துளி தீ நீயாவாய் Final 2 (3)

அவ்வளவுதான் தன் கையால் அழுத்தமாய் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக தன் அழுகையை அடக்கிப் போட்டுவிட்டாள் வேணி.

தன் அனைத்து செயல்களாலும் இன்று பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது அவன் என்ற ஒன்று இதற்குள் அவளுக்குள் ஏறி இருந்ததால், அவன் ஒற்றை அதட்டலில் இவள் அடங்கிச் சுருள,

அவனோ அவள் அரண்டு போய் வாயை மூடிய வகையில் இன்னுமே நைந்து போய்விட்டான். அப்படி மிரளும் அளவுக்கு என்ன விஷயம் இருந்திட முடியும்? அதுவும் இவனிடத்தில்? அந்த வகையிலா இவன் அவளை நடத்திக் கொண்டிருக்கிறான்? என்று ஓடுகிறது இவன் மனம்.

இரண்டு நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டு நின்றவன், “சரி போய் படு” என்க,

“நான்” என சுற்றுமுற்றும் அவனுக்கு இடம் பார்த்துக் கொண்டே, “இங்க இருக்கலாமா? இல்ல வெளிய போய்டணுமா?” என வாசல் பார்க்க, இவனைப் பார்த்து இவ்வளவு பயப்படுகிறாள் எனும் போது இவன் வேறென்ன செய்ய?

வேணிக்கு ரொம்பவுமே மனம் உறுத்திப் போகிறது! பொதுவாகவே அவனுக்கு தனியாய் இருப்பது என்பது சுத்தமாக பிடிக்காது, அதுவும் அவன் பலபல வருடங்களாக தன் வீட்டில் கூட தனியாகவே வாழ்பவன் அல்லவா, அது அவனுக்கு எவ்வளவு பிடிக்காத விஷயம் என கடந்த மாதங்களில் இவளுக்குத் தெரியும்.

பகல் முழுவதுமே அலுவலக பணிகளை கவனிப்பவன், மாலையில் இவளை சந்திக்க வந்துவிட்டு, தொழிற்சாலையில் இரவு ஷிப்ட்டும் உண்டு என்பதால் இரவு அங்கு போய்விடுவான். கண் சொருகும் அளவு தூக்கம் வந்த பின் தான் வீட்டுக்கு கிளம்புவது வழக்கம். அப்படி ஒரு நிலையில் கார் ஓட்டுவதற்காக இவள் திட்டிய திட்டில் அவன் தொழிற்சாலையிலேயே அந்த இரைச்சல்களுக்கு மத்தியில் தங்கத் துவங்கினானே ஒழிய வீட்டுக்கு சீக்கிரம் வர விரும்பவே இல்லை.

“கல்யாணத்துக்கு அப்றம் பார், டான்னு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன், அதுவரைக்கும் என்னை விட்டுடேன்” என்பான்.

இதில் இப்போது அவனை எப்படி தனியே போ என்பாள் இவள்? அதோடு அவன் இல்லாமல் இவள் மட்டும்தான் என்ன செய்யப் போகிறாள்?

ஆக “என்னப்பா நீங்க? ப்ளீஸ் இங்கயே இருங்க, என்ன விட்டுட்டுப் போகாதீங்க” எனதான் வருகிறது இவள் வார்த்தைகள்,

அவ்வளவுதான் சட்டென முகத்தில் ஒளியேற, முழு இலகுநிலைக்கும் மொத்த மகிழ்ச்சிக்குமே வந்துவிட்டான் அவன்.

“போய் படுடி குட்டி கழுத” என வருகிறது அவனது ‘செல்லமே’ வகை வார்த்தைகள்.

வேணிக்கு தலை வால் புரிந்ததாமா என்ன? ஆனாலும் அவன் சிரிக்கும் நிலையில் இருக்கிறான் என்பதே இதமாய் பட, போய் அவசரமாக படுக்கையில் ஒரு பக்கம் படுத்துக் கொண்டாள்.

அவன் அடுத்த பக்கமாக வந்து படுத்தான்.

எப்போது அவள் இவனை உடனிருக்கச் சொன்னாளோ, அப்போதே அவளுக்கு சின்னதாய் ஏதோ குழப்பம், மத்தபடி இவன் மீது எந்த வகை பயமும் இல்லை, முழு மனமாகவே அன்பு கொண்டிருக்கிறாள் எனப் புரிய, அதில்தான் அவன் மகிழ்ச்சிக்கு வந்தது.

‘நாளைக்கு பவி அண்ணிட்ட பேசினா சரியாகிடுவா, அதுக்கப்பறம் என்ன விஷயம்னு கேட்டுக்கலாம்’ என்ற வகையில் இன்றைய விஷயத்தை எடுத்துக் கொண்டவன், அடுத்து வந்த நேரங்களில்

“செம்ம சந்தோஷமா இருக்கு, முதல் முதலா  என் ரூம்ல என் கூட இருக்க ஆள் இருக்கே” எனத் தொடங்கி சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு

“ரெண்டு நாள உன்ட்ட பேச கூட எனக்கு டைம் கிடைக்கலையா, நைட் நான் ஃப்ரீயாகுற நேரத்துக்கு நீ தூங்கியிருப்ப, நீ என் மேல கோபத்துல இருக்கன்னும் தெரியும், என்னமோ போல இருந்துச்சு, அதனால தூக்கமே சரி கிடையாது, ஆனா இப்ப நீ பக்கத்துல இருக்கியா, நிம்மதியா இருக்கு, நல்லா தூக்கம் வருது, உனக்கு எதாவது கஷ்டமா இருந்தா யோசிக்காம என்னை எழுப்பிடு” என முடித்து சீக்கிரமே தூங்கிப் போனான்.

இவை எல்லாவற்றையும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கேட்டுக் கொண்டு படுத்திருந்த இவளுக்குத்தான் தூக்கமே வரவில்லை.

இதில் மறுநாள் காலை வேணி விழிப்பு வந்து இறங்கி வரும் போது தான் மட்டுமாக விழித்து எழுந்து வந்துவிட்ட ரிஷா குட்டியை ஒரு கையில் ஏந்தியவனாக குழந்தைக்கு பால் காய்த்துக் கொண்டிருந்த நரேன்,

இவள் அவசர அவசரமாய் அவனுக்கு உதவ என அங்கு வரவும், “நோ நோ முதல்நாள் என் பொண்டாட்டிக்கு என் கை  காஃபிதான்” என வெகு இயல்பாய் அவளை எதிர்கொண்டான்.

அப்போது மட்டுமல்ல, அடுத்து வந்த நாட்களுமே அவன் இவளை இப்படியே இயல்பாகவே ஏற்று நடத்தினான். அவன் நினைத்தது போல் இவள் போய் எங்கே பவியிடம் பேச? ஆக இவள் பவியிடமும் பேசவில்லை, அவனிடமும் மனம் திறக்கவில்லை.

ஆனால் அவனோ அவளாக எதையும் சொல்லாத வரை இயல்பாய் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என முடித்திருந்தான். அதாவது அவளாக இவனிடம் வந்து மனம் திறக்கும் அளவுக்கு ஒரு சுமூக நிலையை அவளுக்குத் தர வேண்டும் என எண்ணினான். இவன் அரட்டி அவள் வாய் பொத்தியது போல் இந்த பிரச்சனையை இவன் கையாண்டு விடக் கூடாது என்ற கவனம் அது.

தேனிலவுக்கு என பல நாட்கள் விடுமுறை எடுத்திருந்தவன், அடுத்த இரண்டு நாட்களில் அலுவலகம் செல்லத் துவங்கினான். எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ள வேணி மனசு சரியானதும் ஹனிமூன் போவானே, அப்ப லீவு வேணுமே அதுக்காக இது.

ஆனால் வேணியிடம் அவள் விடுமுறையை ரத்து செய் என்றோ செய்யாதே என்றோ எதுவும் சொல்லவில்லை. ‘அவளாவே முடிவெடுக்கட்டும், என்னதான் செய்றான்னு பார்ப்போமே’ என்ற வகை அணுகுமுறை இவனது.

“இப்போதைக்கு நம்ம ட்ரிப் போஸ்ட்போன் ஆகுதுல்ல, அதனால இன்னைக்கு ஆஃபீஸ் கிளம்புறேன், நீ என்ன செய்யப் போற? ஆஃபீஸ் போகணும்னாலும் போ, இல்ல என் கூட நம்ம ஆஃபீஸ் வேணாலும் வா, ஆனா வீட்ல தனியா இருக்க மட்டும் என்னால விட முடியாது” என்ற இவனது கேள்விக்கு வேணி இவனோடு கிளம்பி வந்துவிட்டாள்.

அவளுக்கு அவளது விடுமுறையை ரத்து செய்யும் சிந்தனையே கிடையாது. அப்படியானால் அவனோடு என்றுமே இணைந்து வாழப் போவதில்லை என்று முடிவெடுப்பதாக அல்லவா அர்த்தம்? எனத் தோன்ற கொடூரமாய் மிரண்டாள்.

ஆனால் அவனோடு ஒன்றிணையவும் மனம் பயந்து செத்தது.

மொத்தத்தில் அவன் மீது உயிர்காதல், இத் திருமணம் மீது கடும் மரியாதை, ஆனால் அவனோடு இணைய தைரியமில்லை என அலைக்கழிந்தாள். இப்படி இவள் ஒட்டாமல் விலகாமல் படுத்துவதில் அவன் நிலை என்னாகுமோ என நலியவும் செய்தாள்.

அடுத்த பக்கம்