TTN Final Part 1 (19)

‘ஆனா இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு? சட்டுன்னு ஹனி மூன்க்கு கேட்டுட்டான்?, ஓ ப்ளான் செய்ய டைம் வேணும்னு சொன்னான்ல? ஆனாலும் இந்தா இருக்க ஆலப்புழாக்கு புக் செய்ய ரெண்டு மாசமா? இல்ல அப்ராட் போற ப்ளான் எதாச்சும் இருந்திருக்கும் அவனுக்கு, இவளுக்கு போட் ரைட் பிடிக்கிதுன்னு தெரியவும் ஆலப்புழான்னு யோசிக்கிறான் போல!’

‘மை டியர் வீகன் கேட் எல்லா நேரமும் எனக்கு என்ன பிடிக்கும்னு யோசிக்கணும்னு இல்ல, உனக்குப் பிடிச்சதையும் யோசிப்பியாம்’ செல்லம் கொஞ்சத் தோன்றுகிறது பெண்ணிற்கு.

ஆனால் அடுத்த நொடியே ‘எப்படி அது? அவன் பாட்டுக்கு ஹனி மூன்க்கு வான்னு கூப்ட்டுருக்கான்? இவளுக்கு பயமோ வெறுப்போ வராமல் சட்டென வெட்கமும் மகிழ்ச்சியும் வந்து சேர்ந்திருக்கிறது? இப்படி ஒரு கேள்வி வர,

முன்பு ரோஹன் வெளியே தங்கப் போகிறோம் என ஆரம்பித்தாலே பயம், அத்தனை வெறுமை வெறுப்பு என எல்லாம் இவளுக்குள் வந்துவிடும், அது நினைவில் தட்டிப் போக,

முறையான திருமணம் என்ற இந்த ஒற்றை பந்தத்தை மனமும் உடலும் ஏற்கும் விதமே எத்தனை வேறாயிருக்கிறது என்ற புரிதல் திரள்கிறது.

அதற்குள் “அதா ஃப்ளோல பழசெல்லாம் ஞாபகம் வராது வேணிமா, ஏன்னா நம்ம கண்ணு முன்னால இருக்கிற சிச்சுவேஷன்லதான் நம்ம மனசு இயங்கிகிட்டு இருக்கும், ஆனா உட்கார்ந்து நாமளா யோசிக்கிறப்ப எங்க வேணாலும் போகும் சிந்தனை, ஆனா அப்ப எந்த காரணத்தக் கொண்டும் அந்த ரோஹன இப்ப உள்ள வாழ்க்கை கூட கம்பேர் செய்யாத, எப்படியும் இப்ப உள்ள வாழ்க்கை ரொம்பவே பெட்டரா இருக்குதுன்ற உண்மைதான் புரியும்னாலும், எதாவது ஒரு விஷயம் மனச ரொம்ப கஷ்ட படுத்திடவும் முடியும்” என பவி சொல்லியிருந்த சட்டம் ஞாபகம் வர, அதன் ஆழ அகலம் முழுதாய் புரிய, இந்த சிந்தனையை இதோடு தூக்கி எறிய முற்பட்டவளாய்,

கவனத்தை திசை திருப்ப என கட்டிலிலிருந்து இறங்க, “என்னடி கரடி நானே வந்துட்டேன், அண்ணா இன்னும் chatக்கு வரலையா?” என்றாள் இவளது ரூம் மேட் பவதாரிணி.

“உன்ன போல அங்க உன் அண்ணாக்கு என்ன கரடி வந்து சேர்ந்துதோ?” என்றாள் வேணியும் சிரித்தபடி,

“அடிங்.. கரடி கரடிய கரடின்னு சொல்லலாம், ஆனா கரடிய கரடின்னு கரடி பெர்மிஷன் இல்லாம நீ எப்படி சொல்லலாம்?” கையில் கிடைத்த தலையணையை தூக்கி இவள் மீது வீசியபடி பவா எகிற,

அந்த தலையணை போய் ஜன்னலில் பட்டு சரிந்ததில்தான் மழை பெய்து கொண்டிருப்பது இவளுக்கு கவனத்தில் வருகிறது.

கூடவே மழையில் இன்று படகில் அவனுக்காக தவித்த அந்த நொடிகள் மனதில் வந்து நிற்கின்றன. இப்போது கூட ஒரு கணம் திகீர் என்கிறது. கூடவே அவன் மீதான தன் அன்பு புரிய சுகச்சுமையொன்று மெல்லிய காற்றாய் இதயத் திசுக்களில் நிறைந்து கொள்கிறது. பூக்காடாய் இவள் உயிர்வனம்.

அவன் எப்போது இவளுக்கு இத்தனை உயிரானான்? தெரியாது!!! இதன் பேர்தான் காதலா? தெரியவே தெரியாது!! ஆனால் இவளோடு திகட்ட திகட்ட வாழனுமாமே அவனுக்கு! அதைத் தவிர குறிக்கோள் என்று பெரிதாய் இவளுக்கும் எதுவுமில்லை.

அதற்குள் செய்தியின் சத்தம் இவள் மொபைலில்.

வேற யாரா இருக்கும்?

“என்னை போடான்னு சொல்லிட்டா ஒருத்தி” எடுத்ததும் அவனது சேட் இப்படித்தான் துவங்கியது.

“பேரக் கூட சொல்ல மாட்டேன்னு நல்ல பிள்ளையாத்தான் இருந்தேன் பாஸ்” இவளது பதில்.

“இது எல்லாத்துக்கும் நீதான்டா காரணம்னு அர்த்தமா?”

“நீங்கதான்பா – அப்படின்னும் அப்பப்ப வச்சுப்போம்”

முகம் முழுவதும் முங்கிக் கிடந்த சிரிப்புடன் இருவரின் chatம் தொடர்ந்து கொண்டு போனது.

ன்னும் இரண்டு மாதம் கழிந்திருந்தது. அந்த இரவில் அவசர அவசரமாக தன் காரை அந்த பீச் ரிசார்ட்டின் பார்க்கிங் ஏரியாவில் சென்று நிறுத்தினான் நரேன். நாளை இங்கு இவனது திருமணம். அதற்கான ஏற்பாடுகளில்தான் இவன் நாள் முழுவதும் பிஸி.

வேணியை பார்த்து நான்கு நாளாகிறது. இன்று ப்ரவி குடும்பத்தோடு அப்போதே அவள் இங்கு வந்தாகிவிட்டது. இவன் இப்போதுதான் வருகிறான்.

விழா ஏற்பாடு உணவு என எல்லாவற்றையும் அதற்கான நிறுவனங்களிடம் ஒப்படைத்து, அதை கவனித்துக் கொள்ளவென பவி, கிருபா, மீரட்டின் அம்மா சாரா ஆன்டி கூடவே இவனது வேணி என ஆளாளுக்கு சில பல நாட்களாக இவனுக்கு உதவினாலும் இவனுக்கு இப்போது வரையுமே நெட்டி முறிக்கிறது வேலை.

வேணியை பார்க்க பரபரத்த கால்களை எட்டி நடை போட்டான்.

விழா நடக்கும் மெயின் ஹாலை கடக்கும் போது அங்கு நடந்து கொண்டிருக்கும் மணமேடை அலங்காரத்தை மேற்பார்வை செய்த படி ஒரு கையில் தூக்கிய தன் மகளோடு ப்ரவியும் அவனோடு பவியும் நின்று கொண்டிருப்பது கண்ணில் பட அவர்களிடம் பேசப் போய்விட்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் இவனுக்கு உள்ளுணர்வில் தெளிவாய் புரிகிறது. யாரோ இவன பார்க்காங்க! வேற யாரா இருக்கும்? திரும்பிப் பார்க்க, அந்த திசையில் அமைந்திருந்த ஒரு வாசலிலிருந்து இவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி.

ப்ரவி பவியிடம் விடை பெற்று அவளிடமாக சென்றான்.

இவன் வருவதைப் பார்க்கவும் வாசலில் நின்றிருந்த அவள் அரங்கின் வெளிப்புறமாய் சற்றாய் நகர்ந்து வெளிச்சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள். மௌனம்! நான்கு நாளாய் இதோ இப்ப வர்றேன்! அங்கயா போய்ருக்க? அங்கயே நில்லு வந்துடுறேன்! என்றெல்லாம் இழுத்தடித்துவிட்டு பார்க்க போகவில்லை அல்லவா இவன்? அந்த கோபம்.

அடுத்த பக்கம்