துளி தீ நீயாவாய் Final 2 (9)

அதற்கு முன்பாக அன்று இரவு ப்ரவி, மீரட் எல்லாம் குடும்பமாக இவர்கள் வீட்டுக்கு வர, பேசிக் கொண்டிருக்கவென, தூங்கும் முன்பாகவே நரேன் சமாதானத்துக்கு வந்துவிட்டான். அவனைப் பொறுத்தவரை விஷயம் தெரிந்த உடன் ஏற்பட்டது அதிர்ச்சி. ஆனால் என்றாவது இப்படி ஒரு நிலை வரும் என முன்னே யோசித்திருந்தான் தான்.  ஆக வெகு சீக்கிரமே எவ்வளவு பார்த்தாச்சு இதைப் பார்க்க மாட்டமா என்ற நிலைக்கு வந்துவிட்டான்.

இதில் மறுநாள் காலை வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தவன் மொபைலில் வங்கியிலிருந்து பண வருகைக்கான குறுஞ்செய்தி. லாவி மில்ஸ் பணம் வந்துவிட்டது போலும் எனப் புரிய, வெகு அவசரமாய்  தன் லேப்டாப்பை எடுத்து தன் வங்கிக் கணக்கை பரிசோதிக்க அது பணம் வந்துவிட்ட தகவலை உறுதி செய்தது.

உடனடிப் பிரச்சனையில் ஒரு பாதி தீர்ந்துவிட்டதே! அதில் வந்து பரவிய நிம்மதி முழு உயிரை நனைக்கும் முன்னும் வருகிறது அந்த G&S நிர்வாக இயக்குனரின் அழைப்பு. அவர்தான் பண விஷயமெல்லாம் இவனிடம் பேசும் நபர்.

எப்படியும் ஒரு தொகையை கொடுக்கும் நிலை இருப்பதால் வெகு திடமாகவே இவன் அழைப்பை ஏற்க, அவரோ “வாழ்த்துக்கள் நரேன் சார், ஓவர் நைட்ல ரொம்ப பெரிய செலிப்ரெட்டி ஆகிட்டீங்க, இப்ப மீடியா முழுக்க நீங்கதான் ட்ரென்டிங்” என துள்ளலாய் வாழ்த்தினார்.

என்னவென இவன் இதைப் புரிய வேண்டும்?! ஜெயிலுக்கு போனதெற்கெல்லாமா வாழ்த்துவாங்க?!

“சார் அது” என இவன் ஆரம்பிக்கும் முன்னும்,

“நரேன் சார் பிசினஸ் மட்டுமில்ல, பார்க்க ஆளும் ஹீரோ போல இருக்கார்லன்னு முன்னமே பேசிப்போம், இப்பதான் தெரியுது உங்க ரியல் லைஃப் கதையுமே பக்கா ஹீரோயிசமா இருக்குதுன்னு, உங்களுக்கு தெரியுமில்ல சார் எங்க கம்பெனியோட இன்னொரு பிசினஸ் மூவி மேக்கிங்னு, உங்க கதையவே பயோ பிக் போல எடுக்க ஆசைப்படுறாங்க” என அவர் எங்கோ போக,

“ஹா..” என இவன் மீண்டுமாய் ஆரம்பிக்க,

“we know sir, it’s too early, நீங்க இந்த மொமன்ட்ட எஞ்சாய் பண்ணுங்க, நாம அப்றமா இதைப் பத்தி பேசுவோம், ஸ்டில் மூவிக்காக உங்கள முதல்ல அப்ரோச் செய்தது நாங்களா இருக்கணும்னு இப்பவே சொல்லி வச்சேன், ஹேவ் அ க்ரேட் டே சார்” என அவர் பேச்சை முடிக்கப் போனார்,

“சார் இன்னைக்கு பேமென்ட் ட்யூ” என இவன் ஆரம்பிக்க,

“அதெல்லாம் பார்த்துக்கலாம் சார்” என அவர் விடை பெற்றே போய்விட்டார்.

மீடியால இவன் ட்ரென்டிங்கா?!!! ஹீரோயிசமா?!! மூவியா?!!!

டேய் உங்களுக்கெல்லாம் என்னங்கடா ஆச்சு?!!

இவன் பரபரப்பாய் போய் தனது கம்பெனியின் ஃபேஸ் புக் பக்கத்தைப் பார்வையிட, இவனுக்கும் வேணிக்குமே எக்கசக்க வாழ்த்துக்கள். ஏன் ப்ரவிக்கும் கூடத்தான்.

ஜெயிலுக்குப் போனதுக்கு இவ்வளவு அலப்பறையா? நம்ம நாடு அப்படியா ஆகிப் போச்சு?

என்ன விஷயம் என தகவல்களைத் தேடினான்.

வேணிக்கு இன்று அலுவலகம் செல்ல மனமே இல்லை. ஆனால் நேற்றுதான் முதல்நாள் அலுவலகம் சென்றுவிட்டு இன்று எப்படி விடுமுறை எடுக்க? மனமே இன்றி கிளம்பிக் கொண்டிருந்தவள், இவனை சற்று நேரமாகக் காணோமே என அறைக்குள் வந்து எட்டிப் பார்க்க, அவன் ஜீன் மட்டும் அணிந்திருந்தவன், சட்டை கூட அணியத் தோன்றாமல், படுக்கையின் குறுக்காக படுத்து தன் லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தததைப் பார்க்கவும்,

இதெல்லாம் அவன் வழக்கமா ரிலாக்ஸா இருக்கப்ப செய்ற வகையாச்சே, சட்டென இவளுக்குமே மனம் இலகுவாக, வழக்கப்படி மெல்ல அவன் மீதே படுத்து அவன் அப்படி என்ன லேப்டாப்பில் பார்க்கிறான் என பார்க்க முற்பட்டாள்.

வேணி அவள் அம்மாவிடம் பேசிய விஷயம்தான்!! எப்படி வெளியே சென்றது எனத் தெரியவில்லை, யாரும் அவள் அம்மாவிடம் பேசிய அழைப்பை ஒட்டுக் கேட்டார்களா, அல்லது அவள் வீட்டினர் இவள் சொன்னதை யாரிடமாவது சொல்லப் போக, அது மீடியாவுக்குப் போய்விட்டதா?

ஏழு வருடத்திற்கு முன்பே வேணியும் நரேனின் தங்கையும் திக் ஃப்ரென்ட்ஸ். நரேனுக்கு அவன் தங்கை தவிர உறவென யாருமில்லை. தங்கை மீது அதீத பாசம். அப்போது வெளியூர் சென்ற இடத்தில் அவன் தங்கைக்கு வெகுவாக உடல் நலமில்லை. ஆபத்தான நிலையில் அங்கு மருத்துவமனையில் இருந்த நிலையில் நரேனின் தங்கை வேணியைப் பார்க்க ஆசைப்பட, அது தன் தங்கையின் கடைசி ஆசையாக கூட அமையும் என உணர்ந்த நரேன் மனம் உடைந்த நிலையில் வேணியை அழைத்துப் போக அவள் வீட்டிற்குச் சென்றிருக்கிறான்.

என் தங்கையின் ஆசையை நிறைவேற்றித் தா என உதவியும் கேட்டிருக்கிறான். வேணிக்கோ நரேனின் தங்கையை சென்று பார்க்க வெகுவாக விருப்பம் இருந்தாலும், அந்நேரம் வேணியை தவிர வீட்டில் யாருமில்லை என்பதால் வீட்டினர் வந்த பின் கேட்டு முடிவெடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறாள்.

ஆனால் நின்று நிதானமாய் பேசி முடிவெடுக்கும் நிலையில் நரேன் இல்லையே, தங்கைக்கு எந்நேரம் என்ன ஆகுமோ என்ற தவிப்பில் இருந்தவன், அதெல்லாம் வீட்ல சொல்லிக்கலாம் என கட்டாயப்படுத்தாத குறையாக வேணியை தன் காரிலேயே கூட்டிச் சென்றுவிட்டான். தங்கை ஆபத்திலிருக்கும் போது இது விஷயமாக படவில்லை அவனுக்கு.

இதில் போன இடத்தில் எதிர்பாரா விதமாக வேணிக்கும் அவன் தங்கையின் தொற்று நோய் தாக்கிவிட, அவளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். நரேனுக்கு தன் தங்கையோடு சேர்ந்து வேணியையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை. அத்தகைய சூழலில் அவனுக்கு வேணி வீட்டுக்கு அழைத்துச் சொல்ல நியாபகத்தில் கூட வரவில்லையோ,  எப்படியோ விஷயம் வேணி வீட்டுக்கு தெரிவிக்கப்படாமலேயே போய்விட்டது. மூன்று நாளாயிற்று வேணி ஆபத்தான நிலையை தாண்ட.

இங்கு நரேன் கண்ணும் கருத்துமாக தன் தங்கையைப் போலவே வேணியையும் பார்த்துக் கொள்ள, அதே நேரம் வேணியின் வீட்டில் வேணியைத் தேடி அலைந்திருக்கிறார்கள்!

வேணியின் ஒன்றுவிட்ட சகோதரன்தான் பிரபல காவல்துறை அதிகாரி பரிசுத்தன். அவர் வீட்டில்தான் அவள் தங்கி இருந்தாள் அந்நேரம். அவர் வீட்டு கேமிராவில் நரேன் வேணியின் கை பற்றி இழுக்காத குறையாக வேக வேகமாக காருக்குள் ஏற்றுவதாக காட்சிப் பதிவு கிடைத்திருக்கும் போல!

நரேன் இதைச் செய்தது என்னவோ தன் தங்கையை எண்ணிய பதற்றத்தில், ஆனால் SPபரிசுத்தனுக்கு இது எப்படி இருக்கும்? தன் வீட்டில் வந்து தன் தங்கையை இந்த நரேன் கடத்திப் போய்விட்டான் எனத் தோன்ற,

வழக்குப் பதிந்து அவர் சல்லைடையாய் நரேனைத் தேட, இதற்குள் நரேனின் தங்கை மற்றும் வேணி ஆபத்தை தாண்ட, அடுத்துதான் வேணி வீட்டு விஷயம் புரிய வந்திருக்கிறது நரேனுக்கு.

தன் தங்கையை இப்படி தகவலே இல்லாமல் மூன்று நாள் யாராவது கொண்டு போயிருந்தால் தனக்கு எப்படி இருக்கும் என  உணர்ந்த நரேன், சென்று தன்னை குற்றவாளி என்றும் தண்டனைக்குத் தான் தகுதியானவன் என்றும் சரணடைந்துவிட்டான்.

அப்போது கைதும் செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டிருக்கிறான். அந்த சிறையிருப்பு புகைப்படங்கள் மற்றும் டாகுமென்ட்கள்தான் இப்போது மீடியாவில் யாரோ சிலரால் பரப்பப்பட்டிருக்கிறது.

அடுத்த பக்கம்