துளி தீ நீயாவாய் Final 2 (4)

ஆக எந்த முடிவுக்கும் வரத் தெரியாமல் அவனது அலுவலகம், பீச், ஈசியாரில் லாங்க் ரைட், ப்ரவி வீட்டில், மீரட் வீட்டில் பெங்களூரில் கருண் வீட்டில் என திருமண விருந்துச் சாப்பாடு என்பதாக அவனின் அத்தனை முடிவுகளுக்கும் தலையாட்டி அவனோடு அலைந்து கொண்டிருந்தாள் அவள்.

அவன் இவளிடம் நடந்து கொள்ளும் வகையிலும், அவனோடே இருக்கிறாள் அல்லவா அதில் அவன் ஒவ்வொரு சூழலில் நடந்து கொள்ளும் விதமுமே அறிய வர, பொங்கித் தான் பெருகியது பாவையின் காதல் புனல்.

கனியக் கனிய அவனுக்கு ஏறெடுக்கும் அக்கறையில் அதை காண்பித்தாள் பெண்.

அவனுக்குள்ளோ அவள் இதைப் பற்றி பேச்செடுக்கக் கூட முனையவில்லை என்பது விஷயம் ரொம்பவும் பெரிதோ என ஒரு திகிலை உண்டு செய்தாலும், அவள் இவனிடம் கனிந்துபட்டு வரும் வகையைக் காண சீக்கிரமே இவனிடம் மனம் திறந்துவிடுவாள் என்ற நம்பிக்கையையும் தந்தது.

இதில் இரண்டு வாரங்கள் கழிய பாண்டிச்சேரியில் நரேனது தொழில் முறை நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணம். இவர்கள் தம்பதியாய் சென்று வர வேண்டிய அளவு முக்கிய நட்பு அவர்.

பீச் ரிசார்ட்டில் விழாவை ஏற்பாடு செய்து, அங்கு இவர்கள் தங்கவும் ஒரு அறையும் பதிந்திருந்தார் அவர்.

காலை வீட்டிலிருந்து கிளம்பி நேரடியாக விழாவில் சென்று கலந்து கொள்வது என்பது இவர்கள் திட்டம். விழா முடிந்து அன்று இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் சென்னை திரும்புவதாக ஏற்பாடு.

கிளம்பித் தயாராகி தன்னறை கண்ணாடிக்கு முன்பாக வந்து நிற்கும் போது சிணுங்குகிறது நரேனின் மொபைல். வந்த அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவனின் கண்கள் கண்ணாடியில் தன் கோலத்தை சரி பார்க்க, அதே கண்ணாடியில் அடர் வயலட், காப்பர் சல்ஃபேட் ஊதா, குங்குமநிறம், மெல்லிய ஆரஞ்சு வர்ணம் எல்லாம் இணைந்திருந்த ஒரு பலவர்ண பட்டுப் புடவை அவசர நடையுடைய பாதங்களுடம் அறைக்குள் நுழைவது தெரிகிறது. அவன் ஆவலாக கண்ணாடியில் சற்று குனிந்து பார்க்க,

அவன் ஆசையைக் கிளறும் பட்டுப்புடவை கோலத்தில் தலை நிறைய பூவோடு அவன் மனைவி தயாராகி வந்திருப்பது தெரிகிறது. ஆனால் ஒரே ஒரு எட்டுதான் அறைக்குள் வைத்தவள், பின் வேக வேகமாக திரும்பி ஓடிவிட்டாள்.

இவனுக்கு என்ன விஷயமெனப் புரியவில்லை. அவள் எதுவும் பிரச்சனையில் ஓடியது போல் இல்லை என்பதால் அழைப்பை பேசி முடித்துவிட்டு போய் அவளை கவனிக்கலாம் என இவன் பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவள் திரும்பவும் வந்துவிட்டாள்.

இப்போது அவள் வெண் பட்டில் தங்க ஜரி பார்டர் வைத்திருந்த புடவைக்கு மாறியிருந்தாள். தலையில் அதே பூக் கோலம்.

ஒரு நொடி புரியவில்லை என்றாலும் அடுத்த நொடி தெரிந்துவிட்டது இவனது  இளங் காக்கி வர்ண பேண்ட்ஸ் வெண் சட்டை உடை நிறத்துக்கு பொருத்தமாகத் தோன்றத்தான் இந்த உடைமாற்றமென.

‘ஆக பொண்ணு அத்தனை தூரம் இவன சைட் அடிச்சுகிட்டுதான் இருக்குது என்ன?’ என்ற தித்திப்பின் துளி இவனில் சாய, அவள் கவனிக்கா வண்ணம் இன்னுமே மொபைலில் பேசியபடி கண்ணாடியில் அவளை கவனித்தான்.

பாரபட்சமின்றி  இவன் பாதாதி கேசம் பரவி இறங்கிக் கொண்டு இருந்தது அவள் பார்வை, கலப்படமற்ற காதல் ரசனையின் வண்ணத்தில் அது. பாவையின் பருகு பொருளாய் இவன்.

அன்று விழா முழுவதுமே இவன் மனதை ஆக்ரமித்தது அவளது அந்தக் கோலமும் பார்வையும்தான். அக்கறை, காதல், ஈர்ப்பு என எல்லாம் இவன் மீதிருக்க, இவனை ஏன் விலக்குகிறாளாம் அவள்? ஆனாலும் அவளாகத்தானே இதையெல்லாம் இவனிடம் சொல்லமுடியும்?

விழாவிலேயே இரவு உணவை முடித்துவிட்டு, நரேனும் வேணியும் தங்களுக்கான அறைக்கு வரும் வழியில் சற்று நேரம் கடற்கரையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க,

எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என இருந்த வானிலை இப்போது சட்டென மழையை கொட்டி வார, சேலையை கையில் தூக்கிப் பிடித்தபடி அறையை நோக்கி ஓடி வந்தாலுமே வேணி தொப்பல் தொப்பலாக நனைந்துவிட்டாள். அவனும்தான்.

“முதல்ல நீ போய் ட்ரெஃஸ் சேஞ்ச் செய்துட்டு வா” என நரேன் காத்திருக்க, அவனுக்கு ஒரு டவலை எடுத்து கையில் கொடுத்துவிட்டு, குளியலறைக்குள் உடை மாற்றவெனச் சென்றாள் பெண்.

என்னப் பிரச்சனை எனத் தெரியவில்லை. அவர்கள் கிளம்பும் வரையுமே நன்றாகத் தான் இருந்த குளியலறையில் இப்போது தண்ணீர் மண் நிறத்தில் வந்து தரையெல்லாம் மண் வண்ணம்.

வேணி உடுத்தி இருப்பதோ வெண்பட்டு. இதில் அங்கு வைத்து எப்படி உடை மாத்தவென அவள் திரும்பி வந்துவிட,

விஷயம் அறிந்த நரேன் “சரி வேணிமா நான் ஃப்யூ மினிட்ஸ் வெளிய நிக்கேன், நீ ட்ரெஸ் மாத்திட்டு கூப்டு” என அறையை விட்டு வெளியேறத் தயாரானான்.

அறையில் குளியலறை தவிர வேறு மறைவு எதுவுமில்லை என்பதால் வேணியும் இதற்கு தடை சொல்லவில்லை. அவன் வெளியே போகவும் கதவைத் தாழிட என அவனோடு கதவு வரைச் சென்றவள், கதவைத் திறக்க, கண்ணில் படுகிறது நேர் எதிரில் இருந்த கடலில் இறங்கும் கடும் மின்னல்.

ஒரு கணம் கடலே மின்னலானது போல் அப்படி ஒரு மிரட்டலான காட்சி! அவ்வளவுதான் அவசரமாய் அனிச்சையாய் அருகில் இருந்தவனை பற்றி இழுத்தாள் “ஐயோ இதுலல்லாம் நான் உங்கள் வெளிய விடமாட்டேன்”

இவர்கள் அறை என்பது குட்டி வில்லா போலத்தான், அதன் முன் சின்னதாய் ஒரு போர்டிகோ போல் இருந்தாலும் இவளுக்கு இந்தக் காட்சியைக் காணவும் நடுங்கிப் போய்விட்டது.

“ஹே லூசு” என ஒரு ஆறுதல் சிரிக்க சிரிக்க வருகிறது முதல் நொடி இவளவனிடம் இருந்து.

“அதென்ன” என அடுத்தும் எதோ சொல்ல வந்தவன் தான், ஆனால் எத்தனை நாட்கள் மின்னலிலும் மழையிலும் இவன் வீடின்றி வெட்ட வெளியில் படுத்திருப்பான், அப்போது யார் காட்டினார்களாம் அக்கறை? ஆனால் இன்று மழைக்குள் கால் வைக்க விடாமல் கட்டி இழுக்க இவனுக்கே இவனுக்கென ஒரு இதயம் துடிக்கிறதே!

“நான்னா உனக்கு அவ்ளவு முக்கியமா வேணி?” என அப்போது கூட அவளிடம் கேட்க நினைத்துதான் அவளை நோக்கித் திரும்பினான்.

ஆனால் இவனுக்கான காதலை ஏந்திக் கொண்டு, எங்க இவள மீறி வெளிய போய்டுவானோ என்ற பரிதவிப்பையும் வைத்துக் கொண்டு நின்ற அந்த கண்களைக் கண்டதும் எது செலுதித்தியதெனத் தெரியவில்லை, அவளை மொத்தமாய் அணைத்துக் கொண்டான்.

அவனை பற்றியல்லவா பதறிக் கொண்டிருந்தாள், ஆக தன்னைப் பற்றி எதுவும் எண்ணத் தோன்றாமல் அவன் மீதுதான் பாய்கிறது சின்னவள் கவனம். அவன் என்ன உணர்கிறான் என்றெல்லாம் தெரியவில்லை அவளுக்கு, ஆனால் இவள் தோளில் முகம் புதைத்தவன் தேங்க்ஸ் என்ற விதத்தில் கடந்த காலத்தின் எதோ ஒன்று அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது போலும் என புரிகிறது அவளுக்கு. அதில் அவனுக்கு ஆறுதல் சேர்க்கவே நினைக்கிறது இவள் எண்ணம்.

அதற்குள் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என உணர்ந்தவனாக அவசரமாக விலகிக் கொண்டான் அவன் “சாரி வேணி, எதோ ஞாபகம், வெரி சாரி” என அவன் விலக,

அவன் இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்பதற்கே அவனை இழுத்து அணைத்துக் கொள்ளலாம் என்று வருகிறதே இவளுக்கு! என்ன சொல்வாளாம் இவள்?! உண்மையில் அது சாதாரண மனித நாகரீகம் என்றாலும், அவள் கடந்த காலம் இதெல்லாம் முத்தென்றும் ரத்தினமென்றும் விலையேறிய சுபாவமாக புரிய வைத்திருக்கிறதே!

ஆசையில் பார்த்துக் கொண்டிருக்கவில்லைதான், ஆனாலும் அணைக்க் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே எனப் புரிய, “அ.. அது நான் பாத்ரூம்ல மாத்திப்பேன், நீங்க உள்ள வாங்க” என அறைக்குள் அவனை வர வைத்து கதவை பூட்டிவிட்டு குளியலறைப் பார்த்துச் சென்றுவிட்டாள்.

அடுத்த பக்கம்