துளி தீ நீயாவாய் 25 (8)

அதோடு மாணிக்கம் என்பது தெருவுக்கு நாலு பேருக்கு இருக்கக் கூடிய ஒரு பெயர். இதில் பால்கனியின் அப்பா மாணிக்கம் இவன் சந்தித்த அந்த மாணிக்கம்தான் என என்ன நிச்சயம்? மாணிக்கம் தன் மகனின் பெயரை விமல் என சொல்லி அழுததாகத்தான் இவனுக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆதலால் பால்கனியின் வீட்டுக்குள் அவன் இல்லாத நேரம் ரகசியமாய் சென்று குடைந்தெடுத்தான் ப்ரவி. அவனது அப்பா மாணிக்கத்தின் ஒரு புகைப்படம் கூட இல்லாததுதான் இது உண்மையில் அந்த மாணிக்கத்தின் வீடேதானோ என வெகுவாக எண்ண வைத்தது இவனை.

தன் அப்பாவின் பிறந்த நாள், நினைவுநாளை அத்தனை சிறப்பாய் எடுத்துச் செய்கிறவன் அவரின் ஒரு புகைப்படத்தை கூடவா வைத்திருக்க மாட்டான்?! அப்படியானால் ஏன் மறைக்கிறான்?!

மாணிக்கத்தின் அப்பா பெயர் பால்கனி. அதைத்தான் அவர் தன் மகனுக்கு வைத்திருப்பதாக அவரே உறவினரிடம் தெரிவித்ததாக ஊரார் சொல்லி இருந்தனர். அதை பழைய நிலப்பத்திரத்தை வைத்து உறுதிப்படுத்திக் கொண்டான் ப்ரவி. மாணிக்கத்தின் தந்தை பெயர் பால்கனி என்றுதான் இருந்தது.

அப்படியானால் பால்கனியை அவனது அப்பா கூப்பிடும் பெயர் விமலாக இருக்குமோ என இவன் யோசித்த அதே சமயம், விமல் என மீட்பு முகாமில் மகனைக் காணாமல் கதறிய மாணிக்கம் இங்கு யாரிடமும் விமல் என்ற பெயரை ஒரு முறை கூட குறிப்பிட்டதாகத் தகவல் இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டான்.

ப்ரவியை சிந்திக்க வைத்த மற்ற முக்கிய விஷயம் பவியிடம் பெண் கேட்க வந்த போது பேசிய பால்கனி வெகு பந்தாவாக தன் பண நிலவரத்தை அறிவித்தவன். ஆனால் இங்கோ ஊரில் அனைவரும் காண பெரிய வீடு, பெரிய கார் என வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் தன் தொழில்களைக் கூட அறிக்கைவிட்டுக் கொள்ளாதவன்.

வேணிக்காக ஆரம்பித்த இந்த முரண் வேணி சம்பந்தப்பட்ட பால்கனியின் எல்லா செயல்களிலுமே இருப்பதாகப் பட்டது ப்ரவிக்கு. அதிலும் அவன் தன் தந்தையைப் பற்றி  நல்லதாக வேணியிடம் பேசி இருக்கவே இல்லை. ஆனால் இங்கோ மாணிக்கத்தை தவிர அவன் எதையுமே கொண்டாடுவதே இல்லையாம். ஏன்? இதையும் மனதில் நிறுத்திக் கொண்ட ப்ரவி,

அடுத்து பால்கனி பற்றி தகவல் சேகரிக்க முயன்றது முன்பு கொத்தடிமை முறையிலிருந்து இவனால் விடுவிக்கபட்டவர்களிடம். அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் சேமிக்கப்பட்டே வைக்கப்படவில்லை என்றாலும், (அவர்களை திரும்பவுமாய் போய் சிந்தியின் தந்தை தொந்தரவு செய்தால் என்னாவது, ஆக அவர்களது அடையாளங்கள் மறைக்கப்பட்டு, முகவரிகள் கூட மீட்பு மையம் முகவரி மட்டுமே பதியப்பட்டு இருந்தன) தாஸ் மற்றும் ஓரிருவர் மீட்பு மையத்துடன் இன்னமும் தொடர்பில் இருந்ததால் அவர்களிடம் பால்கனி புகைப்படத்தை காட்டி இதுதான் விமலா என விசாரிக்க வைத்தான் ப்ரவி.

அவர்கள் இது யாரென்று தெரியவில்லை. விமலுக்கு இத்தனை வயதெல்லாம் ஆக வாய்ப்பே இல்லை. மிஞ்சிப் போனால் விமலுக்கு இப்போது இருபது இருபத்திரெண்டு வயதிருக்கும். விமலைப் பற்றி தெரிய வேண்டுமெனில் அந்த கொத்தடிமை கூட்டத்தில் பெற்றோர் யாருமின்றி கிடந்த ஒரு பையன், அவனது பெயர் கூட நரேனோ என்னவோ, விமலுக்கு வெகு நட்பு அவனிடம் கேட்டால்தான் தெரியும், மீட்கப்பட்ட கூட்டத்தில் அவனுமே இருந்தது போல் இல்லை என தகவல்தர,

அடுத்து நரேனைப் பற்றி விசாரணையை முடுக்கிவிட்டான் ப்ரவி.

“டெல்லிகார பையன்னோ என்னவோ சொல்வாங்க சார், கலரா இருப்பான், ஹிந்தி நல்லா பேசுவாப்ல, எங்க கண்காணி மகன் வீட்டுப்பாடம் முழுக்க இவன்தான் கிடந்து எழுதிகிட்டு கிடப்பான். இங்லீஷ் மீடியத்துல படிச்ச கண்காணி மகனுக்கு இவன் இங்க்லீஷ்லயே அப்படி பாடம் எடுப்பான் அப்பயே.

எப்படி வந்து இங்க மாட்டினானோ, அப்ராணி. யார் அடிச்சாலும் வாங்கிப்பான். அவனுக்கு யாரும் இல்லன்னு கண்காணி ஆட்கள் மட்டுமில்ல இங்க வேலையாட்களுமே அத்தனை வேலை ஏவுவாங்க, இவங்களுமே அடிப்பானுங்க, அழக்கூட செய்யாம கிடப்பான்.

மாணிக்கம் பையன் விமலுக்கும் இவன் வயசேதான் இருந்திருக்கும், அவன் இந்த கூட்டத்தில வந்து சேரவும் எப்படியோ அந்த நரேனுக்கும் அவனுக்கும் செட் ஆகிட்டு, மாணிக்கமும் இந்த நரேன் பையன நல்லா பார்த்துப்பார். அப்பான்னு அவரத்தான் கூப்டுட்டு அலைஞ்சான் அந்த நரேன், அந்த விமல் பையன் மட்டும் அந்த நரேன கென்னியோ என்னமோன்னோ கூப்டுவான்” என தாஸ் முதற்கொண்டோர் சொல்ல,

இவ்வளவு தகவல் கிடைத்தால் போதாதாமா? டெல்லியில் இருந்த அத்தனை பள்ளியிலும் பத்து முதல் பதினைந்து வருடம் முன்பு படித்த அத்தனை மாணவர்கள் பட்டியலிலும் நரேன் என்றோ கென்னி என்றோ யாரெல்லாம் இருக்கிறார்கள் எனத்  தேட ப்ரவி வழி செய்ய,

கிடைத்த ஒரு நரேன் கென்னத் புகைப்படத்தை தாஸ் உட்பட்ட மீட்கப்பட்ட நபர்கள் “இதுதான் சார் அந்த நரேன் பையன்” என ஒத்துக் கொள்ள, பால்கனி படத்தை யாருமே நரேன் எனச் சொல்லவில்லை என்றாலும் ப்ரவிக்கு அது நரேன்தான் என மனதுக்குள் உறுதியானது.

காரணம் மீசை அரும்பத் துவங்கி இருந்த ஒரு 18 வயதுப் பையனை நரேன் என அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவன் ஒல்லி கம்பு குச்சியாய் வேறு இருந்திருக்கிறான். அவனது அம்மா ஒரு குஜராத்திப் பெண்மணி, அப்பா தமிழ், பையனுக்கு அம்மாவின் நிறம் வேறு. சின்ன வயது புகைப்படத்திலும் அதே கம்புகுச்சி, அதே கலர்.

இதில் வேஷ்டி சட்டை அணிந்த பால்கனியோ நன்றாக சதை பிடித்து ஓரளவு தொந்தியாகி சளிந்த தேகத்தோடு முறுக்கிவிட்ட மீசையோடு மாநிறமாக  சுற்றிக் கொண்டிருப்பவன். ஆக யாருமே பால்கனியை நரேன் என இனம் காணவில்லை என நினைத்த ப்ரவி,

அடுத்த பக்கம்