TTN Final Part 1 (6)

“அண்ணாட்டதான் இந்த ஆஃபீஸ் அட்ரெஸ்  வாங்கினீங்களா?” இவள் கேட்க

“ம் இன்விடேஷன் கொடுக்க போறேன்னு கேட்டு வாங்கினேன், நேத்து நீ அங்க அண்ணா வீட்ல இருக்கன்னே தெரியாது வேணி, நான் முதல் இன்விடேஷன் அண்ணா வீட்டுக்கு கொடுக்கணும்னு நாலு இன்விடேஷன் தான் எடுத்துட்டே வந்தேன்.” அவன் சொல்லிக் கொண்டு போக,

“இல்லன்னா நீ சண்டை போடவும் உன்ட்ட ஒன்ன தூக்கி கொடுத்துருப்பேன், அப்படித்தானே, மத்தபடி சண்டைல்லாம் போடலைனா உன்ட்ட பேசியிருக்க கூட மாட்டேன், அதானே” என்றாள் அவள்.

“இன்விடேஷன் இல்ல பாஸ் விஷயம், வந்த நேரத்தில் இருந்து ஒரு ஐ கான்டாக்ட்க்கு கூட நீங்க ரெடியா இல்ல, அவ்வளவு அவாய்ட் பண்ணுணீங்க” இலகு முகபாவத்தில்தான் சொன்னாள் அவள்.

இவன் முகம்தான் இறுகிப் போய்விட்டது.

“என்னால உனக்கு எந்த பிரச்சனையும் எப்பவும் வராதுன்றத நான் வேற எப்படி காட்ட முடியும்?” சின்ன குரலில் கேட்டான். “அதுவும் முதல்ல வர்றப்ப வீட்ல வேற யாரும் இல்ல” அவன் சொல்ல,

“ப்ரவி அண்ணா சொல்லவும் என்ட்ட பேச வந்து, பவிக்கா பக்கத்தில் நிக்கவும் தைரியமா ‘நீ பங்க்ஷனுக்கு வர்ற’ன்னு என்னை மிரட்டினதுமே எனக்கு இது புரிஞ்சிட்டு பாஸ், உங்க அண்ணா அண்ணி பெர்மிஷன் இல்லன்னுதான் நீங்க பேசலைனு”

சிரிக்கவா முறைக்கவா எனத் தெரியாமல் பார்த்தான் அவன். பின்னே இது பேர் மிரட்டலாமா? அதோடு அப்போதாவது புரிந்து கொண்டுவிட்டு அடுத்தும் ஏன் முறுக்கிக் கொண்டு நின்றாளாம்?

இவன் விழிகளைப் புரிந்தவளாய் “யார்ட்ட வேணும்னாலும் கேட்டுப் பாருங்க அது மிரட்டல்தான்” விளையாட்டாய் சொன்னவள்,

“என் பேர உங்க கம்பெனிக்கு எப்படி வைக்கலாம்ன்றதுக்குத்தான் அடுத்தும் கோபம்” என்றாள் விஷமம் சிதறும் விழிகளோடு “சன் ஷைன்னு வச்சுட்டா அது இளவேனிலத்தான் சொல்லுதுன்னு எனக்கு கூடவா தெரியாமப் போய்டும்?”

கேட்டவன் என்ன செய்வானாம்? மின்சாரத் தாக்குதலுக்கு உட்பட்டவன் போல் உறைந்து போனான் அவன்.

“நோ.. அது.. அப்படி.. இல்ல்..” இவன் திக்கி திணறி இயல்புக்குத் திரும்ப முயன்றானானால், அவளோ

“நிஜமா அது என் பேர நினச்சு வைக்கலியா?” என நிதனாமாகக் கேட்டாள்.

“நீங்க என்ன பதில் சொன்னாலும் அதை நான் அப்படியே நம்புவேன்” அவன் கண்களைப் பார்த்தபடி இவள் சொல்ல,

“ப்ச் அது அப்படி இல்ல வேணி” என துவங்கியவன்,

“உன் பேரத்தான் வச்சேன், ஆனா தப்பா எதுவும் இல்ல வேணி” அவனும் நிதானமாகவே சொன்னான் “அது..” இன்னும் விளக்கமும் சொல்ல வந்தான்.

“நானும் தப்புன்னு சொல்லவே இல்லியே பாஸ்” இவளோ அவனை பேசக் கூட விடாமல்  இப்போது விஷமமாய்  சொல்ல,

இப்போது விக்கித்துப் போய் பார்த்தான் அவன். என்ன சொல்ல வருகிறாள் இவள்?

அவன் சுதாரிக்க கூட நேரம் கொடுக்காமல் “ஆஃபீஸ் ஆட்கள் வந்து போய்ட்டு இருக்காங்க, நாம ரொம்ப நேரம் இங்க இருந்தா சரி வராது,  இன்விடேஷன் கொடுக்கன்னு சொல்லிட்டுத்தான வந்தீங்க, அதைக் கொடுத்துடுங்க, நான் கிளம்பணும்” என சீரியஸாய் சொல்லியவள்,

“இல்லன்னா வந்து சைட் அடிச்சுட்டு போனீங்கன்னு உங்க அண்ணா கூட நம்புவாங்க” என்றாள் சீண்டலாய்.

திக்பிரமை திடும் என வந்து விழுகிறது இவன் மேல்.

அதே நேரம் “ஹாய் வேணி, யார்பா இது?” என அவர்களை கடந்த பெண் ஒருத்தி விசாரிக்க,

“தெரிஞ்சவங்க” என அவளுக்கும்,

மெல்லிய குரலில் இவனிடம் “BBC ந்யூஸ்ல நம்ம பேர் வர வேண்டாம்தானே! நான் கிளம்புறேன், ஃபங்க்ஷன்ல பார்ப்போம்” என்றபடி வேணி கிளம்பியே போய்விட்டாள்.

டுத்து வேணியும் நரேனும் பார்த்துக் கொண்டது அவனுடைய தொழிற்சாலை திறப்பு விழாவில்தான். நரேனின் குடும்பத்தினர் என்ற வகையில் ப்ரவி, கருண், மீரட் அனைவரின் குடும்பம்தான் விருந்தினர் யாரும் வரும் முன்னும் விழா ஸ்தலத்தில் போய் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தது. அப்படி சென்றவர்கள் வேணியையும் சேர்த்தே அழைத்துப் போயிருந்தனர்.

தொழிற்சாலைக்கு அடுத்து இருந்த அலுவலக வளாகத்தில், முதல் தளத்திலிருந்து படிகள் வழியாக இவள் துள்ளலாக இறங்கி வரும் போது மொபைலில் பேசியபடியே அதே படிகளில் மேலே ஏறி வந்து கொண்டிருந்த நரேன் பட்டான்.

இன்னும் ஜீன்சும் ஷர்டுமாய் விழா ஏற்பாடுகளைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான். விழாவுக்கு அவன் தயாராகியிருக்கவில்லை.

“ஹலோ பாஸ், சூப்பரா இருக்கு உங்க ஆஃபீஸ்” என்றபடியே இவள் அவனைக் கடக்க, அப்போதுதான் இவள் வருவதைக் கண்டவன்,

“ஹேய் வா வேணி” என சொல்லி முடிக்கும் முன் இவள் தரைக்கே வந்திருந்தாள். அதோடு நில்லாமல் அவள் அந்த வரவேற்பு வளாக பகுதியில் சுற்றும் முற்றும் நடந்து பார்க்க,

டூப்ளக்ஸ் ஹால் என்பதால் அவனுக்கு அவன் நின்ற இடத்திலிருந்தே இவள் அலைவது தெரிய “என்ன வேணும் வேணி? “என வருகிறது அவனது விசாரிப்பு.

“நீங்க இன்னும் போகலியா பாஸ்? என்னையவா பார்த்துட்டு இருக்கீங்க?” என பதிலுக்கு வருகிறது இவளது விஷமக்குரல்.

என்னை சைட் அடிக்கியா? என்றுதானே இதற்கு அர்த்தம்? ஒரு திகீரோடு சுற்று முற்றும் பார்த்தான் அவன். இவர்கள் இருவரைத் தவிர இங்கு யாரும் இல்லைதான்.

அவன் இவளிடம் கண்டனமாய் எதோ சொல்ல வாயைத் திறக்க, அதற்குள் அவளோ “ஃப்ளாரல் டிசைன் ஒன்னு இங்க செய்யலாம்னு யோசிச்சேன். அதுக்கு வெல்கம் டேபிள் பக்கம் பூ நிறைய இருக்கு, அதை எதுல எடுத்துட்டு வரன்னு தேடிட்டு இருக்கேன்” என அவன் முதல் கேள்விக்கு சின்சியராய் பதிலும் சொன்னாள்.

அதேநேரம் வேலையாட்கள் ஓரிருவர் இங்கு வந்து சேர, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து போய்விட்டான் நரேன். ஆனால் முழு நிமிடம் முடியும் முன்னும் கூடை கூடையாய் பலவித பூக்களுடன் இவளிடம் வந்து நின்றனர் சிலர்.

“மேம் நீங்க என்ன ஹெல்ப் கேட்டாலும் செய்து கொடுக்கணும்னு சார்  சொன்னாங்க” என்றபடி.

அடுத்த பக்கம்