TTN Final Part 1 (20)

இத்தனை கோபத்திலும் வழி மேல் விழி வைத்து இவனுக்காக காத்திருக்கும் இந்த உறவே இவனுக்குப் புதிதல்லவா? அணுவும் கணுவுமாய் அனைத்தையும் ரசிக்கத்தான் தோன்றுகிறது.

இவனும் இப்போது எதுவும் சொல்லாமல் அவள் முகத்தை மட்டுமாக பார்த்துக் கொண்டு நின்றான்.

இளமஞ்சளும் சந்தன நிறமுமான பட்டுபாவடை தாவணியில் இருந்தவளது முன் முடி வீசிக் கொண்டிருக்கும் கடல் காற்றில் கலைந்து போய் முகத்தில் அங்கும் இங்குமாய் பிறள்வதாய் இருக்க, காணாத இன்பம் கையில் வந்து விழுவது போல் அத்தனை மனோரம்யமாய் படுகிறது இந்த நொடி.

தன் தோளால் அவளுக்கு அடுத்து சுவரில் சாய்த்துக் கொண்டான். அவளது பக்கவாட்டு முகம் இவனுக்கு வெகு அருகில். ஒற்றை மச்சமுள்ள அந்த பக்கவாட்டு நெற்றி, அச்சமில்லை என்பதான அந்த விக்ரக வகை நாசி, துடிப்புள்ள அதரங்கள், சின்னதாய் அந்த நாடி.. இவன் பார்வை பரவிப் பரவி சுருள,

“ஹலோ என்ன விளையாடுறீங்களா? நீங்க சைட் அடிக்கன்னா நாங்க இங்க வந்து நின்னுட்டு இருக்கோம்?” இது அவள்.

“ஆமா, நாளைக்கு கல்யாணத்த வச்சுகிட்டு இதை கூட செய்யல்லன்னா தப்பு” சின்ன சிரிப்புடன் சீண்டினான் இவன்.

“அடபாவமே கல்யாணமா? அதுவும் நாளைக்கேவா? அதுக்கெல்லாம் பொண்ணு வேணுமே  சார், போய் சீக்கிரமா பொண்ணு பாருங்க, டைம் வேற கம்மியா இருக்கு போலயே” அசராமல் பதிலடி கொடுத்தாள் அவள்.

“நான் ஏன் பொண்ணு பார்க்கணும்? நான் உயிருக்குயிரா காதலிக்கிற என் வேணிப் பொண்ணாதான் கல்யாணம் செய்துப்பேன்” அவன் குழைய,

“என்னது காதலா? உங்களுக்குத்தான் வேற வேலை எக்கசக்கமா இருக்குமே! அப்றம் எதுக்கு நான்?” என விரைத்தாள் இவள்.

“எனக்கு காதலிக்கிறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா உன்னைத் தவிர ஒருத்தர் மேலயும் அது வர மாட்டேங்குது, பைதவே கல்யாணம் செய்றதுன்னா சுத்தமா பிடிக்காது, அதனால நீயே சொன்னா கூட உன்னத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்யமாட்டேன்” சீண்ட சீண்ட, சிரிக்க பூரிக்க, ரசித்து ரசித்து வருகிறது இவனது வார்த்தைகள்.

காதில் விழவும் சரேலென திரும்பி இவன் முகம் பார்த்தவள், மலரும் விழியோட பிரமிப்பின் நிறத்துக்குப் போய் சட்டென சிரித்து விட்டாள்.

காரணம் இல்லாமல் இல்லை. முன்பொருநாள் பால்கனியனியாய் இவள் முன் நின்றவனிடம் “என்னது காதலா? உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? அதுக்கெல்லாம் வேற ஆளப் பாருங்க” என இவள் கத்தியதும்

அதற்கு மேற்கூறிய அதே பதிலை அவன் அப்போது சொன்னதும்  நடந்தது உண்டு.

அந்த ஞாபகத்தில்தான் இந்த சிரிப்பு. அதோடு எது எப்படியோ குறைவுள்ளதாய் மரித்துப்போய் நிறைவானதாய் உயிர்த்தெழுந்திருக்கும் இவன் வாழ்க்கை இந்த வார்த்தைகளை நிறைவேற்றித் தந்திருக்கிறதுதானே!

அதை உணர்கையில்தான் இந்த பிரமிப்பு பூரிப்பு எல்லாம்.

“நான் மாறணும்னு நினைக்கிறப்ப இப்படி நான் இழந்து போனதெல்லாத்தையும் ரெண்டு மடங்கா திருப்பித் தரும் வாழ்க்கைன்னு நினைக்கவே இல்ல வேணிமா” நொடிக்குள்ளாக கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அளந்து புரிந்துவிட்ட அவன் மனம் நெகிழ்ந்து போய் இப்படியாய் கசிய,

நிகழ்வின் உருகலில் அனிச்சையாய் சென்று அவனது கரங்களைப் பற்றிக் கொள்கிறது இவளது கைகள். “எப்பவும் நீங்க இனி நல்லாதான்பா இருப்பீங்க” அவள் மனம் நிறைந்து முனக, பற்றிய அவள் கைகளை தன் கைகளுக்குள்ளாக அவனுமே பொதிந்து கொண்டவன் “நாம நல்லா இருப்போம்னு சொல்லு” என்று திருத்தினான்.

சில நொடி இப்படிக் கழிய, அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக “மஹிக்கா எதாவது சொன்னாங்களா இன்னைக்கு?” என ஆவலாக விசாரித்தான். வேணியின் அண்ணன் மனைவியைப் பற்றி கேட்கிறான்.

கடந்த சில தினங்களாக தினமுமே இவளோடு பேசிக் கொண்டிருக்கிறாள் மஹி. எப்படியாவது வேணியின் வீட்டிலிருந்து யாரையாவது திருமணத்திற்கு கூட்டி வர அவள் முயன்று கொண்டிருக்கிறாள். ஆனால் வேணியின் அப்பாவோ முழுக்க முழுக்க அதை மறுக்க, யாருமே இங்கு வருவதாயில்லை என்பதுதான் நேற்று வரை தகவல்.

“ஹ்க்கும்” தொண்டையை சரி செய்து கொண்ட வேணி “கல்யாண செலவுக்குன்னு அண்ணா ரெண்டு லட்ச ரூபா அப்பாக்குத் தெரியாம எனக்கு அனுப்ப போறானாம். உங்க அக்கவ்ண்ட் நம்பராவது என் நம்பராவது அவனுக்கு வேணுமாம், அண்ணி சொன்னாங்க, அதெல்லாம் வேண்டாம்னு உங்கட்ட கேட்காமலே சொல்லிட்டேன்” என இவன் முகம் பார்த்தாள்.

உள்ளுக்குள் அவளுக்கு எப்படி இருக்கிறது என இவனுக்குப் புரியாமலில்லை. ஆனால் முகத்தில் எதையும் காட்டவில்லை அவள்.

என்ன செய்வான் இவன்?

அவள் கைகளை பற்றி இருந்தவன், இன்னுமாய் பிடியை அழுத்திக் கொடுத்தபடி, “எல்லாம் சரியாகிடும் வேணிமா” என்றான்  ஆறுதலாக

அவளோ ஒரு கணம் கண்ணை மூடி தன்னை சமன் செய்தவள் “இதுவே எல்லாம் சரியா இருக்கிறதுதான்” சிரிக்க முயன்றபடி சொன்னாள்.

“இடையில் அவங்கல்லாம் எங்க இருக்காங்க.. இருக்காங்களா இல்லையா..” என்றவள் அதோடு சொல்லமுடியாமல் பேச்சை நிறுத்த,

“லூசு” என்றான் இவன்.

“இல்ல அப்டி எதுவும் கூட தெரியாம இருந்ததுக்கு இப்ப இருக்க நிலை எவ்வளவு பெட்டர்னு சொல்றேன்” அவள் சிரிக்க முயல, கண்ணில் நிற்கும் நீர்தான் இவனுக்குத் தெரிகிறது.

இரண்டு விரல்களால் தன் நெற்றியைத் தேய்த்தபடி தரையைப் பார்த்துக் கொண்டு “முட்டாள்தனம் செய்துட்டேன்” என அவள் அடுத்துச் சொன்னதில் அவள் வெடித்துக் கொண்டிருக்கிறாள் என இவனுக்குப் புரிய,

அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவனாய் “ப்ளீஸ் வேணிமா உன்ன ஹக் பண்ணிக்கிறனே” என கேட்டிருக்கவே செய்தான் இவன். அவளை இழுத்து தனக்குள் பொதிந்து கொள்ளவும், தனக்குள் இருக்கும் அனைத்தையும் கொடுத்தாவது அவளை இதமாக்கவும் துடிக்கிறது இவனுக்கு.

அடுத்த பக்கம்