துளி தீ நீயாவாய் Final 2 (10)

ஆனால் உண்மையில் அந்த நிகழ்வில் நரேன் எந்தச் சூழலில் இப்படி செய்தான் எனப் புரிய, நரேனுக்கும் SP பரிசுத்தனுக்கும் நல்ல புரிந்துணர்வும் மரியாதையும் ஒருவர் மீது ஒருவருக்குத் தோன்ற, அன்றிலிருந்து நரேன் SPபரிசுத்தனின் தம்பி எனவே அனைவரும் நினைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் நட்பு வளர்ந்திருக்கிறது.

இதில் இன்னும் அழகிய விஷயமாக நரேனுக்கு வேணி மீது காதல் தோன்றியிருக்கிறது. ஆனால் இப்படி சிறை சென்ற பின்னணி வரை வைத்துக் கொண்டு, இந்த கனவை வளர்ப்பது தவறு என நினைத்த நரேன்,

தன் தகுதியை வெகு பெரிதாய் வளர்த்துக் கொண்ட பின் SPபரிசுத்தனோடு இதைப் பற்றி பேசிப் பார்க்கலாம், மற்றபடி இதை வேணியிடம் கூட வெளிப்படுத்தக் கூடாது என முடிவு செய்து கொண்டான்.

அதனால் தன் மெஷின் டிசைனிங் கனவில் வெகுவாக கவனம் செலுத்தி இத்தனை முன்னேற்றமும் கண்டிருக்கிறான். சன்ஷைன் என்ற அவர் கம்பெனியின் பெயர் கூட இளவேனில் என்ற வேணியின் முழுப் பெயரை குறிக்கிறதுதானே!

ஆனால் நரேனே அறியாத விஷயம் வேணியும் நரேனை விரும்பியதுதான்.

ஒரு கட்டத்தில் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை கண்டு கொண்ட பரிசுத்தன், தன் தங்கை வேணியிடமும் நரேனிடமும் இது பற்றி பேச, அழகாய் நடந்தேறி இருக்கிறது திருமணம்’ இது நரேனின் மனைவி அவரது நெருங்கிய வட்டத்தினருக்கு தெரியப்படுத்திய செய்தி

மீடியாவில் இப்படி ஒரு கதைதான் ட்ரென்ட் ஆகிக் கொண்டிருந்தது. ஈர பேனாக்கி பேனை பேயாக்கின்னு சொல்வாங்களே, அதுதான இப்பல்லாம் மீடியாவோட வேலையே! ஸ்பைஸியா ந்யூஸ் வேணும், மத்தபடி அது உண்மையா வேணும்னு யாரு கேட்டா?

ஆக இப்படி ஒரு கதை சுத்தல். படிக்க படிக்க ஜோரா இருக்குல்ல?

அதைப் பற்றி பலரும் இவனது கம்பெனி பக்கத்தில் மகிழ்ச்சியும் பாராட்டுமாய்?!!! பதிவிட்டிருந்தனர். அப்ப இருந்தே லவ் பண்ணி, பாசத்துக்காக ஜெயிலுக்கு கூட போய்ட்டு வந்து, இப்ப தன்னை ப்ரூவ் பண்ற அளவுக்கு வளர்ந்து நின்னு கல்யாணம் செய்தா அது ட்ரூ லவ் தானே?!! அதுக்கு பாராட்டணும்ல?!!! அப்படி பல பாராட்டுக்கள் இவர்களுக்கு பதிவாகி இருந்தது.

அதாவது மிரட்டலாய் ஆரம்பித்த விஷயம் புஸ்வானமாய் முடிந்திருந்தது.

கட்டிலில் குறுக்காக படுத்து லேப்டாப்பை பார்த்திருந்த அவனுக்கு மேல் ஏறி படுத்து அவன் கன்னமோடு கன்னம் ஒட்ட, அவன் லேப்டாப்பில் விஷயத்தை வாசித்துக் கொண்டிருந்த வேணி

“வாவ் நரேன் பையா என்னை லவ் பண்ணி இத்தன பேர கவுத்திருக்க போல, அதுவும் எனக்கே தெரியாம” என ஆரவரித்துக் கொண்டிருந்தாள் எனில்,

“எனக்கும் கூடத்தான் தெரியாது” என்ற அவனோ “ஆனா இன்னைக்கு நீ ஆஃபீஸ் போகல, அது மட்டும் நல்லா தெரியும்” என்றபடி அவளை தன் வசத்துக்குள் கொண்டு வர, தேனிலவை விட்ட இடத்திலிருந்து கொண்டாட துவங்கியது இவர்கள் உலகம்.

அதான் பிரச்சனை எல்லாம் முடிஞ்சாச்சே!!

இன்னும் ஒரு வருடம் முடிந்திருந்தது! அது ஒரு சனிக் கிழமை. வார நாட்களில் வேணியின் அலுவலகம் அருகில் இருக்கும் அப்பார்ட்மென்டில் தங்குவதும், வெள்ளி இரவே இவர்களது சொந்த வீட்டுக்கு வந்துவிடுவதும் இத்தனை நாளின் வழக்கம்.

வீட்டின் வரவேற்பறையில் தலைக்கு பின்னாக இரு கைகளையும் மடித்து வைத்தபடி அவன் படுத்திருக்க, அவனை அப்படிப் பார்த்தாலே கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்கத் தெரியாத இவள், அவன் மார் மீது சரிந்தபடி அவன் கன்னத்தில் ஒற்றை விரலால் உழவு செய்து கொண்டிருந்தாள்.

“ஏன் நீ தாடி வளர்க்க? வச்சிருந்தியே அந்த மூனு நாள் ஷேவ் செய்யாத கெட்டப் அதுதான் பிடிக்குது, இது பிடிக்கல” இவள் கம்ளெய்ன்ட் வாசிக்க,

இதிலெல்லாம்  எப்பவும் இவள் சொல்வதை மட்டுமே நூறு சதவீதம் செய்து வைப்பவன், இன்று ம் என உடன்படாத பதிலைத் தர,

“ஏன்பா என் மேல எதாவது கோபமா?” என கேள்வி கேட்டு,

“ம்கூம் கோபம் வந்தா இப்படியா இருப்பீங்க, பேசாம இருந்து மனிஷிய கதற விடுவீங்களே?” என மறுக்க,

அவன் பார்வை மாறுகிறதுதானே?!

“அரை மணி நேரம்னாலும் கெஞ்ச விடுவீங்கதான்” என தன் பிடியில் நின்றுவிட்டு,

“ஆனா இது அதுவுமில்ல, மூனு நாளா பார்த்துட்டுதான் இருக்கேன், ஓவரா செல்லம் கொடுக்கீங்க” என்றவள் “ஆனா ரொமான்ஸே இல்ல” என்றாள் சீண்டலாய்.

அவளது வலக்கையை பற்றி எடுத்து உள்ளங்கையில் மென்மையாய் இதழ் பதித்தவன், அதுவே பதில் போல அடுத்தும் மௌனம் காக்க,

“என்ன நினச்சுகிட்டு இருக்கீங்க நீங்க? நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்” என்றபடி இவள் முழு மொத்தமாய் அவன் மீதே ஏறிப் படுத்து அவன் நாடியைப் பற்றப் போனால்,

அவனோ வழக்கமாய் இதை வெகுவாக விரும்புபவன், இன்று வெகு கவனமாய் அவள் வயிறு  அவன் மீது அழுந்தாதவாறு திருப்பிவிட்டு அவளை தன் மீது சாய்த்துக் கொள்ள,

ஒரு நொடி புரியவில்லை எனினும் பளீரென புரிந்துவிட்டது அவளுக்கு. வேக வேகமாக நாள் கணக்கை பெண் மனம் கணக்கிட,

“போங்கப்பா இதெல்லாம் ஓவர் கற்பனை, இன்னும் டெஸ்ட் எதுவுமே எடுக்கல” என மறுத்தாலும் சந்தோஷத்தில் விம்மிக் கொண்டுதான் வருகிறது இவளுக்கு.

அவனுக்கோ முகம் மென்மைபட்டு வர, கை நீட்டி இவள் முகத்தில் சரியும் முடியை விலக்கி விட்டான்.

‘அதெல்லாம் இது ப்ரெக்னென்சிதான்’ என அவன் செயல் அதாகவே இவள் மனதில் மொழி பெயர்க்கப்பட,

ஏதோ ஒன்று துள்ளாமல் அடங்குகிறது இவளுள்.

நாள் கணக்கு வரை பார்த்து மனதில் வைத்திருப்பவன், அதுவும் இந்த வீடை இத்தனை பெரியதாய் கட்டியதற்கு அவன் எப்போதும் சொல்லும் ஒரே காரணம் மீரட் அண்ணா போல் நாலு குழந்தைங்க வேணும்னு நினச்சேன் என்பதே! இரண்டு சொந்த குழந்தைகள், இரண்டு தத்து குழந்தைகள் என்பது அதன் பொருள்.

அத்தனை ஆசை உள்ளவன் முதல் குழந்தையின் வரவை இப்படியா எதிர்கொள்வான்?

மெல்லவே புரிகிறது அவன் தாடி வளர்க்கவென வளர்க்கவில்லை. ஆனால் தன்னைப் பேணிக் கொள்ள கூட எண்ணம் வராத ஒரு ஆர்வமின்மை அது, ஆண்கள் பொதுவாக சோகத்தை வெளிப்படுத்தும் வகை. சில நாட்களாகவே அவன் இயல்பாய் இல்லையோ?!!

“ஏன்பா நீங்க டெலிவரிய நினச்சு பயப்படுறீங்களா என்ன?” புரிந்த விஷயத்தை இவள் நம்ப முடியாமல் கேட்க, அவனுக்கோ கண்ணில் இதற்குள் நீர் கோர்க்கிறதா என்ன? அதை இவளிடம் காட்டாமல் இருக்க முகத்தை வேறுபுறம் திருப்பி சமாளித்தான்.

“என்னா இது? சின்னப் புள்ளத்தனமா இருக்கு” என வடிவேலு தொனியில் இவளோ கிண்டல் செய்தவள். அந்த அளவுக்கு இது அர்த்தமற்ற பயம் என காட்ட முனைந்தவள், பின் அவனது நாடியை கையால் பற்றி தன் புறமாய் திருப்பி

“உனக்கு மட்டுமில்ல, எனக்கும் உன் கூட திகட்ட திகட்ட வாழணும்னு அவ்ளவு ஆசை இருக்கு, அப்படில்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன்” என்க,

இது அவன் வார்த்தைகள்தானே ஆக புரிந்து கொள்வான் என இவள் நினைக்க, அவனோ விலுக்கென இவளைப் பார்த்தவன், பின் இவளே நொறுங்கிவிடுவது போல அணைத்துக் கொண்டான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கவங்களுக்கு இந்த ஏஜ்ல டெலிவரி சேஃபா இருக்கும்னுதான்பா சொல்வாங்க, நாந்தான்  அவ்ளவு சந்தோஷமா இருக்கனே, டெலிவரில பிரச்சனைலாம் எதுவும் வராது” என இவள் சொல்லி வைக்க, அதில் அவன் இலகுவாகிவிட்டான் எனதான் சொல்ல வேண்டும்.

அல்லது அவள் சந்தோஷம் கெடக் கூடாதென அப்படி மாறிக் கொண்டானோ என்னவோ?

அதன் பின் அவனது வழக்கமான சீண்டல், நோண்டல், கொஞ்சல், கெஞ்சல் என எல்லாவற்றிற்கும் திரும்பிவிட்டான். வழக்கமாகவே இவளுக்கு என்ன பிடிக்கும் எனதான் எதிலுமே அவன் யோசிப்பது போல் படும், இது கர்பகாலம் வேறா, தலையில் தூக்கி சுமக்காத குறைதான்.

அடுத்த பக்கம் (துளி தீ நீயாவாய் இறுதிப் பகுதி )