துளி தீ நீயாவாய் Final 2 (6)

இந்தக் கேள்வி வரும் என வேணிக்குத் தெரியும். ஆனால் எப்படி விடை சொல்லவெனத் தெரியவில்லை. ஆனால் இத்தனை அழுது அவனை அலையவிட்டபின் சொல்லாமலும் எப்படி முடியும்?

“அது நரேன்.. ப்ளீஸ் வேண்டாமே.. ஒரு க்.. குழப்பம், அ..து பழைய லைஃப்..“ என திக்கித் திண்டாடியவள், அதை அவனிடம் சொல்லவே முடியாது என்பதை உணர்ந்தவளாக,

“நான் என்ன படு பரிசுத்தமா? பழசையெல்லாம் உங்கட்ட எப்படிச் சொல்ல?” என அவன் முகம் பார்க்க தவிர்த்தபடி கேட்டாள். ஆனால் கேட்டாள். சராசரி தம்பதியருக்குள் சாத்தியப்படாத சில உரையாடல்கள் இருபுறமும் அறிந்து மணம் செய்த இவர்கள் உறவில் சாத்தியமாகிறதுதான்.

“இப்ப சரியாகிட்டா?” என்று மட்டும் வருகிறது அவனது வார்த்தைகள். அவன் முகம் குரல் எல்லாமே இறுகி இருக்கிறதோ? ஆனாலும் அவன் பிடிக்குள், அவனின் மீதேயல்லவா படுத்திருக்கிறாள், அதில் சின்ன மாற்றத்தைக் கூட அவன் கொண்டு வரவில்லை.

“ம்” என்றபடி விழுந்து போன முகத்தோடு இவள் அவன் முகம் பார்க்க, இணைவில் இவள் மனம் முழுவதும் அவன் நினைவிலேயே இருக்க, அவனுக்கு இவளே உலகமாயிருக்க, இதில் எங்கிருந்து வரப் போகிறது கண்ட சிந்தனையும் என்ற தெளிதல் வந்திருக்கிறதே இப்போது! அதற்கான ம் அது. அவன் இறுகிய குரலில் பேசினால் விழுந்து போகாதா இவள் முகம்?!

“அப்படின்னா அதை சொல்றது உனக்கு கஷ்டம்னா சொல்ல வேண்டாம், அண்ணிட்ட பேச பெட்டரா ஃபீல் பண்ணுவன்னா அவங்கட்ட வேணாலும் பேசு” இவள் நிலை புரிந்து இடம் கொடுத்தான்.

இதில் வெள்ளியாய் ஒரு பட்டாம் பூச்சி வெட்டிக் கொண்டு இவள் வல நெஞ்சில் விட்டு விட்டு பறக்கிறது.

அவனோ அடுத்ததாய் “ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ வேணி பரிசுத்தம்னா என்ன தெரியுமா? நீ தொட்டா நான் தீட்டாயிடுவேன்னு சொல்றது இல்ல பரிசுத்தம், நீ யாரா இருந்தாலும் என்னைய தொட்டா நீயும் சுத்தமாயிடுவன்றதுதான் பரிசுத்தம்.

அப்படி இங்க யார் இருக்கா?” என தீர்க்கமான ஒரு அழுத்தப் பார்வையோடு இவளைக் கேட்டான்.

இவள் புரியாது அவனைப் பார்க்க,

“கடவுளத்தான நாம பரிசுத்தர்னு சொல்றோம், கடவுளப் போய் ஒரு மனுஷன் தொட்டா, கடவுளா தீட்டாகிடுவார்? தொட்டவன்ட்ட  கெட்டதோ அல்லது குண குறையோ எது இருந்தாலும் அதை அவர் மாத்தி அவன தன்னைப் போல குணமுள்ளவனா, பரிசுத்தமானவனா ஆக்குவார்ன்றதுதானே சிலுவை, உயிர்த்தெழுதல் எல்லாமே சொல்ற விஷயம்?

கூடவே கடவுள் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்னு சொல்லி இருக்குது!

அப்படின்னா என்னை தொட்டா நீயும் பரிசுத்தமாவன்னாதான் நான் பரிசுத்தமான ஆள்னு சொல்லிக்க முடியும், அப்படி இங்க யார் இருக்கான்னு கேட்கிறேன்”

அவன் விளக்க,

இப்போது இவளுக்கு பவி ப்ரவியின் நினைவு வருகிறது. முகம் அதாகவே மலர்கிறது. அவர்களை சந்தித்ததில் தொடங்கியதல்லவா இவளது மாற்றம்!

“என்ன அண்ணா அண்ணிய நினச்சுகிட்டியா?” அதுவரை இருந்த தீவிரம் விலகி அவன்  முகமுமே இலகுவாகி இருந்தது.

“அண்ணா அண்ணி உனக்கு எப்படியோ அப்படித்தான் வேணிமா நீ எனக்கு. இது நீ ஒத்துகிட்டாலும் இல்லைனாலும் அதுதான் உண்மை, அண்ணா அண்ணி பரிசுத்தம்னா எனக்கு மதுவுக்கெல்லாம் நீதான் அந்த பரிசுத்தம். இது எப்பவும் உன் மனசில் இருக்கணும்” என்பது வரை தன்மையாக சொல்லி வந்தவன்,

“அதவிட்டுட்டு நான் பரிசுத்தமில்ல அது இதுன்னு எதாவது உன் வாய்ல வந்துச்சு” என சற்று எரிச்சல் தொனியில் அவன் எச்சரிக்க,

அவன் காதருகில் இதழுரச குனிந்து, “என்னடா செய்வ நீ? என் வாய்ல வந்தபடில்லாம் நான் உளறத்தான்டா செய்வேன், அதான் நீ இருக்கியே! எதையாவது சொல்லி இப்படி சிரிக்க விட்டுடுறியே” என விளையாட்டு போல் துவங்கி கடைசியில் முடிக்கும் போது தாளாமல் கண்ணில் நீரோடு சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

அத்தனை அத்தனை இலகுவாகவும் தாளமுடியா நிறைவுக்குள்ளும் அவள். இவளை எங்கு வைத்திருக்கிறானாம் அவன்?!

இத்தனை பக்குவமுள்ள சிந்தனைக்காரனா கண்ட வகையில் இவளை கற்பனை செய்து இவளையும் வருத்தி தானும் வருந்துவான்? கடந்த நாட்களின் பயம் இப்போது சுத்தமாகவே அற்றுப் போனது இவளுக்கு.

வேணியின் கடந்த காலம் இந்த வகையில் இவர்கள் வாழ்வில் எழுந்து அடங்கியது என்றால், நரேனின் கடந்தகாலமும் அதன் கை வரிசையை காட்டாது இருக்கவில்லை. எந்த செயலுக்குமே பின் விளைவு இருக்கத்தானே செய்கிறது. ஆனால் அது தண்டனையாய் வரப் போகிறதா, இல்லை தாண்டிப் போகப் போகிறதா என்பதை வேறேதோ சக்தி தீர்மானிக்கிறது போலும்.

மேலும் மூன்று வாரங்கள் கடந்திருந்தன. திருமணத்திற்குப் பிறகு இன்றுதான் முதல் நாள் வேலைக்குச் சென்று திரும்பி இருக்கிறாள் வேணி. அலுவலகத்திலிருந்து அவளை அழைத்து வந்ததே நரேன்தான் என்றாலும், காரில் இவள் வில்லடிக்காத குறையாக வாயாடிக் கொண்டு வந்த வகைக்கு அவன் அதைக் கவனித்துக் கொண்டு மட்டுமாக வந்தவன், வீட்டுக்குள் நுழையவும்,முதல் வேலையாக அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான். முதல் முறையாக அவனது அணைப்பு அவளுக்கு வலித்தது. நொறுக்கி விடுவான் போலும்.

“என்.. என்னாச்சுபா?” என கேட்டு முடிக்கும் முன்னும் அவளுக்குப் புரிந்தும் போயிற்று. அவனது I missed u இது.

“காலைல இருந்து இவ்ளவு நேரெமெல்லாம் என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியாது” அவன் பிடியை தளர்த்தாது தொடர, “உன் ஆஃபீஸ்ல இருந்து நாலாவது பில்டிங்கா ஒரு அப்பார்ட்மென்ட் இருக்கே, அதுல ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ஒரு வீடு காலியா இருக்கு, டபுள் பெட் ரூம்னாலும் ரொம்ப சின்ன வீடுதான், ஆனா நமக்கு அது போதும், அங்க மாறிப்போம், மதியம் நீயும் நானும் லன்சுக்கு வீட்டுக்கு வர்றாப்ல பார்த்துப்போம்” இவள் கழுத்தில் முகம் புதைத்தபடி அவன் சொல்லிக் கொண்டு போக,

ஒரு பக்கம் உண்மையில் அவளுக்கு சிரிப்பு வந்தாலும், இன்னொரு பக்கம் ஏதோ ஒன்று அவனுக்குள் உருகிப் பெருகித்தான் போகிறது.

சரியாய் அந்நேரம் சிணுங்குகிறது இவளது மொபைல், கருணுக்கான ரிங்க் டோன். அது புரியவும் இவளவன் இவள் இணைப்பை ஏற்க அனுமதிக்க,

“நரேன் எங்க இருக்கான்னு தெரியுமா வேணி?” என எடுத்ததும் கேட்டது மீரட். அதாவது கருணும் மீரட்டும் கான் காலில் வருகிறார்கள். நிச்சயம் விஷயம் சின்னது இல்லை. இவள் தொண்டைக் குழியில் பயம் காய்கிறது.

“அ.. அது இங்கதாண்ணா வீ..வீட்ல என்னை இப்பதான் வந்து பிக்கப் செய்துட்டு வந்தாங்க, மொபைல சைலண்ட்ல வச்சிருப்பாங்களா இருக்கும்” இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“நான் மீரட் அண்ணாக்கு கால் பண்றேன்னு சொல்லிடு” என இதற்குள் தன் மொபைலோடு விலகிப் போய்விட்டான் நரேன்.

அது காதில் விழுந்தது போலும், “கருண் நீ வேணிட்ட சொல்லி வை” என கருணிடமும் “பயப்பட ஒன்னும் இல்ல, நாமல்லாம் இருக்கோம்ல பார்த்துக்கலாம், நீ அவன் தைரியமா இருக்க மாதிரி சப்போர்டிவா பேசு என்ன வேணி, நான் கொஞ்ச நேரத்துல உன்ட்ட பேசுறேன், இப்ப விஷயத்த அவன்ட்ட முதல்ல சொன்னது நம்மளா இருக்கணும், அதான் அவன்ட்ட பேசுறேன் ஓகே” என மீரட் அழைப்பில் இருந்து விடுபட்டான்.

விஷயம் இதுதான். நரேன் சிறை வாசம் அனுபவித்தது ஆதாரத்தோடு மீடியாவில் வெளியாகி இருந்தது. பொதுவாக தொழில் முனைவோர் சொந்த வாழ்க்கையை மீடியா பெரிதாய் குடைவது இல்லைதான். ஆனால் நரேன் தன் புது புது கண்டுபிடிப்புகளால் நட்சத்திர அந்தஸ்தை எட்டிக் கொண்டிருந்தான். விசிறிகள் கூட்டம் அவனுக்கிருந்தது. ஆக அவன் சொந்த வாழ்க்கை சபைக்கு இழுக்கப்பட்டிருந்தது.

அடுத்த பக்கம்