துளி தீ நீயாவாய் penultimate (5)

“விழிக்கவும் உனக்கு சாப்ட முதல்ல பால்தான் கொடுக்க சொன்னாங்க” இவளிடமாக கொடுத்தான். சற்று முன் இருந்ததைவிடவுமே வெகுவாக இறுகிப் போய் தெரிந்தான் அவன்.

“உங்க ஃபோட்டாஸ் எதுவும் உண்டா இங்க?” அவன்தான் வேற எதாவது பேசுன்னுட்டானே, ஆக சாதாரண வகை உரையாடலுக்கு வர முயன்றாள் இவள். ஏதோ வகையில் அவன் பேசி கொண்டிருப்பதே பேச்சற்ற மௌனமான சூழலைக் காட்டிலும் திகில் குறைந்ததாய் இருக்கிறது இவளுக்கு.

“ம்ஹூம், போட்டோ எடுக்குற பழக்கமே கிடையாது, நான் தான் என்ன போலவே இருக்கலையே” என்ற அவன் பதிலில் கூட விஷயம் நினைக்க விரும்பாத பக்கமே சுற்றியது.

“டயட் இருக்கேன்னு சொன்னீங்களே? ரொம்ப வேகமா வெயிட்ட குறச்சிட்டீங்க” இவள் இன்னுமே இலகுவாக்கவே முனைந்தாள்.

“fat suitனு சொன்னனே, கொஞ்சம் கொஞ்சமா சின்ன சைஸுக்கு மாறிட்டே வர்றதுக்கு எதுக்கு டயட்?” அவன் இன்னுமே இறுகிக் கொண்டே போனான்.

“அடப்பாவமே, நான் நிஜமாவே டயட் இருக்கீங்கன்னு நினச்சேன்” சொன்னபடி கையிலிருந்த பாலை  இவள் பருக முனைய

“பச் எப்பவும் யாரோ போல இருக்கிறது எவ்வளவு கக்ஷ்டம் தெரியுமா? எனக்கு நான் நானா இருக்கணும்னு அவ்வளவு ஆசை, அப்பதான் நீ  நான் மார்டனா இல்லன்னு கிளறிவிட்ட, பாரு நான் எவ்வளவு குட் லுக்கிங்னு காமிக்கத்தான் என் ட்ரெஸ் கோட உன்ட்ட மட்டும் மாத்தினேன். நீ அதை ஒரு விஷயமா எடுத்து இவன் கிரிமனலோன்ற ரேஞ்சுக்கு யோசிச்சு அதை போய் அண்ணாட்ட வேற சொல்வன்னு நான் எதிர்பார்க்கல. ஆனா அண்ணாட்ட சொல்லியும் அவங்க வயலுக்கு வந்ததிருடன் நான் இல்லன்னு உன்ட்ட சொல்லிட்டாங்கன்னதும், நம்ம இனி ஒரிஜினல் கெட்டப்க்கு வந்தா கூட யாரும் சந்தேகப்பட மாட்டாங்க போலன்னு நினச்சுட்டேன்.

சட்டுன்னு என் ஒரிஜினல் ஸ்லிம் பாடியோட வர முடியாதே. அதான் டயட் செய்றேன்னு சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டே வந்தேன்” அவன் எங்கோ வெறித்தான்.

பின் திடுமென “ஏன் வேணி  மேரேஜ் செய்துகிட்டு, எனக்குன்னு ஒரு குடும்பம், ப்ரவி அண்ணா, அண்ணி, மது கூடல்லாம் நல்லா இருந்துகிட்டுன்னு எனக்கு ஏன் ஒரு வாழ்க்கை வராமலே போச்சு?” என்றான் கண்களில் நீர் கோர்க்க.

“இப்படி இந்த வயசில் செத்துப்போக எதுக்கு எனக்கு இப்படி வலிக்க வலிக்க ஒரு வாழ்க்கை?” அவன் எந்த நினைவில் இறுகிப் போயிருக்கிறான் என்பது இப்படி வெளிவந்தது.

அவன் கேட்ட வகையில் இவளே ஆடி போனாள்தான். “என்ன நீங்க? அப்படில்லாம் உங்கள எதுவும் செய்துட மாட்டாங்க. எல்லாத்தையும் திருப்பி கொடுத்துட்டு போறீங்க! அப்றம் எப்படி உங்க மேல கை வைப்பாங்க? ப்ரவி சார் உங்க மேல உள்ள எல்லா லீகல் விஷயங்களையும் க்ளியர் செய்து கொடுத்துடுவாங்க. அடுத்து அவங்க எல்லார் கூடயும் அழகான லைஃப் உங்களுக்கு கண்டிப்பா இருக்கும்” நம்பிகையாய் சொன்னவள் பின் சட்டென மிரண்டவளாய் “அடிச்சீங்களே அந்த கண்காணி?” என இழுக்க..

“அவன் இருக்கான். அடுத்து போய் வெரிஃபை பண்ணிட்டேன். போன வருஷம் வரைக்கும் நல்லாதான் இருந்திருக்கான். அடுத்து பேரலடிக் அட்டாக்காம் இப்ப படுக்கையில கிடக்கான்”

“அப்றம் என்ன பயம்? அதெல்லாம் ஒன்னுமே ப்ராப்ளம் ஆகாது” இவள் தெம்பூட்ட முனைந்தாள்.

“ப்ச், நீ குழந்தை வேணி, அதான் புரியல, நான் கை வச்ச இடமெல்லாம் எத்தனை பெரிய ஆட்களோ? என் மேல கொலை வெறில இருப்பாங்கல்ல? இப்ப நான் தான் செய்தேன்னு வெளில போய் நிக்றப்ப போட்டு தள்ளிடுவாங்கல்ல”

“இங்க பாருங்க பயப்படணும்னு முடிவு செய்தா பயந்துகிட்டே இருப்போம் போல, அதான் அவங்க பணத்த திருப்பி கொடுக்கிறீங்களே, அதுவும் அஞ்சு மடங்கா? அப்றம் ஏன் கோபத்துல இருக்க போறாங்க? அதை யோசிங்க நீங்க”

“நீல்லாம் ரொம்ப இளகின மனம் உள்ள பொண்ணு வேணி, நீயே நான் திருடுறேன்னு சொன்னப்ப ப்ளீஸ் அதையெல்லாம் விட்டுடுங்கன்னு எனக்கு எது நல்லதுன்னு மட்டும் யோசிச்சிட்டு, உனக்கு லெட்டர் எழுதுனது நான்னு சொல்லவும், அத்தனை கோபபட்ட. இத்தனைக்கும் திருந்திட்டேன்னு சொல்லிதான் நான் பேசிகிட்டு இருக்கேன். உன் விஷயம்னு வர்றப்ப என்னோட மத்த எல்லாம் மறந்துடுதுல்ல. அப்படித்தான இருக்கும் திருட்டு கொடுத்தவங்களுக்கும்? அவங்க என்னென்ன கஷ்டபட்டாங்களோ?”

இப்போது வேணி உண்மையிலேயே அரண்டு போனாள். அவன் சொல்வது உண்மைதானே!

“அ..அதெல்லாம் ப்ரவி சார் இருக்கப்ப உங்க மேல யாரையும் கைவக்க விட மாட்டாங்க” அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கையச் சொன்னாள்.

“அண்ணா மட்டுமா டிபார்ட்மென்ட்? அவங்களுக்கு மேலயும் ஆஃபீஸர்ஸ் இருக்காங்க. அரசியல்வாதிங்க இருக்காங்க. என் மேல கோபத்துல இருக்க எந்த கம்பெனிக்காரனும் அழுத்தி சொன்னா போதும், இருக்க அத்தன மோசமான கேஸ்லயும் என்னை கோர்த்துவிட ஆள் இருப்பாங்க. என்கவ்ன்டர்ன்ற பேர்ல என்னை போட்டு தள்ளினா கூட ஆச்சர்யம் இல்ல” அவன் சொல்லச் சொல்ல வேணிக்குள் திகில் வளர்ந்து கொண்டே போனது.

தன்னை விட காவல்துறையை, சட்ட நுணுக்கங்களை அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பது இவளது நம்பிக்கை. அது இப்போது அவனது ஒவ்வொரு வார்த்தையையும் நம்பி பயந்து சாகு என்றது.

“நான் சுறாவ மட்டும் வெளிய காட்டாம விட்டுடுறேன் வேணி, என்ன சரிதான? தப்பானவங்க கைல அது கிடைச்சுட்டுன்னா ரொம்ப ரிஸ்குல்ல?” யோசித்தபடியே அவன் கேட்க

இங்கு இவளுக்கு வெலவெலத்தது.

இவள் திருந்திவிட்டேன் என மனதுக்குள் முடித்துக் கொள்வது போல் சாதாரண காரியம் கிடையாது அவனது என்பது பூதகரமாய் இப்போதுதான் புரிகிறது இவளுக்கு.

“சா..சார்ட்ட அதைப் பத்தி பேசிடுங்க, அவங்க கைட் பண்ணுவாங்க”

“நீ அண்ணாட்ட ரொம்ப நல்லா பேசுவியோ?” என திடுமென விசாரித்தான் அவன். “என்னப் பத்தி எல்லாம் பேசியிருக்க, என் ட்ரெஸ்கோட் வரைக்கும்?”

அவன் எதற்கு இப்படி கேட்கிறான் என புரியாமல் பார்த்தாள் இவள். சார்ட்ட இவ பேசினா இவனுக்கு என்னவாம்?

“அப்போ அப்போ என்னைவிட பெரியவங்க நாலஞ்சு பேர்ட்டயா மொத்தமா அடி வாங்கியிருக்கனா, அதனால போல, யார்ட்டயாவது மாட்டிக்கிறதுன்னு ஞாபகம் வந்தாலே திகிலாகும்.” அவன் சொல்லிக் கொண்டு போக பிஸ்டலைப் பார்க்கவும் அவன் மிரண்டது இவளுக்கு நியாபகத்தில் வருகிறது.

“நீ அண்ணாட்ட நல்லா பேசுற டைப்னா, என்னை யார்ட்டயும் அடி வாங்குன்னு மட்டும் விட்டுடக் கூடாதுன்னு அவங்கட்ட சொல்ல முடியுமா? அதை நினச்சா மட்டும் பயங்கரமா பயமா இருக்கு. ஒரேடியா கொன்னுட்டாங்கன்னா கூட எனக்கு பிரச்சனை இல்ல” இதுவரை பேசிக் கொண்டிருந்தவன் சட்டென எழுந்து போய்விட்டான்.

கேட்டுக் கொண்டிருந்த இவளுக்கு எப்படி இருக்கிறதாம்?

தன் பலவீனத்தை இவளிடம் காட்டுகிறோமே என நினைத்தான் போலும், அதுதான் அவன் இவளிடம் பேசிய கடைசி வார்த்தைகளாய் இருந்து போனது.

மறுநாள் அவளை அந்த சோப்டப்பாவில் மலையடிவாரம் வரை கூட்டிப் போய், அங்கிருந்து அவன் காரில் ஒரு மருத்துவமனை வளாகத்துக்கு கூட்டிப் போனான்.

பவி அங்கு வந்திருக்கிறாள் என தெரிந்துதான் வந்தான் போலும். என்னதான் பெயின் கில்லர் போட்டுக் கொண்டு இருந்தாலும், கட்டிலிலிருந்து இறங்கி ஏறும் போது, காரில் ஏறி இறங்கும் போதெல்லாம் இவளுக்கு  வலி இருந்து கொண்டிருக்க, அதனாலோ அல்லது பவியைக் கண்டுவிட்ட அதீத உணர்ச்சி வேகத்தினாலோ,

இவள் பார்வையில் தூரத்தில் மருத்துவரை காண காத்திருந்த பவி படவும் வேக வேகமாக ஓட யத்தனித்தவள் அப்படியே தெம்பற்று மயக்கத்தில் சரிய,

ஒற்றைக் கையால் இவளை தாங்கிப் பிடித்த நரேன், முஷ்டி முகமெல்லாம் இறுக, வானத்தை நோக்கிப் முகத்தை உயர்த்தி, இறுகி மூடிய கண்களோடு, கடவுளே! என்க, அதுதான் வேணி அவனை கடைசியாய் கண்ட காட்சி.

அடுத்த பக்கம்