துளி தீ நீயாவாய் 26 (4)

இவளுக்கு இருக்கும் வலிக்கும் உடல்நிலைக்கும் இதை இவள் செய்வாளாமா?

இவள் விழித்த வகையில், “பாரு உன்ட எதை மறைக்கவும் நான் ட்ரைப் பண்ணல, உன்னை ஏமாத்தணும்னும் நான் நினைக்கலைன்னு புரிஞ்சிப்பன்னு நம்புறேன்” என தன் செயலுக்கு விளக்கத்தையும், ‘கடத்தியதன் நோக்கம் நிச்சயமாக உனக்கு எதிரானது இல்லை’ என்ற வகை வாதத்தையும் முன் வைத்தபடி, மீண்டும் தன் வாட்சை நோண்ட, அந்த இரும்புத் தூண் வந்த வகையாகவே அப்படியே மீண்டுமாய் உள் இழுத்துக் கொள்ளப்பட, தரையில் எங்கு கீறல் உண்டானது என்பது வெகு வெகுவாய் கவனித்து ஆராய்ந்தால் ஒழிய தெரிய முடியாது என்பது போல் டைல்ஸ் வரை அப்படியே அதன் இடத்தில் போய் பொருந்திக் கொள்கிறது.

“ஆக இப்படித்தான் அந்த குடோனெல்லாம் திருடிக்கிட்டு இருக்க?” வேணிக்கு இப்போது இவன்தான் அந்த குடோன் திருடன் என்பது புரிந்துவிடும்தானே, குற்றம் சுமத்தினாள். அழுத்தம் இருந்ததே ஒழிய அவள் குரலில் வெளிப்படையாய் எதுவுமே இல்லை.

அவன் இவளுக்கு அறிமுகமாகிய சமயங்களில், அவனிடம் குற்றம் இருக்கிறதென இவள் உணர்ந்த நேரங்களில் என்னைப் போலத்தான் இவனுமா என ஒரு இரக்கம் உண்டாகியதுண்டல்லவா இவளுக்கு? அது இப்போதும் சன்னமாய் தலைகாட்டுகிறதாயும் இருக்கலாம்.

இத்தனை அறிவுள்ளவனுக்கு ஏனிந்த விபரீத புத்தி என்ற கேள்வியும், ப்ளார்ட்ஃபார்மில் இருந்தேன் என அவன் முன்பு சொல்லிய நிகழ்வும் சேர்ந்து மனதுக்குள் வந்து, எதுவும் புரியவுல்லை எனினும் ஒரு பிசைவை உண்டு செய்வதும் காரணமாயிருக்கலாம்.

அவனிடம் இதற்குமே எந்த சலனமும் இல்லை. ‘செய்றது திருட்டு இதுல என்ன நியாயம் பேசுற?’ என்ற குத்தல் அவள் வார்த்தைகளுக்குள் ஒழிந்திருப்பதாய் மட்டுமே அவனுக்குப் படுகிறதே!

“ஆமா இப்படி தரைல ஓட்டை போட்டுட்டு, சுறால இருந்து ஒரு பெரிய குழாய தூக்கி அந்த குடோன்குள்ள  போட்டு, அடுத்து வாக்குவம் க்ளீனர் போல காத்த உள்ள பார்த்து இழுத்தா, குடோன்ல இருக்க எல்லா ஜாமானும் என் சுறால இருக்க கன்டெய்னர்ல போய் பத்து நிமிஷத்துக்குள்ள சேர்ந்திடும். அப்றம் இப்ப பார்த்தியே அப்படியே தரைய மூடிட்டு நான் இடத்தை காலி செய்துடுவேன்” என சாதாரண நிகழ்வைச் சொல்வது போல சொன்னான் அவன். ‘ஆமா அப்படித்தான் செய்வேன், அதுக்கென்ன இப்ப’ என்ற அலட்சியத்தை இப்படியாய் வெளிக்காட்டினான்.

“என்னமோ உலகத்துல எல்லோரும் ரொம்ப நியாயவான் மாதிரியே பேசுற நீ? அவன் எவன்ட்ட திருடி சம்பாதிச்சானோ? அவன்ட்ட இருந்து நான் எடுத்துக்குறேன், இதுல நான் செய்றது மட்டும் எப்படி தப்பு? இங்க பூமில யார் நல்லவங்கன்றதுலாம் விஷயமே கிடையாது, யார் ஸ்மார்ட், யார்ட்ட பணமிருக்குன்றது மட்டும்தான் விஷயம். புத்தி இருக்கவன் ஜெயிச்சவன், காசுதான் கடவுள், இதுதான் யுனிவர்சல் லா” என இப்போதோ பொரிந்து தள்ளினான்.

“அப்ப அந்த காசான கடவுளயே உனக்கு ஹெல்ப் பண்ணச் சொல்ல வேண்டியதானே, என்னை எதுக்கு கடத்திட்டு வந்த?” வேணியிடம் பழைய எரிச்சல் மீண்டிருந்தது.

“அந்த கடவுள உனக்கும் மதுவுக்கும் கொடுத்துட்டுப் போகன்னுதான் வந்தேன்னு சொன்னனே, மத்தபடி எனக்கென்ன குறச்சல், எங்க போனாலும் ராஜா போல இருப்பேன். நீயும் மதுவும்தான் ஒன்னுமில்லாம இழுபடுவீங்களேன்னு இருக்கு” பால்கனியுமே வெகு குத்தலாகத்தான் இந்த பதிலைத் துவக்கினான். ஆனால் முடிக்கும் போது ஆயாசம் வந்திருந்தது அவனிடம்.

“உனக்கு இது புரியல வேணி. உன்னைய ஒரு ரோஹன் ஏமாத்தினான்னா, அடுத்த நிமிஷம் ஒரு ப்ரவி அண்ணாவும் பவியண்ணியும் வந்து தாங்கி பிடிச்சுகிட்டாங்க, அதனால உனக்கு என்னமோ உலகத்துல இன்னும் நீதி, நியாயம், மன்னிப்பு, கிருபைன்னு நல்லதெல்லாம் மிச்சமிருக்குன்னு நம்பிக்கை இருக்கு,

உண்மையில் இப்ப உனக்கிருக்க நம்பிக்கையவிட ஆயிரம் மடங்கு நம்பிக்கை எனக்கும் கூட ஒரு காலத்தில் இருந்திச்சு, சொல்லியிருக்கனே நான் டெல்லியில படிச்சேன்னு, அப்போ என் டீச்சர் ஒருத்தங்க சொல்வாங்க, கடவுள் பின்னால யாரை ரொம்ப உயர்த்த போறாரோ அவங்களுக்குத்தான் அதுக்கு முன்னால ரொம்ப கடினமான சிச்சுவேஷன் மூலம் ட்ரெயினிங் கொடுப்பார்ம்பாங்க. அப்பதான் நம்மளால அந்த உயரத்தை ஹேண்டில் செய்ய முடியும்னு சொல்வாங்க. இல்லன்னா நாம போற உயரத்தாலையே அழிவோம்பாங்க.

எனக்கு அது உண்மைனு படும். ஏன்னா என் அப்பா அவரோட உயரத்தை அடைஞ்சதும் நேர்மையான வழியில் கிடையாது, அவரால அந்த உயரத்தை கையாளவும் முடியல, அதான் குடி அது இதுன்னு தன்னையே அழிச்சுக்கிறார்னு தோணும்.

அதனால குடிபோதையில் என் அப்பா தன் சம்பாத்யத்தையெல்லாம் அடுத்தவங்கட்ட எழுதிகொடுத்துட்டு என்னை தெருவில் நிறுத்தினப்ப, இதெல்லாம் எனக்கான கடவுளோட ட்ரெயினிங் போலன்னுதான் முதல்ல நம்பினேன். 12 வயசுக்கு அறிவு அவ்வளவுதான் வேலை செய்ததது.

ஆனா உனக்கு ப்ரவி அண்ணாவும் அண்ணியும் வந்தது போல அப்ப எனக்கு யாரும் வரல, அதுக்குப் பதிலா  என் அம்மா என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க. என் பூனம் இறந்தே போய்ட்டா.

அது மட்டும் போதாதுன்னு அங்க ஃப்ளாட்ஃபார்ம்ல ஒன்னுமில்லாம பிச்சை எடுத்துகிட்டு இருந்த என்னையும், என் அப்பாவையும், வேலையும், வீடும் தாரேன்னு ஏமாத்தி ஒருத்தன் கொத்தடிமையா கொண்டு வந்து  தமிழ்நாட்டில் வித்துட்டான்.

கொத்தடிமையா இருக்க இடத்தில் பிள்ளைங்கள பிணயமா பிடிச்சு வைக்கதே எவ்வளவு மோசமான மனுஷனும் தன் பிள்ளையவிட்டுட்டு ஓடிற மாட்டான்னுதான். அதைக் கூட பொய்யாக்கிட்டு என் அப்பா என்னைப் பத்தி கொஞ்சமும் யோசிக்காம அங்க இருந்து ஓடிப் போய்ட்டார்.

சும்மாவே அத்தனை அடி, அத்தனை சூடு போடுறவங்க அப்ப என்னை பிச்சு பீஸ் பீசா எடுத்துட்டாங்க தெரியுமா? அப்பவும் எனக்கு யாரும் வரல, அதுக்கப்புறம் நான் அங்க எல்லோருக்குமே அடிமை போலதான். ஆளாளுக்கு அடிப்பாங்க, அப்பவும் யாரும் வரல.

இதுக்கெல்லாம் அப்றம் கூட எனக்கு மனசில் ஒரு ஓரத்தில் இதெல்லாம் பின்னால சரியாகிடும். நான் ஒரு பெரிய உயரத்துக்கு வருவேன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சுன்னா பார்த்துக்கோ. அப்படி ஒரு முட்டாளா இருந்திருக்கேன்.

அடுத்த பக்கம்