துளி தீ நீயாவாய் Final 2

மறுநாள் திருமணம், அதன் பின் வரவேற்பு என எல்லாம் முடிய இரவு வெகுவாகவே தாமதமாகிவிட்டது. ஆக புதுமண தம்பதியரை மணமகன் வீட்டில் சென்று விட என உடன் வந்த வேணியின் குடும்பத்தவர் உட்பட அனைவரும் சற்று நேரத்தில் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

ப்ரவியும் பவியும் குழந்தைகளுடன் இன்று நரேன் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

“என் கல்யாணம்னா என் அம்மா அப்பாவாவது என் வீட்ல இருக்கணும் அண்ணா, அதனால நீங்களும் அண்ணியுமாவது கண்டிப்பா அன்னைக்கு எங்க வீட்ல இருக்கணும்” நரேன் இப்படிச் சொல்லி முன்பே சம்மதிக்க வைத்திருந்தான் அவர்களை.

ஆக மற்றவர்கள் கிளம்பிச் செல்லவும், வீட்டின் சமையல் அறையில் போய் பால் காய்ச்சத் துவங்கிய பவி, அவளுக்கு அருகில் வந்து நின்று கொண்ட வேணியிடம் “குளிக்கணும்னு தோணிச்சுதுன்னா குளிச்சுட்டு சல்வாரோ சேரியோ உனக்கு எது வசதியாபடுதோ அத மாத்திக்கோ நீ” என்க,

அதே நேரம் “என்னண்ணி பால் காய்க்கீங்களா?” என்றபடி இரு கைகளையும் தேய்த்துக் கொண்டு, வெகு ஆவலாக, ஆனால் அதை அடக்கி காமிக்க முனைந்த உடல் மொழியோடு, சமையலறைக்கு உள்ளே வந்த நரேன்,

பவிக்கு அடுத்து நின்ற வேணிக்கும் அடுத்து அவசரமற்ற அவசரத்தோடு போய் நின்று கொண்டு “ப்ளீஸ் ப்ளீஸ் நோ சல்வார், அந்த டார்க் பிங்க் சில்க் சாரி ஒன்னு எடுத்தமே,   அதக் கட்டு ப்ளீஸ்ஸ்ஸ்” என அவள் காதுக்குள் முனங்கினான்.

வெகு வெகு ரகசியக் குரல்தான். ஆனாலும் அடுத்து நிற்கிற பவிக்கு அரை குறையாகவாவது  கேட்கத்தானே செய்யும்.

கண்டும் காணாதது போல் அவள் அடுப்பை கவனிக்க, வேணி இப்போது பவியிடம் ஒரு தலையாட்டலுடன் கிளம்பிப் போனாள்.

“அண்ணி அப்படியே அண்ணாக்கும் ஒரு காஃபி போடுங்களேன், அவங்களுக்கு பிடிக்குமே” நரேனின் அடுத்த ரெக்கமென்டேஷன் இது. ப்ரவிக்கு இரவு தாமதமாகும் நாட்களில் காஃபி அருந்த பிடிக்கும். அந்த ஞாபகத்தில் இதைச் சொன்னான்.

“ஏன் உங்க அண்ணா தூங்க வேண்டாமா என்ன? இத்தனை மணிக்கு காஃபி குடிச்சா அப்றம் காலைல வரைக்கும் தூக்கம் வராதே, பால்தான் இந்த டைம்க்கு சரி, தூக்கம் ஒழுங்கா வரும்” சொல்லியபடி பவி இப்போது  குவளைகளை எடுக்கப் பார்க்க,

“ஹான்? அப்படின்னா எங்களுக்கு ஏன் அண்ணி பால்? எங்க ரெண்டு பேருக்கும் காஃபி தான தரணும், எங்களுக்கு நீங்க காஃபியே தாங்க” அவன் இருந்த தலைகால் புரியா நிலையில்,  அவசரமாக இதைச் சொல்லிவிட,

பவி என்ன சொல்வாளாம்?

வந்த சிரிப்பை சற்றும் தடை போடாமல் சிந்தியபடி, அருகில் கையில் கிடைத்த ஒரு  சின்ன அட்டைப் பெட்டியை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தவன் தலையில் ஒரு தட்டு

“அச்சோ அண்ணி, டங்க் ஸ்லிப், சாரி சாரி” என அவனை யாரும் இதுவரை பார்த்தே இராத ஒரு ஈஈஈஈ பாவத்தில் நரேன் இங்கு வார்த்தையால் காலில் விழுந்து கொண்டிருக்க,

“ப்ரவிப்பா இங்க பாருங்க இந்த  பையன் வர்ற வரத்த தாங்க முடியல” உள்ளுக்குள் வெடித்துக் கொண்டு வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு இங்கிருந்தே வரவேற்பறையில் இருந்த ப்ரவியிடம் ஒரு கம்ப்ளெயிண்டும் கொடுத்தாள்.

“ஹ ஹா சரி விடு, அவன் என்ன காஃபிதானே கேட்கான்? போட்டு கொடுத்துடு” போலீஸ் காதாகிட்டே புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டு இருந்தாலும் ப்ரவி சரியாகவே கவனித்திருக்க,

அடுத்து என்ன தொடர்ந்ததோ, குளியலறைக்குள் சென்று கதவை மூடும் வரை இதெல்லாம் காதில் விழ, வேணி கடுமையாய் இறுகிப் போய் நின்றிருந்தாள்.

நரேன் என்ன வகை ஆவலில் இருக்கிறான் என இவளுக்குப் புரியாமலா?

திருமணத்தில் எனக்கு உறவாகிறவன்தான் இறைவன் எனக்கே எனக்கென தரும் என்னவன். என்னவனோடு வாழ எனக்கு முழு உரிமையுமிருக்கிறது, அவனுக்கும் என்னிடம்தான் எல்லா உரிமையுமிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் இவள் இந்த உறவுக்குள்ளேயே வந்தது.

அதோடு இந்த அடிப்படையில் நரேனுக்கு தன் இதயம் கொடுத்து, இப்போது அவனோடு இணையும் அளவிற்கு காதலுமே இவளுக்கு இருக்கிறதுதான். சற்று முன் வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் வரையுமே இது நெருடலான விஷயமாகப் படவில்லையே! விழா ஏற்பாடுகளின் போது  இன்றைய இரவு ஞாபக படுத்தப்பட்ட பொழுதுகளில் கூட இயல்பாய் வரும் ஒரு படபடப்பும் ஒரு வெட்க துவளலுமாகத்தான் மனம் எதிர்வினையாற்றி ஏற்றுக் கொண்டிருந்தது. அதோடு நரேனுக்கும் இவள் கடந்த காலம் தெரியும் என்பதால் ஏமாற்றுவது போன்ற எந்த குற்ற உணர்ச்சியும் கூட கிடையாது.

ஆனாலும் இவளுக்குள் இப்படி ஒரு எண்ணம் இப்போது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. கூடலின் நேரத்தில் இவள் அவனுக்குள் கரையும் தருணத்தில் இப்படித்தான் முன்பும் ரோஹனோடு இணைந்திருப்பாளோ என ஒரு எண்ணம் நரேனுக்கு வந்துவிட்டால் அது எத்தனை கொடூரமாயிருக்கும் என ஒன்று இவளுக்குள் வந்து நிற்கிறது கேள்வியாய். இதில் கழுத்து வரை வந்து நின்று கத்தி கத்தி துடிக்கிறது இதயம். கத்தி குத்துப் பட்டது போல் வெட்டித் துடிக்கிறது உயிர். பிரளயம்.

யாரிடம் இவள் இதைப் பேச? பவியிடம் போய் பேசலாமா என சில நேரம் தோன்றுகிறதுதான். அவளிடம் எல்லாவற்றையும் பேசியதுண்டே இவள்! ஆனால் என்னவென இதைச் சொல்ல? பவியுமே இதற்கு என்ன தீர்வைச் சொல்லிவிட? எப்படி யோசித்தாலும் கொடூர வாதையும் கொக்கரிக்கும் அருவருப்பு மட்டுமே மிச்சம். வலிக்கிறதே!

இதெல்லாம் யோசிக்காமல் எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன்? ஏன் ஒத்துக் கொண்டேன்? என ஒன்று அடியாய் அடித்துக் கொள்கிறது என்றால் நரேன் இன்றி ஒரு வாழ்க்கையா என காதல் நரம்போ தீயலும் கருகலுமாய் எரிகிறது. இந்த ஆறு மாதகாலமாக அவனோடுதான் வாழ்வென அவனும் இவளுமாக ஒருவர் மீது ஒருவர் எத்தனை காதலை வளர்த்திருக்கிறார்கள்!!

என்ன செய்ய முடியும் இவள் இப்போது? என்னதான் செய்ய வேண்டும் தற்போது?

இயந்திரமாய் குளித்து, அவன் கேட்ட உடைக்கே மாறி, இவள் வெளியே வர, எதிரிலிருந்த மேஜையில் கண்ணில் படுகிறது பெரிய பந்தாய் வைக்கப்பட்டிருந்த ஜாதிமுல்லை. கண்டிப்பாக நரேனோட வேலையாகத்தான் இருக்கும் என புரிகிறது இவளுக்கு. இன்னுமே இடுக்கமான குழிக்குள் சில நூறு அடிகள் பிடியற்று போய் விழுகின்றது பெண்மை!

இவளைப் பார்க்கவும் சிறுமுறுவலுடன் அந்த பூவை எடுத்து இவள் பின்னலிட்டிருந்த தலையில் வைத்துவிட்டபடியே பவி ”நரேன்ட்ட பேச ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷம் சிரிச்சுடப் போற, அதுக்கு ஏன் இவ்ளவு டென்ஷன்” எனச் சொல்ல,

அது அப்படியே பலிக்கட்டும் என துடிதுடிக்கும் இதயத்துடனேயே இவள் மாடிக்குப் படியேறினாள். கால் துவளும் வகையில் விழுந்துவிடுவோமோ என்ற நிலையில் இவள்.

அடுத்த பக்கம்