துளி தீ நீயாவாய் penultimate (2)

ஆனாலும் எதனால் இப்படி சட்டென மாறிப் போனான் இவன்? இவள் விழுந்து கிடந்தத பார்த்து பயந்துட்டானா? அது வெறும் உணர்ச்சி வேக முடிவால்ல இருக்கும்? ரெண்டு நாள்ல மனசு பழைய இடத்துக்கே வந்திடுமே. இப்படி ஒரு எண்ணம் வேறு திகில் தந்தது.

“ஏன்? என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு?” விசாரித்தாள்.

“ப்ச், செய்றது தப்புனு புரிஞ்சிது” விளக்கமாக அதைப் பற்றி அவன் பேசத் தயாராயில்லை என்பதை இப்படிக் காட்டினான்.

“ஓ” என்று சொல்லிய வேணிக்கு அடுத்து எப்படி பேச்சை வளர்ப்பது என்றுதான் எண்ணம் ஓடியது. இவன் நிஜமா சரண்டர் ஆகப் போறானா? அவன பேசவிட்டு கேட்டாதான் இவளுக்கு புரியும்.

“என்னை எப்படி தெரியும் உங்களுக்கு? எங்க ஊர்ல நான் உங்கள பார்த்ததே கிடையாதே!” இத்தனை நாள் கேட்காத காரியத்தை விசாரித்தாள். இதில் தொடங்கியாவது எதையாவது பேசுவானா என்பது அவளுக்கு!

சின்னதாய் ஒரு புன்னகை வந்து போகிறது அவன் முகத்தில். “ப்ரவி அண்ணா வீட்லதான் பார்த்தேன்” என்றவன்

“ப்ரவி அண்ணாவப் பத்தி முதல் முதல்ல மாணிக்கம்பா சொன்னதுல இருந்து என் மனசுல எப்பவுமே அவங்கள அண்ணான்னுதான் சொல்லுவேன், அப்படியான இடம்தான் அவங்களுக்கு. அதனாலதான் அப்பா இறந்த பின்ன, அதுவும் திருடுறமேன்னு சில நேரம் உறுத்துறப்பல்லாம் அண்ணாவ கூப்ட்டு எதாவது பேசிட்டு இருப்பேன்.

ஆனா அண்ணா இங்க என்னை கண்டு பிடிக்கிறதுக்குன்னே ட்ரான்ஸ்ஃபர்ல வந்திருக்காங்கன்னு தெரியவும், அவங்கள ஊரை விட்டு எப்படியும் அனுப்பணும்னு யோசிக்கிற நிலை எனக்கு!

அண்ணி இங்க வரவும் அவங்க வயல ஃபோகஸ் செய்றது புரிஞ்சிது. அதில் அவங்க வேலைய ஆரம்பிச்சுட்டா, அடுத்து இங்க இருந்து ஈசியா கிளம்ப மனசு வராதேன்னு, அதில் பன்னியல்லாம் அடிச்சு போட்டு ராசி இல்ல, புலி அது இதுன்னு பயம்காட்டி அவங்கள கலச்சிவிட யோசிச்சேன்.” என்றவன்

அடுத்து வேறு மாநிலத்தில் இவன் இருப்பதாக காணிக்க, பெங்களூர் குடோனில் திருடிவிட்டு, அங்கிருந்து அரைமணி நேரத்தில் அவனது சுறா மூலம் ஏர்போர்ட்டை அடைந்து, அங்கிருந்து ப்ரவி வீட்டுக்கு நான்கு மணி நேரத்துக்குள் வந்த கதையைச் சொல்லி,

“அப்படியே ப்ரவி அண்ணா வீட்ல எதாவது  நகை அல்லது வேலியபிள்ஸ அன்னைக்கு எடுத்திடணும்னுதான் அங்க வந்தேன். பெங்களூர்ல இருக்கது நான்னா, இங்க வேற ஒரு கிரிமினல் இருக்கான்னு காமிக்க ப்ளான். போலீச எனக்கு பிடிக்காது, இங்க இருந்தா இப்படித்தான் செய்வேன்னு அந்த கிரிமினல் மிரட்டுற போல சீன் க்ரியேட் செய்துட்டா, உள்ளூர்ல அண்ணாவ பிடிக்காத வேற யாரோவும் இருக்கான்னு நினச்சுப்பாங்க. இது போல இன்னும் நாலஞ்சு இன்சிடென்ட் செய்து வச்சா, அண்ணிய இங்க தங்க விட அவங்க வீட்ல யோசிப்பாங்க, ப்ரஷர் பண்ணி ப்ரவி அண்ணாவ ட்ரான்ஸ்ஃபர் வாங்க சொல்லுவாங்கன்றது என் எண்ணம்,

அண்ணா மேரேஜ் நடந்த விதம் கொஞ்சம் தெரியும் எனக்கு, ப்ரவி அண்ணா அவங்க மூத்த அண்ணா எதைச் சொன்னாலும் ரொம்ப ஈசியா முடியாதுன்னுல்லாம் சொல்லிட மாட்டாங்கன்னு அப்ப தோணிச்சு, அண்ணிக்கு ப்ராப்ளம்ன்னா அவங்க மூத்த அண்ணா சும்மா இருக்க மாட்டாங்கன்னு எல்லாம் யோசிச்சு செய்த ப்ளான் இது” அவன் சொல்லிக் கொண்டே போக,

“அண்ணான்னு சொல்றவங்க வீட்ல போய் திருட.. சாரி இப்படில்லாம் செய்ய  எப்படி மனசு வந்துச்சு?” என இடையிட்டாள் வேணி.

“அவங்கள ஹர்ட் செய்யாம திருப்பி அனுப்பணும்னு மட்டும்தான் மனதில் இருந்திச்சு.  வேலியபிள்ஸை எடுக்கிறது என்னமோ ஹர்ட் பண்றதா படவே இல்ல. பழகிட்டு போல!” என வருகிறது அவனது பதில்.

கூடவே சின்னதாய் ஒரு முறுவல்.

“நீ சாரி கேட்டாலும் கேட்காட்டாலும் அது திருட்டுதான். என் மேல உள்ள இரக்கத்தில் மாத்தி சொல்லணும்னு இல்ல” என்க,

“இதுக்கு பேர் இரக்கம் இல்ல, மரியாதைனு வேணா வச்சுக்கலாம், மாறிட்டேன்னு சொல்றீங்கள்ள, அப்ப பழசை சொல்லி குத்தி பேசிட கூடாதுல்ல” இது வேணியின் விளக்கம்.

“உன் அளவெல்லாம் என்னைக்காவது சென்சிடிவா எனக்கு யோசிக்க வருமான்னே தெரியலியே” எனச் சொல்லிக் கொண்டவன்,

ஒரு பெருமூச்சுக்குப் பின்,

“அப்பதான் நீ ரோஹன்ட்ட பேசுறது காதில் விழுந்துச்சு. உன் முகத்தை பார்க்க முன்ன கூட  உன்னை கல்யாணம் செய்யணும்னு முடிவுக்கு வந்துட்டேன்” என்றவன் அன்றைய அவன் மன ஓட்டத்தையும் சொல்ல, வேணி இப்போது தாட் பூட் என குதிக்கவில்லை எனினும்

“இதெல்லாம்  எமோஷனல் ஹைஜாக்கிங் போலதான். சரியா சொல்லப் போனா அந்த ரோஹன் என்னை விரும்பினதுக்கும் இதுக்கும் ஒரு வித்யாசமும் கிடையாது. ஒரு மொமன்டரி ஃபீல். அடுத்து அவன் தங்கைய வச்சு எனக்கு நாமெல்லாம் ஒரு குடும்பம்னு ஒரு ஃபீல ஏற்படுத்த ட்ரைப் பண்ணது போலதான், மதுவ வச்சு நீங்க என்ட்ட ட்ரைப் பண்ணதுமே,

இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் கழிச்சு யோசிச்சுப் பார்த்தீங்கன்னா இது எல்லாமே உங்களுக்கே அபத்தமா படும். அதனால இதெல்லாம் இதோட மறந்துட்டு போய்டுங்க, நான் ஜஸ்ட் உங்களுக்கு ஒரு ஃப்ரென்ட், அவ்வளவுதான். அதுதான் உங்க மனசில் இருக்கணும்” எனும் போது வேணியின் குரல் அத்தனை பலவீன நிலையிலும் ஏறி இருந்தது.

“ம்..ம் நீ சொன்னா சரியாதான் இருக்கும். ஆனா அதுக்காக நான் அந்த ரோஹன் நாய் போலன்னுல்லாம் சொல்லாத” என ஒருவாறு இதையுமே ஒத்துக் கொண்டான் நரேன். காதல் கத்திரிக்காய் என யோசிக்க அவனுக்கே சம்மதமில்லை போலும்.

“அப்ப நான் உன்னை லவ் பண்றதாதான் நம்பினேன், அதுவரைக்கும் அண்ணா அண்ணி கூட பழகுறது போல கற்பனைல கூட எனக்கு ஐடியா கூடாது. அது நானே போய் வம்புல தலைய கொடுக்குறதுல? ஆனா எப்ப அவங்க வீட்ல இருக்க நீதான் எனக்குன்னு தோணிட்டோ அடுத்து சும்மா இருக்க முடியாதே! அதான் மறுநாளே பெண் கேட்டு வந்தது.

கல்யாணத்துக்குன்னு கேட்கிறதாலயே உனக்கு என் மேல மரியாதை, நம்பிக்கைல்லாம் வரும்னு நினச்சேன். அதுவும் உன் கடந்த காலம்லாம் தெரிஞ்சும் உன்னை விரும்புறேன்னதும் நீ என்னை ரொம்ப பாசிடிவான ஒருத்தனா பார்ப்பன்னு நினச்சேன்” அவன் சொல்லிக் கொண்டிருக்க, வெட்டிக் கொண்டு இடையிடுகிறது வேணியின் குரல்.

“எது ஒரு தெய்வம் எனக்கு வாழ்க்கை கொடுக்க வந்துட்டுன்னு கால்ல விழுறாப்ல மூவிலலாம் காமிப்பாங்களே, அதுவா?”

உணர்வுகள் மௌனித்த ஒரு பாவத்தில் அவளைப் பார்த்தான்.

“எனக்கு சுயமா யோசிக்கத் தெரிஞ்ச வயசிலிருந்து குடும்பம்னு எதுவுமே கிடையாது, அப்படியே குடும்பமே இருக்கவங்க  வீட்ல கூட பையன்ட்ட காதல், கற்பு, மாரல் வேல்யூஸ்னா என்னது, ஒரு பொண்ணு இந்த இந்த விஷயத்தில் இப்படி இப்படி ஃபீல் பண்ணுவான்னு சொல்லி தந்து வளர்க்கிறாங்களான்னும் தெரியாது. ஆக இங்க நூத்துல 90% பேருக்கு மூவில  காமிக்கிறதுதான் நிஜ எமோஷன். இதுல நீ என்ட்ட மட்டும் கோபபட்டு என்ன ஆகப் போகுது?”

“…..”

“மூவி எடுக்கிற எல்லாமே ஆண்கள், ஒரு பொண்ணுனா இப்படித்தான் ஃபீல் பண்ணனும்னு அவங்களுக்கு எது வசதியா படுதோ அதையே எடுத்துகிட்டு இருக்காங்களேத் தவிர, நிஜமா ஒரு பொண்ணு என்ன போல ஃபீல் பண்ணுவான்னு அவங்களுக்கே தெரியாதுன்னு எனக்கு ரொம்ப ரீசண்டாதான் புரிஞ்சிது, அதுவும் நீ திட்டி திட்டித்தான்”

“ம்” என முனங்கினாள் வேணி. இந்த இடத்தில் அவளுக்கு என்ன சொல்லவெனத் தெரியவில்லை.

அடுத்த பக்கம்