TTN Final Part 1 (2)

இத்தனை வருடத்தில் மதுவுமே நரேனைப் பற்றி எதுவுமே இவளிடம் சொன்னதில்லை. இவளும் கேட்டுக் கொண்டதில்லை. மதுவும் நரேனும் தொடர்பிலிருக்கிறார்களா எனக் கூட இவளுக்குத் தெரியாது. ஆனால் இப்படி வாழ்த்துச் சொல்வதென்றால் அவனாக இருக்க முடியும்தானே! என இவள் எண்ணி முடிக்கும் முன்,

“ஏ வாலு விஷ் பண்ணா கதவ திறக்க மாட்டியா?” என கதவின் முன் வந்தான் அவன். நரேனேதான்.

இவள் கடைசியாக பார்த்த ஒல்லி உருவத்துக்கு இப்போது சரியான அளவு தசை ஏறி, இன்னுமாய் முறுக்கேறி மெருகேறி இருந்தான் அவன். அவனது உயரத்திற்கேற்ற ஆளுமையான தோற்றம். ப்ளூடெனிமும் கேஷுவலாய் கை மடக்கிவிடப்பட்ட கேஷுவல் ஷேர்ட்டுமாய்தான் வந்திருந்தாலும் ஏதோ ஒரு ஃபார்மல் தொனி ஒலியின்றி அவனைப் பரவி நிற்பதாய் ஒரு உடல் மொழி. அலட்டலற்ற தன்னம்பிக்கையின் வண்ணம் என்பது இதுதானா? அல்லது கம்பீரம் என இதை குறிக்க வேண்டுமா? முன்பு கணிக்க முடியாதது போல் கிடக்கும் அவன் கண்களில் இப்போது அத்தனை ஜீவனும் புத்துணர்ச்சியுமாய் ஒளி.

அது அவன்தான் என புரிந்த கணம் கேட்காமலே சட்டென அள்ளிக் கொண்டு பூத்தது பெண் மனது. மலர்ந்த மலர்களிலெங்கும் நட்பு வாசம்தான். பார்த்து எத்தனை வருடமாகிறது! அதுவும் கடைசியில் எத்தனை வெலவெலப்பும் தவிப்புமாயும் கண்டது அவனை? ப்ரவியண்ணாவோட தொடர்பிலதான் இருப்பான், நல்லாத்தான் இருப்பான் என்ற ஒரு நம்பிக்கை இதுவரை இருந்தாலும் அதை கோலமாக காட்சியாக பார்க்க மனம் இனிமை கொள்கிறதுதானே!

இவள் முகம் அவன் யாரென புரிந்து மலரும் அந்த அரை நொடிக்கும் முன்னும் இவளைக் காணவும் அவன் கண்ணில் துள்ளி ஓடுகிறது மின்னல் ஒன்று படு பிரகாசமாய். மகிழ்ச்சி மேகங்களிலிருந்து வெளிப்படையாய் பிறந்தவைதான்.

ஆனால் அது அவன் முகத்தில் புன்னகையாக மாறும் முன்னும் கூட சட்டென அவன் முகத்தின் மொத்த உணர்வுகளையும் துடைத்துப் போட்டவன், இவளை துளியும் அறியாதவன் போல “மது இருக்காங்களா? நான் மதுவப் பார்க்கணும்” என்றபடி வீட்டிற்குள்ளாக பார்வையை செலுத்தினான். அதாவது இவளைப் பார்க்கக் கூட அவன் தயாராக இல்லையாம்.

முனுக்கென விழுந்து போனது வேணிக்கு.

ஏன் பார்த்து ஒரு வார்த்தை நல்லா இருக்கீங்களா? நான் நல்லா இருக்கேன்னு சொல்லிகிட்டா என்னவாம்? இப்படி தவிர்க்கும் அளவுக்கு இவள் என்ன செய்தாள் அவனை?

இதற்குள் மது அங்கு வந்திருக்க “ஹையோ அண்ணா, வாங்க வாங்க உங்களுக்காகத்தான் வெயிட்டிங்” என அவனோடு குதுகலிக்க, அவர்களுக்கு இடம்விட்டு வேணி உள்ளே வந்துவிட்டாள். ஒரு கணம் மது என்ன, ஏது என புரியாமல் இருவரையும் பார்ப்பது கடந்து வரும் நேரம் இவளுக்குப் புரிந்தது.

அடுத்த அறையிலிருந்த உணவு மேஜையை தற்காலிக படிப்பு மேஜையாக்கி அதில்தான் நோட்டுக்களை பரப்பி இருந்தனர் வேணியும் மதுவும். இப்போது அங்கு வந்து அமர்ந்து தனது நோட்டுக்குள் தலையை கொடுத்துக் கொண்டாள் வேணி.

அவன் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதும், பரிசு கொடுப்பதும், வரப் போகிற அவன் ஏற்பாடு செய்திருக்கும் விழா பற்றியும்,  மது அதற்காகத்தான் இந்த நேரத்தில் சென்னையே வந்திருப்பாள் போலும், அதற்கு அவள் எப்படி வர வேண்டும், வருகிறவர்களை அவள் எப்படி உபசரிக்க வேண்டும் என்பதுமாய் என்னதெல்லாமோ அவர்கள் பேசிக் கொள்ள, இன்னும் என்னவெல்லாமோ இவள் காதில் விழுகிறது. கண் முன்னிருக்கும் புத்தகத்தின் எழுத்துக்கள்தான் மனதிற்கு தெரியவே இல்லை பெண்ணுக்கு.

அவனுக்கு உண்ண குடிக்கவென கொடுத்து உபச்சாரமெல்லாம் செய்துவிட்டு பின், “வாங்கண்ணா, இந்த சம்ஸ் மட்டும் கொஞ்சம் சொல்லி கொடுத்துடுங்க, நாங்க முடிமுடியா தலைய பிச்சுகிட்டு இருக்கோம்” என அவனை இங்கேயே கூட்டி வந்தாள் மது.

வேணிக்கு இங்கு சட்டென உடல் இறுகியது. இவ்வளவு நேரம் மரியாதைக்குக் கூட இவளைப் பற்றி எதுவும் கேட்காமல், மருந்துக்குக் கூட இவளைப் பார்க்காமல் தவிர்த்தவன் இன்னும் எப்படி தவிர்ப்பானோ என இப்போதே தோன்றிவிட்டது அவளுக்கு.

அவனும் இவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் இவள் புறமே திரும்பாமல் மதுவை மட்டுமே கவனித்தபடி வந்து, மதுவுக்கு அடுத்து அமரும் படி இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அதுவும் உட்காரும் போதே கையில் புத்தகத்தை எடுத்து தலையை அதற்குள்  சொருகிக் கொள்ளாத குறைதான். இவள பார்த்துட்டா தொற்று நோய் எதுவும் பிடிச்சிடுமோ?!

“அண்ணா இது யார்னு தெரியுதா? நம்ம வேணி” என மது இப்போது அறிமுகம் செய்து வைக்கிறாள். ‘அடையாளம் தெரியல போல அதான் தன் அண்ணா பேசல போல’ என நினைத்துவிட்டாள் போலும்.

மது இவளிடம் “இது நரேன் அண்ணா, வேணி” என அறிமுகம் செய்யும் முன்னாகக் கூட இவள் அவனைத்தான் விழி கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதுவின் அறிமுகத்தில் அப்போதுதான் அந்த அறையில் அவளும் இருக்கிறாள் என்பதை கவனித்தது போல தலையை மட்டும் நிமிர்த்தி இவளைப் பார்த்தவன், அவன் காதுக்கே கேட்க கஷ்டபடும் அளவான சத்தத்தில் ஒரு ஹலோவை உதிர்த்துவிட்டு, மீண்டும் புத்தகத்தை நோக்கத் தொடங்கிவிட்டான். அவனுக்கு இவள் ஹலோ சொல்ல வேண்டுமா வேண்டாமா?

இதற்குள் அவனுக்கு முன்பாக திறந்து கிடந்த நோட்டையும் பேனாவையும் எடுத்தவன், இவர்கள் பாதிவரை போட்டு அதற்கு மேல் தெரியாமல் நிறுத்தி இருந்த கணக்கொன்றை விளக்கத் துவங்கிவிட்டான்.

ரொம்பவும் நன்றாக விளக்கினான் போலும். மது மட்டும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது. இவளுக்குத்தான் என்ன செய்யவெனத் தெரியவில்லை. ஆம் அவனுக்கு அடுத்து மது, மதுவுக்கு அடுத்து இவள் என அமர்ந்திருந்த நிலையில் அவன் குரல் இவள் காதில் விழுந்தால்தானே இவளுக்கு எதாவது புரிய?

மதுவுடன் அவன் அடுத்த அறையில் இருந்து பேசிய போதே இவள் காதில் விழுந்ததென்ன? இப்போது நடப்பதென்ன?

அடுத்த பக்கம்