துளி தீ நீயாவாய் Final Part 1

ழு வருடங்கள் என்பது யாருக்குமே சின்னதான ஒரு காலம் கிடையாது. எத்தனை எத்தனையோ நிகழ்வுகள், மாற்றங்கள், வளர்ச்சிகள், அறிமுகங்கள், பழையன கழிந்து புதியனவாய் நினைவுகள் என பெரும் மாற்றங்களை உண்டு செய்ய போதுமான காலக்கட்டம் அது.

வேணி இப்போது யூஜி முடித்துவிட்டு ஒரு வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் என்ற அளவில் இருக்கிறாள். சென்னையில்தான் பணி. படிக்கவென சென்னை கல்லூரியில் இடம் கிடைத்த போதே அவள் விடுதிக்கு வந்துவிட்டாள். அதன் பின் சில வருடங்களுக்கு பிறகு ப்ரவியின் குடும்பமும் பதவி உயர்வோடு சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்தாலும், இவள் வேலை செய்யும் பெண்களுக்கான விடுதி ஒன்றில்தான் இருக்கிறாள்.

இவள்  கல்லூரிக்குச் செல்லும் முன்பாகவே வேணியின் பெற்றோரைத் தேடி தொடர்பு கொண்டுவிட்டான்தான் ப்ரவி. ஆனால் துபையில் மகன் வீட்டில் இருந்த அவளது தந்தையோ “எங்களப் பொறுத்த வரைக்கும் அவ செத்துப் போயாச்சு” என்பதோடு விஷயத்தை முடித்துவிட்டார்.

அவளது அண்ணனோ “எங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார், ஆனா அவள தெருவுல விட்டு போலீஸ் அது இதுன்னு எனக்கு பிரச்சனையாகிறது இங்க என் வேலைக்கு கூட உலை வைக்கும், அதனால அவள எதாவது காலேஜ்ல சேர்த்து விடுங்க, பணம் நான் அனுப்பிடுறேன்” என இரக்கம் பாராட்டினான்.

அந்த வகையில் அவள் படிப்பு முடிந்து வேலையில் அமரும் வரை பணம் அனுப்பவும் செய்தான்தான். ஆனால் பணம் கூட ப்ரவிக்குத்தான் அனுப்புவான். ஒரு வார்த்தை இன்று வரை ப்ரவியிடம் கூட அவள் எப்படி இருக்கிறாள் எனக் கேட்டுக் கொண்டது கிடையாது. இவளோடு எந்த வித தகவல் தொடர்பும் கிடையாது.

ஆக வேணியைப் பொறுத்தவரைக்கும் குடும்பம் என்றால் அது ப்ரவி பவியினுடையதாகவே ஆகிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குத்தான் வந்து போவாள்.

“வேணித்த உங்களுக்கு ஒரு பஸில்? எங்க என் நேம்ல என்னெல்லாம் இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்?” என பவியின் மூத்த மகன் தரண் கேட்டால்,

“உன் தயாப்பா பேர்ல உள்ள ‘த, உங்க அப்பா பேர்ல உள்ள ‘தன்’ அம்மா பேர்ல உள்ள ‘த்ர’, உன் கருண்ப்பா பேரோட ‘ண்’  எல்லாம் சேர்த்து உங்க அம்மா வச்ச நேம்தான் தரண். சுத்தமான தங்கம்னு அர்த்தம்” எனச் சொல்லுமளவிற்கு அந்த குடும்பத்தோடு ஐக்கியம் உண்டு இவளுக்கு.

இதில் பவிக்கு இப்போது இரண்டாவது குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆகியிருக்கின்றன. தயாப்பாவும் ப்ரவி பவி வீட்டோடு வந்துவிட்டாலும், ஆறு வயது தரணை அவர் ஓரளவு சமாளித்துக் கொள்வார் என்றாலும், பிரசவம் பார்க்கவோ, உதவி செய்யவோ பவிக்கு பெண் துணை யாருமில்லையே!

ஆக இப்போதெல்லாம் தினமுமே வேணி அலுவலகம் முடியவும் பவி வீட்டிற்கு வந்து, என்னதான் வேலைக்கு ஆள் இருந்தாலும் உரியவர் மட்டுமே செய்ய முடிந்த வீட்டு வேலை என சில இருக்கிறதுதானே, அதெல்லாம் இவள் செய்து கொடுத்துவிட்டு, பவிக்கும் குழந்தைகளுக்கும் தன்னாலானதையெல்லாம் உதவிவிட்டு விடுதி திரும்புவது வழக்கம்.

அப்படித்தான் இன்றும் வந்திருக்கிறாள். ஆனால் “நீங்க ரெண்டு பேரும் படிச்சுட்டு இருங்க, ரிஷா குட்டிக்கு வாக்சின் ட்யூ இன்னைக்கு, அப்படியே ஒரு ஃபங்ஷனுக்கு ஷாப்பிங்கும் செய்ய வேண்டி இருக்கு, போய்ட்டு வந்துடுறோம், உங்க ப்ரவி அண்ணா ஹாஸ்பிட்டல்ல வந்து எங்க கூட ஜாய்ன் செய்றதா சொல்லியிருக்காங்க. அவங்களோட போறதால வர கொஞ்சம் முன்ன பின்ன ஆகும், நைட் இன்னைக்கு கருண் ஃபேமிலியுமே வந்துடுவாங்க, சாப்பாடு வெளிய ஆர்டர் செய்றதா ப்ளான். அதனால மணியக்கா வர மாட்டாங்க” என இவளை மதுவோடுவிட்டுவிட்டு, பவித்ரா தயாப்பாவோடும் பிள்ளைகளோடும் கிளம்பிப் போயிருந்தாள்.

ஆம் மது இப்போது கான்பூர் ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கிறாள். சாருமதியோடு அவளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால் எப்போதுமே விடுதி வாசம்தான் மதுவுக்கும். வருடம் ஒருமுறை இப்படி சில நாட்கள் இங்கு வந்து வேணியோடு இருந்துவிட்டுப் போவாள். அச்சந்திப்பிற்கான இவர்களது தங்குமிடம் பவியின் வீடுதான்.

இன்று மதுவின் பிறந்த நாள். இப்படி சர்ப்ரைஸ் விசிட் வந்திருக்கிறாள். மதுவுக்கு இது ஸ்டடி ஹாலிடேஸ். வேணி வார இறுதி கல்லூரியில் எம் பி ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். அதில் அவளுக்கு பரீட்சை பக்கத்திலிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கணக்குப் பகுதி இருவருக்கும் இருக்கிறது இந்த செமஸ்டருக்கு. அதை சேர்ந்து படிக்கலாம் எனதான் இப்போது உட்கார்ந்து கணக்கை தூக்கிப் போட்டு பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள். அது இவர்களை சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நேரம் ஒலிக்கிறது கதவை யாரோ மெல்லியமாய் தட்டும் சத்தம். சிறு குழந்தையுள்ள வீடல்லவா, அது தெரிந்த வீட்டு மனிதர்கள் அழைப்பு மணியை தவிர்த்து இப்படி கையால் தட்டுவது இங்கு வழக்கம் என்பதால்,

கருண் குடும்பம் வந்துவிட்டது போலும் என, மது கேட்டுக் கொண்டதற்காகா அவளைப் போலவே பச்சையும் பிங்க் வண்ணத்திலுமாக அணிந்திருந்த பாவாடை தாவணியை கையில் பிடித்தபடி துள்ளலாக ஓடிப் போய் கதவை திறந்தது வேணி. மரக்கதவும் அடுத்து க்ரில் கதவுமாய் உள்ள அமைப்பில் இவள் மரக்கதவை திறக்கும் போதே கண்ணில் படுகிறது எதிரில் இரு கம்பங்கள் நட்டப்பட்டு, அதில் கொடி போல் கட்டப்பட்டு, எரியவும் ஒளிரவும் துவங்கி இருக்கும் Happy Birth Day என்ற மத்தாப்பு.

ஆனால் ஆள் என்று இவள் பார்வையில் படும் வகையில் யாரும் இல்லை.

ஒரு நொடி நின்று போனாள் இவள். இந்த ஊரில் மதுவுக்கு நட்பு எனும் படியாய் கூட இவளைத் தவிர யாருமில்லை என்பதால், மதுவை ஈவ் டீசிங் போல தொந்தரவு செய்ய யாரும் இதைச் செய்கிறார்களோ என ஓடுகிறது முதல் சிந்தனை. ஆனாலும் ப்ரவி அண்ணா வீட்ல வந்தா? என்ன தைரியம்? என மனம் எகிறும் போதே,

உள் நெஞ்சில் ஓரத்தில் ஓடிக் கடக்கிறது மின்னலாய் ஒரு வினா. நரேனா இருக்குமோ?!

அடுத்த பக்கம்