TTN End 5

அழுத்திக் கொண்டிருந்த அத்தனை பாரமும் அவனுக்கோ இதில் கழன்று விழ, அவனுமே அவளை இறுக்கிக் கொண்டான். இவன் கைக்குள் வந்துவிட்டாளே! இது போதும். இவனோடான வாழ்வை நேசிப்பவளுக்கு சோகம் சுமக்க வராது.

வெகு நேரம் இவன் கைகளுக்குள் அழுது கொண்டிருந்தாள் வேணி. உலகத்துக்கு வேண்டுமெனில் அது பாவக் குழந்தையாய் படலாம், செத்தது நல்லதென குழந்தையை நியாயம் தீர்க்கத் தோன்றுமாய் இருக்கலாம். ஆனால் தாய்க்கு அப்படி இருக்கும் என்பதில்லையே!! அதுவும் இப்போது இன்னொரு குழந்தையை சுமந்து கொண்டிருப்பவளுக்கு, அதன் மீது அத்தனை பாசம் ஆசை, கனவு வளர்த்து வைத்திருப்பவளுக்கு, இறந்து போன குழந்தையும் இதே போன்ற ஒரு பாசம் கொள்ள வந்த சேயாகத்தானே தெரியும்! அழுது கரைந்தாள்.

குழந்தை ஆணா பெண்ணா என நரேனிடம் எப்படி கேட்பாள்? இவள் கணவன் அல்லவா அவன்? குழந்தையை எங்கே புதைத்தான்? இல்லை எரித்திருப்பானோ? ஐயோ தெய்வமே என் பிள்ளைக்கு நெருப்பு சுட்டிருக்கக் கூடாது? தாய் மனம் எங்கெல்லாம்தான் தறி கெட்டு ஓடுகிறது. ஆனால் வாய்விட்டு அழக் கூட அடைக்கிறதே!

அதுவே இவள் கணவனுக்கு கஷ்டமாகலாம் இல்லையா? இன்னொருவன் பிள்ளைக்காய் இவள் அவனெதிரில்.. ஐயோ என் தலை வெடித்துப்போனால் என்ன?!!

அடைத்துப் போய் சத்தமின்றி சுருண்டு போய் கிடந்தாள் படுக்கையில். அன்றுமட்டுமல்ல அடுத்த நாளும் கூட.

“ப்ளீஸ்பா ஆஃபீஸ்ல போய் என்னால நார்மலா இருக்க முடியும்னு தோணல” என்றவளை அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லி இருக்கவில்லை. ஆனால் அவனும் இவளை விட்டு அகலவில்லை.

முறையாய் நேரத்துக்கு சாப்பிட மட்டும் வைத்துவிடுவான். தொண்டையில் குத்திக் கொண்டு இறங்கினாலும் மறுப்பே சொல்லாமல் இவளும் விழுங்கி வைத்தாள்தான். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வேண்டுமே! இதற்காவது இவள் ஒழுங்கான அம்மாவாக இருந்தாக வேண்டுமே!

அடுத்த நாள் காலையும் இவள் படுக்கையிலேயே கிடக்கவும் “கிளம்பு வேணி, போய் அண்ணிய பார்த்துட்டு வரலாம், கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ” என இவளை பவி வீட்டுக்கு அழைத்தான் நரேன்.

அவனிடம் மருந்துக்கு கூட எதையுமே மறுக்க தைரியமெல்லாம் இல்லை இவளுக்கு இப்போது. அதற்கெல்லாம் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் வருகிறதே!.

மௌனமாக இயந்திர கதியில் அவள் கிளம்புவதையே பார்த்துக் கொண்டிருந்த நரேன், ஒரு கட்டத்தில் இவளிடம் வந்தவன் இழுத்துப் பிடித்து அணைத்துக் கொண்டான்.

“டி வேணிப் பொண்ணே, என்னைக்கும் நான் உன்னோட நரேன்தான். போக வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லு” காய்ந்து போயிருந்த இவள் கன்னங்களில் கள்ளமற்ற முத்தங்களிட்டு இதயத்தில் ஈரம் பிறப்பித்தான்.

மீண்டுமாய் இவள் அழத் தொடங்கியது இங்குதான்.

இப்படியொரு கணவன் இருக்கும்போதே இப்படி இருக்கிறதே இந்த காரியம், இதையெல்லாம் வெளியே பேசவே முடியாத பெண்ணுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என எங்கோ போகும் யோசனையில் மிரட்சிதான் மிச்சமிருக்கிறது இவளிடம்.

“அ.. அது பா.. பாய் பேபிடா வேணிமா, நீ எழும்பவே அடுத்த நாளாச்சா? அதான்.. அங்க நம்ம அந்த மலைவீட்டு பக்கம்தான் பரி செய்துருக்கு. இப்ப நம்ம பாப்பா பிறந்த பிறகு உனக்கு ட்ராவல் செய்ய முடியுறப்ப அங்க போகணும்னா போகலாம்” இதை அவன் சொல்ல, அதற்கு மேல் அந்தப் பேச்சு தொடரும் வண்ணம் இவள் எதையுமே செய்யவில்லை.

நரேனுக்கு மட்டும் அழுத்தமாய் இரண்டு முத்தங்கள் வைத்தாள்.

அன்று பவியின் வீட்டுக்கு போகத்தான் செய்தார்கள். நரேன் சொன்னதற்காக என்று இல்லை அவளுக்குமே அது தேவைப்பட்டது.

இவர்கள் சென்று சேர்ந்த நேரம் ப்ரவி தரண் எல்லோரும் கிளம்பிப் போயிருக்க, தயாளன் பெங்களூர் சென்றிருக்க, பவி ரிஷா குட்டியை கூட்டிக் கொண்டு எங்கோ புறப்பட படி இறங்கிக் கொண்டிருந்தாள்.

இவர்களைக் காணவும் “ஹை எங்க நதேன் மாமா” என்றபடி பாய்ந்து வந்து நரேன் கைகளில் ரிஷா ஏறிக் கொள்ள,

பக்கத்திலிருக்கும் பள்ளி தலைமை ஆசிரியரைத்தான் காணக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவி, சற்று நேரம் அவள் இவர்களிடம் பேச,

“நீங்க போய்ட்டு வாங்க அண்ணி, நாங்க சும்மாதான் வந்தோம்” என்ற நரேன் விளக்கத்தில் ரிஷாவை இவர்களிடம் விட்டுவிட்டு சீக்கிரம் வருவதாகச் சொல்லி புறப்பட்டுப் போனாள் பவித்ரா.

இங்கு வரவேண்டும் என கிளம்பி வந்துவிட்டாளே தவிர இங்கும் மனம் எதிலும் ஒட்டவே இல்லையே இவளுக்கு.

எதையோ வெறித்தபடி இவள் நின்றிருக்க, தான் பார்வை படும் இடத்தில் இருப்பது, தரண் பிறந்த அன்று அவனைக் கையில் ஏந்தியபடி ப்ரவி சிரிக்கும் புகைப்படம் என்பது மெல்ல கவனத்தில் வருகிறது.

பொதுவாய் ப்ரவி அளந்து சிரிக்கும் ரகம். ஆனால் அந்த புகைப்படத்தில் அவன் மொத்த முகம் மட்டுமல்ல அவன் தலை முதல் கால் வரை பூரித்துச் சிரித்தது போல் ஒரு உணர்வு பதிவாகி இருக்கும். குழந்தையை கையில் வாங்கிய சிலிர்ப்பு அவன் உடல்மொழியில் அத்தனை வெளிப்படும். அதற்காகவே பவி அதை பெரிதாக்கி வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது.

அதில்தான் இப்போது வேணியின் பார்வை போய் நிற்க, தரண் பிறந்த காலம் பற்றி எங்கோ போகிறது இவள் மனம்.

பவியின் முதல் கர்ப்பம் எதிர்பாராத ஒன்று என இவளுக்கு ஓரளவுக்கு அப்போதே புரிந்ததுண்டு. ஆனால் அக் குழந்தை எப்படி வரவேற்கப்பட்டது என்றும், அவர்கள் குடும்ப உறவுக்குள் இருந்த பிணக்கங்கள் கூட அதில் தீருமளவு ஒரு பிறப்பென்பது எப்படி கொண்டாடப் பட்டது என்பதும் இவளுக்குத் தெரியும்.

அதே எதிர்பாரா கருவுறுதல் திருமணத்திற்கு வெளியே நடை பெறும் போது எத்தனை கொடுமையாகிப் போகிறது?! .

பாவமென ப்ரத்யேகமாக எதுவுமில்லை. தான் செய்யும் போது தித்தித்து, கண்ணுக்குத் தெரியாத தெய்வத்துக்கு மட்டும் பிடிக்காத விஷயமென பாவத்துக்கு அர்த்தமும் இல்லை. செய்வோரை  அழித்துவிடும் காரியங்களுக்குத்தான் தவறு, குற்றம், பாவம் என்றெல்லாம் பெயரிருக்கிறது போலும்.

எத்திசையிலெல்லாமோ புரிந்து வைக்கின்றது பெண்ணிவளுக்கு விஷயங்கள்.

விருப்பமான ஆணுடன் விரும்பிய நேரத்தில் உடலுறவு கொள்ள ஒரு பெண்ணுக்கு உரிமை இருக்கிறது, அதுதான் பெண் சுதந்திரம், அப்படிப்பட்ட பெண்மையே தன்னம்பிக்கையானவள், அதற்கு எதிரான எண்ணமெல்லாம் பெண்ணடிமைத்தனம் என்றெல்லாம் பலவித முழக்கங்கள் இப்போது காதில் விழுகின்றனதான்.

உண்மையில் ஒரு ஆண் பெண்ணோடு இணையும் போது அவள் மனதில், உடலில் வாழ்க்கையில், ஏற்படும் சிதைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் அந்த ஆணும் பொறுப்பேற்க வேண்டும் என்ற வகையில் திருமணம் என்பதாவது பெண்ணடிமைத் தனம் என்ற நிலையிலிருந்து  விலகியதென சொல்ல முடியுமே தவிர,

ஒரு ஆணின் ஆசைக்கோ அல்லது இருவரின் ஆசைக்காகவோ ஒரு பெண் ஆணோடு இணைந்து மனம், உடல், வாழ்க்கை என எல்லாவற்றிலும் சிதைவாளாம், அதற்கு ஆண் பொறுப்பேற்க கூட மாட்டானாம், இதை பெண்ணியம், பெண் சுதந்திரம், தன்னம்பிக்கை என சொல்லிக் கொள்ள வேண்டுமாம்.

என்ன வகை பிரசங்கம் இது?

கர்பத்தடை சாதனங்கள்தான் இருக்கின்றனவே, அப்புறம் என்ன அழிவு பெண்ணுக்கு? என அடுத்த ஒரு அறிவான கேள்வி கூட எழுப்புகிறார்கள். கருவுறுதல் மட்டுமல்ல கர்பத்தடை சாதனங்களும் பெண்ணுடலை, பின்னமாய் பிணமாய் சிதைக்கும் என்பதை சௌகரியமாக சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள்.

ஹார்மோன் நிலைப்பாடு பாதிக்கப்படும் போது மனோவியல் பிரச்சனை முதல், புற்றுநோய், உதிரப் போக்கு நில்லாமல் உயிரே போகும் நிலை என்பது வரை என்னதெல்லாமோ நடந்து கொண்டே இருக்கின்றனதான்.

புகை பிடிப்பது கேடு என பேச விளையும் சமூகம் கூட இதைப் பற்றி வாய் திறக்க விரும்புவதில்லை. ஏனென்றால் பாதிக்கப்படுவது பெண்ணாக மட்டுமே இருந்தால் யார் பேசப் போகிறார்கள்?

பல் பிடுங்க அனஸ்தடிக் பயன்படுத்தும் சமூகம் சிசேரியன் செய்தால் “பிரசவ வலி தாங்க மாட்டாளோ இவ”? என சீறிக் கொண்டு பாயும்..

“ஸ்ல்ல் ஸ்ல்ல்”

கலீரென கேட்ட சத்தத்தில் நடப்புக்கு வந்தவள் அனிச்சை செயலாய் திரும்பினால், ஒரு கையில் ரிஷாக் குட்டியை தூக்கியபடி மறுகையால் நரேன் வீட்டை பூட்டிக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து எடுத்திருந்த கார் சாவியை கீழே போட்டிருக்கிறாள் ரிஷா.

அடுத்த பக்கம்