துளி தீ நீயாவாய் 26 (7)

அடுத்தெல்லாம் நான் ஆரம்பிக்க நினச்ச எல்லா தொழிலுக்கும் முதலீடு இந்த போல குடோன்ல இருக்க ஜாமான்தான். எல்லாரும் திருடிதான் பணக்காரனாகி இருக்க முடியும்ன்றப்ப எவன்ட்ட இருந்து எடுத்தா என்னன்னு எனக்கு வசதியாபட்ட எல்லா குடோன்ல இருந்தும் எடுப்பேன். அது அரைவிலைக்கு போனா கூட நமக்கு லாபம்தானே!” எனச் சொல்லிக் கொண்டு வந்தவன்,

இடுப்பே இடிந்துவிழுந்துவிடும் என்ற அளவுக்கு வலி இருந்தாலும் இதையெல்லாம் கேட்டு அந்த வலியையும் தாண்டி ஆடிப் போய் நின்றிருந்த வேணியை, சட்டென அவளது கைபற்றி அடுத்திருந்த அறைக்குள் இழுக்காத குறையாக கூட்டிப் போனவன்,

அங்கிருந்த சுவரில் அலங்காரத்திற்கு மாட்டப்பட்டிருந்தது போல் இருந்த ஒரு பொருளை சட்டென இழுக்க, சுவர் உயரத்திற்காய் திறந்து நிற்கிறது ஒரு அலமாரி. அதில் இடைவிடாமல் கட்டுகட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது பணக் கட்டுகள்.

“அதனாலதான் இங்க மட்டுமே என் கடவுள் இவ்வளவு இருக்கு” என வருகிறது சில கடிபட்ட வார்த்தைகள் அவனிடமிருந்து.

“இப்ப ஒரு பயல என் மேல ஒரு நகத்த வச்சிட சொல்லு பார்ப்போம். ஊர்ல எவம்னாலும் இடுப்பொடிய குனிஞ்சு கும்புடு போட்டு, எட்டடி தள்ளி நின்னுதான் பேசுவான் தெரியும்ல! அதான் சொல்றேன் காசுதான் கடவுள், ஏமாத்றவன்ட்ட மட்டும்தான் அது தங்கும். நீ சொல்ற நீதி நியாயம்லாம் யூஸ்லெஸ்” என அதுதான் முடிவு போல் ஆதங்கமும் ஆத்திரமுமாய் கர்ஜித்தான்.

பின் அவனுக்கே என்ன தோன்றியதோ? குரலை சாதாரண அளவையும்விட சற்றாய் இறக்கி, “உன் அனுபவம்தான் உன்னை பொறுத்தவரைக்கும் வாழ்க்கை நியதின்னா, என் அனுபவம்தானே என் வாழ்க்கைக்கு நியதியா இருக்க முடியும்? அதனால சும்மா சும்மா அடுத்தவங்கள குற்றவாளின்னு சொல்றத விடு என்ன?” என்று முடித்தான்.

தன் உண்மைகளை அவளால் நியாயமென ஏற்றுக் கொள்ள முடியாது, தன்னை அவளால் விரும்ப முடியாது, என்பதெல்லாம் அவனை எத்தனையாய் வதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டிவிடாமல் அவன் பேச முயல்கிறான் என்பது வேணிக்கு நன்றாகவே புரிகின்றது.

அதோடு நீ குட்ட குட்ட குனிய வேண்டிய நிலையில் இனிமேல் நான் இல்லை என்ற தொனியும் அவனிடம் இருப்பதை இவள் உணரவே செய்கிறாள். அப்படின்னா இனி இவ வாழ்க்கையில் அவன் வரப் போறதில்லைனு முடிவு செய்திருக்கான் போல.

ஆனால் இதெல்லாம் பெரிதாகத் தோன்றும் நிலையிலா அவளிருக்கிறாள்? ரோஹன் கொடுத்த ஒரு சின்ன எமோஷனல் ப்ரெஷர், ஆம் இப்போது யோசிக்க அது வெகு சின்ன ப்ரெஷராகத்தானே படுகிறது?! அதற்கே இவள் மனதில் இருந்த நீதி நியதி கட்டுப்பாடுகளை தாண்டிப் போயிருக்கிறாள் இவள், ஆனால் வாழ்க்கை அவனை எத்தனையாய் அழுத்தி பிசைந்திருக்கிறது, அதன் பிறகும் அந்த கம்பெனிக்காரன் இவனுடைய அஸ்திவாரத்தை திருடும் வரைக்குமே இவன் நல்லவைகளின் மீது நம்பிக்கையோடுதானே போராடிப் பார்த்திருக்கிறான்?!

அவன் மீது பாய்ந்து கொண்டு வருகிறது மரியாதை.

ஐயோ சொந்த அம்மா அப்பாவே அவன இப்படி விட்டுட்டு போயிருக்காங்களே! இவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்?! சூடு போடுவாங்களாமே!! தெய்வமே!!! தனக்கு யாரும் இல்லைன்ற நிலையில் அடுத்தவங்கட்ட இப்படி இழுபடவும் செய்றப்ப அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?!! அதுவும் வெறும் 12 வயசு!! குழந்தையாதானே இருந்திருப்பான் அப்ப!!

அவன் மீதான அனுதாபமும் பரிதாபமும் அலையாய் இவளை இழுத்துச் சுருட்டுகிறது.

ஆனால் இப்போது இவனிடம் என்ன சொல்ல?

ஏதோ பெரிய பெரிய முடிவெல்லாம் எடுத்திருக்கிறான் போலவே!

அவசரபட்டு எதாவது ரொம்ப விபரீதமா செய்துட்டான்னா என்ன செய்ய?

சூடு பட்ட பூனை என்பதால் இந்த காதல் விஷயங்களில் தெளிவாக நிற்கத் தெரிகிறதே தவிர வேணி இன்னுமே 17 வயது பெண்தானே! உணர்ச்சிகள்தானே உச்சத்தில் வரும் இந்த வயதில்! அவனை எப்படி கையாள எனத் தெரியவில்லை அவளுக்கு.

“ப்ளீஸ் ப்ளீஸ் நரேன், ப்ளீஸ் சொன்னா கேளுங்க, உங்க டீச்சர் சொன்னாங்கன்னு சொன்னீங்களே அது போலதான் இருக்கும். நீங்க ரொம்ப பெரிய உயரத்துக்கு போவீங்கன்னுதான் லைஃப்ல இதெல்லாம் வந்துட்டு போல. ஜஃஸ்ட் லாஃஸ்ட் நிமிஷத்துல வலி தாங்க முடியாம தடுமறிட்டீங்க போல. அந்த கம்பெனி இல்லைனா அடுத்த கம்பெனி. இல்லனா நீங்களே அது போல எதாச்சும் ஆரம்பிக்கலாம். ஆனா கண்டிப்பா உங்க டேலண்டுக்கும் குணத்துக்கும் ரொம்பவே பெரிய அளவில் வருவீங்க, அவசரபட்டு இப்ப எதாச்சும் விபரீதமா செய்து வச்சுடாதீங்க, ப்ளீஸ் நரேன்

இவ்ளவு நாள்தான் கஷ்டபட்டாச்சு, இனிமேலாவது நீங்க நல்லா இருக்க வேண்டாமா?” இப்படித்தான் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவள்.

‘ஐயோ கடவுளே எப்படியாவது அவன காப்பாத்துங்களேன்’ என மன்றாடுகிறது உள் மனது.

இதற்கு அவன் கண்களில் வந்த பாவம் என்ன? வேற என்னவாம்? காதல் பொங்கி பெருகி வடிந்தது. அத்தனை மலர்ச்சி அவன் முகத்தில். பிறகு இதெல்லாம் அவனுக்கு வேற என்னதா புரிய?

அடுத்த பக்கம்