படகு இப்போது ஆடிக் கொண்டிருந்த வகையில் எக்கசக்கமாய் நிலை தடுமாறி இருந்த வேணி, அவன் குரல் வந்த திசையை குறி வைத்து இரு கைகளை நீட்டி பாய்ந்தவள், அவனை இறுக பற்றிக் கொண்டாள். அதாவது கைக்குள் மாட்டிய அவனை அணைத்துக் கொண்டாள் எனச் சொல்ல வேண்டும்.
நின்று கொண்டிருக்கும் அவன் விழுந்துவிடக் கூடாது என்ற பயத்தின் அனிச்சை செயல் அது. அவனுமே இப்போது இவளை வளைத்துக் கொண்டான். இவள் விழுந்துவிடக் கூடாதே!
“சார் நாங்க 7 பேர் வந்துருக்கோம் சார், கீழ வலைய இழுக்கவும் படகு ஆடுது போல, எல்லோரும் உட்கார்ந்துக்கோங்க, ஒருத்தர ஒருத்தர் பிடிச்சுக்கோங்க” என படகு ஓட்டியின் குரல் காதில் விழவும்தான் எல்லோருக்கும் விஷயம் புரிய,
நின்றிருந்த நரேன் இவளை இழுத்தபடி உட்கார்ந்து கொள்ள, அணைத்திருந்தவளை அமர்த்திய வேகத்தில், கிட்டதட்ட அவன் மடியில் இவள் இருக்கிறாள் என்ற நிலை. இவளை அசையக் கூட முடியாத படி ஒற்றை கையால் வளைத்திருந்தவன் அடுத்த கையால் படகை பற்றி இருந்தான்.
“என்னமோ தூக்கிப் போட்டாலும் சேதாராமில்லாம வருவேன்னு சொன்ன, அப்றம் என்ன இப்படி பயம்?” அந்நிலையிலும் அவளை விசாரிக்க,
இவனை இன்னுமே இரு கைகளாலும் இறுகப் பற்றி இருந்தவளிடமிருந்து “போங்க நீங்க” என்ற வார்த்தைகள் மட்டும் வருகிறது அழுகைத் தடங்களோடு.
அவள் அழுகிறாள் எனப் புரியவும் “லூசு, அப்படி எப்படி குதிப்பேன்?” என்றான் இவன்.
“குதிச்சிட்டீங்கன்னு புரிஞ்சிட்டு” அதே அழுகுரலில் அவள் சொல்ல,
ஒரு நொடி எதுவும் சொல்லாமல் அவள் பதில்களில் தேங்கிக் கிடந்த இவனுக்கான அன்பை உள்வாங்கியவன்,
“உன்னைய விட்டுட்டுல்லாம் எங்கயும் போறதா இல்ல நான், திகட்ட திகட்ட உன் கூட வாழணும்னு எனக்கும் அவ்வளவு ஆசை இருக்குது, எப்பவும் கவனமாதான் இருப்பேன்” என்க,
பதிலென எதுவும் அவளிடமிருந்து இல்லை.
“புரிஞ்சுதா?” என மீண்டும் இவன் கேட்டதில்
சற்று ஆறுதல்பட்ட “ம்” என்ற ஒற்றை எழுத்துப் பதில் இவளிடமிருந்து.
அடுத்து சில நிமிடங்களில், சிக்கலில் இருந்து படகு வெளிவர, அதன் ஆடலும் சமனப்பட, கிளம்பிப் பயணிக்க, இவனிடமிருந்து விலகி அமர்ந்து கொண்டாள் வேணி.
இப்போது தன் பேக்கை தேடி எடுத்து அதிலிருந்த டிஷர்டை எடுத்து அவன் அவளிடம் நீட்ட, அவள் ரியாக்க்ஷன் என்னவென இவனுக்கு இருட்டில் தெரியவில்லை. மௌனம் மட்டும் அவளிடம்.
“அதான் ஆசை ஆசையா நீயாவே ஹக் பண்ணி, தேடி வந்து என் கைக்குள்ளயும் இருந்தாச்சே! அப்புறம் என்ன?” சன்னமே சன்னமாய் சிரிப்போடு சின்னதே சின்னதான குரலில் ஒலித்த அவன் கேள்வியில் மித மிஞ்சலாய் கிடந்தது சீண்டல்.
இதில் இவள் முன்பு டீஷர்ட்டை தவிர்த்த காரணம் அவனுக்கு சரியாகவே புரிந்திருக்கிறது என்ற அறிதலைத் தாண்டி, என்னது ஹக்கா?!! என்னது தேடி வந்து கைக்குள்ளயா?!! என ஒரு பக்கம் இவள் மனம் எகிறினால், மறுபக்கம் இவன் இப்படியெல்லாம் கூட பேசுவானா? என அதிர்ந்து கொள்கிறது. ஆனால் அதில் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி முல்லை மொக்குகள் நிரம்பிய சுரங்கத்துள் விழுந்து போனதாய்தான் உணர்வு!!
“பால் கூட குடிக்காத வீகன் பூனைன்னு நினச்சா இது பால்ல போன்விட்டா போட்டு குடிக்கிறதும் இல்லாம சைட் கேப்ல சிக்கன் சூப்பயே உள்ள தள்ளுதே!! அப்படின்னுதான இப்ப என்னைய பத்தி நினச்சுகிட்டு இருக்க?” இதையும் அவனேதான் கேட்டான் அப்படியே அவளை உணர்ந்தவன் போல.
பொதுவாய் கலகல கால்வாரல்கள் செய்யும் வெகு உற்சாகமான மக்களுடன் இருப்பதுதான் நரேனுக்கு வெகுவாக பிடிக்கிறதென்றாலும், அவன் அதை ரசிப்பானே ஒழிய, பேசி சிரிக்க மாட்டான், என்பதை வேணி இதற்குள் அறிந்திருந்தாள்தான். ஆக இது அவளுக்குப் புதிது!!
ப்ரொபோசல் டே மனதில் ஓட இவளுக்கே இவளுக்காய் சில குணங்களை கூட சேர்த்து வைத்திருக்கிறான் போல என்று ஒன்று புதிதாய் புரிய, நிலவொளியை நூலாக்கி, தென்றலை தறியாக்கி இவள் பெண்மையை நெசவிட்டது காதல் நேசம்.
“எல்லார்ட்டயும் போல பொண்டாட்டிட்டயும் பேசினா எப்படி? கல்யாணம் ஆகட்டும்னு அடக்கி வாசிக்கிறேனாங்கும்” அவன் தன் சீண்டலைத் தொடர,
வெட்கத்தைப் புதைத்துக் கொண்டு தளும்பும் சிரிப்போடு அவளிடமிருந்து அனிச்சையாய் வந்தது “போடா” எனும் சொல்.
அன்று இரவு தன் அறையில் படுக்கையில் போய் விழவும் இன்றைய நாளின் நிகழ்வுகள் மட்டுமே அவளை ஆக்ரமித்தன. சற்று நேரம் இவளவனோடு நேர்ந்த நிகழ்வுகள் மனதில் சுற்றி வந்தன என்றால், அதை ரசித்துக் கொண்டிருந்தவள் ஏதோ ஒரு புள்ளியில் அதன் நினைவுகளை தான் சுற்றத் துவங்கியிருந்தாள்.
‘கேடி! பால் கூட குடிக்காத வீகன் பூனை இமேஜ் எல்லாம் அப்ப சும்மாதானா? கல்யாணத்துக்குன்னு அடக்கி வாசிக்கியாமா?’ என தனக்குத்தானே சிரித்துக் கொண்டாலும், தன்னவன் மீது ரசனையும் மரியாதையும்தான் சரிவிகிதமாக பாய்கிறது.
திருமணத்துக்கு முன் சின்னதாய் கூட எல்லை தாண்ட மாட்டேன் என இத்தனை நாள் காட்டி இருக்கிறான்.
இதே விஷயத்தில் அடிபட்டு எழுந்தவளல்லவா? ஒரு வேளை அதனாலேயே கூட வார்த்தையளவில் கூட விளையாடாமல் கவனமாயிருக்கிறானோ? அவன் செயலின் ஆழ அகலம் புரிய தன்னவன் மேல் விரிந்தேறும் மரியாதையும் அவனுக்குள் தலைகுப்புற விழும் நிலையிலுமாய் இவள்.