துளி தீ நீயாவாய் 26 (8)

“என் கூட வந்திடுறியா வேணி? உனக்கு பிடிக்கலைனா சொல்லு, இந்த திருட்டு ஏன் என் சுறாவ கூட இதோட இப்படியே விட்டுடுறேன். நம்மட்ட இருக்க பணத்துக்கு, எங்கயாவது தூரமா போய் ஒரு தொழில ஆரம்பிச்சுட்டு அமைதியா உட்கார்ந்திடலாம். நீயும் நானும் மட்டுமா ஒரு உலகம். என் உயிரவிட மேலா உன்ன பார்த்துப்பேன்” என காதல் டயலாக் பேசினான் அவன்.

“நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன பேசுறீங்க? அதான் என்னைப் பத்தி தெரியுதுல்ல உங்களுக்கு? என் வாழ்க்கைக்கும் இன்னொரு கல்யாணம்லாம் ஒரு காலமும் வராது. அதோட இப்ப நாம பேசிட்டு இருக்கது உங்களப் பத்தி. முதல் விஷயம் திருட்டுப் பணம் நிலைக்காது. ஒருத்தன் தான் திருடின பணத்தை அஞ்சு மடங்கா கொடுத்து தீர்க்க வேண்டி வரும்னு இருக்குது பைபிள்ள. எப்படியும் உங்க முன் நிலைய விட பின் நிலைய மோசமாக்கிட்டுத்தான் போகும் திருட்டுப் பணம்.

பைதவே உங்களுக்காக கெட்ட பழக்கங்களை விடணும்னு நீங்க முடிவு செய்யலாமே தவிர, வேற யாருக்காகவும் இதெல்லாம் உங்களால விட முடியாது. தன் கேர்ள் ஃப்ரென்டுக்காக சிகரெட்ட விட்டேன், தண்ணிய விட்டேன்னு சொல்றவன்லாம் அடுத்து என்ன செய்வான்னு எனக்கும் தெரியும்” இவள் வாதாட

“ப்ச் என்ன ஏன் கண்ட நாய் கூட  கம்பேர் செய்ற?” அவன் தன்னை ரோஹன் போல் என்கிறாளே என எரிச்சலாக,

இங்கோ இவளுக்கு இடுப்பில் கோடாரி வெட்டாய் விழுகிறது வலி. “ம்மா!!” வாய்விட்டு வருகிறது அவளது சத்தம்.

அது வரைக்கும் குறைந்து, இப்போது அதீத உச்சத்தில் வெட்டுகிறது வலி என இவளுக்குப் புரிய,

“இ..ங்க பாருங்க.. ப்ரவி சார்க்கு.. உங்களப் பத்தி முன்னமே தெரிஞ்சுதான் இருந்திருக்கு, ஆனாலும் இப்ப வரை உங்கள அவங்க ஒன்னும் செய்யலைதானே! மதுட்ட.. பழகுறது.. அவன் மனசுக்கு நல்லது செய்யும்னு என் காதுபட சொல்லிருக்காங்க தெரியுமா? நீங்க இதெல்லாம்.. விட்டுட்டு வருவீங்கன்னுதான்.. அவங்க நம்புறாங்க! நிச்சயமா சார் உங்கள கஷ்டபடுத்த மாட்டாங்க! பேசாம.. சார்ட்ட போய் எல்லாத்..தையும் சொல்லுங்க, அவங்க உங்களப் பார்த்துப்பாங்க”

இதற்கு மேல் அவனிடம் பேச வாய்ப்பே வராதோ என்று ஒன்று உள்ளுக்குள் தள்ளியதால் இதை படாதபாடுபட்டு சொல்லி முடித்துவிட்டாள்.

ஏனெனில் வலியின் அளவு அவள் இதுவரை அறியாத உயரமாய் இருந்தது. அதோடு மூச்சடைத்துக் கொண்டு வர, அவளுக்குள் ஏதேதோ வயிறு இடை என ராட்சத கை கொண்டு பிசைந்தெடுப்பது போலவும் இருக்கிறது. கடந்த சில மாதமாகவே மாதவிடாய் தறுமாறாய் அவளை வதைப்பது வாடிக்கைதான். ஆனால் இன்றைய அளவு வெகு அதிகம். இத்தனைக்கும் இன்னும் வந்தபாடில்லை. ஒருவேளை இது வேறு எதுவுமோ, நான் செத்துகிட்டு இருக்கனா?  என்ற வகையிலெல்லாம் அழுத்திக் கொண்டு வருகிறது அவளுக்கு. வலியின் அளவு அப்படி.

அன்று ஒருநாள் பவியும் ப்ரவியும் இவளுமாய் உணவு மேஜையில் மதுவையும் இவனையும் பற்றி பேசிக் கொண்ட போது, ப்ரவியும் பவியும் எதோ கண்சாடை செய்து கொண்டதும், கூடவே அந்நேர உரையாடலும் நியாபகத்தில் வர, அன்றைய அவர்கள் பேச்சு இப்போதுதான் புரிகிறது இவளுக்கு. அதைத்தான் அவனிடம் இப்படி சொல்லியிருந்தாள் இவள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்பவனா அவன்?

தரையில் சரியத் துவங்கி இருந்தவளை பாய்ந்து வந்து தாங்கி இருந்தான்.

“ஏ..ஏய் என்னாச்சு வேணி உனக்கு? நான் ஒரு முட்டாள், பெயின் கில்லர் தரேன்னுட்டு.. இருமா இதோ” என மாத்திரை எடுக்கப் போகிறேன் என்பதை குறிப்பிட்ட படி அவன் இவளை கைகளில் அள்ள முயல,

“இ..ல்ல இல்ல..சொ..ன்னா கேளு.. விடு என்ன.. டா..டாய்லட் போணும் எ..னக்கு” அவள் பல்லை கடித்துக் கொண்டு தன் சக்தியெல்லாம் திரட்டி  எழும்ப முயல,

அவள் விருப்பத்துக்கு விட்டுக் கொடுத்து, அவள் எழும்ப மட்டும் உதவி செய்தான். கால் தரையில் பட்டாலே  உயிர் அறுபடுவது போல் வலிக்கிறது என புரியும்படி, படாத பாடுபட்டு நடந்து, இவர்கள் நின்றிருந்த அறையிலிருந்த அட்டாச்ட் பாத்ரூமிற்குள் அவள் செல்ல,

“கதவ பூட்டாத வேணி, நான் இந்த ரூம விட்டு வெளிய போய்டுறேன், கதவ பூட்டி வச்சுகிட்டு மயங்கி எதுவும் விழுந்துட்டன்னா ரொம்ப கஷ்டம்” இவன் இங்கிருந்து சொல்லிக் கொண்டிருக்க,

அவளோ அங்கே கதவை உள்ளே அழுத்தமாக தாழிட்டு பூட்டினாள். அவன் எச்சரித்தது போல சற்று நேரத்திற்கெல்லாம் மயங்கியும் சரிந்தாள்.

எவ்வளவு நேரம் சென்றதென தெரியாது. வேணி மீண்டும் கண் விழிக்கும் போது அந்த அறையின் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.

ஒரு கையில் ட்ரிப்ஸ் வேறு ஏறிக் கொண்டிருந்தது.

தொடரும்…

துளி தீ நீயாவாய் penultimate

 

துளித் தீ நீயாவாய் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி