TTN Final Part 1 (21)

ஆனால் அணைத்தால் அவள் எப்படி எடுப்பாளோ? அதுவே அடுத்த பிரச்சனையாகிவிடக் கூடாதே என்ற கவனம் அவனை கட்டிப் போடுகிறது. அதனால்தான் வாய்விட்டு கேட்டுவிட்டான் இவன்.

விலுக்கென அவள் நிமிர்ந்த விதத்தில் கேட்டதற்கே அவள் காயப்பட்டுவிட்டாளோ என இவனுக்கு திக் என்கிறதென்றால், அவள் முகத்திலோ அத்தனை அபரிதமான.. அது என்ன? பெருமிதமா?

துடிக்கும் ஒரு வித பூரிப்பும், துலங்கும் முழு மதி வகை நிறைவுமாக, ததும்பும் காதலைத் தாண்டிச் சிந்தும் பெருமிதமாக இவனைப் பார்த்தவள், “உங்கள ரொம்ப பிடிச்சிருக்குன்னு எப்பயாவது சொல்லி இருக்கனா?” எனக் கேட்டாள்.

அதில் அவள் முகத்திலிருந்த அத்தனை உணர்வும் இவனுக்குள்ளும் வந்து இவன் இலகுவாக, குறும்பு மட்டும் இவன் கண்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள,

“உங்கள ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே!” என திரும்பவுமாய் வருகிறது அவளது வார்த்தைகள். இப்போதும் வெடித்துக் கொண்டிருந்தாள்தான் பெண், வார்த்தைக்குள் வடிக்க இயலா பேருவகையால்!

பெரு வெள்ள மழை நிலையில் அவள்.

அவளைப் பொறுத்தவரை ஒரு ஆணிடம் இத்தனை கண்ணியத்தை பார்ப்பதுவும், அவனின் அத்தனையையும் அவள் காயப்பட்டுவிடக் கூடாதே என்ற ஒற்றைப் புள்ளிக்குள் நிறுத்தி வைப்பதுவும் பொக்கிஷம். அந்த பொக்கிஷம் அவளவன் எனும் போது என்ன செய்வாளாம் அவள்? திக்குமுக்காடிப் போனாள்தான் பெண்.

பின் இவன் கேள்விக்கு பதில் போல “இன்னும் ஒரே ஒரு நாள்தானே” என்க, எதையும் அவனிடம் மனம் திறக்க முடியும் என்ற அந்த நிலையில் அவள் எளிதாகவேச் சொல்லிவிட

இவனுக்குமே வேறு என்ன வேண்டுமாம்?! அவள் சந்தோஷமாய் இருப்பதும், அதற்கு தான் காரணமாய் இருப்பதும் காதல் கொண்ட ஆண்மனதுக்கு போதாதாமா?!

இந்நேரம் காதில் விழுகிறது யாரோ ஒருவர் தன் தொண்டையை செருமிக் கொள்ளும் சத்தம். இவர்கள் இருக்கும் வாசலுக்கு அருகாக உள்ளே நிற்கிறாராய் இருக்கும். தான் வருவதின் அறிகுறியாய் போலும் இந்த செருமல்.

“யார் அது? வாங்க” என்றபடியே இவன் தன்னவள் கையை விட்டுவிட்டு வாசல் நோக்கி நகர,

வந்திருப்பவர் வேணியின் அம்மா எனத் தெரிகிறது. சற்று தொலைவில் அவளது அண்ணாவும் அண்ணியும் கூட ப்ரவியிடமும் பவியிடமுமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அவளது அப்பா மட்டும் வரவில்லை. ஆனால் இவர்கள் திருமணத்திற்கு வருவதை அவர் தடுக்கவும் இல்லை போலும்.

தன் அம்மாவைப் பார்க்கவும் எந்த உணர்ச்சியையும் காட்டத் தெரியாமல் “வாங்கமா” என வெறுமையாக வேணி வரவேற்பதையும்,

அவளது அம்மா ஒரு நொடி பேச்சற்று அவளைப் பார்த்தவர், “அடி பாவி, கல் நெஞ்சக்காரி, விட்டுட்டு வேண்டாம்னு இருந்துகிட்டியேடி” என ஆரம்பித்து அடுத்த நொடிகளில் மகளை இழுத்து அணைத்துக் கொண்டு வெடிக்க, கூடவே வேணியும் வாய்விட்டு அழுவதையும் பார்க்க வேண்டியதானது நரேனுக்கு.

நிறைகுடமாய் அத்தனை அத்தனை நிம்மதி அவனுக்குள்!

றுநாள் திருமணம், அதன் பின் வரவேற்பு என எல்லாம் முடிய இரவு வெகுவாகவே தாமதமாகிவிட்டது. ஆக புதுமண தம்பதியரை மணமகன் வீட்டில் சென்று விட என உடன் வந்த வேணியின் குடும்பத்தவர் உட்பட அனைவரும் சற்று நேரத்தில் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

ப்ரவியும் பவியும் குழந்தைகளுடன் இன்று நரேன் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

“என் கல்யாணம்னா என் அம்மா அப்பாவாவது என் வீட்ல இருக்கணும் அண்ணா, அதனால நீங்களும் அண்ணியுமாவது கண்டிப்பா அன்னைக்கு எங்க வீட்ல இருக்கணும்” நரேன் இப்படிச் சொல்லி முன்பே சம்மதிக்க வைத்திருந்தான் அவர்களை.

தொடரும்..

துளி தீ நீயாவாய் Final Part 2

 

துளித் தீ நீயாவாய் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி