துளி தீ நீயாவாய் Final 2 (5)

இவன் தொடுகைக்கு எகிறி குதிக்காமல், அழுதும் வைக்காமல் திக்கிவிட்டு போகும் அவள் மனம் எதை நாடுகிறது இன்று என்றவாக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது இவன் சிந்தனைக் குதிரை.

விழா கொண்டாடி இளகி வந்திருக்கும் மனதிற்கும், மழை கொண்டாடி நனைந்து வந்திருக்கும் தேகத்திற்கும், அவளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவன் காதலுக்குமாக இன்று இல்லறத்தில் பள்ளிவிழா கொண்டாட ஒன்று ஆவலுற்று அலைக்கழிகிறதே, அது அவளுக்கும் சற்று இருக்கிறதா என்ன?

காலையில் அவள் பார்த்து நின்ற பார்வை வேறு பதில் போல் தோன்றி வைக்கிறது!

ஆனாலும் அவளாகத்தான் வந்தாக வேண்டும்!

படாத பாடுபட்டு சமாளித்து இவள் உடை மாற்றி வெளி வரும் நேரம், வெகு நேரம் ஆகிவிட்டதால் போலும், அவனுமே நனைந்திருந்தானே, ஈர சட்டையை கழட்டிவிட்டு தனது பேக்கில் அடுத்து போட சட்டை தேடிக் கொண்டிருந்தான்.

எதிர்பாரா இந்தக் காட்சியில் அவன் வெற்றுடலை காணத் தாங்காமல் ஒரு நொடிக்குள்ளாக இவள் தலை குனிந்துவிட்டாள்தான். ஆனாலும் அதற்குள் கவனத்தில் பட்டிருக்கிறது அவன் முதுகில் இருந்த அந்த தழும்பு.

சூடு போடுவாங்கன்னு சொல்வானே!! திகீர் என ஒரு தீப்பந்தம் பெண்ணவள் அடிவயிற்றில் பற்றி எரிய, தாங்கமாட்டாமல் மீண்டுமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“வந்துட்டியா வேணி, ஒரு நிமிஷம், ஒரு ஆஷ் கலர் டீ ஷேர்ட் ஒன்னு எடுத்து வச்சல்ல” என அவன் எதையோ இவளிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறான் என்பதெல்லாம் இவளுக்கு மனதில் படவில்லை,

அவனருகில் போய் அந்த தழும்பில் வருடுகிறது தாய்மையாய் இவள் விழிகள். அவளை மீறி சென்று தீண்டுகின்றன விரல்கள்.

அதுதான் ஆரம்பம்.

அவனுக்கென்ன முதுகில் தழும்பு இருக்கிறது என ஞாபகத்திலேயேவா இருக்கும்? அல்லது அதைத்தான் பார்த்து இரங்கிப் போய் நிற்கிறாள் என புரியுமா?

இவனோ இன்றைய காலை நிகழ்ச்சி போல் பொண்ணு சைட் அடிக்கிது போல என்றே எண்ணிவிட்டான். அவளே முதல் அடி எடுத்து வைக்கும் போது அடுத்து எதற்கு இவன் காத்திருக்க?

தனக்கு பின்னால் நின்றவள் கை பற்றி சட்டென தன் முன் புறமாக கொண்டு வந்தான். இல்லை கொண்டு வர முயன்றான், “என்ன பார்க்கிற நீ?” என்றபடி.

இவன் கேட்ட அர்த்தமே இங்கு வேறு! ‘சைட் அடிக்கிறேன்னு ஒத்துக்கோ’ என்பதுதான் அதன் பொருள் அவன் வகையில்.

அவளுக்கோ ‘ஐயோ நாம இரக்கப்பட்டோம்னு அவனுக்கு தெரிஞ்சிடுமோ, அது அவனுக்கு கக்ஷ்டமா இருக்குமே’ என்று மனம் அந்த தழும்பிலேயே நிற்கிறது.

ஆக பதிலென எதையும் சொல்ல சாத்யபடாமல், இருந்த மன நெகிழ்ச்சியில் அவன் மார்பில் அவள் ஒண்ட, அவளே ஒண்டும் போது அவன் என்ன செய்வான்? தன்னை ரசிக்கும் மனைவியை கணவனாய் தன் மீது பொதிந்து கொண்டான்.

மற்ற நேரமாய் இருந்தால் அவன் சரீர சுகத்தை தேடுகிறான் என இது வெறும் சுகத் தேடலாக, உரிமை இருப்பதால் தவறென தோன்றவில்லை எனினும் மரியாதைக்குட்படுத்தப்பட அவசியமில்லாத இச்சையாக அவளுக்குப் புரிந்திருக்கும். அதைத் தொடர்ந்து அவளது வழக்கமான பயமும் வந்திருக்கலாம்.

ஆனால் இப்போதோ அவனது கடந்த காலங்களினால் உருகிப் போய் நின்றிருந்ததால் போலும், தன்னந்தனியாய் பெரும் பாலைவனத்தை கடந்து வந்திருக்கும் அவன் அவனுக்கென இருக்கும் ஒரே உறவான இவளிடம் அன்பின் நீட்சியாக வெகுவான ஒரு அன்யோன்யத்தை வாஞ்சிக்கிறான் என்றே புரிபடுகிறது இச்செயல்.

அன்பில் பயமேது? இன்னுமாக அவனுக்குள் புதைந்தாள்.

என்ன செய்வானாம் அவன்? முதலிரவன்று அவள் அழுது விலகியதற்கு காரணம் இன்னுமே தெரியவில்லை அவனுக்கு. அது என்னவென்றே தெரியாமல் அவளிடம் ஐக்கியபடும் எண்ணம் இதுவரையிலும் இல்லைதான். எதையாவது செய்து அவளை மீண்டுமாய் அழவிட்டுவிடக் கூடாதே என்றிருக்கிறது.

ஆனால் அவள் மனதில் இவன் மீது காதல், ஆசை, ஈர்ப்பு என எல்லாம் இருக்கிறது என்றும் இப்போது நன்றாகவே தெரியும். அதோடு அவளே இவன் கைக்குள் வரும் இந்நேரத்தில், இவனுமே அவளுக்குள் உருகும் இத் தருணத்தில் எதற்கு இதையெல்லாம் வேண்டாம் எனச் சொல்ல?

“ஏய் வாலு என் இஷ்டத்துக்குன்னு விட்டன்னா, இது எங்க வேணாலும் போகும்” என தன் மனநிலையைச் சொல்லி உன் இஷ்டம் என்ன? என்ற கேள்வியை மௌனமாய் அவளிடம் கடத்த,

அப்போதும் கூட இவளிடம் அனுமதி கேட்டு, இவளுக்கு எது பிரியம் என காண முற்படும் இச் செயலை ஆசை என எப்படி உணரும் பெண் நெஞ்சம்?

ஆசை என்பது தன்னிலை, அது தன் விருப்பு வெறுப்புகளை முதன்மை படுத்துமே தவிர, அடுத்தவருக்கும் அது உண்டு என்பதை சட்டை செய்யாது. தன்னை பிரதானப்படுத்தி அடுத்தவரின் தேவை, நிலை, சூழலை கூட தனக்கு சாதகமாக்க முயலுமே தவிர, பிறரின் நிலை உணர நினையாது. அதை அவள் அனுபவித்திருக்கிறாள், ஆக இனம் காணவும் தெரியும்.

ஆனால் அன்பு என்பது முன்னிலை. தன் முன் நிற்பவர் நலம் தேடும். இவள் விருப்பு, வெறுப்பு, சூழல், சுகம், நிலை என்பதோடு எது இவளுக்கு நலம் என்பது வரை ஆராயும். இது இந்நிலையில் அவளுக்குப் புதிது.

இதையெல்லாம் சிந்திக்க திராணியுள்ள நிலையிலெல்லாம் அவள் இல்லைதான். ஆனால் அடி மனம் என ஒன்றிருக்கிறதே அதற்கு சிந்தையின்றி வார்த்தையின்றி இதெல்லாம் புரிந்து வைக்குமே!

ஆக இது ஆசை என்பதும், அதற்கிடப்படும் பலி என்பதும், அங்கு இவளுக்கு எப்போதும் வாதை இருக்கும் என்பதும் எதுவும் நினைவில் வராமல், இது இவர்களுக்குள் பகிரப்படும் அன்பென்றும், அதன் ஒரு ரூபமென்றும் மட்டுமே உணர்வில் வர,

அதில் பெண்ணவளுக்கு தடை சொல்ல வரவில்லை, தன்னிலையும் கவனத்தில் இல்லை. பயப்படவும் நினைவில் இல்லை.

அவன் மட்டுமே முன்னிலை, முதல் நிலையாக மனம் காண, மௌனமாய் இவள் அவன் தோள் தேட,

அடுத்து வந்த வேளைகளில் அவன் பெண்மையின் எல்லைகளை அறிந்து வந்த போது மண மஞ்சம் என்பது அன்பின் பரிமாற்றமே தவிர அருவருக்க எதுவுமில்லை என்பது அவளால் அறியப்பட்டிருந்தது.

மறுநாள் காலை வேணி அவளது ஒரு கம்மலை படுக்கையில் தேடிக் கொண்டிருந்தாள். அவன் இன்னுமே தூங்கிக் கொண்டிருக்க, படுக்கை அருகில் நின்றிருந்தவள் அவனைத் தாண்டி கை நீட்டி அடுத்த புறமாக தேடிக் கொண்டிருக்கும் போது கண் விழித்தான் அவன்.

விழிக்கும் போதே இவள் முகம் பார்வையில் கிடைக்கவும் அவனிருந்த துள்ளும் மன நிலையில், இவளைப் பார்த்து விஷமமாய் கண் சிமிட்ட, முந்தைய இரவின் ஞாபகமாகத்தான், அவளோ சட்டென ஒன்று வைத்தாள் அவனுக்கு.

“ஏன்டா எதாவது தப்பா பண்ணினோம்? கண்ணெல்லாம் அடிக்குற?” என வருகிறது அவளது கேள்வி.

“அடப்பாவமே, ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லத் தெரியாத என் பயந்தா கொள்ளி பாப்பாவ என்ன செய்த நீ?”  என்றபடி அவன் அவளை இழுத்து தன் மீதே போட,

“ஐயோ விடுங்க, என் இயர் ரிங்க காணோம்” என இவள் சிணுங்க,

“இப்ப அதுவா விஷயம்? எதுக்கு அன்னைக்கு அழுத? அப்றமும் இத்தன நாள் அதைப் பத்தி ஒன்னு கூட சொல்லாம சுத்திட்டு இருந்த?” அசைய விடாமல் அவளை தன்னோடு வளைத்து வைத்துக் கொண்டு கேட்டான் அவன்.

அடுத்த பக்கம்