TTN Final Part 1 (9)

“என் கம்பெனி நேம் உன் பேர வச்சு வச்சதுதான், ஆனா அதுக்கு அர்த்தம் நீ நினைக்கிற போல இல்ல, எப்படி பார்த்தாலும் என் வாழ்க்கை நல்ல திசைக்கு திரும்ப நீதான காரணம், அந்த ஒரு நன்றியுணர்வுல வச்சது. எந்த காலத்திலும் உனக்கு நான் எந்த ப்ரதிபலனும் செய்ற நிலையும் வராது, அதனால உன் பேரையாவது வைக்கணும்னு வச்சேன், புரிஞ்சுதா?” என்றான் அவன்.

தவிப்பிருந்தது அவன் முகத்தில். இந்த பெயர் விஷயத்தை வைத்துதான் அவள் தனக்கு அவள் மீது இன்னும் காதலிருக்கிறது என புரிந்து குழப்பிக் கொள்கிறாள் என்பது இவனது எண்ணம். ஆக  இதைச் சொன்னாலாவது அவளுக்கு இவன் மறுப்பு புரிந்து விடும் என எண்ணினான்.

“இததான் அப்பவே சொன்னீங்களே? தப்பா எதுவும் வைக்கலன்னு” இவளோ இப்படி ஆமோதிக்கிறாள். இவள் பேச நினைத்திருப்பதை இவளுக்கு முன்னாக அவனே சொல்லிவிடுவானோ எனப் போகிறது இவள் மனம்.

அவனுக்கோ அவள் நிலை சுத்தமாக புரியாமல் போக,

“எனக்கு உன் மேல காதல்னு எதுவும் இல்லன்னு நீ புரிஞ்சுக்கணும் வேணி” என்றான் இப்படியெல்லாம் பேச வேண்டி இருக்கிறதே என்ற அத்தனை வாதையுடன்.

“அதுதான் தெரியுமே” என வெகு இயல்பான புன்னகையுடன் அத்தனை தெளிவான முகபாவத்துடன் அவள் சொல்ல, சட்டென மீண்டுமாய் பிறந்தான் இவன்.

என்ன ஒரு நிம்மதி?!! சே வேணியப் போய் என்னல்லாம் நினச்சு குழப்பி இருக்கான் இவன்?

அவன் முகத்தில் வந்த இலகு பாவத்தைப் பார்க்கவும் இவளுக்கோ இதற்கு மேலும் இவள் பேச நினைத்திருப்பதை பேசாதிருக்க கூடாது என்று தோன்றிவிட்டது. விஷயத்தை முதலில் சொன்னது இவளாக இருக்க வேண்டுமானால் இப்போதாவது இவள் சொல்லிவிட வேண்டும்.

“ஆனா லவ் பண்றவங்கதான் மேரேஜ் செய்யணும்னு எதுவும் இல்லையே? அரேஞ்ச்ட் மேரேஜா நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கிறது நல்லா இருக்கும்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்குது” என்றாள் அவளை விட சற்று அதிகமாகவே உயரமாக இருந்த இவனை  நிமிர்ந்து பார்த்தபடி.

வெட்கமோ, அச்சமோ அல்லது இழிப்போ எதுவுமில்லை, முழு மொத்த தெளிவு மட்டுமே அவளிடம்.

“ஏன்னு தெரியல ஆனா இந்த விஷயத்தை நான்தான் உங்கட்ட சொல்லணும்னு மட்டும் எனக்குள்ள ஒன்னு ரொம்பவே தோணிச்சு. அதான் சொல்லிட்டேன். உங்கள மேரேஜ் செய்ய எனக்கு பிடிச்சிருக்கு” முந்திய வரிகளின் அதே தெளிவோடு அவள் சொல்லி முடிக்க,

மொத்தமாய் ஒரு நொடி கடலலைகளின் சத்தமும் அவரவர் இதயத் துடிப்பும் மட்டும்தான் இருவருக்கும் கேட்டுக் கொண்டிருந்திருக்கும்.

இந்த நொடி, அதன் பரிசுத்தம், வசீகரம், சுந்தரம், நிர்மலம் இவைகளை எதில் நிறுத்தி தேக்கி வைத்து சேமிப்பான் இவன்?

அதோடு எப்படிச் சொல்வான் இதெல்லாம் வேண்டாம் வேணி என?

“உங்கள பிடிக்கலைன்னு நான் நிறையா டைம் முன்னால சொல்லியிருக்கேன். முன்னால நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கலைன்றதும் உண்மை, இப்ப முதல் நாள் மீட் பண்றப்ப கூட நான் உங்கட்ட அப்செட் ஆகிதான் நீங்க பார்த்திருப்பீங்க, அதனால இந்த கல்யாணத்தில் எனக்கு சம்மதம்னு ப்ரவி அண்ணா உங்கட்ட சொன்னாங்கன்னா ப்ரவி அண்ணா பவிக்காகத்தான் நான் இந்த மேரேஜ்க்கு சம்மதிச்சேன், மத்தபடி எனக்கு இஷ்டமில்லன்னு உங்களுக்கு தோணிட கூடாது. அதான் நானே உங்கட்ட இதை முதல்ல சொல்லணும்னு தோணியிருக்கலாம்” அவள் தொடர்ந்தாள்.

“என் பொண்ணு கலெக்ட்டர், ஆனா நான் எந்த பையன இதுதான் மாப்ளன்னு கைய நீட்றனோ அவனுக்கு ஏன்னு கேட்காம கழுத்த நீட்டுவான்னு பெருமை பேசுறவங்களலாம் பார்த்திருக்கேன். நம்ம ஊர்ல அதுதான் நல்ல பொண்ணுக்கு அடையாளம், தன் கல்யாண விஷயத்தில் ஒரு பொண்ணுக்கு இருக்க உரிமை அவ்வளவுதான்னு நம்பிக்கை இருக்கு. ஆனா அதே அந்த கலெக்டர் பொண்ணு, அப்படி அவங்க அப்பா பார்த்த மாப்ளைக்கு எதையும் கேட்காம கழுத்த நீட்டிட்டு, கல்யாணத்துக்கு அப்றம் இவன் கூட வாழச் சொன்னீங்கன்னா நான் தூக்குலதான் தொங்கணும்னு சொல்லி கல்யாணத்த முறிச்சிட்டு வந்ததையும் நான் பார்த்திருக்கேன்.

படிச்ச, வேலையில உள்ள பொண்ணுங்கதான் இப்படின்னு இல்ல, உலகத்திலேயே மனைவிகள் தங்கள் கணவனை அடிப்பதில் இந்திய பெண்கள் இரண்டாவது இடத்தில் இருக்காங்கன்னு புள்ளிவிபரம் இருக்குது.

நாம அச்சம், மடம், நாணத்தோட அடங்கி இருந்து கட்டினவனை கவனிச்சுக்கத்தான் நீ பிறந்திருக்கன்னு சொல்லி சொல்லி வளர்க்கிற பொண்ணுங்கதான் இவங்க,

இருந்தும் இதெல்லாம் ஏன் நடக்குதுன்னா, கோப, தாப, ஆசை எல்லாம் ஆணுக்கு மட்டுமே இருக்கணும், பொண்ணுங்க எல்லாத்தையும் விட்டு கொடுத்துடணும்னு நாம பிறந்ததிலிருந்தே சொல்லி கொடுத்தாலும், இயற்கைக்கு ஒவ்வாத இந்த போதனைகள் எத்தனை நாள் சர்வைவ் ஆகும்?

ஆணுக்கு இருக்க அத்தனை உணர்ச்சியும் பொண்ணுக்கும் இருக்குமே, இதில அவன் வதைக்குறப்ப இவங்க திருப்பி அடிப்பாங்கதானே! ஆனா இதெல்லாம் எந்த சினிமாலயும்  பெண்களோட இயல்பான குணம்னு வராது.

ஸோ நான் மீடியா கற்பனைல உருவக படுத்துற அச்சம் மடம் டைப் பொண்ணுங்க போலயோ அல்லது அப்படி இல்லைன்னாலே அவ இப்படித்தான் இருப்பான்னு காமிக்கிற வில்லின்ற அப்நார்மல் க்ரீச்சர் போலவோ இருக்க மாட்டேன், ஒரு மனுஷியா மனுஷனுக்கு உள்ள உணர்வுகளோட உங்களப் போலத்தான் இருப்பேன்னு காமிக்க கூட நானே உங்கட்ட கல்யாணத்தைப் பத்தி பேசணும்னு எனக்கு தோணியிருக்கலாம்.

எல்லாத்துக்கும் மேல நான் இப்படி வந்து உங்கள பிடிச்சிருக்குன்னு சொன்னா கூட, உன் கேரக்டருக்கு உன்ட்ட இருந்து வேற என்னதடி எதிர்பார்க்க முடியும்னு என் கடந்த காலத்தோட எந்த வகையிலும் இதை நீங்க லிங்க் பண்ண மாட்டீங்கன்னு தெரியும். முன்னமே நீங்க அப்படித்தான். எத்தன வருஷமானாலும் அந்த உங்க குணம் மாறாதுன்றது இப்ப இதில் அனுபவமா என் மனசுல இருக்கும். மேரேஜ்க்கு பிறகு என்னால உங்கட்ட தயக்கமில்லாம நான் நானா இருக்க இது ஹெல்ப் பண்ணும்னு பட்டுருக்கலாம்”

அவள் பேசப் பேச கேட்டுக் கொண்டிருக்கும் இவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

கடந்த வருடத்திலிருந்து இவனுக்கும் திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறதே! முன்பு காதலைச் சொல்ல  அச்சம், தவிப்பு ஏன் வெட்கம் கூட அனுபவித்தவன்தான் இவன், ஆனால் இப்போது திருமணத்திற்கு வரன் பார்க்க என வரும் போது, எது எனக்கு தேவை, எது சரிவராது என்ற தெளிந்த சிந்தனை தானே வருகிறது இவனுக்கு?

அந்த தெளிவைத்தான் வேணியிடமும் பார்த்தான் அவன் இப்போது.

ஆக அவளுடையது சலனமல்ல, சிந்தித்து எடுத்த முடிவு.

ஒரு வகையில் இது சிலீர் என்கிறதுதான். சிந்தித்துப் பார்த்தும் இவனைப் பிடிக்கிறது என் கிறாளே!

கூடவே ப்ரொபோஸ் செய்றப்பகூட பொண்ணுங்க நம்ம ஊர்ல வீட்டுக்காரன பிச்சிடுவாங்க பிச்சுன்னு மிரட்டி வைக்கிறியே என் மாநாடே என சீண்டவும் தோன்றுகிறது.

அடுத்த பக்கம்