TTN Final Part 1 (13)

சட்டென வேணி முன் ஒரு முட்டு மடக்கி அவன் முழந்தாளிட,

“அச்சோ எந்திரிங்க, என்ன பண்றீங்க நீங்க?” என வேணி குதிக்கவே செய்துவிட்டாள்.

“உன்ன லவ் பண்ணலன்னு சொன்னேன்ல, இனிமே நான் சாகுற வரைக்கும் உன்ன லவ் பண்ணலாம்னு இருக்கேன் வேணி, சரின்னு சொல்வியா?” விளையாட்டற்ற தொனியில் கேட்டபடி அவன் இப்போது இவள் முகம் பார்க்க,

அவன் சொன்னது கேட்டிருக்கும் என்று கூட சொல்வதற்கில்லை, ஆனாலும் மது சத்தமாய் விசிலடித்தது.

வேணிக்கோ இத்தனை மழையிலும் முகம் சுருசுருவென சூடாவதை உணர முடிகின்றது.

இதற்கு மேலும் சீன இழுத்தா இன்னும்தான் மானம் போகும்?!! என்ற ஒரு அறிவில் அவன் நீட்டிய பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள். பாரம்பரிய சிவப்பு ரோஜாக்கள் அல்ல இவளுக்குப் பிடித்த இளம் பிங்க் நிற ரோஜாக்கள் எக்கசக்கமாய்!!

இவளது விரலில் தான் வாங்கி வந்திருந்த மோதிரத்தை அணிவித்தான் அவன்.

ரவு இவளது விடுதி அறைக்கு வந்துவிட்டாள் வேணி. சற்று முன் வரையே இன்றைய நாளின் தீவிர இனிமையை தாங்காதவாறு அமிழ்ந்து போய் இருந்தவள், இப்போது அதன் சர்க்கரை படிவுகள் பிறப்பித்த சிறகுகளால் எடையற்று பறக்கும் நிலையில் மட்டும் இருக்க,

“ஹாய்” ஒன்று வந்தது அவனது எண்ணிலிருந்து.

“எஸ் பாஸ்” என இவள் பதில் அனுப்ப

“என்னது இன்னும் பாஸா? ஒழுங்கா நரேன்னு கூப்டு”

“ஹஹா பாஸ்னு கூப்டுறது பனிஷ்மென்ட்ன்னு புரிய வச்சுடுவோம்னு சொன்னோம் பாஸ்” இவளது பதில்.

“அடப்பாவமே எவ்வளவு நாளைக்கு இந்த பனிஷ்மென்ட்?”

“அதெல்லாம் யாருக்கு தெரியும்? தோணுற வரைக்கும் இப்படித்தான்” எனப் போய் கொண்டிருந்தது இவர்களது முதல் சேட்.

வேணிக்கு அவன் பெயரைச் சொல்லாமல் விளையாட வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் உண்மையில் அவனை எப்படி அழைக்க என்று புரியாத ஒரு தடுமாற்றம். முன்பு நரேனை நீ போ, நீங்க போங்க என வாய்க்கும் மனதுக்கும் தோன்றியபடி அவள் பேசியது உண்டுதான். ஆனால் அவனோடு திருமணம் என ஒரு முடிவுக்கு வந்த பின்,  நட்பு என்ற ஒரு நிலை கூட எதுவும் இல்லாத, அதுவும் 7 வருடங்கள் பார்க்க கூட செய்யாத ஒருவனிடம் சட்டென நீதான் எனக்கு முதன்மையானவன், கணவனாகிறவன் என்ற நிலையை எப்படி கொடுத்துப் பேச, எப்படி அன்னியோன்யப்பட எனத் தெரியவில்லை அவளுக்கு.

அவளுக்கு நெருக்கமான அனைத்துப் பெண்களுமே தங்களது கணவனை பெயர் சொல்லிதான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அழைக்கும்போது அது மரியாதையின்மை என்ற உணர்வைத் தராது. அவர்கள் அழைக்கும் விதத்திலேயே ஒரு தடையற்ற நட்பும், அதையும் தாண்டிய மதிக்கப்பட தக்க காதல் ஒன்றும் அதில் இருப்பதாகப் படும் இவளுக்கு.

இவள் இப்போது நரேனை பெயர் சொல்லி அழைப்பதென்பது அப்படி ஒன்றாகத்தானே அர்த்தப்படும்? ஆனால் அதெப்படி இன்றே முடியும் இவளுக்கு?!

ரண்டு வாரங்கள் சென்றிருந்தன. இன்றும் வேணி அலுவலகம் முடிந்து பவியின் வீட்டிற்குத் தான் வந்திருக்கிறாள். வீட்டில் பவியும் குழந்தைகளும் மட்டும்தான் இருக்கிறார்கள். இவள் தன்னாலான வேலைகளை செய்துமுடித்துவிட்டு வரவேற்பறை சோஃபாவில் வந்து அமர்ந்த நேரம், கதவை தட்டும் சத்தம்.

வருவது நரேன் என இவளுக்கும் தெரியும். இவளுக்கும் முன்னாக ஓடிப் போய் கதவைத் திறந்த தரணை, கையில் தூக்கியபடி உள்ளே வந்த நரேன் வந்து இவளுக்கு அடுத்து அமர்ந்தான்.

இத்தனை நாளில் ஏறத்தாழ தினமுமே அவன் இவளை சந்திப்பதுதான். மாலை இவளது அலுவலக நேரம் முடியவும் இவளை அலுவலக வாயிலில் வந்து தன் காரில் பிக்கப் செய்வான், அந்நேரம் அவனுக்கடுத்த இருக்கையில்தான் அமர்வது வழக்கம் என்றாலும், நேராக இங்கு பவியின் வீட்டுக்கு அழைத்து வருபவன் இவளுக்கு எதிர் இருக்கையில் இருந்துதான் கிளம்பும் வரையுமே பேசிக் கொண்டிருப்பான்.

ஆனால் இன்று அவன் அமர்ந்த வகையிலேயே இவளது வீட்டில் என்ன நடந்திருக்கும் என வேணிக்கு புரிந்தது போலிருந்தது.

ஆம் கோயம்புத்தூரில் வந்து செட்டிலாகிவிட்ட இவளது அண்ணா வீட்டுக்கு, இன்று இவளது பெற்றோரை சந்திக்கச் சென்றிருந்தனர் நரேனும் ப்ரவியும். திருமணம் என வரும் போது அவர்களை சந்தித்து பேச வேண்டும் என்பதில் ப்ரவியும் நரேனும் உறுதியாய் இருந்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்திருந்தது.

இரண்டு வாரமாய் ‘நாங்க அன்னைக்கு பிசி, இன்னைக்கு எங்களுக்கு வேலை’ என இவர்களை சந்திப்பதை தவிர்க்க இழுத்தடித்த இவளது அப்பா, இவர்கள் வீட்டுக்கு வராமல் இது முடியப் போவதில்லை எனப் புரிந்து இன்று சந்திக்க சம்மதித்திருந்தார்.

இவர்கள் போன பின்புதான் இது திருமண விஷயம் எனத் தெரிய, “எப்பவோ செத்துப் போனவளப் பத்தி இப்ப வந்து பேசிகிட்டு” என்றபடி  வீட்டின் உள் அறைக்குள் போய்விட்டார்.

நரேனுக்கும் ப்ரவியும் யாருமற்ற வரவேற்றையில் உட்கார்ந்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாய் தண்ணீர் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதற்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என சிந்தித்தபடி இவர்கள் கிளம்பத் தயாராக, அப்போது வீடு வந்து சேர்ந்தான் வேணியின் அண்ணன்.

“எங்களப் பொறுத்த வரைக்கும் அவளே இல்ல, அப்றம் அவ கல்யாணத்தைப் பத்தி பேச நாங்க யார்? என்பதையாவது நின்று பேசினான் அவன்.

“ம்மா வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒரு காஃபி கொடுக்க மாட்டியா?” என கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனான். “ப்பா அவர் எவ்வளவு பெரிய போலீஸ் ஆஃபீசர்னு தெரியாம அவர்ட்ட போய் ஏன்பா வம்பு வச்சுகிறீங்க?” என தன் தந்தையிடம் அவன் முறைப்பதும் இங்கே கேட்டது.

இதற்குள் இவர்களுக்கு காஃபி எடுத்துக் கொண்டு வந்தார் வேணியின் அம்மா. அவரைப் பார்க்கும் வரைக்குமே நரேனின் மனம் என்னதான் முயன்றாலும் வேணியின் வீட்டினரின் மீது சற்று எரிச்சலில்தான் இருந்தது.

ஆனால் தனது வயதுக்கு சம்பந்தமே இல்லாத அளவுக்கு வேணியின் அம்மா தளர்ந்திருந்ததையும், அவர் முகத்தில் நிரந்தரமாய் குடியேறி இருக்கும் வெறுமையையும் காணவும் இவனுக்கு ஒரு மாதிரி மனம் இளகிப் போனது.

வேணியின் நிகழ்வினால் உறவுகள் இவர்களை எத்தனை தூற்றியதோ? அல்லது உறவுகள் என்ன சொல்லிவிடுமோ என்ற பயத்திலேயே இவர்கள் எத்தனை வாதிக்கப்பட்டார்களோ?

ஆனால் வேணி தன்னை வதைத்துக் கொண்டாள் எனில் உறவுகள் ஏன் இவர்களை வதைக்கிறது? நமக்கு ஒரு துன்பம் என்றால் ஆறுதல் சொல்லத்தானே உறவுகள், ஆனால் ஏன் வெந்த புண்ணில் வேல் இட்டுப் பார்க்க முனைகிறது?

இப்படி எங்கோ ஓடிய அவன் நினைவுகள் ‘எல்லாரவிட எப்படிப் பார்த்தாலும் இனி நாமதான் நெருங்கின உறவு, ஆக முடிஞ்ச வரைக்கும் நிம்மதியத் தரப் பார்க்கணும்’ என ஒரு முடிவுக்கு வந்து சேர,

வேணியின் அம்மாவோ, பொதுவாக பார்த்துக் கொண்டே வந்தவர்,  நரேனை அவ்வப்போது  பார்த்த விதத்தில் “இதான்மா மாப்ள, நரேன்னு பேர்” என ப்ரவி இவனை அறிமுகம் செய்து வைத்தான்.

பதிலொன்றும் வரவில்லை அவரிடமிருந்து. காஃபி பலகாரத்தை இரு ஆண்களுக்கும் முன் இருந்த மேஜையில் மௌனமாய் எடுத்து வைத்தார்.  பின் மெல்ல யோசித்து “அவ எப்படி இருக்கா?” என்றார் இவர்கள் யாரையும் நிமிர்ந்து பாராமலே!

இத்தனை வருடத்தில் வேணியைப் பற்றி அவள் வீட்டினரிடமிருந்து வரும் முதல் கேள்வி இதுதான்.

அடுத்த பக்கம்