TTN Final Part 1 (8)

அதற்காக வேணி மீதிருந்த மரியாதை போய்விட்டதா என்றால் அதுவுமில்லை. மரியாதை மட்டும் வாழ்க்கை புரியப் புரிய இன்னும் இன்னுமாய் வளர்ந்து கொண்டுதான் போகிறது.

கையில் ஒரு பைசா இல்லாமல் தெருவில் நிற்பது போல் நின்றவளை முதல் நாளிலிருந்து இவன் பணத்தை காட்டி ஆசைப்படுத்த முயன்றிருக்கிறான். அப்படி பணத்தைப் பார்த்து அவளுக்கு ஆசை வந்திருந்தால் இன்று இவனுக்கு இப்படி ஒரு விடுதலையான வாழ்க்கை கிடைத்திருக்குமா என்ன? அவள் அப்போதெல்லாம் பிடித்த பிடிவாதமல்லவா ஒரு வகையில் இவனை காப்பாற்றி இருக்கிறது? இப்படிபட்ட புது புது புரிதல்கள் அவள் மீது மரியாதையையும் கூடவே நன்றி உணர்ச்சியையும் கூட்டி வைக்கின்றன.

‘என்னைய செட்டில் பண்ண போல அண்ணா, அண்ணி வேணியையும் நல்லபடியாவே செட்டில் செய்திருப்பாங்க’ என்ற ஒரு திருப்தியும் ஆனந்தமும்தான் இவனுக்கு எதாவது ஒரு சூழலில் வேணி  ஞாபகம் வரும் போது வந்து நிற்கும். கடந்த ஐந்து வருடங்களாகவே அது அப்படித்தான்.

மற்றபடி இவன் திருமணத்திற்கு இங்கிருக்கும் ஒவ்வொருவரும் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள், அதாவது இவன் பெண் பார்க்க சம்மதம் சொல்லியதால்.

இதில் இப்போது இது என்ன?

இவனுக்கு எப்படி உணர வேண்டும் என்றே தெரியவில்லை.

‘வேணி இவனை விரும்புகிறாளா?’

டேய் அறிவு! அது விரும்புகிறாளா க்வெஸ்டியன் மார்க் இல்ல! வேணி இவனை விரும்புகிறாள்!!! அதுக்கு நீ என்ன செய்ய போற? என்கிறது மனசாட்சி.

வேணியை எந்த வகையில் காயப்படுவதும் இவனுக்கு முடியாது என்பதே இவன் முதல் சிந்தனை. அது மனம்.

கூடவே அவள் சுபாவமே எத்தனை அன்பானது என்பதும், இவனது கடந்த காலத்தை அவள் எப்படி கையாள்வாள் எனதான் தெரியுமே என்பதும், அதோடு அவளது சிந்தனைத் தெளிவு, நல்லதென தெரிவதில் பிடிக்கும் பிடிவாதம் என்ற குணங்களும் கருத்தில் வர, அவளைவிட இவன் வரும்கால குடும்ப வாழ்வை யாராலும் இதமாக்கிட முடியாது என்பதும் தித்திப்பாய் உள்ளுக்குள்ளே முளைப்பெடுக்கிறது. இது அறிவு.

அவளையுமே இவனைப் போல் புரிந்து கொண்டு நேசித்திட வேறு யாராலாவது முடியுமா? இது பயம். அவள் மீதிருக்கும் ஆழ்ந்த அக்கறையினால் பிறப்பது. யாருக்கும் முடிகிறதோ இல்லையோ, இவனுக்கு அவளை கண்ணுக்குள் வைத்து நேசிக்க முடியுமே! இது இதயக் குழைவு!

நான்னா நல்லா பார்த்துப்பனே!! இது அன்புநிறை சுயம்.

இவனும் வேணியும் ஏன் இப்ப கல்யாணம் செய்துக்க கூடாது? இது ஆவி, ஆன்மா, சரீரம் என்ற அனைத்தின் கேள்வி!

‘ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்கள கல்யாணம் செய்றது ஒரு வகையில் வரம்னு பட்டுது’ இவனது ப்ரவி அண்ணா எப்போதோ சொன்னது வேறு வந்து போகிறது.

இதற்கெல்லாம்தான் குபீர் குபீர் என்ற ஆனந்த அவஸ்தைகள் இவனுக்குள்.

ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே! இவன் வேணியை நினைக்கவே கூடாதென்கிறதே அது!

அதை நினைக்கும் போதுதான் திகீர் திகீர் என பிரளயங்கள்.

வேணியின் செயலை கண்டது போலவே காட்டிக் கொள்ளாமல் கடந்து போய்விடலாம் என எண்ணி இப்போது மற்றவர்களிடம் கையிலிருந்த தின்பண்டங்களை கொடுக்கப் போய்விட்டான்.

ஆனால்  இரண்டு நொடிகள் கூட இயல்பாய் இருக்க முடியவில்லை அவனால்.

‘இப்ப என்ன வேணிக்கு வந்திருப்பது சின்ன சலனம். ஆரம்பத்திலேயே சொன்னா ஈசியா மனச மாத்திக்க முடியும்’ என தன்னை தேற்றியவன், அவளிடம் பேச முடிவு செய்துவிட்டான்.

அனைவருக்கும் பண்டங்களை கொடுத்துக் கொண்டே வந்தவன், வரிசையின் கடைசியில் இருந்த வேணியிடம் வரவும்,

“ஏய் குள்ள தக்காளி வா ஒரு வாக் போகலாம்” என அவளுக்கடுத்திருந்த மதுவை அழைத்தவன்,

“நீயும் வா வேணி” என இவளையும் விளித்தான்.

சற்று தூரம் செல்லவும்,  மது வேணியை விரல் கொண்டு ரகசியமாய் இடிப்பதும், அவள் கண்டனம் போல ஒரு பார்வை சின்னவளை பார்ப்பதும், அதில் வெளிப்படுத்தப்படாத வெட்கம் வேறு இருந்ததோ? அவர்களை காணாதவன் போல போய்க் கொண்டிருந்தவனுக்கு ஓரப் பார்வையில் இது கிடைக்க,

“நீ முன்னால போ மது” என அவளை அனுப்ப முயன்றான். உர் என்றது குரல்.

இதில் ‘க்ளுக்’ என சிரித்து வைத்தாள் மது.

இப்போது அவன் இன்னுமாய் முறைக்க, பின்ன எதுக்கு சிரிக்கணும் இப்ப?

“விழப் போறது கால்ல, இதுக்கு சீனப் பாரு” என இவனுக்கு சிறப்பாய் ஒரு பல்பை மாட்டிய அவன் தங்கை,

“ஆல் த பெஸ்ட்” என வேணியின் நாடியைப் பிடித்து ஆட்டி, “ஏய், வாலு” என அவளை வேறு முறைக்க முறைக்க வெட்கபட வைத்துவிட்டு கிளம்பிப் போனாள்.

கொதித்துப் போன முகத்தோடு இதைப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன்.

“என்ன நடக்குது வேணி?” உள்ளுக்குள் உதறிக் கொண்டிருக்கும் பயம் கோபமாய் வெளிப்பட்டுவிடக் கூடாதே என்ற நிலையில் நின்றபடி அவன் சாந்தமாகத்தான் பேசினான்.

வேணியிடம் சின்ன புன்னகை மட்டுமே இருந்தது.

“எதைக் கேட்கிறீங்க பாஸ்?”

“மது ஏன் இப்படி பேசுறா?”

“அத அவட்டதானே கேட்கணும்?”

கண்டனமாய் பார்த்தவன், அதற்குள் சமாதானமுமாகி

“ப்ரவி அண்ணாவும் அண்ணியும் நம்மள பேரண்ட்ஸ் போல பார்த்துக்கிறாங்கதான?” என ‘என் செல்லமே நீ சொன்னா கேட்பதானே’ என்ற தொனியில் விசாரிக்க,

வேணிக்கு அவன் எதைப் பற்றி பேச வருகிறான் என்பது இப்போது ஒரு விதமாய் புரிய, எதையும் முகத்தில் காட்டாமல் “ஆமா” என்றாள்.

“நாம அவங்கள ஹர்ட் பண்ணா எவ்வளவு கஷ்டமா இருக்கும்?” அவன் தொடர,

“நாம ஏன் ஹர்ட் செய்யப் போறோம்?” என்றாள் இவள்.

“நான் என்ன சொல்றேன்னு புரியலையா வேணி?”

‘நீங்க இன்னும் எதையும் சொல்லவே இல்லையே’ என்றது அவள் விழியும் முகமும்.

அடுத்த பக்கம்