TTN Final Part 1 (14)

“உங்க எல்லோரையும் பார்க்க முடியலன்றத தவிர எந்த குறையும் இல்லாம நல்லா இருக்காம்மா” இது நரேனின் பதில்.

விலுக்கென நிமிர்ந்துவிட்டாரோ வேணியின் அம்மா?

“அவளுக்கு அம்மான்னா எனக்கும் அம்மாதான்” என்றான் இவன் விளக்கம் போல்.

”எங்க மேரேஜுக்கு நீங்களாவது வரணும்மா” என அழைக்கவும் செய்தான் அவன்.

“அவ அப்பாவ மீறி வெளிய கால் வைக்க தைரியம் இந்த வீட்ல அவளுக்கு மட்டும்தான் எப்படியோ வாய்ச்சிருக்கு” என முடித்துவிட்டார் அவர்.

“ஓஹோ அப்ப நான் இல்லன்னா உன் பொண்ண தேடி ஓடிடுவ என்ன?” உள்ளே இருந்து பெரும் குரலில் கத்தினார் வேணியின் அப்பா. “என்ன கொன்னு புதச்சுடுடா, உங்கம்மா போய் மகளோட ஆசையா ஆடிட்டு வரட்டும்” மகனிடம் கத்துகிறார் போலும்.

எந்த உணர்ச்சியும் இன்றி இறுகிப் போனது போல் நின்றுவிட்டார் இங்கு வேணியின் தாய்.

“ப்பா, என்னப்பா நீங்க? எதுக்கு இப்ப உங்க பிபிய ஏத்துறீங்க?” என மகன் இப்போது உள்ளறையில் தன் அப்பாவை எதோ சொல்லத் துவங்க.

ப்ரவி சட்டென குரல் கொடுத்தான் “சார் நாங்க இங்க வந்தது வேற எதுக்காகவும் இல்ல, என்னதான் வெளிய கோபம்னு சொல்லிகிட்டு இருந்தாலும், பெத்த மனசு உள்ளுக்குள்ள என் பொண்ணு நல்லா இருக்காளான்னு ஏங்கிட்டுதான் இருக்கும்னு நம்புறேன். அதனால அவ நல்லபடியா செட்டில் ஆகிட்டான்னு சொல்லி ஒரு நிம்மதிய தர மட்டும்தான் இங்க வந்தோம். இதவச்சே நீங்க திரும்பவும் வருத்தப்படுறதுக்கு இல்ல” என்க,

“ஓ அவ்வளவு அக்கறை இருந்தா இன்னொரு தடவ கண்ட நாய் பேரையும் சொல்லிகிட்டு இங்க வராதீங்க” என வருகிறது அவரின் பதில்.

“ப்பா!!” இப்போது மகனின் குரல் கத்தலாய் வந்தது, “சார்ட்ட போய் உங்க ஆத்திரத்த காமிக்காதீங்கன்னு சொன்னேன்ல” என்றவன் அடுத்து என்ன பேசினானோ இங்கு கேட்கவில்லை.

நரேனுக்கோ அவர்கள் ப்ரவியை அவமதிப்பது போல் தோன்ற, இதற்கு மேலும் அங்கே நிற்க துளியும் விருப்பம் இல்லை, “வாங்கண்ணா கிளம்பலாம்” என்றபடி வீட்டு வாசலை நோக்கி நடந்தான்.

இப்போது வேணியின் அம்மாவோ இவனுக்கு மட்டும் கேட்கும் சிறுகுரலில் “அவள தலைல தூக்கி வச்சு வளத்தார்னு இல்ல, ஆம்பிள பிள்ளன்னாதான் உச்சத்தின்னு பேசுவார்தான், ஆனா நைட் பன்னெண்டு மணிக்குதான் ப்ரஸ (press) மூடிட்டு வந்தாலும், வரவும் மகா சாப்ட்டாளான்னு கேட்டுட்டுதான் சாப்பாட்ல கைய வைப்பார்,

அப்படி இருந்தவ போனதுல நாங்க ராத்ரியோட ராத்ரியா ஊர காலி செய்துட்டு போற போல ஆகிட்டு, அதுல அவர் தொழில் போச்சு, அடுத்து முழுக்க மகன் தயவுல வாழ்க்கை, இப்ப மகனுக்கு கல்யாணம் ஆகி மருமக கூட சம்பாத்யம்னு கைல காசு கொண்டு வரா, நம்ம சும்மா இருக்கமே, எல்லாம் போன மகளாலதானேன்னு அவருக்கு அடிச்சுகிட்டு வருது, அதான் அவ மேல உள்ள கோபத்துலதான் பேசுறாரே தவிர உங்கள ஒன்னும் சொல்லலைனு புரிஞ்சிக்கணும்” என சஞ்சலமாக இவன் முகம் பார்க்க, இங்கு நடந்த காரியங்களை வைத்து வேணியிடம் இவன் கோபபடக் கூடாதே என நினைக்கிறாரோ என கேள்வியை தருகிறது அவர் நடத்தை.

நரேனுக்கு எது புரிந்ததோ இல்லையோ தொழில் போய்விட்டது என்பது அதன் ஆழ அகலத்தோடு புரிந்தது. வேணியின் அப்பா மீது சட்டென கருணைதான் பொங்கிக் கொண்டு வந்தது.

சரியாய் இதே நேரம் “மகள்னா கீழன்னு நினச்சா அப்றம் இப்படி மருமக சம்பாத்யத்ல உட்காந்திருக்க வேண்டிதான் இருக்கும்” இப்படி ஒரு குரல் கேட்கிறது. பார்த்தால் தோள்பையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.

பேயறைந்தது போல் அவளைப் பார்த்தார் வேணியின் அம்மா.

“மகன் மட்டும்தான் எங்களுக்குன்னு கூசாம சொல்லி கல்யாணம் பேசினீங்களே!! இப்பவும் எனக்கு குழந்தை இல்லைன்னு எத்தனப் பேச்சு?!! உயிரோட இருக்க பிள்ளைய கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம செத்துப் போய்ட்டான்னு சொல்லிட்டு அலஞ்சுகிட்டு, இங்க எனக்கு பிள்ளை இல்லைனு டிவோர்ஸ் கொடுக்கணும்னு பேசிட்டு இருக்கீங்க?” ஆத்திரம், குமுறல், ஆதங்கம் கூடவே அழுகை என வந்தவள் வெடிக்க,

“இந்த வீட்டுக்கு எங்க இருந்து குழந்தை வரும்? முதல்ல ஏன் வரணும்? நாளைக்கு அதையும் துரத்தி விடவா? உங்க பாவத்துக்குதான் எனக்கும் சேர்த்து பிள்ள இல்லாம போச்சு” என அவள் இன்னுமே அழ,

இதற்குள் சத்தம் கேட்டு இந்த அறைக்கு ஓடி வந்திருந்த வேணியின் அண்ணன்,

“ஏய் மஹி, என்ன நீ? யார்ட்ட பேசுறன்னு தெரியுதா? முதல்ல உள்ள வா?” என அவளைப் பற்றி இழுக்காத குறையாக உள்ளே கூட்டிப் போக,

“காலைல என்னல்லாம் சொல்லிட்டாங்க தெரியுமா உங்க அம்மாவும் அப்பாவும்? எனக்கு எங்கயாவது போய்டலாம்ன்னு தோணிட்டு, ஆனா எங்க போக? பேசாம செத்துப் போகலாம்னு தான் இத வாங்கிட்டு இந்நேரமா கிளம்பி வீட்டுக்கு வந்தேன்” என ஒரு விஷ மருந்தின் பெயரை அவள் சொல்லிக் கொண்டே போவது இங்கு வரை கேட்கிறது.

“அறிவுகெட்டவளே, நான் என்னைகாவது இதுக்கு உன்னை எதாவது சொல்லியிருக்கனா?” அவன் தன் மனைவியை கடிவதும்,

“நீங்க மட்டும்தான் இந்த வீட்ல இருக்கீங்களா? எப்ப பார்த்தாலும் ரெண்டு பேர் பாம்பும், தேளும் மாதிரி என்னை  கொத்தி பிடுங்குறாங்க, இதுல வீடு ஆஃபீஸ்னு எத்தன இடத்தில் நான் இழுபட?” அதற்கு மேல் அவள் பேசியது தெளிவாய் எதுவும் கேட்கவில்லை. அழுகைதான் இங்கு வரை எட்டியது.

நரேனுக்கு வீட்டு நிலவரம் ஏதோ ஒருவகையில் முழுவதுமாகவே புரிகிறது.

ஓரிரு நிமிடங்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றவன்,

தனது விசிடிங் கார்டு இரண்டை எடுத்து அதில் வேணியின் எண்ணையும் எழுதியவன் “இதுல என் நம்பர், வேணி நம்பர் ரெண்டும் இருக்குதும்மா, எப்ப தோனினாலும் பேசுங்க” என ஒன்றை வேணியின் அம்மாவிடம் நீட்டியவன்,

அடுத்த பக்கம்