துளி தீ நீயாவாய் End

இன்னுமே 5 மாதங்கள் கடந்திருந்தன!

காலையில் இவள் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க, நரேனும் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தவன் “சமத்தா இருப்பீங்களாம், அம்மாவ ஹேப்பியா பார்த்துபீங்களாம், அப்பதான் நீங்களும் ஹேப்பியா இருக்க முடியுமாம். நான் அம்மாட்டயும் ஹேப்பியா இருக்க சொல்லி இருக்கேன் ஓகே, ரெண்டு பேரும் ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு வரணும், சேட்டையெல்லாம் வெளிய வந்த பிறகு நாம ரெண்டு பேருமா செய்வோம் என்ன?” என வழக்கம் போல ஏதோ வயிற்றிலிருக்கும் அவர்களது குழந்தைக்குச் சொல்ல,

வழக்கமாக சல்வாரில் செல்பவள் இன்று அலுவலகத்தில் சின்ன விழாவென புடவை கட்டி இருக்க, அதற்காக சற்று அதிக நேரம் நின்றுவிட்டாளோ? இடுப்பு பகுதி உளைவது போல் இருக்க, ஒரு வகையாய் இடுப்பை பிடித்துக் கொண்டாள்.

இவள் முன் ஒரு காலை மடக்கி முழங்காலிட்டிருந்தவன், இதில் விலுக்கென நிமிர்ந்த வேகத்திலேயே இவள் மிரண்டு விட்டாள் என்றால் “என்ன? என்ன செய்து உனக்கு?” என அவன் பதற,

“அச்சோ ஏன்? ஒன்னுமில்லையே, ஜஃஸ்ட் கொஞ்சம் டயர்டா இருக்காப்ல..” என இவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“டயர்டா இருக்கா வலிக்குதா? ஒழுங்கா சொல்லு” என துருவினான் அவன்.

“ப்ச் வலிக்கல நரேன், ஜஸ்ட் கொஞ்சம் உளையுது, சேரி கட்டினேன்ல..” இதையும் அவன் சொல்லி முடிக்க விடவில்லை.

“வேணி ப்ளீஸ்.. இது போல விஷயத்தில தயவு செய்து  என்ன செய்தோ அதை அப்படியே சொல்லிப் பழகு, இடுப்பு வலிக்கிறப்ப வயிறு வலின்னு சொல்லி வச்சன்னா டாக்டர் கூட கண்டு பிடிச்சுக்க மாட்டாங்க, அப்றம் டைமுக்கு கிடைக்க வேண்டிய ஹெல்ப் கிடைக்காம போய்டலாம், அத தாங்குற சக்தி எனக்கும் கிடையாது, உனக்கும் கிடையாது” அவன் லெக்சரே எடுத்து முடித்துவிட்டான்.

அதிலும் தன் நெற்றியில் கை வைத்து இரு கண்களையும் மூடியபடி அவன் பேச, அவனிடம் தவிப்பு இருந்தாலும் கோபம், கண்டனம் எல்லாம் குரலிலிருக்க, அதுதான் இவளுக்கு முதலில் மனதில் படுகிறது.

அவன் என்றைக்கு இப்படி பேசுகிறவனாம்? அதிலும் கடந்த ஐந்து மாதகாலமாக மானே தேனே வகைப் பேச்சு மட்டும்தான். ஆக இதுவே என்னமோ அவளை பெரிதாக குறை சொன்னது போல் பட,  இவளுக்கு முனுக்கென கண்ணில் நீர் கட்டுகிறது.

“எனக்கு உளையுதுன்னா திட்டுவீங்களா நீங்க?” இப்படி வருகிறது இவளது கேள்வி.

ஆனால் இன்னும் கூட தன் நெற்றியிலிருந்து கையை எடுக்காமல் அப்படியே அவன் அசைவற்று முழங்காலில் நிற்க,

முதல் கணம் நாம அழுதா கூட இவனுக்கு விஷயமில்லையா என குழந்தையாகி முரண்டிய இவள் மனம், அடுத்த நொடிக்குள் ஓராயிரம் ஈட்டி குத்துக்களை ஒரே நொடியில் தன்னில் வாங்கியது.

அவன் ஏதோ ஒரு தாங்க முடியா நினைவில்தான் அப்படி நின்று கொண்டிருக்கிறான் என்பது மட்டுமல்ல, அது என்னவாய் இருக்கும் என்பதும் இவளுக்கு புரிந்துவிட்டதால்தான் இந்த வலி. இவளுக்கு புரிந்துவிடும் என்றும் அவனுக்குத் தெரிய அதிலும்தான் தவிக்கிறான்.

இடுப்பு வலிய வயிறு வலின்னு சொல்லாதன்னு சொல்றானே! அவனிடம் வயிறு வலி பற்றி அவள் சொன்னது ஒரே ஒரு நிகழ்வில்தானே! அந்த அவன் கடத்திய நாளில்!! அப்ப அவளுக்கு வந்த இடுப்பு வலிய வயிறு வலின்னு சொல்லிட்டாளா?!!!

இவளுக்கு அன்று நடந்தது என்ன?!!!!!

பிரசவமா??!!!

அவன் கடந்த காலத்தைப் பற்றி எதையெல்லாமோ பேசி இருக்கிறான் இவளிடம், ஆனால் இன்று வரை எதில் மனம் மாறினான் என சொன்னதில்லையே! கடத்தல் நாட்களில் கடைசி வரை அந்த பேச்சு வருவதையே அவன் தவிர்த்தான் என இவளாக எப்போதுமே கேட்டதில்லை, அவனாக சொல்ல முடியும்போது சொல்லட்டும் என்பது இவள் அணுகுமுறை.

ஆனால் அவனால் சொல்லவே முடியாததற்கு இப்படி ஒரு காரணம் இருக்குமோ?

குழந்தைக்கு ஆசைப்படுபவன் கருத்தரித்தது அறியவும் தாடியல்லவா வளர்த்தான்?

அன்று கடத்திய நாளிலும் இவள் மயக்கம் தெளியவும் மருத்துவர் அது இது என பெரிய விஷயம் போல் அவன் விளக்கம்தானே சொல்ல முயன்றான், கேட்க பிடிக்காமல் இவள்தானே இதையெல்லாம் பேசாதே என வாயடைத்தது!!

புரியப் புரிய எதையும் சிந்திக்க கூட முடியாமல் மயங்கிச் சரிந்தாள்.

வேணிக்கு ரோஹனோடான காலங்களில் கருத்தடை மாத்திரை எடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் 100% வெற்றிகரமான கருத்தடை சாதனங்கள் என எதுவுமே இல்லை என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. அதோடு மாதம் மாதம் 21 நாட்கள் மாத்திரை போடும் வழக்கத்தில் மாத்திரை போட ஒரு நாள் மறந்து போனோம் என்பதைகூட உணர இயலாமல் போகவும் வாய்ப்பு அதிகம்.

இப்படி எதுவோ தவறாகி அவள் கருத்தரித்திருக்கிறாள் என்பதை அவளையோ பவியையோ கூட கண்டுணரச் செய்யாமல் விட்ட காரியம் அவளது முறையற்ற மாதவிடாய்.

கருப்பை சற்று பலவீனமாக இருந்தாலோ, அல்லது சின்ன ஹார்மோனல் குழப்பத்திலோ கூட கரு தங்கிய பின்னும் சிலருக்கு  உதிரப் போக்கு உண்டாக இயலும். இதுவும் வேணிக்குத் தெரியாது.

ஆக அப்படி நேர்ந்த உதிரப் போக்கை அவள் மாதவிடாய் என எடுத்துக் கொள்ள, தங்கிய கரு வளர்ந்திருக்கிறது 6 மாதங்களாய். 20 வயதுகளில் முதல் கரு தரித்தாலே கூட பலருக்கும் 7 மாதம் தாண்டிய பின்புதான் வயிறு தெரிய ஆரம்பிக்கும், இதில் 17 வயதில் உருவத்திலும் ஒன்றும் யோசிக்கும் படி அவளுக்கு மாற்றம் வரவில்லை. சற்றாய் உப்பிய வயிறை, அவளைப் பொறுத்தவரை மாதவிடாயும் வந்து கொண்டிருக்க, கரு என  ஏன் கற்பனை செய்யப் போகிறாள் அவள்?

முதல் கருத்தரிப்பு என வரும்போது எத்தனை மகிழ்வான பாதுகாப்பான மனநிலையில் உண்டாகும் கருத்தரிப்பே கூட 20% பேருக்கு கரு அதாகவே கலைந்துவிடுகிறது, அல்லது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கிறது, அல்லது இதயம் உட்பட எதுவும் உண்டாகாமல் வெறும் தசைத் தொகுப்பாகவே வளர்கிறது என்பது மற்றுமொரு மருத்துவ உண்மை.

இதில் வேணியோ எக்கசக்க மன அழுத்தம், உணவற்ற நாட்கள், அடி உதை என வீட்டில் அடைக்கப்பட்ட காலங்கள், தப்பி ஓடி வருதல், தெருவில் விடப்படல், ஏமாற்றம், எதிர்காலம் என்னவென்றே புரிபடாமல் யாரோ ஒருவர் வீட்டில் தங்கல் என எல்லாம் அனுபவித்தவள் இந்த காலகட்டத்தில்.

அதோடு ஒத்துழையாத ஹார்மோன் நிலையும் இருந்து, உதிரப் போக்கும் நேர்ந்து கொண்டிருந்திருக்க, குறை பிரசவமாக உடல் கருவை வெளியே தள்ள முயன்றிருக்கிறது. அதில் குழந்தை இறந்தும் போய்விட்டது. இதில் ஏற்பட்ட வலியையும் அவள் மாதவிடாய் துவங்குகிறது என நினைத்து வைத்துவிட்டாள்.

அடுத்த பக்கம்