TTN Final Part 1 (7)

மீண்டுமாய் நரேன் அங்கு வரும் போது, பூக்களாலேயே ஒரு பெரிய கோலமிட்டு, விழாவுக்கு பரிசாக கொடுக்கவென சின்ன சின்னதாய் இவள் வாங்கி வந்திருந்த அழகிய விளக்குகளை அதன் மீது மனதை கவரும் வகையில் ஏற்றியிருந்தாள்.

சரியாய் கடைசி விளக்கை ஏற்றிவிட்டு, எழுந்து நின்று தானிட்ட பூக்கோலத்தை அவள் திருப்தியாய் பார்க்க, அவளுக்கு அருகில் நிழலாடுகிறது. திரும்பிப் பார்த்தால் நரேன் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

விழாவுக்கென முழு ஃபார்மல்ஸில் கச்சிதமாய் தயாராகியும் வந்திருந்தான். “கோலம் ரொம்ப அழகா இருக்கு வேணி” என முழு மனதால் பராட்டினான்.

பக்கத்தில் மது நின்று கொண்டிருந்ததும் காரணமாயிருக்கலாம். இல்லன்னா உனக்கென்னாச்சு ஏன் இப்படி பேசிட்டு இருக்க? என அப்போது கண்டிக்க வந்தது இப்போது வந்திருக்குமோ?

“நீங்களும் ரொம்ப அழகாயிருக்கீங்க” இவளுமே உணர்ந்தேதான் சொன்னாள். அதாவது என்ன சொல்றோம்னு.

மது காதில் இது விழுந்துவிட்டது போலும். அவள் வாய் பொத்திச் சிரித்தாள் எனில், இவனோ வேணியை முறைத்தான்.

“என்ன பாஸ் இது? ஆஃபீஸ் அழகா இருக்குன்னு சொல்லலாம், கோலம் அழகா இருக்குன்னு சொல்லலாம், ஆள் அழகா இருக்கீங்கன்னு மட்டும் சொல்லக் கூடாதா?” இவள் இப்படி வேறு விசாரிக்க,

மது வேறு “அதானே?” என வேணிக்கு ஜால்ரா போட,

போதாத பாக்கிக்கி பவி வேறு அப்போது அங்கு வந்தவள் “என்ன ஜோக்?” எனக் கேட்க, அதற்கும் தயங்காமல் வேணி தன் வியாக்கியானத்தை வைக்க,

“அடிங்க, இதான் சாக்குன்னு ரெண்டு பேரும் எங்க பையன rag பண்ணிட்டு இருக்கீங்களா?” என கண்டனம் போல் சிரித்தபடியே சொல்ல,

மொத்தத்தில் ‘இதெல்லாம் சும்மா விளையாட்டுதானா? பெண் பிள்ளைங்க விளையாட்டுக்கு இப்படில்லாம் வாயாடதான் செய்வாங்களோ? நான்தான் இதெல்லாம் கொஞ்சம் சீரியஸா யோசிக்கனா? அண்ணியே சிரிச்சா இதுல எதுவும் இல்லைனு தானே அர்த்தம். ஆனாலும்  சைட் அடிக்கிற, அது இதுன்றதெல்லாம் எப்படி விளையாட்டா இருக்க முடியும்? அதுவும் வேணி என்ட்ட இப்படில்லாம் விளையாடுறதுன்னு யோசிக்க முடியலையே’ என சிந்திக்கும் ரீதியில் நரேனை குழப்பி கும்மியடித்திருந்தனர் பெண்கள்.

ஆனால் எல்லாம் அன்று இரவு வரைதான்.

விழா படு கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. விழா வீட்டுக்காரர்களாகிய நரேன் & கோவிற்கு பரம திருப்தி. எல்லாம் முடிந்து இவர்கள் கிளம்ப மாலையாகிவிட்டது.

“அப்படியே பீச்சுக்கு ஒரு ட்ரிப் சித்தப்பா” என தரண் ஆரம்பிக்க, குட்டீஸ் எல்லாம் அதையே பிடித்துக் கொள்ள, பெரியவர்களுக்கும் ஆசை பிறக்க, இருந்த சந்தோஷ திருப்திக்கு, மொத்த கூட்டணியும் ECR பீச்சில் போய் இறங்கி இருந்தது.

இருள் சற்றாய் கவியத் தொடங்கி இருந்த நேரம். அனைவரும் அலை முகப்புக்கு அருகில் வரிசையாய் உட்கார்ந்திருக்க, வேணி அமர்ந்திருந்தது மதுவுக்கு அருகில். மதுவுடன்தான் அவள் பேசிக் கொண்டும் இருந்தாள்.

பேசும் போதே கடற்கரை மணலில் அவள் கை கிறுக்கிக் கொண்டிருந்ததை அவள் சட்டை செய்யவில்லை.

ஆனால் இங்கு வரும் வழியில் இருக்கும் ஒரு கடையின் டோநட் மற்றும் லாவா கேக்குகள் வந்திருக்கும் குட்டீஸ் மற்றும் பெரியவர்களுக்குமே விருப்பமான ஒன்று எனத் தெரியுமாதலால், அதை வாங்கவென சென்றுவிட்டு தாமதமாக வந்து சேர்ந்த நரேனுக்கு, பின்னாலிருந்து வரும்போதே வேணியின் மீது சென்ற பார்வை, ஏதேச்சையாய் அவள் கை எழுதுவதில் போய் குவிய,

ஒருபுறம் குபீர் குபீர் என ஒரு ஆனந்த அவஸ்தை அனுமதியின்றி அவனில் ஆளுகைக்கு வருகிறதென்றால், மறு புறம் திகீர் திகீர் என ஒரு பீதி பாரம் பிரளயப்படுத்துகிறது இவனை.

ஏனெனில் கடலைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த வேணியின் கை கவனமேயின்றி நரேன், வேணி என மாறி மாறி எழுதி அழித்துக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு சந்திப்புக்களில் வேணி இவனை ஓட்டிக் கொண்டிருக்கும் வகையே இவனை பதறச் செய்கிறது எனில், இப்போதைய செயலை அவனால் இரண்டு நொடிகள் கூட இணைந்தார்ப் போல் பார்க்க முடியவில்லை.

எதுவும் சிந்திக்கும் முன் இவனுக்குள் எதுவெல்லாமோ எகிறி ஓடுகிறது.

முன்பு போலீஸில் சரணடைவது என முடிவு செய்த நாளில் வேணியின் மீது தனக்கிருப்பது காதல் இல்லை என்றும் ஒத்துக் கொள்ள வந்திருந்தது இவன் மனம். மறுநாள் உயிரோடு இருப்போமா இல்லையா என்ற நிலையில் இருப்பதாய் அவன் எண்ணியிருந்த அவ்வேளையில் ‘வேணி சொன்னது போல இது எமோஷனல் ஹை ஜாக்’ என நம்புவதுதான் ஏற்புடையதாகவும் இருந்தது.

ஆனால் அடுத்து நிலை மாறி இன்னும் இரண்டு வருடங்களில் இவன் விடுதலையாகி புது வாழ்வு வாழலாம் என சூழல் வந்த போது, அதாவது சிறைக்குச் சென்ற புதிதில் இவன் மனம் வேணிக்காக ஏங்கத்தான் செய்தது. அதை ப்ரவியிடம், சரியாய் சொல்வதானால் பவியிடம் வெகுவாக இவன் புலம்பியதுண்டு. உண்மையில் அண்ணி என மரியாதை அளவில் மனதில் இருந்த பவி, நட்பான அம்மா என்ற ஒரு உறவுக்கு உயர்ந்தது இந்த காலத்தில்தான்.

ஆம் தனிமையில் வாடியவனை தண்டனை என்ற பெயரில் சிறையிலும் வைத்தால் என்னாவது என ப்ரவி வகையறா அதாவது ப்ரவி, கருண், மீரட் என அனைவரின் மனைவி குழந்தை, அண்ணா, தங்கை, அம்மா, அப்பா என ஒரு பெரும் கூட்டமே நேரமெடுத்து ஒவ்வொருவராய் இவனை வந்து சந்திப்பதும், இவனோடு கடித தொடர்பிலிருப்பதுமென இருந்த காலமது.

அதில் பவியை இவனுக்கு வேணி மீது இருப்பது காதல் என புரிந்து கொள்ள வைத்துவிட்டால், எப்படியும் பின்னாளில் வேணியை இவன் மணமுடிக்க முடியுமென  அப்போது கூட எண்ணினான். ஆனால் நேர்மையாக தன் நம்பிக்கை நோக்கங்களை பவி ப்ரவியிடமே பேசினான்.

ப்ரவியும், பவியுமோ “உன் மனசுல யார்ட்டயும் பகிர்ந்துக்க முடியாத ஏகப்பட்ட ரகசியம் மற்றும் ஸ்ட்ரெஸ், அப்படி சூழ்நிலையில எதாவது ஒரு ரிலாக்க்ஷேஷன தேடுற மனசு, உன் 20 வயசுக்கு ஏத்த போல, இந்த பொண்ண கல்யாணம் செய்துகிட்டா நல்லா ஆகிடுவோம்னு  கற்பனை செய்றத ஒரு ரிலாக்க்ஷேஷனா எடுத்துருக்கு.  சரியா சொன்னா அதுவும் ஒரு போதை போலதான். மாய சொர்கம். ஃபேன்டசி.

மத்தவங்கட்ட மனம் விட்டு பேசிப் பழகு, நம்பிக்கையான ஃப்ரென்ட்ஸ சம்பாதி, நீ நீயா எந்த நடிப்பும் இல்லாம இருந்து பாரு, நீ சொல்ற இந்த சோ கால்ட் லவ் எல்லாம் அதாவே போய்டும், இன்ஃபேக்ட் நம்ம ஃப்யூசர் நல்லா இருக்கும்ன்ற இந்த கல்யாண கற்பனையவிட உன் ப்ரசென்டே ரொம்ப எக்சைட்டடா ஃபீல் ஆகும்” என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் சொல்வதை ஆரம்பத்தில் இவனால் நம்ப முடியவில்லை எனினும் காலப் போக்கில் அதுதான் நடந்தது. இரண்டு வருடம் கழித்து இவன் சிறையிலிருந்து வெளி வரும் போது, வேணி என்று ஒருவள் இருந்தாள் என்பதையே மறந்துவிட்டான் என இல்லை. ‘வேணின்ற பொண்ணு பின்ன நான் கொஞ்ச காலம் சுத்திகிட்டு இருந்தேன்’ என்ற வகையில் இவன் செயல்கள் இவன் நினைவில் இருந்தது. மற்றபடி அவளை நினைத்தாலே வரும் ரம்ய பரபரப்போ, பார்க்க வேண்டும், கூட இருக்க வேண்டும் என்ற ஏக்கமோ, எண்ணமோ எதுவும் இல்லை. இவனது நிகழ்காலமே இனிப்பாய் தோன்றியது.

அடுத்த பக்கம்