருக்கும்னு ரெண்டு மூனு ஓநாயாவது அலையும், அவங்கட்ட நீ மாட்டாம இருக்கவும் இதுதான் சரியா வரும்” என்க,

அடுத்து நரேன் இரண்டு வருட தண்டைனை பெற்று சிறைக்குச் சென்றுவிட்டான் என்பதுதான் இந்த மொத்த வழக்கு பற்றியும் வேணிக்கு கிடைத்த கடைசி செய்தி. இதைச் சொன்ன பவி அடுத்து என்றும் எப்போதும் வேணியிடம் நரேன் பற்றி பேசியது இல்லை. வேணியும் விசாரிக்க எண்ணியது இல்லை.

ஏழு வருடங்கள் முடிந்திருந்தது.

தொடரும்…

துளி தீ நீயாவாய் Final Part 1

 துளித் தீ நீயாவாய் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி