துளி தீ நீயாவாய் 26

“லூசாடா நீ?” மொத்த வலியும் சேர காட்டுக் கத்தலாய் கத்தினாள் வேணி.

இருந்த வயிற்றுவலியில் குளித்தால் ஒரு வேளை சற்று தெம்பாய் தோன்றுமோ என, தன் அறையிலிருந்த குளியலறையில் குளித்துவிட்டு அப்போதுதான் வெளியே வந்த வேணிக்கு, தான் என்ன காண்கிறேன் என உணரக் கூட நேரம் தராமல், சட்டென அவள் முகத்தில் மயக்க மருந்திற்கான ஸ்ப்ரேயை அழுத்தி இருந்தான் பால்கனி.

இவன் எப்படி இந்த பூட்டிய அறைக்குள் வந்தான் என நினைத்துச் சேர்க்கும் முன் நினைவு தப்பி இருந்தது அவளுக்கு. இப்போதுதான் மீண்டும் ஓரளவுக்கு உணர்வுக்குத் திரும்பிக் கொண்டிருப்பவளுக்கு, இதெல்லாம் மெல்லமாய் ஞாபகம் வந்து சேர, அதற்குத்தான் அப்படி ஒரு கத்து.

மயக்க மருந்தின் விளைவா, அல்லது அவளை ஆளுகை செய்து கொண்டிருக்கும் வலியே ஒரு வகையில் வேறு எதையும் யோசிக்கவிடாமல் அவளை குத்திக் குடைந்து கொண்டிருப்பதாலோ, அவளுக்கு பயப்பட வேண்டும் என்ற ஒன்று எண்ணத்தில் வரவே இல்லை.

கோபம் மட்டும்தான் கொந்தளித்துக் கொண்டு வந்தது.

இதற்குள் பால்கனியோ “சாரி சாரி பயந்துக்காத வேணிமா” என அவளை அமைதிப்படுத்த தொடங்க,

“நான் ஏன் பயப்படணும்? சார் கைல மாட்டி சாட்னி ஆவுறதப் பத்தி நீதான பயப்படணும்!! முட்டாள்” இருந்த வலியில் அவள் வார்த்தைகள் வெடித்துக் கொண்டு வந்தன.

ஒரு நொடி இதில் மௌனமான பால்கனி, பின்  “தப்பா எதுவுமே இல்ல வேணி, எனக்கு ஜஸ்ட் ஒரு ஹெல்ப் வேணும் உன்ட்ட இருந்து” என எங்கே அவள் தன் நோக்கத்தை தவறாக புரிந்துவிடக் கூடாதே என அதற்கு மட்டும் விளக்கம் சொல்ல முனைந்தான்.

“ஹெல்ப்பா? இப்படித்தான் ஹெல்ப் கேட்பீங்களா உங்க ஊர்ல? காட்டுமிராண்டி!! வீடு புகுந்து தூக்கிட்டு வர்ற? நீ என்னை ஒன்னுமே செய்யலைனாலும் வீட்ல உள்ளவங்களுக்கு எப்படிடா இருக்கும் இந்நேரம்?  போடா இவனே!! வாய்ல நல்லா வந்துடப்போகுது!!” குமுறியவள் தாங்க முடியா வலியில் ஃஃஸ் ஆ.. ம்மா.. என்ற சத்தங்களுடம் வலியை வாய்க்குள் அடைக்க முனைய,

“என்னாச்சு வேணிமா, வலிக்குதா என்ன? என்னாச்சு..? எங்கயாவது அடிபட்டுட்டா?” என அவன் இப்போது பதறினான். அவள் வலியில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு இப்போதுதான் புரிகிறது.

அவனது அக்கறைய உணரவும் இன்னும் பத்திக் கொண்டு வந்தது இவளுக்கு. “எனக்கு என்ன ஆனா உனக்கென்ன? வாய மூடு, கைல மாட்டினன்னா கொன்னுட கின்னுட போறேன், கடுப்பாவுது”

“வேணி ப்ளீஸ் வேணி, நிஜமா உன்ன கஷ்டப்படுத்தணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல, உண்மையில் ஹெல்ப் பண்ணத்தான் இவ்வளவு ரிஃஸ்கும். தயவு செய்து என்னை புரிஞ்சிக்கோ, மதுவ இப்பதான் நான் நாமக்கல்ல சேர்த்துவிட்டுட்டு வந்துருக்கேன், அவளுக்கு இப்போதைய தேவைக்கு அவ அக்கவ்ண்ட்ல பணம் போட்டுருக்கேன்தான், ஆனா அதவச்சே அவ முழு வாழ்க்கையும் வாழ்ந்துட முடியாது. அதுக்குன்னு மொத்தமா பெரிய அமவ்ண்டா போட்டு வச்சேன்னா, என்னோட எல்லா ப்ராபர்டியவும் பொலீஸ் ஸீஸ் பண்றப்ப அதையும் எடுத்துட்டாங்கன்னா அவ நிலமை என்னாகும்?  இங்க ஒரு பெரிய அமவ்ண்ட் சேஃபா இருக்குது. உன்னைவிட நான் நம்புற போல ஆள் எனக்கு வேற யார் இருக்கா? இதிலிருந்து மதுவுக்கு அப்பப்ப ஒரு தொகை அனுப்பிட்டு இரு வேணி. அவ சொந்த கால்ல நிக்ற வரைக்கும் இதை செய்தா கூட போதும். இப்ப அவள தெருவுல நிறுத்திட்டா பாவம் அவ எப்படி சர்வைவ் ஆவா? அது போலதான் உனக்கும். இங்க இருக்க எல்லாமே உனக்குன்னு தான் நான் வச்சுட்டுப் போறேன். சார் வீட்ல எவ்வளவு நாளைக்கு நீ இப்படி வேலையாள் போல நிக்க முடியும்? எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவு படி. பிடிச்ச வேலைக்குப் போ, இல்ல சொந்தமா தொழில் தொடங்கணும்னா கூட வயசு வர்றப்ப ஆரம்பி. எல்லாத்துக்கும் போதுமான தொகை இங்க இருக்கும்.

அதோட இந்த வீடு ஒரு சேஃப் ஹெவன். எப்பனாலும் நீ இங்க தனியா கூட தங்கலாம். ஒரு ஈ எறும்பு கூட இதை லொகேட் செய்ய முடியாது, உன்னை விட்டுட்டுப் போறதே எனக்கு உயிர் போற மாதிரி இருக்கு, இதுல ஒன்னுமில்லாம எப்படிவிட்டுட்டுப் போவேன்?”

விஷயத்தை வேணிக்கு புரிய வைத்துவிட வேண்டுமே என கெஞ்சலாய் தொடங்கிய அவன் பேச்சு, முடியும் போதெல்லாம் அவனது முழு உடைதலையுமே இவளுக்கு புரிய வைக்கும் போல இருந்தது.

“ஷட் அப்” பதிலாய் வேணி கத்திய நேரம் அவர்கள் பயணம் செய்து கொண்டு இருந்த அந்த வாகனம் நின்று இருவர் பக்கமாயும் திறந்து கொள்கிறது.

அடுத்த பக்கம்