துளி தீ நீயாவாய் 26 (2)

எதைப் பற்றியும் யோசிக்கும் முன்னும் வேணி இப்போது வெளியே போய் விழாத குறையாக இறங்கிக் கொண்டாள். அதுவரைக்கும் ஏறக் குறைய முழு இருளில் இருந்தது போல் இருக்க, இப்போது கிடைக்கும் வெளிச்சத்தில், முகத்தில் அடித்துக் கொண்டு வீசும் குளிர்ந்த காற்றில், இன்னுமே மயக்க மருந்தின் முழு பிடியிலிருந்து வெளி வந்திராத உடல் தள்ளாடினாலும்,

அவளது சிந்திக்கும் சக்தி இன்னுமே கூராகிப் பாய்கிறது.

அவன் நீளமாய் பேசி இருந்ததில் ‘இவளுக்கு பணம் தருவேன்’ என்றது மட்டும்தான் புரிந்து கத்தியிருந்தவளுக்கு, இப்போதுதான் போலீஸ், ஸீஸிங் எல்லாம் ஓரளவு உறைக்க,

“ஆக நான் நினச்சது போலவே நீ பெரிய ஃப்ராடுதான், நீ ஏமாத்தி சம்பாதிச்ச காச எனக்குத் தருவ? அத வச்சு நான் செட்டிலாகிக்கணும்? அதுவும் சாருக்கு தெரியாம? இப்படில்லாம் என்னைய வச்சு யோசிக்க உனக்கு மூளைன்னு எதாச்சும் இருக்கா இல்லையா ஃப்ராடு?” கொன்றெடுத்த வலியை சமாளிக்க அருகிலிருந்த பாறையை பிடித்துக் கொண்டு முகம் மொத்தமும் வலி வலி என துடிக்கும் பாவத்தோடு கிட்டதட்ட இவள் இப்படிப் பிளிற,

அடுத்த புறம் இறங்கி இருந்த பால்கனி, இவள் வலியைப் பார்த்து பதறிப் போய் இவளிடமாய் ஓடி வந்தான் என்றாலும், “நான் உண்மையா வேலை பார்த்தும் சம்பாதிச்சனே, உன் சோகால்ட் நீதி நியாயத்தின் படியேனாலும், அது எப்படி தப்பான பணமாகும்? குடோன்ல இருந்து எடுத்து நான் சம்பாதிச்ச காசுக்கு மேலயே விலை போற சொத்தையெல்லாம் இந்த போலீஃஸால  விட்டுட்டுத்தானே போறேன், அப்படி அது போக மீதி இருக்க இதெல்லாம் எப்படி தப்பான பணமாகும்? சும்மா பேசத் தெரியும்ன்றதுக்காக பேசாத?” என கண்டனமாய் சொல்லிக்கொண்டும் வந்தான்.

வேணியோ இதற்கு பதில் என எதுவும் சொல்லவில்லை. பால்கனிதான் குடோன் திருடன் என்று கூட அவளுக்குத் தெரியாதே. இதில் இவன் பேசுவதை மட்டுமாக வைத்து என்ன புரியும் அவளுக்கு? அதோடு எதையும் யோசிக்க விடாமல்  வலிதான் புதுப் புது உச்சங்களை  தொட்டுக் கொண்டு இருக்கிறதே.

“பிடிவாதம் பிடிக்காம எங்க அடிபட்டிருக்குந்னு சொல்லேன் வேணிமா” அவன் அவளை தூக்கி வரும் போது எதாவது கூரான விஷயம் அவளை கிழித்துவிட்டதோ என்பது அவனுக்கு. ஆக அருகில் வந்திருந்தவன் முதல் வேலையாக குனிந்து அவள் காலைப் பார்க்க முனைந்தான்.

“கிட்ட வராத கிறுக்கு” என எரிந்து விழுந்தவள், “வயிறுதான் வலிக்குது” என சொல்லி வைத்தாள். ‘அடிபட்டிருக்கா, அதா இதான்னு மேலல்ல கை வைக்க வர்றான்’ என்பதால் இப்படி ஒரு பதில்

“இதோ..தோ ஒரே நிமிஷம், பெயின் கில்லர் எடுத்து தந்துடுறேன்” என்றபடி அவன் இப்போது ஓடாத குறையாக முன்னோக்கி நடக்க, “ஜஸ்ட் அப்படியே என் பின்னால வா” என அழைக்க,

வேணிக்கு அப்போதுதான் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதே கவனத்தில் படுகிறது. உயரமான மலை, அதுவும் சிறுமலை அல்ல, மேற்கு தொடர்ச்சி மலையாகத்தான் இருக்க வேண்டும், கடும் காடு பரவிக் கிடக்கும் அதில், பெரும் உயரத்தில் எங்கோ ஒரு இடத்தில் இவர்கள். இவர்களுக்கு கீழேயும் மேலேயும் மலையும் மலைமட்டுமாயும் ஒரு நிலை. இவர்களுக்கு முன்னால் பெரும் பாறையில் ஒரு குளியலறை அளவு குகை போல இயற்கையாய் அமைந்திருந்த அமைப்பில் அத்தனை அழகாய் கொட்டிக் கொண்டு இருக்கிறது குட்டி அருவி. அதன் பாறைகளிலும் மற்று எங்கும் புல்லும் புதரும் பூவுமாய் செடிக் காடு.

இதுல இவன் பெயின்கில்லர எங்க வச்சிருக்கான்?

சுற்று முற்றும் பார்த்ததில் அவள் பயணித்து வந்த வாகனம் கண்ணில் படுகிறது. பெரிய சைஸ் சோப் டப்பாதான் அது. பார்க்க அப்படித்தான் இருந்தது. இவள் இடுப்பைவிட சற்றே உயரமாய் இருந்த அதில், கிட்டதட்ட கால் நீட்டி உட்கார்ந்தது போல்தான் அமர்ந்து பயணிக்க முடியும். மலையில் குடைந்து தோண்டப்பட்டிருந்த ஒரு சுரங்கம் போன்ற குடைவுப் பாதை வழியாக பயணித்து இங்கே வந்திருக்கிறார்கள்.

இதெல்லாம் செய்தது இந்த பால்கனியா?

அவனோ அருவியை நோக்கிச் சென்று கொண்டிருந்தவன், தன் கையிலிருந்த வாட்சில் எதையோ நோண்டிக் கொண்டு சென்றானோ, இவர்கள் இறங்கவுமே தன் இருபக்க கதவையுமே அடைத்துக் கொண்டிருந்த அந்த சோப்டப்பா இப்போது அதாகவே ரிவர்ஸில் நகர்ந்து இதுவரை பயணித்திருந்த சுரங்கத்துக்குள்ளேயே போய்விட, சுரங்க முகப்பில்  வந்து மூடிக் கொள்கிறது சிறு பாறை ஒன்று. அதன் மீதிருந்த செடிகளும் பூக்களும், அருகிலிருந்த அனைத்து பாறையோடும் அப்படியே ஒத்திருக்க, எந்த இடத்தில் சுரங்கம் இருந்ததென பார்த்துக் கொண்டிருந்த இவளுக்கே குழம்பிப் போனது.

“அதுல ஆட்டோ பைலட் ஆப்ஷன்லாம் இருக்கு, சோ ஓட்றது ரொம்ப சிம்பிள், உனக்கு சொல்லித் தரேன், இங்க வந்து போக இதுதான் வழி, அதுவும் சேஃபஸ்ட் வழி” இவள் அதை கவனிப்பதை கண்டுகொண்டான் போலும், என்னமோ இதெற்கெல்லாம் சம்மதம் சொல்லிவிடுவாள் என்பது போல் ஒரு நம்பிக்கையுடன் அந்த சோப்டப்பா பற்றி இப்படி ஒரு குறிப்பையும் கொடுத்துக் கொண்டே அவன் அருவிக்குள் நுழைந்தான்.

இவளுக்கோ இப்போது இறுக்கிப் பிடித்த வயிறு மீண்டும் சுளீரென குத்தி உருவியதில், சில நொடிகளாய் வலி சற்றாய் குறைந்திருந்ததும் இப்போது இன்னுமே கூடுகிறது என்பதும் மட்டுமே கவனத்தில் வருகிறது. கூடவே அடிவயிற்றில் அடங்காமல் நடக்கும் களேபரத்தில் கழிவறை தேவை என அலறுகிறது மனம்.

“ரொம்பவும் முடியலையா வேணி?” அவனது பின்னாக வருவாள் என நினைத்தவள் அப்படியே அசையாமல் நிற்பதைக் காணவும் தவிப்பும் கனிவும் தடம் பற்றிக் கொள்கிறது அவனது குரலில்.

“சீக்கிரம் வந்து வீடை பார்த்துட்டன்னா, சீக்கிரமே திரும்பி போய்டலாம் நீ” எனவும் சொன்னான். வீம்புக்கு பிடிவாதம் பிடிச்சுகிட்டு நின்னன்னா இதை யோசிக்கோ என்பது அவன் இதைச் சொல்லக் காரணம். வலியில் நிற்கிறாளா அல்லது வரக்கூடாதென நிற்கிறாளா என அவனுக்கு எப்படித் தெரியும்?

அடுத்த பக்கம்