TTN Final Part 1 (5)

இந்நேரம் ஏதேச்சையாய் பவி உள்ளே வந்தவள், இவள் இப்படி தனியாய் அமர்ந்திருப்பதைக் கண்டு “என்ன நீ? எல்லோரும் அங்க இருக்கப்ப, இங்க என்ன செய்துகிட்டு இருக்க?” என உரிமையாய் அதட்ட,

பொதுவாக வீட்டில் இப்படி பலரும் கூடி இருக்கும் வேளை, இந்த வீட்டில் யாருமே யாரையும் இப்படி தனியாய் அமர அனுமதிப்பதே இல்லை என்பதால், இது இயல்பான செயல்தான் என்றாலும் இவளுக்கு பவியின் அக்கறையில் சட்டென கண்ணில் பொங்கிக் கொண்டு வருகிறது.

இது எதையும் அறிந்து வந்தானா அல்லது அறியாமல் வந்தானோ, சரியாய் அதே நேரம் அறை வாசலுக்கு வந்த ப்ரவி “ஹேய் நரேன் இங்க வா, நீ வேணியப் பார்த்தியா? அவள உன் ஃபங்க்ஷனுக்கு  இன்வைட் செய்தியா?” என நரேனை வேறு விசாரிக்க,

“இல்லண்ணா, அவங்கள, அவங்க ஃபங்க்ஷனல்லாம் குறிச்சு எனக்கு ரொம்பவே சந்தோஷம், ஃபங்க்க்ஷன் ரொம்பவே சக்ஸ்ஸ்ஃபுல்லா போகட்டும்னு மனசால வேண்டிக்கிறேன், ஆனா நீங்க சொன்னீங்கன்ற கட்டாயத்துக்காகல்லாம் அவங்க என்னை கூப்ட வேண்டாம்” என்றுவிட்டாள் இவள்.

என்னதான் 7 வருட பழக்கம் என்றாலும் ப்ரவியிடம் இப்படி பேசிட வராது இவளுக்கு, பவி, கருணிடம்தாம் இப்படியெல்லாம் மனதுக்குப் பட்டதை பேசிவிடுவாள் இவள். ஆனால் இன்றைய மன நிலையில் இதெல்லாம் வருகிறது இவளுக்கு.

அப்போதுதான் இவளிருந்த அறைக்குள் நுழைந்த நரேன் இதையெல்லாம் கேட்கவும் “ஹேய் கட்டாயமா..? என்ன நீ?” என்றவன் ப்ரவி முகத்தைப் பார்ப்பதும், பவியைப் பார்ப்பதும், இவளைக் காண்பதுமாய் “நிஜமா உனக்கும் சேர்த்துதான் இன்விடேஷன் வேணி, ப்ளீஸ் கண்டிப்பா வா, அண்ணா வீட்டுக்குன்னு இன்விடேஷன்னாலே அது உனக்கும் தானே, இத இப்படியா யோசிப்ப? வெரி சாரி, ப்ளீஸ் டூ கம்” என்றான் தவிப்பான முகத்துடன்.

அவனுக்கு பதில் சொல்ல தோன்றினாலும், எங்கு கண்ணில் குளம் கட்டும் நீர் வடிந்து அழுகை என்றாகிவிடுமோ, விழாவுக்கு அழைக்க வந்த சமயம் அழுதோம் என்றாகிவிடுமோ என்றெல்லாம் தோன்ற, அவனைப் பார்ப்பதையே தவிர்த்தவள் “தேங்க்ஸ் ஃபார் த இன்வைட்” என பேச்சை முடித்துவிட்டாள்.

அடுத்து இரவு உணவு வேளையில் இரண்டு மூன்று முறை இவள் முகத்தை முகத்தை பார்த்தான் அவன். ஆனால் எதுவும் பேசவில்லை. இவளோ அவன் ஒருவன் அங்கிருக்கிறான் என்பதையே கணக்கில் விட்டாள். வந்த சற்று நேரத்திற்கெல்லாம் இவளுக்கு யாரும் இல்லை என உணர வைத்துவிட்டானே! அதை இன்னுமே இவள் தாண்டி வந்திருக்கவில்லை. இவனை எத்தனை விலகி இருக்கிறோமோ அத்தனை நிம்மதி என படிந்து கிடக்கிறது மனதில்.

இதில் கிளம்பும் நேரம் பவி அருகில் நின்றிருந்த இவளிடம் வந்து “போய்ட்டு வர்றேன் வேணி” என முறையாய் விடை பெற்றவன் “நீ கண்டிப்பா ஃபங்க்ஷனுக்கு வர்ற” என்றுவிட்டும் கிளம்ப,

“போய்ட்டு வாங்க” என மட்டும் வருகிறது இவளது பதில்.

பரிதாபமாக பவியின் முகத்தை இப்போது பார்த்தவன், சின்னப் புன்னகையுடன் “நான் பேசிக்கிறேன்” என பவி சொன்ன பின்புதான் தெளிந்த முகத்துடன் கிளம்பிப் போனான்.

றுநாள் தனது அலுவலகத்தில் சுறுசுறு என இயங்கிக் கொண்டிருந்தாள் வேணி. நேற்று போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டெல்லாம் இல்லை. படு படு உற்சாகமாக இருக்கிறாள் அவள்.

இன்றுதான் புது கட்டிடத்திற்கு இடம் மாறுகிறது இவளது வங்கிக் கிளை. ஆக ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் நிலை இல்லாமல் நடந்தபடி, சிலபலருடன் பேசியபடி என இருக்கிறது இன்றைய இவளது பணி முறை.

நட்டநடு ஹாலில் நின்று இரண்டு சக ஊழியருக்கு இவள் குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருக்க, இவள் முதுகுக்குப் பின்னால் கேட்கிறது அந்தக் குரல்.

“வேணி”

மென்மையான குரல் இல்லை அது, ஆனால் அந்த ஆண் குரல் அழைத்த விதத்தில் மென்மை இருந்தது. அழைப்பது யாரெனப் புரிய சட்டென திரும்பிப் பார்த்தால் இவள் புரிந்தது போலவே நரேன் தான் நின்று கொண்டிருந்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ” என சக ஊழியர்களிடமிருந்து விலகி இவனிடமாக வந்தவள் “வாங்க சார்” என வரவேற்றுக் கொண்டே வர,

குட்டியாய் ஒரு புன்னகை அவன் முகத்தில் “நரேன்னு சொல்லு வேணி, ப்ளீஸ்”

“அது கஷ்டம் பாஸ், நான் அந்த பேருள்ள ஒருத்தங்கட்ட நேத்துல இருந்து சண்டை, அதனால சொல்றதா இல்ல” என்றவள்,

அவன் எதுவும் சொல்லும் முன், “உட்கார்ந்து பேசணும்னா, இங்க பேங்க்ல பேன்ட்ரி ஏரியா இருக்கு, ஆனா எவ்வளவு செட் ஆகியிருக்கும்னு சொல்றதுக்கு இல்ல, பக்கத்தில் ஹோட்டலும் இருக்குது, எங்க போகலாம் சொல்லுங்க?” என்றாள் இவனிடம்.

“ஹோட்டல்” என இவன் சொல்லி முடிக்கும் முன்னும் இவனுக்கு முன்னாக கடகடவென கதவை நோக்கி நடந்திருந்தவளை இவன் பின் தொடரத்தான் வேண்டி இருந்தது.

இரண்டு மூன்று கட்டிடம் தாண்டியதும் ஹோட்டல்தான். ஒரு மேஜைக்கு எதிரும் புதிருமாய் இவர்கள் அமர்ந்திருக்க, கொஞ்சம் பாவமாக அவளைப் பார்த்தான் அவன். ‘இன்னும் கோபம் போகலையா?’ என்பது அதன் பொருள்.

“உங்க அண்ணி உங்களுக்கு ஸ்ட்ராங் ரெக்கமென்டேஷன் பாஸ், அதனால போனா போகுதுன்னு உங்கள மன்னிச்சுட்டேன், ஆனா அதுக்காக பனிஷ்மென்ட்லாம் கொடுக்காம விட முடியாதுல்ல” என்க இவள்,

சின்னதாய் சிரித்தான் அவன்.

“என்னது பாஸ்னு கூப்டுறது பனிஷ்மென்டான்னு யோசிக்கிறீங்களா? அது எவ்வளவு பெரிய பனிஷ்மென்ட்னு கூடிய சீக்கிரம் நாங்க புரிய வச்சிடுவோம்”

இப்போது கண்கள் விரியுமளவு ஆச்சர்யம் அவனிடம்.

“நீ இப்படில்லாம் பேசுற டைப்னே எனக்குத் தெரியாதுன்னு அர்த்தமா இதுக்கு?” அவன் விழிப்பை புரிந்து கொள்ள முயன்றாள்

“தெரிஞ்சுக்கோங்க பாஸ், ஒரிஜினலி நான் இப்படித்தான். ரொம்ப பேசுவேன், சோளப் பொரின்னுதான் எனக்கு நிக்நேம்” என்றுவிட்டு “நாம முதல்ல மீட் பண்ண டைமெல்லாம் நான் ரொம்பவுமே பயந்து போய் இருந்த காலங்கள், ரொம்பவும் டிப்ரெசாவும் இருந்தேன். அதான் அப்போ அவ்ளவு சைலண்ட், அது போலவே இப்பவும் இருப்பேன்னு எதிர்பார்க்க கூடாது” எனவும் சொல்ல,

சட்டென அவன் முகத்தில் அக்கறை கோடுகள். “ப்ச் அதெல்லாம் தாண்டி இப்ப எங்கயோ வந்தாச்சே, இன்னைக்குத்தான் அண்ணா சொன்னாங்க, நீ இங்க AM ஆ இருக்க, அதோட MBAவும் படிச்சுகிட்டு இருக்கன்னு, நிஜமா ரொம்பவே சந்தோஷமா இருக்கு” என அவனோ பேச்சை இந்த திக்கில் கொண்டு வந்தான்.

அவள் முகத்தில் ஒற்றைப் புன்னகை.

அடுத்த பக்கம்