TTN Final Part 1 (4)

“கொடுக்கு நீயும் உட்காரு” என இவளையும் அழைத்தான் கருண். வழக்கமாக கருணும் இவளும்தான் இதை விளையாடுவதுமே! ப்ரவி எப்போதாவது நேரம் கிடைத்தால் வருவதுதான்.

இப்போதோ வரவில்லை என்று சொல்லிவிடலாம் எனதான் முதலில் நினைத்தாள் இவள். பின்ன நரேன் கூட இவ விளையாடவாமா? அவன் எவ்வளவு கடுப்பேத்துவானோ?

ஆனால் இவள் சற்றாய் தயங்கலாய் “அது அண்ணா” எனத் துவங்கும் போதே தரையில் அமர்ந்திருந்த கருண் நிமிர்ந்து இவள் முகம் பார்த்து உட்கார் என்பது போல் தலையாட்ட,

கருண் இவளை இங்கிருக்கச் சொல்லுவதன் பின் காரணம் இருக்குமெனத் தோன்ற அமர்ந்துவிட்டாள்.

பொதுவாய் கருண்தானே யாரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லி தரும் நபர் இவளுக்கு!

இவள் பார்வை அதாய் நரேன் மீது போக, அவன் முகத்திலும் ஒரு சகஜமின்மை சற்றாய் தலை காட்டுக்கிறது.

அவ்வளவுதான் சுர் என வந்துவிட்டது இவளுக்கு. அவனென்ன இவள் விளையாடக் கூடாதென நினைப்பது? அதுவும் கருணே கூப்பிடும் போது.

“இரண்டு பேரா விளையாடினா அவ்ளவு கிக் இல்ல, மூனு நாலு பேர்னாதான் கேம் டஃப் கொடுக்கும். இன்னைக்கு இவன பார்ப்போன்னதுமே இதைத்தான் யோசிச்சுட்டே வந்தேன். மாப்பு விளையாடி பார்த்ததில்லையே, அந்த ப்ரவி மாக்கான் ஒரு மாதிரி அசத்துவான்னா இவன் இன்னொரு ஷ்டைல்ல போட்டு தாக்குவான். பார்க்கவே உனக்கு பிடிக்கும்” என கருணோ நடக்கும் நிகழ்வுக்கு எதிர்பதமாய் நரேன் விளையாடும் அழகை இவளிடம் புகழ,

“இன்னைக்கு எத்தன மணியானாலும் ப்ரவிக்கும் உனக்குமா ஒரு கேம் போட்டுடணும் மாப்பு” என வேறு அவன் நரேனை கொண்டாட,

“அப்ப நான் இங்க ஒப்புக்கு சப்பாணியா அண்ணா?” என கேட்டிருந்தாள் இவள்.

“அதை நான் வேற சொல்லணுமா கொடுக்கு?” என அவனது சுபாவம் மாறாமல் பதில் சொல்லி சிரித்தான் கருண்.

இதற்கெல்லாம் உள்ளர்த்தம் நீ நரேனை பார்த்து தெறிச்சு ஓட வேண்டிய அவசியம் இல்ல அவன் ஹார்ம்லெஸ் என்பதுதான் என்பது இவளுக்குப் புரிகிறதுதான். எவனாவது வழிசல் பாண்டி முன்னிலையிலெல்லாம் இவளை ஒரு வார்த்தை கிண்டல் கூட அடிக்க மாட்டான் கருண். ஆனாலும் இந்த நரேன் இப்படி மூஞ்ச திருப்பிக்கிட்டு அலையுறப்ப இதெல்லாம் எதுக்கு?

உர் என்றே முகத்தை வைத்துக் கொண்டு இவள் விளையாட நாலஞ்சு காய் நகர்த்தல்களிலேயே இவளுக்குப் புரிந்து விட்டது நரேன் இவளோடு விளையாடவே இல்லை என. அவன் கருண் காய்களுக்கு எதிராக மட்டுமே காய் நகர்த்திக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் பார்த்தவள் “அண்ணா நாம ரெண்டு பேரும்தான் விளையாடணும்னா எப்பனாலும் விளையாடிக்கலாமே, நான் இப்ப மேத்ஸ் பார்க்கிறேன்ணா” என்றபடி இவள் எழுந்துவிட்டாள்.

“ஹேய் என்ன நீ?” என கருண் எதோ இப்போது ஆரம்பிக்க, சரியாய் இந்நேரம் ப்ரவி, பவி எல்லாரும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட, இவள் தூங்கும் குழந்தையும் கையுமாக வரும் பவியிடம் போய் குழந்தையை வாங்கப் போய்விட்டாள். தரண் வேறு ப்ரவியின் தோளிலேயே தூங்கி இருக்க, பவிக்கு பிள்ளைகளுக்கான படுக்கையை ஆயத்தம் செய்வதில் இவளின் உதவி தேவையாக இருந்தது.

அப்படி உள்ளே போன வேணி அடுத்து சாப்பாட்டு அறையிலேயே ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள் தன் படிப்பை தொடர்வது போல்.

அதே நேரம் வெளியே வரவேற்பறையில் பெரும் களேபரமாய் கலகலவென இருந்தது. நரேன்  பெரிய அளவில் அவனது தொழிற்சாலையை விஸ்தாரப்படுத்துகிறான் போலும். புதிய தொழிற்சாலை கட்டிடத்திற்கு இன்னும் நாலு நாளில் திறப்பு விழாவாம். தாம்பளத்தில் வீட்டிலிருக்கும் அனைவருக்குமான புத்தாடைகள், பழம், வெற்றிலை பாக்கென என்னல்லாமோ வைத்து, அதில் பத்திரிக்கையும் வைத்து வெகு முறையாய் தயாப்பாவை, ப்ரவி குடும்பத்தை, கருண் குடும்பத்தை என விழாவுக்கு அழைத்தான் அவன்.

“முறையா பெங்களூர் வந்து கூப்ட்டுருக்கணும் அண்ணி, சாரி” என இவன் லினியிடம் மன்னிப்பு கேட்பதும்,

“நம்ம வீட்டுக்குள்ள என்ன நமக்கு பார்மாலிட்டி? நாங்க நாலு நாள் முன்ன இங்க வரலன்னா அங்க வந்துருப்பீங்களே” என அவள் பதில் சொல்வதும், “கிருபா வீட்டுக்கு பத்திரிக்கை கொடுத்துட்டீங்களா இனிமதானா?” என அவள் விசாரிப்பதும்

“இல்லண்ணி, அன்னைக்கு ஃபங்க்ஷனுக்கு ட்ரசெடுக்கன்னு மீரட்டண்ணா ஃபேமிலியோட  போனதா சொன்னேன்ல, அன்னைக்கு அவங்களப் பார்த்ததுதான். சன்டே எப்படியும் அவங்க வீட்டுக்குதானே போவேன், அப்ப கொடுக்கணும்னு வச்சிருக்கேன்” என இவன் பதில் சொல்வதுமாய்

“இந்த டைப் இன்டெஸ்ட்ரில இதுதான் இன்டியாலயே பிக்கஸ்ட்னு எக்கனாமிக் டைம்ஸ்ல ஆர்டிகிள் வந்திருக்குன்னு கிருபா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க, we are really happy for you,very much proud of you” என லினி மகிழ்வதுமாய்,

அதற்கு முகத்துக்கு நேராக சொல்லப்படும் பாராட்டை ஏற்க தடுமாறும் தர்மசங்கடத்தின் அடையாளமாய், பல் கூட தெரியாமல் உதடுகளை மட்டுமாய் இழுத்து வைத்தது போன்று அவன் புன்னகைப்பதுமாய்,

எல்லாவற்றிற்கும் உச்சம் போல் “என் சிங்க குட்டிக்கு இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு” என ப்ரவியே இவனை ஒரு கையால் தோளோடு அணைத்துச் சொல்வதுமாய்,

அதற்கு அவன் வெகுவாக திக்குமுக்காடிப் போனாலும் அதை எப்படியும் காண்பிக்கத் தெரியாமல் நிற்பதுமாய் என என்னதெல்லாமோ போய்க் கொண்டிருக்கிறது. இங்கிருந்து பார்க்க இதெல்லாம் இவள் பார்வையில் கிடைக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல் “மீரட் ஃப்ரீயா இருந்தா வர்றேன்னு சொன்னான்டா, அவனையும் கூப்ட்டு” என ப்ரவி சொல்ல அடுத்த நேரங்களிலெல்லாம் கருண், மீரட், ப்ரவி, நரேன் என நால்வரும் அந்த ஃப்ளீட்ஸ் விளையாட்டை பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொன்றுமே இவளுக்கு வெகுவாக மகிழ்ச்சிதான். இதெல்லாமே நரேன் ஆசைப்பட்ட விஷயங்கள், அதுவும் அவன் பட்ட பாட்டிற்கு அவனுக்கு கிடைக்க வேண்டியவையும்தான். மனம் நிறைவாகத்தான் இருக்கிறது அவன் வகையில். ஆனால் இத்தனை பேரிடமும் சேர்ந்து கொள்ளும் அவன் இவளை ஏன் இப்படி ஒதுக்கி வைக்கிறான்? அப்படி என்ன செய்துவிட்டாள் இவள் என்றுமிருக்கிறது.

அது கஷ்டமாய் இருக்கிறது.

அதோடு இவளுக்கு வேண்டியவர்கள் எல்லாரும் அடுத்த அறையில் மகிழ்ச்சியாய் இருக்க, இவள் தனியாய் இங்கு வந்து உட்கார்ந்திருக்க வேண்டியதிருக்கிறதே! அதனால் வந்த தனிமைபடுத்தப்பட்ட உணர்வு வேறு!

சொந்த குடும்பமாயிருந்தாலே இது உறுத்தும். இப்போது சட்டென இவளுக்கு யாருமே இல்லாதது போல் ஒரு மனோநிலை வேறு உண்டாகிறது. பல வருடங்களுக்குப் பின் நீ ஒரு அனாதை என்ற உணர்வு புத்தம் புது கத்தியாய் அவளை பதம் பார்க்கிறது.

அடுத்த பக்கம்