TTN Final Part 1 (12)

கீழ விழுறதோட வலியும் அடுத்து எந்திரிச்சி நிக்றதோட பலமும் உங்க ரெண்டு பேருக்குமே தெரியும், கடவுளே மன்னிச்சதை நாம யார் மன்னிக்காம இருக்கன்ற நம்பிக்கையும், என்னைப் போலத்தான் இவங்களும்னு யாரையும் மதிச்சு, அன்பு செலுத்துற அளவு மெச்சுரிட்டியும் உங்க ரெண்டு பேர்ட்டயும் இருக்கு. அதனால உனக்கும் நரேனுக்குமா கல்யாணத்துக்கு பார்த்தா என்னன்னு பட்டுது எங்களுக்கு.

அதான் உன்ட்ட பேச்சை ஆரம்பிச்சாச்சு

அவன் உன்ன போல ஒரு பொண்ணு வேணும்ன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கவன், அவன்ட்ட சொன்னா சட்டுன்னு சரின்னு சொல்லிடுவான், அப்றம் உனக்கு பிடிக்கலைனா அவனை தேவையில்லாம  கஷ்டபடுத்தின போல இருக்கும்.

பை தவே இந்த அளவு உன் மேல ஒபினியன் வச்சிருக்கவன் உன்னை இன்சல்ட் பண்றது போலெல்லாம் எதையும் இன்டென்ஷனலா செய்திருக்க மாட்டான்னு புரியுதுதான?” என அன்றைய நாள் நரேனின் செயலையுமே வேறு கண்ணோட்டத்தில் பார்க்கச் சொன்னாள் பவி.

பவி இதையெல்லாம் சொல்லி முடிக்கும் போது வேணியின் மனமோ ‘ஆக இந்த திருமணம் முழுக்கவும் இவள் முடிவுக்காக மட்டுமே காத்திருக்கிறதா? இவளுக்கு நரேன் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற ஒரு திகிலான சற்று தித்திப்புமான, திக் திக் பிரமிப்புக்கு போய்விட்டது. டென்ஷன்!

தூங்கவென இவள் அறைக்கு திரும்பி வந்த போது மது இன்னும் விழித்திருந்தவள் “என்ன முடிவு செய்துருக்கீங்க மைடியர்? என கேட்ட விதத்திலேயே அவளுக்குமே இந்த ப்ரபோஸல் விஷயம் தெரிந்திருக்கிறது என இவளுக்குப் புரிய,

“உன்ட்டயோ நரேன் அண்ணாட்டயோ ஒருத்தர பத்தி இன்னொருத்தர்ட்ட பேசக் கூடாது, அது அவங்களுக்கு நல்லதில்லன்னு என்ட்ட கூட சொல்லி வச்சிருந்தாங்க பவிக்கா, இதில் இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் என் பெர்த்டேல மீட் பண்ணப் போறீங்கன்னு தெரியவுமே எனக்கு புரிஞ்சிட்டு, இது இப்படியாதான் இருக்கும்னு” என தான் கண்டு கொண்ட  முறையைச் சொன்ன மது,

“எனக்கெல்லாம் இந்த மேரேஜ் பத்தி பயங்கர எக்சைட்மென்ட், ஆசையெல்லாம் இருக்குதுதான், ஆனா அவசரபடாம நிதானமா யோசிச்சு முடிவு செய்னுதான் சொல்வேன் வேணி” எனும் போது,

“ப்ச் இவ்ளவு யோசிச்சதுக்கே எதுக்கு உன் அண்ணாவ வேண்டாம்னு சொல்லணும்ன்றதுக்கு எனக்கு ஒரு ரீசனும் கிடைக்கல” என வந்துவிட்டது இவளது பதில்.

அடுத்து சிந்தித்ததின் பலனாய் வந்த ஒரே விஷயம் பவியிடம் தன் சம்மதத்தை சொல்லும் முன்னும் நரேனிடம் இவளே பேசிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால் நரேனது விழாவில் இவள் நரேனிடம் பேசும் பாங்கை காணவும் பவிக்கு இவளது சம்மதம் புரிந்திடத்தான் செய்திருக்கும். அதனால் அடுத்து நரேனிடம் பவிக்கா பேசியிருப்பாங்க, அதனால்தான் அண்ணா அண்ணி சொன்னா கேட்பதானே என நரேன் இவளிடம் ஆரம்பிக்கவும் திருமண பேச்சை எடுக்கிறான் என இவள் எண்ணிவிட்டாள்.

இதெல்லாம் இப்போது இவள் மனதில் ஓட அதே நேரம் “ஹேய் என்ன?” என இவளது முதுகைச் சுற்றியபடி புஜத்தைப் பற்றி அரவணைப்பாய் அமர்கிறது ஒரு கை. பவிதான்.

“என்னாச்சு? மூஞ்சே சரியில்ல?” பவி கேட்டுக் கொண்டிருக்கும்போதே பவியை அணைத்து அவள் தோளில் முகம் புதைத்து விட்டாள் இவள். அழுகை!

அதில் பதறிப் போன கிருபாவும் பவியும் என்னவென புரியாமலே ஆறுதல் சொல்லி, தேறுதலாக ஒரு டீயையும் கையில் கொடுத்து, என்ன ஏதென விசாரித்தால், இவள் நடந்ததைச் சொன்னாள்.

கேட்டிருந்த பவியோ “வீட்டுக்காரின்னா ஆத்துக்காரன அடிக்கதான் செய்வான்னு சொல்லியே கல்யாணத்துக்கு கேட்டிருகியே வேணிமாதா” என இப்போது வாய்விட்டு சிரிக்க,

இருந்த அழுத்தமெல்லாம் முறிந்து போய் சட்டென இவளுக்குமே சிரிப்பும், கூடவே வெட்கமும் வருகிறது.

“இப்படில்லாம் ப்ரபோஸ் செய்ய வழி இருக்குன்னு தெரியாம ஏமாந்து போய் சான்ஸ மிஸ் பண்ணிருக்கனே பவி” என கிருபா வேறு கவலைப்பட்டுக் கொள்ள,

திரும்பவுமாய் ஒரு சிரிப்புத் தருணம்.

அதே நேரம் “ஹலோ ஹலோ என்ன அங்க லேடீஸ் மாநாடு தனியா நடக்குது? வெளிய வாங்க” என கருணின் சத்தம் கேட்க,

வேணியையும் இழுக்காத குறையாக கூட்டிக் கொண்டு தாழ்வாரத்துக்குப் போனார்கள் இவர்கள்.

அங்கோ தாழ்வாரத்திலிருந்து சற்று தொலைவில் கொட்டும் மழையில் தன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் நரேன். அவன் ஒரு கையில் பூங்கொத்து.

இங்கு எல்லோரும் தாழ்வாரத்திலேயே இருப்பதைப் பார்த்தவன் அப்படி ஒரு காரியத்தைச் செய்தான்.

“ப்ரவிண்ணா எனக்கு வேணிய லவ் பண்ண பெர்மிஷன் தருவீங்களா?” இப்படி ஒரு கேள்வியை எல்லோருக்கும் தெளிவாக கேட்கும் அளவு சத்தத்தில் துள்ளலாக ப்ரவியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே, அவர்களோடு நின்றிருந்த இவளை நோக்கி வந்தான்.

“அடேய்” என்றான் ப்ரவி!

அதில் பொங்கிப் பெருகும் மகிழ்ச்சியும், பூரண ரசிப்பும்தான் பிரதானமாயிருந்தது!

“அதெல்லாம் டன் டன்னா உண்டு” இது கருண்.

இதில் ‘ஐயோ மானத்த வாங்குறானே’ என தெறித்துப் போய் வீட்டுக்குள் ஓடிவிட யத்தனித்த வேணியை

“ஆஹான்” என்றபடி அசைய கூட முடியாமல் அவளுக்கடுத்து நின்றிருந்த கிருபா பிடிக்க, இதற்குள் இவளிடம் வந்திருந்த நரேன், இவள் கையைப் பற்றி தாழ்வாரத்திலிருந்து இழுத்து தன்னோடு மழைக்குள் இறக்கிவிட்டான்.

சட்டென அம் மைதானம் முழுவதுமே நியான் வெளிச்சம் பளீரென ஒளிர்கிறது. முழு வளாகத்துக்குமே நியான் விளக்குகள் உண்டு. அதை இப்போது ஒளிர விட்டது மீரட் வேலை. எல்லோருமே இந்த நரேன் இதைத்தான் செய்யப் போகிறான் என எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது இவளுக்குப் புரிகிறது.

வெட்கம் இவளை அள்ளித் தின்றாலும், சட்டென வந்த வெளிச்சத்தில் அவளவனை விழி நிமிர்த்தி முகம் பார்த்தாள் வேணி. ஆம் அவளவன் தானே! அவனைத் தானே வாழ்க்கை அவளுக்கே அவளுக்காய் தருகிறது?! தலையெல்லாம் நனைந்து, முடிக் கற்றைகளா பிரிந்து முன் நெற்றியில் கிடக்க, முகத்தில் நீர் வழிய, தொப்புத் தொப்பலாக நின்றிருந்தவன் அத்தனை வசீகரிக்கிறான் இவளது உயிர்வரைக்குமாயும்.

இவள் விழிகள் அவனதை சந்திக்கவும் “சட்டுன்னு பிடிச்சிருக்குன்னுட்ட? எனக்கு என்ன ஆகிப் போச்சி தெரியுமா?” என்றான் இவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக.

அதற்குள் மதுவோ “ஏய் அண்ணா கால்ல விழுங்க, இது கால்ல விழுற டைம்” என சத்தமாய் நினைப்பூட்ட,

“என்ன ஒரு அண்ணா பாசம்? கூப்ட்டு கால்ல விழச் சொல்றத பார்” என மதுவுக்கு விடை சொன்னாலும்,

அடுத்த பக்கம்