TTN Final Part 1 (15)

கடகடவென வீட்டின் உள்பகுதிக்குள் நுழைந்தான். முதலில் ஒரு சாப்பாட்டு அறை இருந்தது. அதில்தான் வேணியின் அப்பா நின்றிருந்தார்.

அந்த அறையிலிருந்து தெரிந்த இன்னொரு படுக்கை அறையில் வேணியின் அண்ணனும் அவன் மனைவியும் பேசிக் கொண்டிருப்பது தெரிய, கதவை மரியாதைக்கு தட்டிவிட்டு உள்ளே போனவன்,

வேணியின் அண்ணியிடம் “எப்ப எங்கயாவது போகணும்னு தோணினாலும், எங்க வீட்டுக்கு வாங்கக்கா. வேணிக்கோ எனக்கோ ஒரு கால் பண்ணுங்க போதும், நாங்க இருக்கோம். இன்னைக்கு போலல்லாம் என்னைக்குமே யோசிக்க கூடாது” என்றவன்

திரும்ப வெளியில் வரும் போது கண்ணில்பட்ட வேணியின் அப்பாவிடம் “நம்மள்ல தப்பு செய்யாதவங்க யார் அங்கிள் இருக்கா? இதில வேணிக்கு மட்டும் தண்டனை கிடச்சே ஆகணும்னு ஏன்  யோசிக்கணும்?” என்றுவிட்டு “கல்யாணத்தில் பார்க்கலாம்” என பொத்தம் பொதுவாக சொல்லிவிட்டு இதோ சென்னை திரும்பியாகிவிட்டது.

ப்ரவி வேலை இருக்கிறதென நேரே அலுவலகம் சென்றுவிட இவன் வேணியிடம் வந்து உட்கார்ந்திருக்கிறான்.

“அம்மா அப்பாவல்லாம் பார்த்து 7 வருஷம் ஆகிட்டுல்ல, ஃபோட்டோ கூட இல்ல, அதனால போல, எனக்கு அவங்க முகம் ஞாபகம் இருக்க மாதிரிதான் இருக்கு, ஆனா கண்ண மூடி யோசிச்சா அவ்ளவா தெளிவா தெரியல” என  கடந்த நாட்களில் இவர்கள் பேசிக் கொண்ட போது ஒரு சமயம் சொல்லி இருந்தாள் வேணி.

வார்த்தையால் அவள் சொல்லவில்லை எனினும் அதுவே அவளது ஏக்கத்தை அவனுக்கு உணர்த்தியதுதான். கண்ணை மூடி எப்போது நாம் ஒரு முகத்தைப் பார்க்க முயல்வோம் என்ற ஒன்றிருக்கிறதுதானே! அப்படி ஏங்கிப் போய் இருப்பவளிடம் அவள் வீட்டில் நடந்தவைகளை எப்படிச்  சொல்ல என்றிருக்கிறது இவனுக்கு!

உன் வீடு முழுக்க முழுக்க பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது, ஒருத்தரை ஒருத்தர் அங்க நிம்மதியா இருக்க விடப் போறதே இல்லை, நீ செய்து வச்ச வேலை வேற அங்க இன்னும் எரிஞ்சுகிட்டு இருக்கு என்றதாக அவளுக்குப் புரியக் கூடும்தானே இது!

இவன் வேணியின் அப்பா வீட்டில் காத்திருந்த நேரத்தில் வரவேற்பறையில் மாட்டி இருந்த இவளது அண்ணா திருமண படம், மணமக்கள் இவளது பெற்றோரோடு நிற்பது போன்ற ஒன்றை தன் மொபைலில் பதிந்து வந்திருந்தான், அதை மட்டும் இப்போது வேணியிடம் காட்டினான்.

“ஹையோ ஞாபகம் வச்சு எடுத்துட்டு வந்தீங்களா?” என விழி விரிய உயிர் மலர கத்தாத குறையாய் அதை பார்க்கத் துவங்கி கண்ணில் நீர் மின்ன “தேங்க்ஸ் நரேன், ரொம்பவும் தேங்க்ஸ், எனக்கு என்ன சொல்லன்னே தெரியல” என கீழ் உதடை கடித்து தன்னை அடக்கியபடி அவள் பேசியதில் இவனுக்கு மூச்சு இலகுவாகிறதா கனக்கிறதா என்றே புரியாத ஒரு நிலையை எல்லாம் உண்டாக்கிவிட்டு,

பின் சற்று நேர மௌனத்துக்குப் பின் “ஏன் நரேன் யாரும் வரமாட்டோம்னு சொல்லிட்டாங்களா? அதுக்கா இவ்வளவு ஃபீல் பண்றீங்க? அது எதிர்பார்த்த விஷயம்தானே, அவங்க அங்க நல்லா இருந்தாங்கனாலே எனக்கு போதும், ஒரு வேள உங்கள, ப்ரவி அண்ணாவ எதுவும் ஒரு மாதிரி பேசிட்டாங்களா? ரொம்பவும் சாரி நரேன்” என இவன் அருகில் போய் அமர்ந்ததற்கு காரணம் கண்டு பிடித்திருந்தாள்.

அப்போதெல்லாம் இருவருமே அதை கவனித்திருக்கவில்லை.

ஆனால் அன்று இரவு அவன் தேங்க்ஸ் வேணிப்பொண்ணே! என மொட்டையாய் அனுப்பிய செய்தியைக் காணவும் வேணிக்கு சட்டென உறைத்துவிட்டது. அவனுமே பனிஷ்மென்ட முடிச்சதுக்கு தேங்க்யூ என்ற பொருளில்தான் அதை அனுப்பியும் இருந்தான். நரேன் என அழைக்கத் துவங்கி இருந்தாளே!

தன் பின் மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் இவர்களது மொத்தக் கூட்டணியும், அதான் ப்ரவி, கருண், மீரட் இவர்களது மொத்த குடும்பமென  புலிகேட் லேக் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

ப்ரவி சென்னை மாற்றலாகி வந்ததிலிருந்தே மாதம் ஒருமுறையாவது இவர்கள் அனைவரும் எங்காவது இப்படி மொத்தமாக சென்று வருவதுதான், இந்த முறை புலிக்கேட் பகுதியை தேர்ந்தெடுத்திருந்தனர்.

இந்த கூட்டு சந்திப்பில் பெரும்பாலும் நரேனும் இடம் பெறுவதுண்டு, ஆனால் வேணிக்கு இதுதான் முதல் முறை. அவரவர் காரில் செல்வதை தவிர்த்து ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்து அதிலேயே அனைவருமாக பயணம் செய்தனர்.

பேருந்திலெல்லாம் நரேன் வேணியின் அருகில் அமரவில்லை. பொதுவாக யாரும் ஒரே இருக்கையில் அமர்ந்தார்கள் என்று கூட சொல்வதற்கில்லை. இடம் பெயரவும், நின்றபடி இங்கிருந்து அங்கு பேசவும், பாடவும் ஆடவும் என களை கட்டியது பயணம்.

பேருந்திலிருந்து இறங்கி பெரும் படகுகள் இரண்டில் இவர்கள் பயணம் செய்து உள்ளே இருந்த சிறு தீவை அடையும் போதும் அவன் இவளிருந்த படகில் வரவில்லை.

அங்கு இரு குழுக்களாக பிரிந்து இவர்களே புதுபுது வரையறைகள் வகுத்து Dodge ball ஆடிய போது அவன் இவள் டீமிலேயே இல்லை, ஆனால் எல்லோருமாய் வட்டமாய் அமர்ந்து சாப்பிட்ட பொழுதுகளில், “மணல்ல உட்காந்து சாப்ட்றப்ப தட்ட மடியில வச்சுக்கணும், இல்லனா காத்ல மணல் ஈசியா தட்ல விழுந்துடும்” என இவளுக்குச் சொல்லியபடி,

நொறுக்குத் தீனி பகிர்ந்த நேரங்களில், இவளோடு சேர்ந்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, தனக்கென எதுவும் எடுத்துக்கொள்ளாமல், இவளுக்கு அடுத்து அமர்ந்திருந்து அவ்வப்போது இவள் கையிலிருந்த தட்டிலிருந்தே எடுத்து சாப்பிட்டபடி எல்லோரோடும் பேசிய வண்ணமாக,

தரண் கேட்டான் என குட்டிகளோடு சேர்ந்து இவள் மணல் வீடு கட்டிய காரியங்களில், “இப்படி ஈரமணல வச்சு கட்டிட்டு அது மேல காஞ்ச மணல தூவிவிட்டுப் பாரு, பூசுன சுவர் போல ஃபீல் கொடுக்கும்” என இவளோடு சேர்ந்து தானும் கட்டியபடி,

காலாற சற்று அதிக தூரம் நடந்து வர என இவள் சென்ற சமயங்களில், தண்ணீர் சற்றாய் காலில் படும் அளவு நீர் ஓரத்தில் இவளோடு நடந்த வண்ணம் இவள் அண்ணி அழைத்து பேசிய கதைகளை கேட்டபடி,

அடுத்த பக்கம்