TTN End 4

இதெல்லாம் நிரந்தரமாக மறைத்து வைக்கும் விஷயமல்ல, இந்த வயதில் இது புரியவில்லை எனினும் வயது வரும்போது அவளுக்கே புரிந்துவிடும்தானே! என்பது அவனது எண்ணம்.

அப்படி வயது வரும் போது, அவளது மன நிலை மற்றும் சூழல் இப்போதை விட இன்னும் சிறந்ததாக இருக்குமாயிருக்கும். இப்படி பவி வீட்டை மட்டும் நம்பிக் கொண்டு அனாதையாய் நின்று கொண்டிருக்கும் இன்றைய நிலையை விட, படித்து முடித்து வேலைக்குச் செல்லும் வயதில் இதைப் புரிந்து கொண்டால் கூட எப்படியும் இப்போதைவிட திடமாக இந்த விஷயத்தை எதிர் கொள்வாள்தானே!

இப்போதைக்கு விஷயத்தை மறைப்பதனால் இவன் ஒன்றும் யாருக்குமே கெடுதல் செய்யவில்லையே! என்ற ஒரு முடிவுக்கு வந்தான். அதோடு இதுவும் காலம் வேணியின் மீது காட்டும் இன்னொரு கருணையாகப்பட்டது அவனுக்கு.

ஆக வேணியின் உடல் நலம் தேவையான அளவு தேறும் வரை அவளை அங்கே வைத்திருந்துவிட்டு, அவள் அப்போதைக்கு பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய குறிப்புகளை மட்டும் அவளுக்கு அழுத்தி அழுத்திச் சொல்லிவிட்டு, போய் சரணடைந்துவிட்டான்.

அடுத்து திருமண பேச்சு வரும்போதுதானே அவன் அவளிடம் பேசிப் பழகியது, அப்போது அவளுக்கு இந்த பிரசவ விஷயம் இன்னும் தெரியவில்லை என்பது இவனுக்குப் புரிய, ஏழு வருடங்கள் முன் நடந்த ஒரு நிகழ்வு, எங்கோ தூரத்து விஷயமாய், இப்போது முன்பை விடவுமே வெகுவாய் முக்கியதுவம் குறைந்ததாய்தான் படுகிறது. யாருக்கும் எந்த வகையிலும் தேவையே இல்லாத செய்திதானே இப்போதும் என்றிருக்கிறது.

இப்போது மட்டும் இதை அவளிடம் சொல்வதால் என்ன நல்லது நடந்துவிடும்? அவளுக்குத் தெரிய வேண்டும் என்றிருந்தால் அதாகவே தெரியட்டும், அப்போது இவன் அவளை ஆற்றித் தேற்றிக் கொள்வான், எப்படியும் இவன் மனைவியாய் இவன் கைகளுக்குள்தானே வரப்போகிறாள் என இருந்துவிட்டான்.

அடுத்துமே இந்த ஒரு வருட காலத்திலும் அவளுக்காய் இந்த விஷயம் புரிதலில் வரவே இல்லை. ஆக இவனும் சொல்ல முற்படவில்லை.

இதில் தான் அவள் இவர்கள் குழந்தையை கருவிலேந்தும் நாள் வந்து சேர்ந்தது. ஒரு பக்கம் இவனுக்கு அதீத மகிழ்ச்சியாக இருக்கிறதெனில், மனைவி மீது வெகுதீவிர காதலும், இவனது பீறிடும் பிள்ளைப் பாசமும் சேர பொட்டிலடித்தாற் போல் ஒரு கேள்வியும் வந்து நிற்கிறது.

இப்ப பிரசவம்னு வர்றப்ப எப்படியும் முன்னால நடந்தது பிரசவம்னு அவளுக்கு புரிஞ்சிடும் தானே! அப்படி பிரசவ நேரத்தில் முந்தைய பிரசவம் பற்றி அறிய வந்தால் அந்த அதிர்ச்சியை அவள் மனமும் உடலும் தாங்குமா??

இதை ஏன் நீ முதலிலேயே சொல்லவில்லை என இவனிடம் முறித்துக் கொண்டு தூரத்தில் போய் அவள் உட்கார்ந்து கொண்டால் கூட அவனுக்கு இந்நிலையில் தாங்காது!

இதில் முந்திய பிரசவத்தில் குழந்தை வேறு இறந்திருக்கிறது! ஆக இப்போது இந்த மன உளைச்சலில் குழந்தைக்கு எதாவது ஆகிவிட்டால்? ஏன் வேணிக்கே எதாவது நேர்ந்திட்டால்? என்றெல்லாம் இவனுக்குள் பிரளயமே நடந்தேற,

இரண்டு மூன்று நாளாய் அதைத்தான் அவளிடம் காட்டத் தெரியாமல் பிசைபட்டுக் கொண்டிருந்தான்.

வேணி சொன்ன உன் கூட திகட்ட திகட்ட வாழணும்ன்ற ஆசையில் இவன் உருகிப் போனது இதனால்தான். இன்னுமாய் பயந்தும் போய்விட்டானோ? அவள் சந்தோஷமாக இருந்தால் பிரசவம் பாதுகாப்பானது என்றதை அவனுக்கு முழுக்கவுமே நம்பத் தோன்றியது. போன பிரசவத்தில் அவளுக்கு கிடைக்கவே இல்லாமல் போனது அதுதானே!

ஆக அவளை முழு சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது அவனுக்கு மூச்சுக் காற்றைப் போல முக்கியமானதாய் தோன்றியது இச்சமயம்.

அதனாலயே இப்போதும் விஷயத்தை அவளிடம் சொல்லப் பிடிக்கவில்லை.

வேணியின் கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவமுள்ள மருத்துவர்கள் சிலரை இவனுக்குத் தெரியும். பெண்கள் புணர் வாழ்விற்கான அமைப்புகளில் இணைந்து பணியாற்றும் அவர்களில் ஒருவரிடமே வேணியை கர்பகால கவனிப்புக்கென அழைத்துப் போனான். அதற்கு முன் 17 வயதில் இப்படி கைவிடப்பட்ட நிலையில் அவளே அறியாமல் ஒரு பிரசவம் அவளுக்கு நேர்ந்ததுண்டு என்ற அளவில் அவரிடம் விஷயத்தை தனிமையில் பேசியும்விட்டான்.

விஷயத்தை புரிந்து ஏற்றுக் கொண்ட அந்த மருத்துவருக்கு இவன் மீதும் ஏக மரியாதையே! “பிரசவம் அப்போ தெரியாம போனது சராசரியான விஷயம் கிடையாது. அது போல நீங்க சொல்லாம விட்டதும் பெக்யூலியரா இருக்குது.

மத்தபடி நீங்க பயந்துகிறது எல்லாம் அவசியமே இல்லாத பயம். ஸ்டில் உங்க வைஃப் ஸ்ட்ராங்கா இருக்கப்ப இதைச் சொல்லணும்னு நினச்சீங்கன்னா, ப்ரெக்னென்ஸில கொஞ்சம் வீக்கான காலம்னா முதல் மூனு மாசம்தான், அடுத்து உங்களுக்கு தோணுற டைம் உங்க வைஃப்ட்ட சொல்லுங்க, நானா எப்பவும் எதையும் சொல்ல மாட்டேன்” என்க

அவளுக்காய் தெரிய வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற பழைய நிலையை இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறான் அவன். இதில் இன்று தெரிய வந்திருக்கிறது விஷயம் இப்படியாய் வேணிக்கு.

தன் முகத்தில் விழும் நீரின் உணர்வில் கண் விழித்தவள், இவளுக்கான அக்கறையில் தவித்தபடி “வேணிமா, வேணி, ப்ளீஸ் வேணி” என்றபடி அவள் முகத்தில் நீர் தெளித்துக் கொண்டிருந்த தன்னவனைப் பார்க்கவும் எதுவும் சொல்லாமல் அழுகையில் மட்டுமாய் வெடிக்க,

“இங்க பாரு வேணிமா, நம்மளால தாங்க முடியாத எதையாவது நாம எதிர்கொள்றப்பதான் மயக்கம் வந்துடுமாம், அதாவது தாங்க முடியாதத நாம அனுபவிக்க வேண்டாம்னுதான் நாம படைக்கவே பட்டிருக்கோம், அதான் கடவுள் அன்னைக்கும் உனக்கு நடந்த எதுவும் உனக்கு தெரிய வேண்டாம், ஏன்னா உனக்கு அதை தாங்க முடியாதுன்னு மறைச்சுட்டார்னு தான் எனக்குப் புரிஞ்சிது.

அதான் எப்ப உன்னால தாங்க முடியுமோ அப்ப தெரியட்டும்னு நான் இருந்துகிட்டேன், அன்னைக்கு சரண்டரான அப்ப கூட ஹாஸ்பிட்டல்லதான் உன்னை கொண்டு போய் விட்டேன்,

உனக்கு வயிறு வலின்னதும் நான் கூப்ட்டு பேசின டாக்டர் இது இப்படி டெலிவரியா இருக்கும்னு யோசிக்கவே ரொம்ப நேரமாச்சு, அதான் அந்த ஹாஸ்பிட்டல்லயும் அவ்வளவு ஈசியா டெலிவரின்னு யோசிச்சு டெஸ்ட் செய்ய மாட்டாங்க, நார்மல் பீரியட்ஸ் பெய்ன்னு நினச்சு முடிச்சுடுவாங்கன்னு நினச்சேன், இருந்தாலும் அவங்க கண்டு பிடிக்க வாய்ப்பே இல்லைனும் இல்லதானே, இப்படி ஒவ்வொரு இடத்திலும் இது உனக்கு தெரிய வராமலே போய்ட்டு, இப்பதான் தெரிய வருதுன்னா, இப்ப உன்னால இத ஹேண்டில் செய்ய முடியும்னுதான் அர்த்தம் வேணிமா,

You will be Alright,

இதுக்கு மேலயும் நான் மறச்சி தப்பு செய்துட்டேன்னு உனக்கு என் மேல கோபம் வந்துச்சுன்னா, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், தயவு செய்து மன்னிச்சிடு”

படுத்திருந்தவளைப் பார்த்து பரிதவிப்போடு அவன் சொல்லிக் கொண்டு போக இப்போது இரு கைகளாலும் இறுக வளைத்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அடுத்த பக்கம்