துளி தீ நீயாவாய் Final 2 (2)

இருந்த 21 படிகளை கடந்து நரேனின் அறைக்குள் நுழையும் முன் இரண்டு நூற்றாண்டுகளே கடந்துவிட்ட உணர்வு இவளுக்கு. தத்தளிப்பின் பாத்திரத்தை அதன் அடி ஆழம் வரை குடித்துச் சிதைந்து கொண்டிருந்தாள்.

அறைக்குள் நுழையவும் கண்ணில் படும் அலங்காரமும் பூ வாசமும் திகீர் என அடிவயிற்றில் பயத்தை மட்டுமே தருகின்றன.

இதில் “ஹாய் வேணிப் பொண்ணே” என இவள் காதுக்கு அருகில் சொல்லியபடி இவளுக்குப் பின்னால் வந்து நின்றான் அவளவன்.

எதிர்பாரா இதில் இவளுக்குத் தூக்கி வாரிப் போடும்தானே!

“ஹேய் என்ன பயம் இங்க?” என அவன் பேசிய குரலில் இவள் பயந்து கொண்டிருக்கும் வகை ஆசை கூட இல்லை. வெறும் வெண்ணிற உற்சாகம் மட்டுமே மண்டிக் கிடந்தது. கூடவே நட்பும் உரிமையும்.

இதில் தன் பரிதவிப்பு சற்றாவது குறையாதா என ஏக்கமாய் ஏங்கிய இவளுக்கு விடை ஏமாற்றமே! கை விரல்கள் மரத்துப் போயிருப்பதை உணரத் துவங்கினாள்.

“இந்த பாட்டு கேட்டுருக்கியா வேணிமா?” அவன் கேட்ட பின்தான் அங்கு எதாவது பாட்டு ஓடுகிறதா என தேடவே செய்கிறது இவளது செவிகள். ஏதோ இசை வழிந்து கொண்டிருப்பது புரியவும், ஏனோ தன் நிலையை நினைத்து இன்னுமாய் மிரட்டிக் கொண்டு வருகிறது அவளுக்கு.

“முன்னமே கூட பழைய பாட்டுல்லாம் கேட்க மாட்டேன், ஆனா இது எப்பவோ காதில் விழுந்தப்ப என்னமோ சட்டுன்னு உன் ஞாபகம் வந்துச்சு, அதுல இருந்து  பிடிச்சுப் போச்சு, நினைவெல்லாம் நித்யான்னு மூவி நேம்” என்றவன்,

நீதானே என் பொன் வசந்தம்,

புது ராஜ வாழ்க்கை உன் சொந்தம்

என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்

உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்” அழகாகவே ரசித்துப் பாடிக் காட்டினான்.

“சும்மா உன்னை வெல்கம் செய்றதுக்குத்தான், மத்தபடி நீ போட்ட போடுல நான் சினிமா பார்க்கதையே விட்டுட்டேன்னு சொன்னனே அது 100% நிஜம்” சிரிப்பு துடிக்கும் குரலில் அவன் பேசிக் கொண்டு போக,

இவளுக்கோ இது எதிலும் மனம் சென்றால்தானே! கழுத்து வெட்டப்பட வரிசையில் காத்திருக்கும் ஒரு வகை பீதிதான் பிரளயமாய் இவளை பிய்த்தெறிந்து கொண்டிருக்கிறது!

நரேன் இவளை அப்படியெல்லாம் ரோஹனோடு சேர்த்து யோசித்துவிட்டால்.. ஐயோ என்னால் தாங்கவே முடியாதே!!

இதுவரை இவள் பின் நின்றிருந்த இவளவனோ இவளது ஒற்றைக் கரம் பற்றி “எப்படி இருக்குது தெரியுமா? எனக்கே எனக்குன்னு என் வீட்ல ஒரு உறவு இருக்குன்னு நினைக்கவே!” என உச்ச உவகையில் சொன்னவன்,

“அதுவும் நீ என் கூடன்னு நினச்சுப் பார்த்தா நம்ப கூட முடியல, எக்சைட்மென்ட்ல செத்து கித்து போய்டுவனோன்னு இருக்கு” என்றபடி பின்னிருந்து இவள் இடையில் கையிட்டு ஒற்றைக் கையால் மெல்லமாய் வளைத்துக் கொண்டான்.

இவள் தலை சுமந்த ஜாதிமுல்லைக்குள் அவன் முகம் பதிக்க, பெண்ணவள் பிணமாகிட மாட்டேனா என மௌன ஓலமாய் பிராத்தித்துக் கொண்டிருந்தாள்.

“இப்படி பூ அடிக்கடி வை என்ன?” மனதுக்குப் பட்டதை அவன் பேசிக் கொண்டிருக்க,

வேணிக்கோ நிற்கவே திடமின்றிப் போவது போல் நிலை, மயக்கம் வருதோ?

“ஏய் மாநாடே என்ன நீ? பயந்துகிட்டா இருக்க?” அணைத்திருந்தவன் அல்லவா, எங்கு இவன் அணைப்பின் உணர்ச்சி வேகத்தில் அவள் தேகம் நடுங்குவது இயற்கையோ என முதல் சில நொடி புரிந்திருந்தவன், அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை இதற்குள் உணர்ந்துவிட்டான்.

அவனைப் பொறுத்தவரை அவள் இயல்பாக இவர்கள் திருமணத்தை அதன் ஆரம்ப பேச்சு முதல் இப்போதுவரை ஏற்றிருக்கிறாள், கையாண்டிருக்கிறாள், நேற்று கூட அணைக்கவா என்றதற்கு இன்னும் ஒரு நாள்தானே எனச் சொல்லியிருக்கிறாள், ஆக அவளுக்கு நடப்பவையில் மறுப்பு இருக்கும் எனத் தோன்றவே இல்லை.

ஆக இப்போதும் கூட அவளது பயத்துக்கான ஆறுதலுமே கூட இவனாகத்தான் இருக்க முடியும் என்ற வகைப் புரிதலில், இவன் புறமாய் அவளைத் திருப்பி, மீண்டுமே அணைத்துதான் கொண்டான் இருகைகளால்.

சின்னதாய் நெற்றி முட்டி, மெல்லியமாய் அவள் பக்கவாட்டு நெற்றியில் இதழ் பதித்து, அவள் செவியில் இதழருச “ஹேய் வாலு, நீ உட்காருன்னா உட்காந்து எழும்புன்னா எழும்புற அப்பாவி நான்னு உனக்கு நல்லாவே தெரியும், அப்றமும் என்ன பயம்?” என கெஞ்சலும் கொஞ்சலுமாய் சீண்ட,

இதில் அவள் இலகுவாவாள் என இவன் எதிர்பார்த்ததுக்கு நேரெதிராய் அவளுக்கு கண்ணில் நீர் வருவதும், அவள் இன்னுமே நடுங்குவதும், இன்னுமாய் நிலைக் கொள்ளாது தவிப்பதும் இவனுக்குப் புரிய,

சட்டென அவளைவிட்டு விலகிவிட்டான்.

உண்மையில் வேணி எக்கசக்கமாய் காயப்பட்டது இந்த நொடிதான். ஏற்கனவே இருந்த பயத்தோடு, அவனை காயப்படுத்துகிறோமோ? அவனுக்கு கோபம் வந்துட்டோ? இவள பிடிக்காம போய்டுமோ? அவன் வாழ்க்கையையும் கெடுத்துட்டனா? என என்னவெல்லாமோ மனதில் வந்து குத்திக் கொண்டு விழ,

இதற்கு மேல் எதை யோசிக்கவும் முடியாமல், என்ன செய்யவென்றும் தெரியாமல் வாய்விட்டு அழ ஆரம்பித்துவிட்டாள் அவள்.

“ஹேய் என்ன ஆச்சு வேணி?” என அவன் தவித்ததோ “வேணிமா என்னன்னு சொன்னாதான எனக்கு புரியும்?” என அவன் கெஞ்சியதோ அவளுக்கு அழுகை வேகத்தில் கவனத்தில் படவே இல்லை.

ஆனால் சில நிமிடங்கள் அவள் அழுவதை செய்கையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அழுகை குறையவே காணோம் எனவும்,

“போதும் வேணி, முதல்ல அழுகைய நிறுத்து” என அவள் கவனத்தை திருப்ப அதட்டியதும்,

“இங்க உனக்குப் பிடிக்காதது ஒரு துரும்பு கூட நடக்காது” என வாக்கு கொடுத்ததும் அவன் எரிச்சல் படுகிறான் என்ற வகையில் அவளுக்குப் புரிந்தது.

அடுத்த பக்கம்