துளி தீ நீயாவாய் penultimate

கண்ணெல்லாம் நீர் கோர்க்க வெளிறிப் போய் அமர்ந்திருந்த நரேன் இவள் பார்வையில் புரிபடவும்தான், தான் எங்கிருக்கிறோம், வயிறு வலியால் பூட்டிய கழிவறையில் மயங்கி விழுந்தோம் என்பதெல்லாம் அவளுக்கு நினைவில் வருகிறது.

பெண்மையல்லவா? முதல் கணமே திகீரென பற்றிக் கொண்டு வருவது ஐயோ இவன் கதவை உடச்சுட்டு உள்ள வர்றப்ப  என் ட்ரெஸ் எப்படி இருந்திச்சோ? என்பது தொடங்கி அந்த ரீதியிலேயே அவள் உணர்வுகள் பாய,

‘எல்லாம் இவன் இப்படி கடத்திட்டு வரப்போய் என்னவெல்லாம் இவள் அவமானப்பட வேண்டி இருக்கு’ என கூடவே கொதிக்க,

அழுகையும், கொந்தளிப்பும், ஆற்றாமையுமாய் “என்னடா செய்த என்ன?” என இவள் வெடித்தாள்.

இல்ல கத்த முயன்றாள். ஆனால் வெகு வெகு பலவீனமாய்தான் வருகிறது குரல். தான் எத்தனை சோர்ந்திருக்கிறோம் என்பதே அப்போதுதான் புரிகிறது அவளுக்கு.

அதற்குள் அவனோ “ஐயோ ஸ்ட்ரெயின் பண்ணாத வேணி, நீ ஹர்ட் ஆகுற மாதிரி நான் எதுவுமே செய்யல, பாரு டாக்டர் என்ன என்ன செய்யச் சொன்னாங்களோ, அதை மட்டும்தான் செய்தேன். ஒரு டாக்டரோ நர்ஸோ ஆப்ரேஷன் தியேட்டர்ல என்ன செய்வாங்களோ அதைத்தான், அந்த மைன்ட் செட்ல மட்டும்தான் நான் எதுவுமே செய்தேன்” அவனோ அவசர அவசரமாக இவள் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்போடு சொன்னான்.

டாக்டர் சொன்னபடி என்னதோ செய்தானாமா? அவன் சொன்ன வகையில் வேணிக்கு கவனம் தன் மீது போக,  அவளுக்கு முழு நீள சர்ஜிகல் கவ்ன் ஒன்று அணிய வைக்கப்பட்டு கிடத்தப் பட்டிருப்பது புரிகிறது. முழு பாவாடையும் ஒரு டாப்ஸுமாக இருந்தவளைத்தான் தூக்கி வந்திருந்தான் இந்த நரேன். அந்த டாப்ஸ் மேலேயே இந்த கவ்னை அவன் அணிந்து வைத்திருந்த விதம், அவன் தவறான எந்த நோக்கத்திலும் எதையும் செய்யவில்லை என இவளுக்கு உணர்த்தினாலும்,

அவளுக்கு மாதவிடாய் வந்திருக்கிறது, உதிரப் போக்கின் நிமித்தம் இப்படி ப்ளாஸ்டிக் கவ்னை அணிந்து, படுக்கையிலும் ஒரு ரப்பர் ஷீட்டைப் போட்டு இவள் கிடத்தப்பட்டிருக்கும் விதம் ஐயோ என்றுதான் வருகிறது.

கையில் எதாவது வாகாக கிடைக்காதா? அவன் மேல் தூக்கி எறிய!

“என்னை இன்னும் என்னல்லாம் அசிங்க படுத்தலாம்னு இருக்க? நீ தூக்கிட்டு வரப் போய்தான எனக்கு இந்த கேவலம்..” இவள் இருந்த கொஞ்ச நஞ்ச தெம்பில் இன்னுமே அழ,

“தயவு செய்து கேவலம்னுலாம் நினைக்காத வேணி, என்னையப் பொறுத்த வரைக்கும் நான் கடவுள கண்ட நேரம் இது. தயவு செய்து என்னை உன் அம்மா போல யோசிச்சுக்கோ, என்னால உன்னை என் அம்மாவா மட்டும்தான் பார்க்க முடிஞ்சுது. ப்ளீஸ் விஷயத்தை கொச்சை படுத்தாத, இதோட விட்டுரு வேணி” என பரிதவிப்பாய் மறுத்தான் அவன்.

இவன் என்ன உளருகிறான் என ஒரு பக்கம் இருந்தாலும், அம்மாவா பார்த்தேன் என அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை இவளையும் மீறி இவளை கொஞ்சம் ஆறுதலும் படுத்தி வைக்கிறதுதான்.

“உன்னை இந்த கண்டிஷன்ல கூட்டிட்டு வரக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க, அவங்க வர்ற அளவுக்கும் டைம் இல்ல, அதான்” அவன் புலம்பிகிறானா என்ன?

“எனக்கு இதெல்லாம் ஒன்னுமே தெரியாது வேணி, முதல்ல அப்படி ரத்தத்தில் நீ விழுந்து கிடப்பதை பார்க்கவுமே உயிரே போய்ட்டு, உன்னை எவ்வளவு தட்டிப் பார்த்தாலும் உனக்கு விழிப்பு வேற வரலை. ரொம்பவும் பயந்துட்டேன்” அவன் சொல்லிக் கொண்டு போக,

ஆமான்ன பொண்ணோட பிறந்து வளந்தவங்களுக்கே இது என்னதுன்னு தெரியாது இங்க, இதில் குடும்பமே இல்லாம இருந்த இவனுக்கு என்ன தெரிந்திருக்கும் என புரிதல் ஓடுகிறது இவளுக்கு.

“அதான் இங்கிருந்து கொஞ்ச தூரம் போனா ஒரு இடத்தில சிக்னல் கிடைக்கும், அவசரமா அங்க போய் டாக்டருக்கு கால் பண்ணினேன், அவங்கதான் ஹாஸ்பிட்டல் வர வேண்டாம், அங்கயே வச்சு மேனேஜ் செய்ங்கன்னு சொல்லிட்டாங்க” அவன் சொல்லிக் கொண்டு போக,

“இந்த பேச்ச விடேன்” என்றாள் இவள்.

என்னதான் கண்ணியம் என்ற ஒன்றை தவறிய ஒரு புள்ளி கூட அவன் குரல், முகம், தவிப்பு எதிலும் இவள் காணவில்லை எனினும், இதை இவ்வளவு விலாவாரியா அவன் பேசுறத கேட்க நல்லாவா இருக்கு இவளுக்கு?

அவன் புரியாமல் பார்த்த பார்வையில்

“எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ளதுதான் இது, சின்ன விஷயம்” என காரணம் கொடுத்தாள்.

இன்னுமாய் முகம் சுருங்க சில நொடிகள் இவளைப் பார்த்திருந்தாலும் அடுத்து அவனுமே அதை விளக்க முற்படவில்லை.

“இப்ப பெய்ன் இல்லதானே? பெயின் கில்லர் ட்ரிப்ஸோட கொடுக்கச் சொன்னாங்க. எனக்காக நீ இன்னும் ஒரு நாள் இங்க மேனேஜ் செய்ய வேண்டி இருக்கும். நான் என் ப்ராப்பர்ட்டிய எல்லாம் அது அதுக்குன்னு போட்டிக்கு இருந்தவங்கட்ட விலை பேசியிருக்கேன். நாளைக்குள்ள எல்லா காசும் வந்துடும், திருடுறவன் பிடிபடுறப்ப அஞ்சு மடங்கா திரும்ப கொடுக்க வேண்டி இருக்கும்னு சொன்னல்ல, அதான் யார் யார்ட்ட இருந்து என்ன எடுத்தனோ அதுக்கு அஞ்சு மடங்கு பணம் அவங்களுக்கு அனுப்பிவிட போறேன், அடுத்து போய் சரண்டர் ஆகிடுவேன்” என தனது புதிய முடிவைச் சொன்னான்.

உடை கறையை இவன் பார்த்துட்டானே என்ற அதிர்ச்சிகளை தாண்டிப் போனது இந்த அதிர்ச்சி இவளுக்கு. ஒன்றும் புரியாமல் பார்த்தாள் வேணி. இவள் காது சரியாகத்தான் வேலை செய்கிறதா?

“இப்படியே போய் சரண்டர் ஆனா, ப்ரவி அண்ணா  கை ரொம்ப சுத்தம்தான், ஆனா அவங்க டிபார்ட்மென்ட எனக்கு அப்படி தோணாது, இந்த பணம், லேண்டெல்லாம் என்ன செய்வாங்கன்னு தெரில, அதான் யார்ட்ட எடுத்தமோ அவங்கட்ட கொடுத்துட்டு போகலாம்னு முடிவு செய்துட்டேன்” அவனது அடுத்த விளக்கம் இது.

நியாயப்படி வேணிக்கு நிம்மதி வரவேண்டும் இதில். இதைத்தானே அவள் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்? ஆனால் இப்போது இது மிகப் பெரிய காரியமாகப்பட்டு, ஏனோ பயம் வருகிறது. அவனுக்காய் பரிதவிக்கிறது. அஞ்சு மடங்கா கொடுக்குறதுன்னா, அதெல்லாம் அவனோட சம்பாத்யமல்லவா? அவன் திருட்டை விட்டு திருந்திவிட்டான் என்பதற்கு இவளுக்கு இதைவிட பெரிய சாட்சியெல்லாம் எதுவும் தேவையில்லை. இப்போது அவன் நிராயுதபாணி, இவனை இந்த உலகம் என்ன செய்யும்?

“ப்ரவி சார் உங்களுக்கு முழுக்க முழுக்க ஹெல்ப் பண்ணுவாங்க” அவனுக்கும் தனக்குமாகவே சொல்லி வைத்தாள்.

“ம், தெரியும், ஆனா இப்ப கொலைவெறி கோபத்துல இருப்பாங்க. உன்னை கொண்டு வந்துட்டேன்னு ஆத்ரம் இருக்கும், ஆனா இன்னும் ஒரு நாள் நான் வெயிட் பண்ணித்தான் ஆகணும் வேற வழியில்ல, அடுத்து உன்னை ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு நான் போய்டுறேன் என்ன?” என அவன் பதில் கொடுக்க,

“ஹாஸ்பிட்டல்லாம் ஒன்னும் வேண்டாம், சார் வீட்ல என்னை விட்டா போதும், அங்கயே நீங்க சாரையும் பார்த்துடுங்க” என்றாள் இவள். அவனது கொத்தடிமைக் காலமெல்லாம் இவள் மனதில் பிசைய, ப்ரவி நரேனுக்கு ஒன்னும் பெரிசா பிரச்சனை ஆகாது என சொல்வதை இவள் கேட்டால்தான் இவளால் நிம்மதியாக இருக்க முடியும் என்று ஒரு நிலை. ஆக இந்த சரணடைதல் இவள் பார்வையிலேயே நடக்கட்டும் என தவித்தது இவள் மனது.

அடுத்த பக்கம்