துளி தீ நீயாவாய் 26 (3)

அவன் வீடு என்றது இப்போதுதான் கவனத்தில் படுகிறது வேணிக்கு. அந்த வீட்டிற்குள் செல்வது என முடிவெடுத்துவிட்டாள் அவள். வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டால்தான் ப்ரவியிடம் தெளிவாக சொல்ல முடியும் இவளால் என்பது முக்கிய காரணம் என்றால்,  கழிவறை அவளுக்கு இப்போது அவசியமாய் வேண்டும் என்பது உடனடிக் காரணம்.

அவனைப் பின் தொடர்ந்து இவள் செல்ல, அருவிக்குள் நுழைந்தவன், அது விழுந்து கொண்டிருந்த குகை அமைப்பில் இடது ஓரமாக சென்று நின்று கொள்ள, அவனுக்கு அடுத்து இவள் போய் நின்றதும்,

“பானிக் ஆகிடாத” என்றபடி இவளைப் பற்றிக் கொண்டான். அவன் பிடியிலிருந்து இவள் உதறிக் கொள்ள முனையும் முன்பாகக் கூட

இவர்கள் நின்றிருந்த தரை சட்டென ஒரு பனை அளவு ஆழத்துக்கு இவர்களையும் ஏந்திக் கொண்டு கீழிறங்கி, அடுத்து இடது புறமாக சில பல அடிகள் விருட்டென  நகர்ந்து பின் மீண்டுமாக பனை உயரம் மேலேறியது.

இப்போது இவர்கள் ஒரு வீட்டிற்குள் நின்று கொண்டிருந்தார்கள்.

சுற்றுமுற்றுமாய் பார்த்த வேணிக்கு, இந்த வீடு எங்கிருக்கிறது, இங்கு வர வழி என்ன என்று கூட புரியவில்லை.

அதைப் புரிந்தான் போலும் பால்கனி “அந்த அருவி குகை இருக்கே அந்த மலை, அதுக்குள்ள குடஞ்சு இந்த வீட கட்டியிருக்கேன்.  மலைய குடஞ்சு ரோடு போடுறோம்ல, அது போல மலைய குடஞ்சு உள்ள வீடு கட்டி வச்சுருகேன். வெளிப்பக்கம் இருந்து பார்த்தா இது வெறும் மலைதான்” என விளக்கம் கொடுத்தான் இப்போது.

வேணிக்கோ மிரட்சியாய் இருக்கிறது. மலையை குடைவதென்பது சாதாரண காரியமா? அப்படியானால் ஒரு கூட்டமே இவனுக்கு இருக்கிறதா? என ஓடுகிறது அவள் நினைவு.

“மெட்ரோ ட்ரெயின்க்கு சுரங்கம் தோண்டுற மெஷின பார்த்திருக்கியா? TBMன்னு சொல்வாங்க, அதோட ஹைலி அட்வான்ஸ்ட் மாடல் ஒன்னு நான் டிசைன் செய்து வச்சிருக்கேன், அதை வச்சு இதெல்லாம் செய்யலாம்” என விளக்கம் வருகிறது அவனிடமிருந்து.

TBM என்றால் என்ன என்றாவது இவளுக்குத் தெரியுமா என்ன? விழித்தாள்.

அதுவரைக்கும் அவன் யாரிடமுமே இதைப் பற்றி பேசி இருக்க வாய்ப்பில்லையே, அதனால் வந்த ஆர்வமா? அல்லது வேணியிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இருக்கும் விருப்பம்தான் காரணமோ? அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அடுத்திருந்த அறைக்கு விரைந்து சென்றவன், உற்சாகமாக ஒரு லேப்டாப்பை தூக்கி வந்தான்

அதில் ஒரு வீடியோவை ஓடவிட்டு, சிலிண்டர் வடிவ ட்ரெயின் எஞ்சின் போல் இருந்த ஒன்றை காண்பித்துக் கொண்டே

“இது நம்ம தரைக்கு அடியில், குறிப்பிட்ட ஆழத்தில்,  ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு குழாய் போல சுரங்க தோண்ட யூஸ் செய்ற மெஷின். பாரு முன்பக்கம் மண்ணை தோண்டிகிட்டே வரும், பின்னால உள்ள மெஷின் தோண்டின இடத்தில் வட்ட வடிவத்தில் சுவர் வச்சுகிட்டே வந்திடும். இது ரொம்ப மெதுவா வேலை செய்ற போல வச்சிருக்காங்களா? ஏனா ஊருக்குள்ள இப்படி தோண்டுறப்ப அதுக்கு மேல உள்ள பில்டிங்கெல்லாம் இடிஞ்சிடக் கூடாதுல்ல, அதான்.

நான் இதை  இன்னும் ஆழமா போய் வேக வேகமா தோண்டுற போல செய்து வச்சிருக்கேன். அதோட சுவர் கட்டுற யூனிட்டை வேணும்னா அட்டாச் செய்துக்கலாம் இல்லன்னா வேண்டாம்ன்றாப்ல டிசைன் செய்துருக்கேன்..

எல்லா TBMஆலயும் சுவர் வட்டமா மட்டும்தான் கட்ட முடியும். நான், நான் நினச்ச போல கட்டுறதுக்கு ப்ரோக்ராம் செய்துருக்கேன். அதனாலதான் இந்த வீட கட்ட முடிஞ்சிது.

சுவர் கட்டுற யூனிட்ட எடுத்துட்டா என் TBM jet fastல பறக்கும். சுவர் கட்டுற யூனிட்க்கு பதிலா ட்ரெய்ன் கேரேஜ் போல கன்டெய்னர்ஸ பின்னால சேர்த்துகிட்டா எவ்வளவு ஜாமானையும் பூமிக்கடியிலேயே செம்ம ஃபாஸ்ட்டா நாம ட்ரான்ஸ்போர்ட் செய்யலாம்.

அதுவும் ஆட்டோ பைலட்டிங் வச்சிருக்கேன் அதில். அதாவது அங்க இருந்து இங்க வரணும்னு ப்ரோக்ராம் செட் செய்துட்டா போதும் சொன்ன இடத்துக்கு மண்ணுக்கு அடியிலேயே அதாவே ட்ராவல் செய்து டான்னு வந்து நிக்கும். நான் உள்ள இருக்கணும்னோ இல்ல அதை கவனிக்கணும்னோ தேவையே இல்ல.

எனக்கு அது என்னோட பெட் போல. சுறான்னு பேர் வச்சுருக்கேன். கடலுக்குள்ள நீர் மூழ்கி கப்பல்லாம் போய் வருதுல்ல அது போல இது பூமிக்குள்ள செம்ம ஈசியா சுத்தி வரும்.

நான் இங்க பூமிக்கு மேல நின்னுகிட்டே கீழ ஆழத்துல இருக்க அதை ஆப்ரேட் செய்ய முடியும். வேணும்னா அதுக்குள்ள இருந்தும் ட்ராவல் செய்வேன். ஆனா அப்படி கொஞ்ச நேரம்தான் இருக்க முடியும். ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டிகிட்டு ட்ராவல் செய்தாலுமே அது ரொம்ப ரிஸ்க்” அவன் ஒரு வித ஆர்வக் குரலிலேயே விளக்க,

“அத வச்சுதான் சார் வீட்டுக்குள்ள வந்து என்னை கிட்நாப் செய்திருக்க?” என முகம் இறுகக் கேட்டாள் வேணி.

பால்கனியின் முகத்திலிருந்த ஆர்வமுமே சட்டென வடிந்து போனதுதான். சலனமற்ற ஒரு முகத்தோடு தன் கையிலிருந்த வாட்சை அவன் ஏதோ நோண்ட, ஓரிரு நிமிடங்களுக்குள் இவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சற்று தள்ளி, வீட்டு தரை  இரண்டு சதுர அடி பரப்பளவிற்கு அடிப்புறம் அதே அளவிலான ஒரு தூணோடு எழும்பத் துவங்குகிறது.

சன்னமான ஒரு சத்தத்தோடு நடக்கும் இந்த நிகழ்வை நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றாள் வேணி. ஒரு ஆளளவு உயரமான தூண் போல் அது வரவும், அந்த இரும்புத் தூண் சற்று நகர்ந்து அமர்ந்து கொள்ள,

அப்போதுதான் புரிகிறது, அந்த தூண் போன்ற அமைப்பு தரைக்குள்ளிருந்து துளைத்து ஒரு குழியை வெட்டிய வண்ணம் வந்திருக்கிறது என.

அந்த தோண்டப்பட்டிருந்த குழியை சுட்டிக் காட்டிய பால்கனி,

“இந்த குழியில் இறங்கினா சுறாக்குள்ள போய்டலாம், வா உள்ள வந்து பாரு” என  இவளை அழைத்தான்.

அடுத்த பக்கம்