TTN Final Part 1 (3)

மதுதான் இரண்டு மூன்று முறை “பாரு வேணி, இததான் நாம யோசிக்காம மிஸ் பண்ணியிருந்தோம், ஹேய் இங்க பாரு இவ்ளவு ஷார்ட் கட் இருக்கப்ப நாம தெரியாம சொதப்பி இருக்கோம் என இவளிடம் சொல்லிக் காட்டியது. இவள் எத்தனை எக்கி பார்த்தும்  அவன்  எழுதிக் காட்டிய நோட்டில் என்ன எழுதினான் எனவுமே தெரியவில்லை. கொஞ்சமாவது இவளும் பார்க்க முடியணும்னு எண்ணம் இருந்தால்தானே!

பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், “சரி மது, நீ உங்க அண்ணாட்ட படிச்சுக்கோ, அப்றமா நாம போட்டு பார்த்துக்கலாம்” என்றபடி எழுந்துவிட்டாள் இவள்.

“ஏன்? ஏன்ஏன்?  எதாவது முக்கியமான வேலையா வேணி?” சற்றாய் பதறுகிறதோ மது. இவள் தவிர்க்கப்படுவது அவளுக்கு புரியாமலா இருக்கும் இந்நேரம்?

“அண்ணா அளவுக்கு எனக்கு சொல்லித் தர வராதே?” என மது இப்போது சாந்தமாகி அக்கறைப் பட,

“உங்க அண்ணா போல சொல்லித் தந்தா எனக்கு ஒரு காலமுமே மேத்ஸ் வராதே” என இவள் சற்றாய் மது தொனியிலேயே சொன்னவள், “எனக்கு காது கண்ணெல்லாம் யூஸ் செய்யாம மேத்ஸ் புரியாது” என்க,

இப்போது ஒரு பார்வை நிமிர்ந்து இவளைப் பார்த்தான்தான். நொடி நேரப் பார்வை, முகத்தை இன்னுமாய் இறுக்கமாகவே வைத்தபடி மீண்டும் நோட்டைப் பார்த்து குனிந்து கொண்டான்.

மதுதான் புன்னகைத்தபடி “ஏய் அண்ணா நீங்க இப்படி நடுவில வாங்க” என அவளுக்கும் இவளுக்கும் இடையிலாக அவன் வந்து உட்காரும் படி அவனை அழைத்தாள்.

ஆனால் அவன் அப்படி உட்காராமல் இவர்கள் இருவருக்கும் நேர் எதிராகப் போய் உட்கார்ந்து கொண்டவன், தன் கையிலிருந்த நோட்டை நீட்டி அதில் கணிதத்தை எழுதி விளக்கிக் கொண்டே வர, இப்போது வேணிக்கு கணிதம் புரிகிறதுதான்.

ஆனால் இப்படி நேர் எதிரே உட்கார்ந்திருக்கும் இப்போது கூட மதுவை மட்டுமே பார்த்தபடி அவன் சொல்லிக் கொடுப்பதன் காரணம்தான் புரியவில்லை.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள், ஏதோ வகையில் இது இவளுக்கு உபத்திரவமாய் தோன்ற, பின்ன கணக்க விட இவன் ஏன் நம்மள இப்படி ட்ரீட் பண்றான்? எதுக்கு கோபமா இருக்கான்? அப்படி நான் என்ன செய்தேன்? என அதிலேயே மனம் சுத்துகிறதே!

“உள்ள வேலையிருக்கு மது, நைட் டின்னர்க்கு பிறகு முடிஞ்சா ஜாய்ன் செய்துக்கிறேன்” என்றபடி எழுந்து போய்விட்டாள்.  அதாவது அவன் போனப் பிறகு வரேன் என்கிறாள்.

மதுதான் இவள் கிளம்பி வருவதை பரிதாபமாய் பார்த்து வைத்ததே ஒழிய, அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

வேணி உள்ளே போய் குழந்தைகளின் அலமாரியை அடுக்கி வைக்கத் தொடங்கினாள்.  ஒரு மணி நேரம் போல் கடந்திருக்கும். இப்போது வெளியே கலகலவென பேச்சுக் குரல். கருண் வந்தாகிவிட்டது எனப் புரிய, வரவேற்கும் முகமாய் இவள் ஆவலாய் வெளியே வர,

அங்கோ எதையோ சொல்லி கருண் மதுவை சீண்டிக் கொண்டிருந்தான். மது மட்டும் உர் லுக். விளையாட்டாய்தான்.  கருண் நரேனின் தோளில் கை போட்டு நின்று பேசிக் கொண்டிருந்தது மட்டுமே வேணிக்கு மனதில் விழுகிறது.

கருண் அண்ணா கூட இவ்வளவு பழக்கமா இவனுக்கு? என்று போகிறது மனது. அந்த வகையில் வெகுவாக மகிழ்ச்சியே இவளுக்கு.

ப்ரவி அண்ணா வீட்டோடு பழக எத்தனை ஆசைப்பட்டான் அவன். அது அவனுக்கு அமைந்திருக்கிறதென்றால் சந்தோஷம்தானே இவளுக்கு! ஆனால் இப்போதும் இவள் பார்வையில் படவும் ஏதேச்சை போல வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் நரேன்.

இதுதான் இவளுக்கு முனுக்கென்கிறது. எரிச்சலாகிறது.

“ஓய் கொடுக்கு எல்லோரும் இங்க இருக்கப்ப உள்ள என்ன வேலை உனக்கு?” என உரிமையாய் இவளைக் கூப்பிட்டுச் சேர்த்துக் கொண்டான் கருண்.

ஆரம்பத்தில் கருணோடு பழகக் கூடாதென இவள் எண்ணியதுதான். ஆனால் இவள் சென்னையில் கல்லூரியில் சேர்ந்த பொழுது, பெங்களூரிலிருந்த அவன்தான் கல்லூரியில் சேர்த்துவிட வந்திருந்தான். அடுத்தும்  பெற்றோர் வரவேண்டிய எந்த முறைமைகளுக்கும் அவன்தான் வருவான். ப்ரவிக்கு நேரம் அமைவது குறைவுதானே!

கல்லூரியில் எல்லோரிடமும் இவளது அண்ணா என்றுதான் அறிமுகமே செய்து கொள்வான்.

“இங்க பாரு கொடுக்கு, எந்த ஒரு ஆணுமே பொண்ணுக்கு பிரச்சனையா, ரொம்ப ஆபத்தானவனா நடந்துக்க முடியும்தான். அது உனக்கு தெரிஞ்சிருக்கணும்தான், அதே நேரம் நாம என்ன பேசுறோம்,  எப்படி பழகுறோம்ன்றது ஆண்களால வரக் கூடிய 90% பிரச்சனையை தவிர்த்திடவும் செய்யும். அதுக்கு ஏத்த போல பேசவும் பழகவும் தெரியணும், இப்படி சும்மா ஓடி ஓடி ஒழிஞ்சன்னா, பயந்தாகொள்ளின்னு அதனாலே உன்னை டார்கட் செய்வாங்க பார்த்துக்கோ” என்பவன்,

இவள் வகுப்பு மக்களிடமுமே எளிதில் பழகிவிட்டதால் ‘இவன்ட்டல்லாம் இப்படி பேசலாம், இவன்ட்ட பேச்சு வச்சுக்காத, என்னன்னா என்னன்ற அளவில இரு’ என நடை முறை வரை சொல்லிக் கொடுத்தான். இன்று வேணிக்கு தன்னம்பிக்கையோடு சக ஆண் அலுவலகர்களை கையாளத் தெரிகிறதென்றால் அதற்கு பெரும் காரணம் இந்த கருண் அண்ணாதான்.

“அண்ணியும் ரித்து குட்டியும் எங்க?” என்றபடி இவள் கருணிடம் போக,

“வர்ற வழியில பவி கூட ஷாப்பிங் ஜோதியில ஐக்கியம் ஆகிட்டுதுல்ல குடும்பம்” என்றவன்,

“ஒரு சின்ன வேலை எனக்கு, அதான் நான் மட்டும் சீக்கிரம் வந்துட்டேன்” என்றுவிட்டு,

“ஆனா இப்ப நான் செம்ம ஃப்ரீ, இந்த பொடிசு வேற இங்க இருக்கா, ரெண்டு கேமாவது ஆடிடணும் மாப்பு” என்றான் இவளைப் பார்த்து தொடங்கி நரேனைப் பார்த்து முடித்தபடி.

பொடிசு என்பது நரேன் என்று புரியவும் அது கூட இவளுக்கு ஒரு இனிய உணர்வையே பிறப்பிக்கிறது.

ஆனால் இப்படி நரேனுக்கு எதெல்லாம் நல்லதென தோன்றுகிறதோ அதற்கெல்லாம் கூட இவளுக்கு சந்தோஷம் வந்து கொண்டிருக்க, அவன் ஏன் இவளிடம் இப்படி இருக்கிறான்?

இதற்குள் அந்த ஃப்ளீட்ஸ் (fleets) என்ற கேமிற்கான போடை எடுத்துக் கொண்டு கருணும் நரேனும் தரையில் அமர்ந்துவிட்டனர். அது சதுரங்கம் போன்றதொரு விளையாட்டுதான். ஆனால் அதைவிட பலமடங்கு சாதுர்யமானது. இருவர் முதல் நால்வர் வரை விளையாடலாம். ஆளுக்கு ஒரு கப்பல் படை என காய்கள் கொடுக்கப்படும். தங்கள் படையை காத்துக் கொண்டு அடுத்தவர் படையையும் தடுக்க வேண்டும் அல்லது தனதாக்க வேண்டும் எனப் போகும் விளையாட்டு.

அடுத்த பக்கம்