துளி தீ நீயாவாய் 26 (5)

எனக்கு சின்ன வயதிலிருந்தே மெஷின் டிசைனிங்கில் பெரிய ஆர்வம் உண்டு. அதுவும் சட்டு சட்டுன்னு ஈசியா ஐடியாவும் வந்துடும். கொத்தடிமையா இருந்த இடத்தில் அவ்வளவு மெஷின கையாள்ற வாய்ப்பு கிடச்சுது. புதுசு புதுசா ஐடியா வேற அவ்வளவு வரும். அதுதான் என் நம்பிக்கையோட ஜீவ மூச்சு.

எப்படியும் ஒருநாள் எனக்கு வயசு வர்றப்ப மெஷின் டிசைனிங் செய்ற சூழ்நிலை வரும். அன்னைக்கு என் மெஷின்ஸ் மூலம் ரொம்பவே பெரிய இடத்துக்கு போய்டுவேன்னு நினச்சுப்பேன்.

ஆனா நீ ஒரு முட்டாள், உன் நம்பிக்கை தப்புன்னு காமிக்கத்தான் வாழ்க்கை என்னை தூக்கி தூக்கிப் போட்டு பந்தாடிச்சுதே தவிர, உனக்கு இன்னைக்கு உதவி செய்ய மக்கள் வந்தது போல எனக்கு யாரையும் அனுப்பி வைக்கல.

விமலும் அவனோட அப்பா மாணிக்கம்பாவும் அப்போதான் அந்த கூட்டத்துல வந்து மாட்டினாங்க. பூனத்துக்கு அடுத்தபடி என் மேல உண்மையிலேயே பாசம் வச்ச ஒரே ஜீவன்னா அது விமல்தான்.

அவனுக்கு உடம்பு சரியில்லாம இருக்கப்ப மாணிக்கம்பாவை வேற ஊருக்கு ரொம்பநாளா வேலைக்கு அனுப்பிட்டாங்க. இவனுக்கு சின்னதா மருந்து மாத்திரை கூட கிடையாது. உடம்பு மனசு ரெண்டுமே அவனுக்கு சுத்தமா விட்டுப் போச்சு.

ஏற்கனவே படிக்க முடியாம போச்சே, ஏமாத்திட்டாங்களேன்னு ரொம்பவும் கொதிச்சுப் போய் இருந்தவன், அவன் இயலாமைய எதில் காமிக்கன்னு தெரியாம, என் அப்பா வந்தாதான் சாப்டுவேன்னு பட்னி கிடந்தான். நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். செத்துடுவடா, இவனுங்க யாரும் நீ சாப்டலைன்றத கண்டுக்க கூட மாட்டாங்கன்னு, ஆனா அவன் இனி இருந்து மட்டும்தான் என்னதுக்கு, செத்தா செத்துட்டுப் போறேன்னுட்டான். என் கண் முன்னாலதான் அவன் உயிர் போச்சு.

உடம்பு சரியில்லாம இருந்தவன்றதால சாப்டாம இருந்த நாலே நாள்ல போய் சேர்ந்துட்டான்.

இதுலெல்லாம் எங்க போச்சு நீ சொல்ற நீதியும் நேர்மையும்?

இத்தனைக்கும் மாணிக்கம்பாவுக்கு அங்க மனசுகுள்ள கிடந்து அடிச்சுகிட்டேதான் கிடந்திருக்கு, அவங்களும் அங்க என்னல்லாமோ சொல்லி கெஞ்சி பார்த்திருக்காங்க. வேற வழியில்லாம அவ்வளவு ரிஸ்க் எடுத்து போலீஸ்ட்டயும் போய்ருக்காங்க. ஆனா அவங்க வந்து சேர்றதுக்குள்ள இவன் போய்ச் சேர்ந்துட்டானே!

எப்படியிருந்தாலும் தற்கொலைன்றது  அவன் எடுத்த முடிவுதானன்னு நீ இப்ப கேட்கலாம். ஏன்னா என் அறிவுகெட்ட மனம் தன் நம்பிக்கைய காப்பாத்திக்க சில நேரம் இப்படி கூட கேட்டிருக்கு.

ஆனா உண்மை என்னன்னா உலகத்துல நல்லதுன்றது ரொம்பவும் பலவீனமானது, அது ஜெயிக்கவே ஜெயிக்காதுன்றதுதான்.

விமல் இறந்த அன்னைக்கு நைட்தான் ப்ரவி சார் ஆள் அனுப்பி  எங்க ஆட்களையெல்லாம் மீட்டது போல. ஆனா அந்நேரம் விமல் உடம்ப எரிக்கிறதுக்குன்னு என்னை மட்டும் கூட்டிட்டுப் போயிருந்தார் கண்காணி. விமல் இறந்ததயே  எங்க கூட்டத்துல மத்தவங்களுக்கு சொல்லல, இதுல நான் கூட போயிருக்கத யார்ட்ட சொல்லப் போறாங்க.

நான் இங்க விமல் சிதைக்கு தீ வச்ச நேரம் அங்க போலீஸ் வந்து மத்தவங்கள காப்பாத்தி கூட்டிட்டுப் போய்ருக்காங்க.

அப்ப கூட வாசல் வரைக்கும் வந்த உதவி எனக்கு மட்டும் வந்து சேரலையே! அதான் சொல்றேன் நல்லதுன்றது ரொம்ப பலவீனமானது. யூஸ்லெஸ்.

எனக்கு இங்க விமல் சிதைய பார்க்க பார்க்க கொலைவெறி. பொதுவா நான் யாரையுமே அங்க எதுத்து பேச, அடிக்க பயப்படுவேன். ஏன்னா எதுத்து ஒரு வார்த்தை பேசிட்டோம்னா நாலஞ்சு பேரா சுத்தி நின்னு கீழ தள்ளி நம்மள மிதிச்சே கொன்னுடுவாங்க, சின்னப் பையனேன்றதுல்லாம் அவங்க மனசுல வரவே வராது. முதுகு அழுகிப் போற அளவுக்கு அத்தனை சூடும் போடுவாங்க. மூனு நாலு தடவ ஆரம்பத்தில் அப்படி வாங்கின பிறகு, யார் என்ன சொன்னாலும் செய்து கொடுத்துடுவேன். யார் எத்தன அடிச்சாலும்  வலிய காமிக்க கூட வாய திறக்க மாட்டேன். அப்றம் அதுக்கு வேற இன்னும் நாலு கிடைக்கும். எதுக்கு வம்புன்னு அமைதியா போய்டுறதுதான்.

ஆனா அன்னைக்கு எனக்கு தாங்கவே முடியல, நான் பக்கத்துல கிடந்த மண்வெட்டிய எடுத்து கண்காணிய நாலு சாத்து. அது அந்த ஆள் மேல அடியா விழுந்துதா வெட்டா விழுந்துதான்னு கூட எனக்குத் தெரியாது. இருட்டுல அந்தாள் கீழ விழுந்துட்டார். எந்திரிக்கல. நான் தலை தெறிக்க தோணுன திசையில் ஓடி வந்துட்டேன்.

ரொம்ப தூரம் ஓடிட்டன்தான். ஆனா மறுநாள் வேற போல பயம் வந்துட்டு. அந்த கண்காணி செத்து போய்ட்டானோ, நான் கொலை செய்துட்டனோ, இதைச் சொல்லியே போலீஸ்ல என்னை மாட்டிவிட்டுடுவாரோ எங்க முதலாளின்னு பெரும் பயம். அதானல அங்க என்ன நடக்குதுன்னு பார்த்தே ஆகணும், அப்பதான் கவனமா இருக்க முடியும்னு தோண, ரகசியமா திரும்ப எங்கள தங்க வச்சிருந்த செங்கல்சூளை ஏரியாவுக்குப் போனேன்.

பார்த்தா மாணிக்கம்பாவும் அங்க அதே போல ரகசியமா எங்களைத் தேடி வந்திருக்கார். சூளையோ மொத்தமா காலியா கிடக்கு. அப்பதான் மாணிக்கம்பா என்னை தன் கூட கூட்டிட்டு வந்துட்டாங்க.

12 வயசில் போய் அடிமையா மாட்டினவன் 18 வயசு முடியப் போறப்ப வெளிய வர்றேன். அதுவும் போலீஸ் வந்து காப்பாத்தல, பொய் சொல்லி, மாறு வேஷம் போட்டு ஏமாத்தின்னு மாணிக்கம்பா தான் காப்பாத்தினாங்க,

ஆமாம் அப்போல்லாம் எங்கே திரும்ப எங்க முதலாளி எங்களையெல்லாம் பிடிச்சுட்டுப் போய்டுவாரோன்னு பயங்கரமா பயமா இருக்கும். கூடவே கண்காணிய அடிச்சுப் போட்டதுக்கு போலீஸ் பிடிச்சிடுமோன்னு அடுத்த பயம் வேற. அதனால மாணிக்கம்பா மொட்டையடிச்சு கடா மீச வச்சுன்னு ஒரு வகையா அவங்க கெட்டப்ப மாத்திகிட்டாங்கன்னா எனக்கு ஒட்டுதாடி மீசை வச்சு fat suit மாட்டின்னு ஆளை அடையாளமே தெரியாம மாத்திட்டாங்க.  Fat suitனா தெரியுதா? நம்மள குண்டா காமிக்கிறதுக்குன்னு ட்ரெஸுக்குள்ள போட்டுக்கிற ஒரு ட்ரெஸ். சினிமால யூஸ் செய்வாங்க.

அடுத்த பக்கம்