துளி தீ நீயாவாய் penultimate (3)

“பெண் கேட்டு வந்தப்பவே கல்யாணத்துக்கு சம்மதிப்பன்னு நான் நினைக்கல, ஆனா அடுத்து நாலஞ்சு தடவை உன்னை வெளிய வேற போல இம்ப்ரெஸ் செய்தா என் கூட வந்துடுவன்னுதான் தோணிச்சு எனக்கு. ப்ரவி அண்ணாவ ஊரவிட்டு அனுப்றதவிட உன்னை கூட்டிட்டு தூரமா எங்கயாவது போய் செட்டில் ஆகிடுறது எல்லா வகையிலும் சரியா வரும்னு அப்ப ப்ளான மாத்தியிருந்தேன். சின்ன பொண்ணுதான, ஈசியா நம்ப வச்சிடலாம்னு நினச்சேன்” அவன் இவள் முகத்தைப் பார்க்காமல் எதையோ தீவிரமாய் பார்த்தபடி சொல்லிக் கொண்டு போக,

“ஏற்கனவே ஏமாந்தவதானே ஈசியா ஏமாத்தலாம்னு பட்டுட்டுப் போல” என கடுப்போடு வருகிறது வேணியின் குரல். அவள் கோபப்பட கூடாது எனதான் முடிவு செய்து வைத்திருக்கிறாள், ஆனால் அவளையும் மீறி  குரலில் வந்துவிடுகிறதுதான்.

“அதுக்கு அர்த்தம் ஏமாத்றதான்னு எனக்குத் தெரியல. குடோன் திருட்டப் பத்தியோ என் சுறாவப் பத்தியோ உன்ட்ட என்னைக்குமே சொல்லக் கூடாதுன்னு நான் நினச்சிருந்தேந்தான், மத்தபடி உன்னை நல்லா வச்சிகிடணும்னுதான் எப்பவுமே யோசிச்சிருக்கேன், எனக்கு பிடிச்ச போல நீ இருக்கணும்னு கூட எனக்கு எதிர்பார்ப்பு இல்ல, உனக்கு பிடிச்ச போல நான் இருக்கணும்னுதான் எப்பவும் மனசுல ஓடும்” இப்போது இவளை முகத்தோடு முகமாக அவன் பார்த்தான்தான்.

“திருட்டு, கூடவே எனக்கு பிடிச்ச மாதிரி, வெரி குட், அற்புதமா இருக்கு லாஜிக்” என்றாள் வேணி. ஆனால் படுக்கையின் பக்கவாட்டில் இருந்த இவன் முகத்தைப் பார்க்கவில்லை அவள். நேராக திரும்பிக் கொண்டாள்.

“எனக்கே பின்னால வர்றப்ப இது உறுத்த ஆரம்பிச்சுதுதான், நம்மளோட எந்த மீட்டிங்கிலுமே நீ நான் என்ன கோல்மால் செய்து வச்சிருக்கனோ, கரெக்டா அதை அப்படியே கெஸ் பண்ணிடுவ. முதல்லலாம் என்ன பொண்ணுடா இவ, நம்மள அப்படியே புரிஞ்சிக்கிறாளேன்னு ஆசையா இருக்கும், எங்க அதை வேற புரிஞ்சிப்பியோன்னு டென்ஷனாகி, சமாளிக்க வெறிச்ச போல முழிச்சதெல்லாம் உண்டு.  கல்யாணம்னு ஒன்னு எனக்கு வந்தா அது உன் கூடத்தான்ற கனவு தொடர உன்னோட இந்த புரிஞ்சிக்கிற தன்மை ரொம்ப முக்கிய காரணம்.

காதல்னாலே பொண்ணுங்க முதல்ல கொஞ்சம் வேண்டாம் வேண்டாம்பாங்க, அப்றம் சரின்னுடுவாங்கன்றதுதான் இயல்பு, அது போலதான் நீயும் செய்துகிட்டு இருக்கன்னுதான் அப்பல்லாம் எனக்கு மனசில் இருந்துச்சு. நீ நியாய அநியாயம் பார்க்கிற, என் சுபாவத்த வெறுக்கிறன்றதை என்னால அப்போ புரிஞ்சுக்கவோ, புரிஞ்சுகிட்டாலும் ஏத்துக்கவோ மனசு இல்ல.

அதனால நீ நம்ம காதலுக்கு சரின்னு சொன்ன பிறகு இந்த புரிஞ்சிக்கிற நேச்சர் நமக்கு ரொம்ப ஃபேவரா இருக்கும்னு நினைப்பேன்.

ஆனா  நீயும் மதுவும் நியாயம், நேர்மைன்னு பின்னால ரொம்ப பேச பேச, என்னோட நிஜ முகத்தை நீ ஈசியா புரிஞ்சிக்கவும் செய்வ, வெறுக்கவும் செய்வியோன்னு பயம் வர ஆரம்பிச்சுது.

ஆனா இப்படி தாட்லாம் வர்றப்ப நீ என் உலகம்ன்ற அளவுக்கு என் மனசில வந்துருந்த. பவி அண்ணி கூட சேர்ந்து இந்த ப்ராஜக்ட்லயும் நான் ரொம்பவே வேலை செய்திருந்தேன். ப்ரவி அண்ணா வீட்ல உள்ளவங்க கூட பழகியுமே என்னை யாரும் கண்டு பிடிக்கலைனா, கடைசி வரை உன்னை, ப்ரவி அண்ணாவையெல்லாம் சமாளிச்சிடலாம்னு அந்நேரம் தைரியம் வந்திருந்தது” என்றவன்,

“இப்ப மது பேசுனப்பதான் அண்ணா என்னை கண்டுபிடிச்சுட்டும் ஏதோ காரணத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அது தெரியாம அண்ணாவ, உன்னையெல்லாம் கடைசி வரை ஏமாத்தலாம்னு மாய சொர்கத்துல இருக்கேன்னு தலைல அடிச்சது போல புரிஞ்சிது” என அமைதியானான்.

இங்கு வேணியோ சரேலென அவனை திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வை புரிந்தவனாய் ”மது இப்ப பேங்களூர்ல வச்சு அவளாவே என் பேக்ரவ்ண்டை கெஸ் செய்துட்டா” என சொல்லி வைத்தவன்,

“நான் தப்பு செய்துட்டேன்னு முழுசா உணர்ந்துதான் உன்ட்ட பேசிட்டு இருக்கேன்” என்றான் மீண்டுமாய்.

“ஆனா இதுக்கெல்லாம் முன்னால, நான் பெண் கேட்டு வந்தப்ப நீ திட்டின திட்டுலயே எனக்கு பெரிய ஏமாற்றம்னா, அண்ணிட்ட நீ ஒட்டின வகைய பார்த்தப்ப திகிலா இருந்துச்சு. வந்த ஒருநாள்ல இவ்வளவு சேர்ந்துக்கிறன்னா இன்னும் நாள் போச்சுன்னா எவ்வளவு சேர்ந்துப்ப? அடுத்து என்னை நீ விரும்பவே செய்தாலும், கல்யாணத்துக்கு பிறகும் அண்ணா வீட்டோட டச்ல இருக்கணும்னு நினைப்பியே! என் வேலைக்கு அது எப்படி முடியும்? இன்ஃபேக்ட் உன்னை கன்வின்ஸ் செய்றதுக்குள்ள அண்ணாவுக்கு வேற என் மேல சந்தேகம் வந்துடக் கூடாது.

ஆக முதல் வேலையா உன்னை அண்ணா வீட்ட விட்டு வெளிய வர வைக்கணும்னுதான் அந்த லெட்டர உனக்கு கிடைக்குற போல செய்தேன், அப்ப ப்ரவி அண்ணா வீட்டோட எனக்கு நேரடி பழக்கம் இல்லல, அவங்கட்ட மாட்டாம கடைசி வரை சமாளிக்க முடியும்னு அப்போல்லாம் தைரியம் கிடையாது, அவங்க அலர்ட் ஆகுறதுக்குள்ள அவங்க கைல இருக்க உன்னை கூட்டிட்டு ஓடிடணும்னு மட்டும்தான் மனசில் இருந்தது” அவன் நடந்து முடிந்தவைகளை சொல்லத் துவங்க,

அது காதில் விழவும் அவனை வார்த்தையால் குத்தி குதறிவிடத்தான் கொந்தளிக்கிறது வேணிக்கு. ஆனால் அவன் தான் தப்பு செய்துவிட்டேன் என சொல்லிக் கொண்டிருக்கும் போது என்னதைச் சொல்லவாம் இவள்?

“அண்ணா அண்ணின்னு மனசால நினைக்கிறவங்களப் பத்தி இப்படில்லாம் எழுத கூட முடியுமா என்ன?” என்று மட்டும் கேட்டு வைத்தாள்.

“நீ நம்பினாலும் நம்பாட்டாலும் உண்மையில் எனக்கும் இந்த வலி மனசுல ரொம்ப இருந்துது. ஆனா உன்னை உடனே அவங்க வீட்டை விட்டு வெளிய வரை வைக்க வேற வழி தெரியல. அந்த ரோஹன் விஷயத்தில் ஏமாந்துட்டோம்னு அப்பதான் ஹர்ட் ஆகியிருக்கதால, ஒரு கேரக்டர் சரியில்லாத ஆண் இருக்க வீட்ல தங்க பயப்படுவன்னு யோசிச்சேன்” இவள் முகத்தைப் பார்க்கவில்லை அவன்.

“திருட்டுதான் நீ செய்ததிலேயே பெரிய தப்புன்னு நினைச்சுகிட்டு இருக்கியா?” அவனைப் பார்த்த இவள் விழிகளிலோ தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆத்திர ஆத்திரமாய் வருகிறதுதான் இவளுக்கு. ஆனால் வேறு என்ன சொல்ல?

“நீ சொல்றதும் சரிதான், ரொம்பவும் மானுப்ளேட் செய்து பழகி இருக்கேன்” இதுவும் பெரிய குற்றம்தான் என ஒத்துக் கொண்டான். இரு கைவிரல்களையும் கோர்த்து தன் நெற்றியை அதால் தாங்கியபடி சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

“எப்படியும் அண்ணா அண்ணிக்கு இந்த லெட்டர் ரீச் ஆகாதுல்லன்ற தைரியம், அதுதான் ரொம்ப யோசிக்காம இதில் இறங்கிட்டேன்” அவன் தொடர,

“எனக்கென்னமோ ரொம்ப யோசிச்சுதான் இறங்கினாப்ல படுது” குத்தல் அவளிடம்.

இரு புருவங்களை மட்டுமாய் உயர்த்தி அவளைப் பார்த்தான்.

இரு நொடி மௌனத்துக்குப் பின் “தெரியாம தப்பு செய்துட்டேன்னு நான் எதையுமே சொல்ல வரல, தெரிஞ்சேதான் செய்தேன், இதாலெல்லாம் நமக்கு நல்லது நடக்கும்னு அப்போ நம்பினேன், இப்ப அந்த நம்பிக்கை இல்ல, அது மட்டும்தான் மாற்றம், அதைத்தான் சொல்ல ட்ரைப் பண்றேன்” என்றான்.

‘இதற்கு இவள் என்ன சொல்ல?’

அடுத்த பக்கம்