துளி தீ நீயாவாய் 26 (6)

அப்போ அங்க திருக்கழுகுன்றத்திலிருந்து நேரே இங்க நெல்லை வந்துடல நாங்க, சென்னைல வேலைக்கு போவம்னு கூட்டிப் போய்ருந்தாங்க மாணிக்கம்பா.  அங்க சினிமாக்கு ப்ராப்ஸ் வாடகைக்கு கொடுக்கிற ஒரு கடையில் பகல்ல வேலை, நைட் ஒரு ஸ்கூல்ல செக்யூரிட்டியா வேலை. இப்படித்தான் சமாளிச்சோம். அப்பதான் அந்த ஃபேட் சூட் தாடியெல்லாம் அப்பாக்கு கிடச்சுது.

அப்றம் சில மாசம் கழிச்சுதான், முதலாளி தேடுறதை ஓரளவு நிறுத்தியிருப்பார்னு ஒரு தைரியம் வந்து நாங்க மாணிக்கம்பாவோட பூர்வீகத்துக்கு வந்தோம்.

இங்கயும் எனக்கு அந்த குண்டு கெட்டப் மற்றும் தாடியும் உண்டு. என்னை முதலாளி ஆட்கள் யாரும் கண்டு பிடிச்சிடக் கூடாதுன்னு ஒரு பயம்னா, இங்க மாணிக்கம்பாவோட கூடப் பிறந்தவங்க பிள்ளைங்க எங்க எனக்கு பூர்வீக வயல்ல பங்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லிடுவாங்களோன்னு அப்பாவுக்கு இன்னொரு பயம்.

குழந்தப் பிள்ள மாதிரி இருந்தா போடான்னுட்டு போயிடுவானுங்க. ஓங்கு தாங்கா இருந்தாதான் நமக்குள்ளத கொடுத்துட்டு கொஞ்சம் விலகியே நிப்பானுங்க, அதனால சீக்கிரம் உடம்ப ஏத்து, தாடி மீசை வளரு, அது வரைக்கும் இதை வச்சே சமாளின்னுட்டாங்க அப்பா.

அந்த வயல் இல்லைனா, வருமானம்னு ஒன்னு இல்லாம நாங்க இங்க தங்க முடியாதுன்றது ஒருபக்கம்னா, விமலோட பங்கு எனக்கு வந்தாகணும்னு அப்பாவோட ஆசை ஒரு பக்கம், விமல அந்த ஊருக்கு கூட்டிட்டு வந்ததே இல்லை போல, அதான் எல்லோர்ட்டயும் இவன்தான் என் மகன், பால்கனின்னு எங்க அப்பா பேரயே அவனுக்கு வச்சிருக்குன்னு சென்டிமென்டா பேசி, தாத்தா சொத்து பேரனுக்கு உண்டுதானேன்னு ஊர்ல பேசி, விமலோட பூர்விக நிலத்தை ஒருவழியா என் பேருக்கு பதிஞ்சுட்டாங்க அப்பா.

அதுவும் அப்ப எனக்கு 18 வயசு முடிஞ்சிருக்கல, அதனால சொத்தை என் பேர்ல எழுத சட்ட சிக்கல்லாம் வரும்னு கூசாம எனக்கு 28 வயசுன்னு போட்டு பத்திரம் ரெடி செய்துட்டார் அப்பா. கெட்டப் வேற எனக்கு அந்த ரேஞ்சுக்கு செய்து வச்சிருந்தார்ல. சின்னப் பையன்னு அப்பதான் ஏமாத்த பார்க்க மாட்டாங்க, இதுவும் நல்லதுக்குதான்னுட்டார்.

இப்படித்தான் 18 வயது நரேன் 28 வயது பால்கனியாகி முழுசா தப்பிச்சேன். ஆக எனக்கு விடுதலைனு ஒன்ன தந்ததே உன் பாஷைல சொல்றதுன்னா ஃப்ராடுத்தனம்தான்.

ஆனா அப்ப கூட மனசுல ஓரத்துல ஒரு உறுத்தல் இருந்துச்சுதான். என்னைக்குனாலும் என்  மெஷின் டிசைனிங் என்னை ரொம்ப உயரமா கொண்டு போய்டும், அப்ப இந்த வேஷமெல்லா இல்லாம நான் நானா இருக்க முடியும்னுதான் நம்பிட்டு இருந்தேன்.

அதனால வயல்ல விவசாயம் பார்த்துகிட்டே, உடனடி வருமானத்துக்கு உள்ளூர்ல விளையுற காய்கறிகளை வாங்கிப் போய் வெளியூர்ல விக்கிற கமிஷன் கடை ஒன்னையும் நடத்திகிட்டு, ராப்பகலா சில மெஷின்ஸ் டிசைன் செய்தேன்.

டிசைன் செய்தத எடுத்துகிட்டு, அப்படி மிஷின்ங்கள உற்பத்தி செய்ற பிரபல கம்பெனி ஒன்னை தேடிப் போனேன்.

ஆனா அவங்க எனக்கு ஃபார்மல் எஜிகேஷன் இல்லைன்றதால வேலை தரமாட்டேன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. டிரைவர் லைசன்ஸ்க்கே 8த் படிச்சிருக்கணும்னு சட்டம் இருக்குது, நீ டிசனைங்ல வந்து வெறும் கைல நிக்ற, IIT ,  அண்ணா யூனிவர்சிட்டி போல இன்ஸ்ட்டிட்யூஷன்ல எஞ்சினியரிங்க்ல பிஜி வரைக்காவது படிச்சிருந்தாதான், இங்க உள்ள வந்து எட்டியே பார்க்கவிடுவோம்னு சொல்லிட்டாங்க.

என் மிஷின் மட்டும்தான் என்னைக்குனாலும் என்னை காப்பாத்தும்னு அத்தனை வருஷம் அடி உதைனு அத்தனையும் தாங்கிட்டு வாழ்ந்த எனக்கு உலகமே மொத்தமா சூன்யமானது இங்கதான்.

வெறும் 6 வரைக்கு படிச்சுட்டு, என் வயசு 28ன்னு சர்டிஃபிகேட்டும் வச்சுகிட்டு, இதுக்கு மேல எந்த ஐஐடில போய் நான் படிக்க?

விஷயம் அதோட நிக்கல, எனக்குதான் அவங்க வேலை தரல, ஆனா நான் கொண்டு போய் காமிச்ச எல்லா டிசைனையும்  மிஷினாக்கி மார்கெட்ல வித்தாங்க. பேட்டன் ரைட் வேற லீகலா அவங்க பேர்ல வாங்கி இருந்தாங்க.

அப்போதான் எனக்கு தலைல அடிச்ச போல ஒரு உண்மை தெளிவா புரிஞ்சிது. இது ஏமாத்துக்காரங்களை மட்டுமே வாழ வைக்கிற பூமின்னு. என் அப்பால்ல இருந்து, என் முதலாளி, என் கண்காணி, இந்த மிஷின் கம்பெனிகாரங்கன்னு  எல்லா ஏமாத்துக்காரங்களையும் அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ இந்த பூமி அனுமதிக்கு. ஆனா எனக்கு விமல்க்கு எல்லாம் கிடச்சது வெறும் அடியும் உதையும் மட்டும்தான். எப்ப நான் கொஞ்சமா ஏமாத்த ஆரம்பிச்சனோ அப்பதான் எனக்கு விடுதலை கூட கிடச்சிருக்குன்னு உறச்சுது.

எனக்கு வந்த கோவத்துக்கு அந்த கம்பெனிய போய்  நாலு போடு போடணும்னு ஒரு வெறி. கண்காணிய அடிச்சதுக்கே இன்னைக்கு வரை கெட்டப்ப மாத்திகிட்டு பயந்து போய் கிடக்கிற நமக்கு அதெல்லாம் சாத்தியமே கிடையாதுன்னு இன்னொரு பக்கம் பயம் வேற.

அதனால நேருக்கு நேரா அடிக்காம, அந்த கம்பெனியோட இன்னொரு பிஸினஸான இம்போர்ட் எக்ஸ்போர்ட்குள்ள குடோன் இங்க பக்கத்தில் தூத்துகுடில இருக்குதுன்னு தெரியும், அங்க போய் உள்ள இருக்க சரக்க அடிச்சு நொறுக்கிட்டு வந்துடலாம், அவன் என்னை சந்தேகப்படவும் வாய்ப்பே இருக்காதுன்னு, அந்த குடோன்க்கு போனேன்.

அப்பதான் என்னோட சுறாவையும் ஓரளவு  டிசைன் செய்திருந்தேன். அது வழியா அவன் குடோன்க்குள்ள போய் பார்த்தா, அவன் இறக்குமதி செய்திருந்த விஷயம் டன் டன்னா பட்டாணி. அதை நான் என்னன்னு அடிச்சு நொறுக்க? அதனால பேசாம அள்ளிட்டுப் போய்டுவோம், எப்படியும் பல லட்சம் அவனுக்கு நட்டமாகும்னு பட்டுது. அதனால அள்ளிட்டு வந்துட்டேன்.

அள்ளிட்டு வந்ததை அடுத்து என்ன செய்ய? சாப்பாட்டு ஜாமான ஏன் தூர கொட்டணும்? ஏற்கனவே நான் வச்சிருக்கது கமிஷன் கடை. அதுவழியா இருந்த சின்ன பெரிய கான்டாக்ட் எல்லாத்துக்கும் அரை விலை முக்கா விலைக்கு இந்த பட்டாணிய வித்துட்டேன். அப்படியும் 25 லட்சத்துக்கு மேல காசு கிடச்சுது. அத முதலீடா போட்டுதான் என் செங்கல் சூளைய ஆரம்பிச்சேன். அப்பதான் திருடன்ட்ட பிடுங்குறவன்தான் ஜெயிக்க முடியும்ன்ற முக்கிய பாடத்த படிச்சுகிட்டேன்.

அடுத்த பக்கம்