துளி தீ நீயாவாய் Final 2 (7)

அவன் எதற்காக சிறை சென்றான் என்பதைப் பற்றி எதுவும் கொடுக்கப்படாமல் அவன் குற்ற பின்னணி  உள்ளவன். நம்பிக்கைக்கு தகுந்தவன் இல்லை. ஏதோ தில்லுமுல்லு மூலம் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டான் என்பதாக இருந்தது அச் செய்தியின் விளக்கம் மற்றும் நோக்கம்.

நரேனின் போட்டிக் கம்பெனி ஒன்றின் வேலை இது என புரியாமல் இல்லை. தொழில் என வரும் போது பெரும் பெரும் தொகைகள் மற்றும் விலை அதிகமுள்ள சரக்குகள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே கொடுத்து வாங்கப்படும். சட்டமோ காவல்துறையோ இதில் பாதுகாப்பு கொடுக்க பெரிதாக இங்கு எதுவுமில்லை. ஆக அந்த நம்பிக்கையை உடைத்துவிட்டால் நரேனோடு தொழில் செய்ய தயங்குவர், தொழில் வாய்ப்பு தனக்கு வரும் என்பதுதான் அந்த எதிராளியின் நோக்கம்.

ஆனால் இப்போது இதை இவர்கள் சமாளிக்க வேண்டுமே!

“என்னதா இருந்தாலும் நாம சமாளிச்சுடலாம்னு நீ அழுத்தி பேசு வேணி, நீயே நெகடிவால்லாம் எதுவும் அவன்ட்ட இந்த சிச்சுவேசன்ல சொல்லிட கூடாது, நமக்கு இது பிரச்சனைனு மட்டும்தான் தோணும், அவனுக்கு அப்படியில்ல என்ன இருந்தாலும் அவமானமா படும், உலகமே நம்மை கேவலமா பார்க்க மாதிரி வலிக்கும், அவன் வாய்விட்டு இதெல்லாம் பேசுற ஆளும் கிடையாது, நீதான் அவன் பயம் என்னன்னு புரிஞ்சிகிட்டு அதுக்கேத்த போல அவன என்கரேஜ் செய்யணும், வேணும்னா ப்ரவி வீட்டுக்கு வேணாலும் கிளம்பி போய்டுங்க” என கருண் என்னவெல்லாமோ சொல்லித் தர,

வேணிக்கு முதலில் வந்த உணர்வு மிரட்சிதான்.

நரேனின் தொழில் நிலவரம் பற்றி இவளுக்குத் தெரியும். வெகு வெகு லாபமாக நடக்கும் ஒன்று அது. ஆனால் அங்குமே பொருளாதார நிலை என்பது ஆபத்துக்கு வெகு அருகிலேயே இருக்கும். சரியாய் சொல்வதென்றால் உலக முதல் பணக்காரன் வரை எல்லோர் தொழிலுக்குமே இதுதான் நிலை.

“நாளைக்குள்ள எண்பது கோடி ரூபா வேணும் வேணி” என்பான் நரேன் திடுதிப்பென.

சென்ற ப்ராஜக்ட்ஸ் பலவற்றின்  லாபத்தையும் சேர்த்து போட்டு முதலீடு செய்து அடுத்த ப்ராஜக்ட்ஸ் பாதிக்கு மேல் முடித்திருப்பார்கள், அதற்கு மேல் வேலை நடக்க அந்த ப்ராஜக்ட்ஸ் யாருக்காக செய்யபடுகிறதோ அந்த நிறுவன்ங்கள் தருகிறேன் என ஒப்பந்தமிட்ட தொகை வந்தால்தான் முடியும் என்ற நிலை இருக்கும், அந்த நிறுவனங்களோ நாளை நாளை என இழுத்தடிக்கும்,

இங்கு இவர்கள் மெட்டீரியல் சில சப்ளையரிடமிருந்து வாங்கிதானே மெஷின் செய்து கொண்டு இருப்பார்கள், அவர்களுக்கு பணம் தருகிறேன் என இவர்கள் ஒத்துக் கொண்ட தேதி கடந்து கொண்டிருக்கும், அவர்கள் தாறுமாறாய் அழுத்தம் கொடுப்பார்கள், பின்ன சில கோடிகளுக்கு ஜாமான் கொடுத்தவன் பணம் கேட்பான்தானே! இவர்களது கம்பெனி சம்பள தேதி வேறு அப்போது வரும், வேலை செய்றவங்களுக்கு சம்பளம் கொடுக்கணுமே. ஆக பல கோடிகள் தேவை என வந்து நிற்கும், இன்னும் சில முடித்து கொடுக்கப்பட்ட ப்ராஜக்ட்ஃஸில் இருந்து இவர்களுக்கு வர வேண்டிய தொகை அதை விட வெகு அதிகமாக இருந்தாலும் இன்னும் வந்திருக்காது. கடும் அழுத்தமான நிலையை நரேன் கையாள வேண்டி இருக்கும்.

இந்த நிலையில் இப்படி மீடியாவில் செய்தி என்றால் அது என்ன என்ன பாதிப்புகளை உண்டாக்குமோ?

இவள் போய் நரேனைப் பார்க்கப் போனால், அவன் ப்ரவியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“அதெல்லாம் சமாளிச்சுக்கலாம், நீங்க எதுவும் ஃபீல் பண்ணிக்காதீங்க, நான் மெயினா இதைச் சொல்லத்தான் உங்களுக்கு கூப்ட்டேன்ணா, தப்பித் தவறி கூட இவன நாம ஜெயில்ல வைக்கப் போய்தான இப்படி இன்னைக்கு இவனுக்கு நிலமையாகிட்டுன்னு யோசிச்சுடாதீங்க, பிஸினஸ்ல அப்ப அப்ப அனுபவிக்கிற ஃபினாண்ஷியல் ப்ரஷருக்கு, அப்படி ரெண்டு வருஷம் அந்த ரூம்குள்ள அடபட்டு கத்துகிட்ட பயம்மும் மன அடக்கமும் மட்டும் இல்லனா இப்பவும் கை நீட்டணும்னு தோணிடும்ணா, எனக்கு எப்பல்லாம் நீங்க என்னதெல்லாம் செய்திருக்கீங்களோ அது எல்லாமே எப்பவும் நல்லது மட்டும்தான்” என்ற ரீதியில் இருந்தது இவளவன் பேச்சு.

சத்தம் என எதுவும் கேட்காத வண்ணம் கவனமாய் பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

சட்டென அவன் உடல் தளர்ந்த வகையில்தான் அவன் எத்தனை இறுக்கத்தில் இருக்கிறான் என்பதே இவளுக்குப் புரிகிறது.

ஒற்றை கையால் இவள் கரங்களை பற்றியபடியே அடுத்து பேசி முடித்தவன், இப்போது இவள் முகம் பார்த்து அத்தனை ஒரு கெஞ்சலாக “சாரி வேணி” என்றானே பார்க்கலாம்.

இவளுக்கு தலைவால் எங்கு புரிய?

“என்னால இப்ப உங்க ஆஃபீஸ்ல உனக்கு கஷ்டமா இருக்கும்ல, அதையும் விட உங்க வீட்ல என்ன யோசிப்பாங்கன்னு எனக்கு ரொம்பவே பயமா இருக்கு” முழு தவிப்பிருந்தது அவனிடம். ப்ரவி மனம் கலங்கிவிடக் கூடாதே என திடப்படுத்தி பேசிக் கொண்டிருந்தவன், இவளிடம் உடைகின்றான்.

அவன் சொன்ன பிறகுதான் இவளுக்கு இதெல்லாம் ஞாபகத்திலேயே வருகிறது.

“ப்ச் அதனால என்ன? எதாவது பேசினாங்கன்னா பதிலுக்கு பேச எனக்கும் தெரியும், நீங்க என்னைப் பத்தில்லாம் ஒர்ரி பண்ணிக்காதீங்கப்பா” என்றவள்,

“யார் நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கன்ற விஷயத்தை யோசிக்கவே செய்யாதீங்க, அது கிடையாது நம்ம பிரச்சனை, அதுவும் எனக்கு என்னாகும்னு யோசிக்கிறதெல்லாம் டூ மச், நம்ம மேரேஜ் ஃபிக்ஸானதுக்கே ரொம்ப பெரிய இடம்னதும் வளச்சு போட்டுட்டேன்னு பேசினவங்க கூட இருக்காங்க, நம்ம பக்கம் தப்பே இல்லைனாலும் நம்மள பத்தி தப்பா பேச நாலு பேர் இருக்கத்தான் செய்வாங்க, ஆக நம்ம மனசாட்சிய பத்தி மட்டும் நாம கண்டுகிட்டா போதும்” தன் அனுபவத்தை அவனுக்கு திடச் செய்தியாக்கியவள்,

“இப்ப இந்த ந்யூஃஸ் மீடியாக்கு வந்ததால எது நிஜமா பிரச்சனை ஆகும், அதை எப்படி சால்வ் செய்ய? அதை மட்டும் யோசிங்கப்பா” என எடுத்துச் சொல்ல,

“G&S ந்னு புது சப்ளையர் ஒருத்தங்கட்ட அக்ரிமென்ட் போட்டமே, அவங்க டைப்புக்கு, நாளைக்கு அவங்க பேமென்ட் அவங்களுக்கு ரீச் ஆகலைன்னா, இந்த ந்யூசுக்கும் அதுக்கும் எதுவும் ஃப்ராடு செய்து ஏமாத்றோம்னு நினச்சு மீடியால்ல எதாவது சொல்லி வச்சாங்கன்னா கூட ஆச்சர்யபடுறதுக்கு இல்ல, ஏமாத்த ட்ரைப் பண்றோம்னு ஏதாவது கேசும் போடலாம் அவங்க, ஆக்சுவலி நான் பார்ட் பேமென்ட் செய்துட்டு ஒன் வீக் அவங்கட்ட டைம் கேட்கலாம்னு நினச்சிருந்தேன், இப்ப இம்மீடியட்டா முழுசா கொடுத்தாக வேண்டி இருக்கும்.

அந்த பார்ட் பேமென்ட்க்கே லாவி மில்ஸ்ட்ட இருந்து நாளைக்கு வர்ற பேமென்ட்ட வச்சுதான் ப்ளான் செய்திருந்தேன். எம்ப்ளாயி சேலரியும் அத வச்சுதான் போடணும், ஆனா ந்யூஃஸ் பார்த்துட்டு இந்த டென்ஷன்ல அவங்கட்ட பேமென்ட் பத்தி பேச மாட்டோம்னு நினச்சு லாவி மில்ஸ் ரெண்டு நாள் இழுத்தடிச்சுட்டாங்கன்னா கூட, நாம செம்மயா மாட்டுவோம்” அவன்  உடனடிப் பிரச்சனையைப் பற்றி யோசித்தான்.

அடுத்த பக்கம்