TTN End 6

சல் சல் என சத்தம் வருமளவு சலங்கை கொத்து ஒன்றை கீ செயினாய் இவள்தான் அதில் மாட்டி வைத்திருக்கிறாள். “என்னதுடி இது? கேர்ளிஷா இருக்கு” என்று சொல்லிக் கொண்டாலும், “கார் உனக்கு கீ எனக்கு, அதான்” என்ற இவளது பதிலில் இதைத்தான் கீ செயினாய் இப்போது வரை நரேன் பயன்படுத்திக் கொண்டிருப்பது. அதன் சத்தம் அது.

இவளுக்கென ஒரு கார் வாங்கித் தருவதாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான். இவளது சம்பளத்திலேயே இவளால் வாங்கவும் முடியும்தான். ஆனால் “அந்தக் கார்ல நான் எங்கயாவது தனியா போய்ட்டு வரலாமா பாஸ்?” என்றால் அவனிடமிருந்து பதில் வராது.

அவள் அலுவலக நேரம் தவிர அவளை எதற்காகவும் பிரிந்து இருக்க அவனுக்கு முடியாது.

“சாரி அண்ணி, இதைச் சொல்றதுல எனக்கு எந்த வெட்கமும் கிடையாது, லீவு நாள்ல என்னால என் பொண்டாட்டிய பார்க்காம 20 நிமிஷம் கூட இருக்க முடியாது” என இப்படியே சொல்லி இவர்கள் பெண்களாக ஷாப்பிங் செல்லும் போது கூட கார் ஓட்டியாக அவனும் வருவான்.

இவளுக்கு இவளது நட்பு குழாமோடு நேரம் வேண்டும் என்பதை மதித்து, போகிற இடத்தில் தள்ளிப் போய், தனியாய் உட்கார்ந்து கொள்வான் என்றாலும் எப்போதுமே வருவான்.

ஒரு காலத்தில் இவள் கெஞ்சக் கதற தெருவில் விட்டுப் போனான் ஒருவன், இப்போது இப்படியாய் இவளவன்.

எந்த ஒரு தவறுகளும், குற்றங்களும் அதன் ஆழ அகலத்துக்கு ஏற்ப தாங்க முடியா அழிவுகளை பிறப்பிக்கின்றன. ஆனால் தன் வழிகளை சரி செய்கிறவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கை நலமாய் மலரத்தான் செய்கிறது.

இப்படியாய் ஒரு உணர்வு பாய, பெருமூச்சொன்று கிளம்புகிறது இவளிடம். அதில் ஆறுதலின் சில கோடுகள்.

நரேனோ இப்போது வீட்டைப் பூட்டி முடித்தவன் வழக்கமாக வீட்டுச் சாவி மாட்டப்படும் இடத்தில் அதை வைக்கப் போக,  இந்தக் காட்சியில், ஏதோ ஒரு கோணத்தில் முன்பு ப்ரவி வீட்டுக்குள் வரவே பயந்து போய் நரேன் நின்ற கோலம் ஞாபகத்தில் வருகிறது இவளுக்கு.

அந்நிலையிலிருந்து இன்று ப்ரவியின் வீடு, குழந்தை என அனைத்தையும் இவனை நம்பி விட்டுவிட்டு போகும் அளவு காலம் மாறி இருக்கிறது!

இப்போதைய இவள் வலி கூட மாறித்தான் போகும் போலும்! எங்கோ தோன்றிக் கொள்கிறது.

ஒரு வருடத்திற்குப் பின்

நரேனின் தோளைப் பிடித்து இப்புறம் ஒரு திருப்பு, மறுபுறம் ஒரு திருப்பு.. அவனை முழு ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. திருமண நாளுக்கென இவள் வாங்கிக் கொடுத்திருந்த உடையை அணிந்திருந்தான் அவன்.

“செம்மயா இருக்கீங்க பாஸ்”  பாராட்டினாள்.

“அதை தனியாக வந்து சொல்லவும் தக்க சன்மானம் வழங்கப்படும்” என வருகிறது அவனது பதில்.

“பாப்பா இருக்கப்ப என்ன பேசுறீங்க நீங்க?” இவள் கண்டிக்க,

அவர்கள் பேசுவது என்ன புரிந்ததோ, இதற்குள் வேணி கையிலிருந்த அவர்கள் மகள் எட்டு மாத  நிறைமதியும் அவளது அப்பா தோளை தொட்டுத் தொட்டு பார்த்தது.

“எங்க நிறா குட்டிக்கும் அப்பாவப் பார்க்கணுமா?” இப்போது அவன் தானே தன்னை சுற்றி சுற்றி காண்பித்தான்.

“நல்லா இருக்கனா நிறா குட்டி?”

அதற்கு பதிலே போல் தூக்கு என கை தூக்கிப் போட்டுக் கொண்டு அவனிடம் பாய்ந்தது பிள்ளை.

குழந்தையை கையில் வாங்கியவன் என்ன சொல்ல வந்தானோ, அவனது மொபைல் அழைக்க, அடுத்த சில நிமிடங்களில் குழந்தையை இவளிடம் கொடுத்துவிட்டு அவன் கிளம்பிப் போய்விட்டான். முகம் விழுந்து போனது இவளுக்கு.

இவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இன்று மூன் லைட் டின்னர். அதாவது மூன் லைட் கெட் டுகதர். ப்ரவி, கருண், மீரட் குடும்பமாக இவர்கள் வீட்டிற்கு வருவதாய் ஏற்பாடு.

இப்போதோ பெண்கள் அனைவரும் வந்து சேர,  சோர்ந்திருந்த மனதுக்கு அவர்கள் அருகாமை சற்று நம்பிக்கையாய் இருக்க, விருந்து ஏற்பாடுகளை மாடியில் நன்றாகவே செய்து வைத்தாள் இவள்.

நேரம் செல்லச் செல்ல இன்னுமே ஆண்கள் யாரும் வரவில்லை, ஆக குழந்தைகளை மட்டும் சாப்பிட வைத்து, விளையாட்டு, ஆட்டம் பாட்டம் எல்லாம் முடித்து தூங்கவும் போட்டாயிற்று.

இப்போது நரேனைத் தவிர மற்ற மூன்று ஆண்களும் வந்து சேர, அவர்களை வரவேற்றுவிட்டு, வீட்டின் ஒரு அறைக்கு வேக வேகமாக ஓடினாள்.

அதே நேரம் அங்கிருந்த ஒரு அலமாரி போன்ற அமைப்பை திறந்து கொண்டு உள்ளிருந்து வெளி வந்தான் நரேன்.

அவன் வருகைக்காக அங்கே காத்திருந்த வேணியைக் கண்டவன், அவளை இழுத்தணைத்தபடி “ரைட் சூப்பரா இருந்துச்சே! வர்றியா ஒரு குட்டி ரைட்?” என கண் சிமிட்டினான்.

அடுத்த பக்கம்