துளி தீ நீயாவாய் 25 (9)

திருடனை நேரில் பார்த்திருந்த அந்த குடோன் செக்யூரிட்டியும் வந்தவன் ஒல்லியாக இருந்தான் எனச் சொன்னதால், அவர் சொல்லும் ஒல்லி உருவமாக, இந்த பால்கனியின் புகைப்படத்தை, மீசையற்ற முகமாக, வெண்ணிற தேகத்தோடு டெக்னாலஜி உதவியுடன் மாற்றி வரைய வைத்து,

அந்தப் படத்தை தாஸிடம் காண்பிக்க அவர் இது நரேன் என ஒத்துக் கொண்டார்.

இந்த நரேனாகிய பால்கனிதான் திருடன் என்பதை எவ்வாறு ஊர்ஜிதம் செய்ய? குடோன் செக்யூரிட்டி இருட்டில் திருடன் முகத்தை சரியாக பார்க்கவில்லை என்கிறார். அதோடு பாதி முகத்திற்கு மேல் மப்ளரால் மறைத்து வேறு வந்திருக்கிறான் திருடன்.

ஆக அடுத்த வேலையாக  ப்ரவி விசாரித்த இடம் விமான அலுவலகம். ஆம் திருடன் பெங்களூரிலிந்து நான்கு மணி நேரத்தில் இவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தானே, அந்த காரியத்தின் அடிப்படையிலேயே விசாரணை.

திருடன் பெங்களூரிலிருந்து பிறந்த நாள் வாழ்த்துக் கேட்டு இவனை அழைத்த நேரம், அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என அவன் அழைத்த எண்ணின் மொபைல் டவர் காட்டியதோ, அங்கிருந்து விமான நிலையம் செல்ல, காரில் உட்சபட்ச வேகத்தில் சென்றாலும் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும்.

சரியாய் அந்த ஒன்றரையாவது மணி நேரத்தில் ஒரு விமானம் சென்னைக்கு கிளம்பி இருந்தது. அதுதான் பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கான அன்றைய நாளின் கடைசி விமானம். ஆனால் அதில் பயணிக்க விமான நேரத்திற்கு குறைந்தது அரை மணி நேரம் முன் விமான நிலையம் வந்தால்தான் உண்டு என்பதாலும், அவ்விமானத்தை திருடன் பிடித்திருக்க முடியாது என அப்போது நம்பி இருந்தான் ப்ரவி.

அதோடு சென்னைக்கு அந்த விமானம் வந்து சேர்ந்த அரை மணி நேரத்தில் அந்த நாளின் மதுரைக்கான கடைசி விமானம் சென்னையிலிருந்து கிளம்பி இருந்தது. மற்றபடி தெற்கு நோக்கி வர வேறு எந்த விமானமும் மறுநாள் காலை வரை இல்லை.

இதில் இந்த சென்னையிலிருந்து மதுரை வந்த விமானத்தில், முந்திய பெங்களூர் விமானத்தில் வந்த எந்த பயணியுமே பயணித்திருக்கவும் இல்லை. பயணியர் அட்டவணை அப்படித்தான் காட்டியது.

திருடன் பெங்களூரில் விமானம் பிடித்து சென்னை வேறு வந்திருந்தால் இந்த விமானத்தில் பயணம் செய்தால் மட்டும்தானே மதுரை வரையாது வர முடியும்? அதிலும் மதுரையிலிருந்து மணிக்கு 140 – 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் பறந்தால் கூட ஒன்றரை மணி நேரம் ஆகும் நெல்லை வர.

கூட்டிப் பார்த்தால் மொத்த பயண நேரம் மற்றும் செக்கின் டைம் என 7 மணி நேரம் குறைந்தது தேவைப்படுகிறது. ஆனால் திருடன் இவனிடம் பேசியதிலிருந்து 4 மணி நேரத்தில் இவன் வீட்டில் வந்து நின்றிருந்தான்.

ஆக விமான மார்க்கம் கூட அவன் வந்திருக்க முடியாது என ப்ரவி அப்போது நினைத்திருந்தாலும், இப்போது நரேனின் ஒல்லி புகைப்படத்தை அந்த இரு விமானங்களிலும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பணி செய்த விமான பணிப்பெண்களிடம் காட்டி ப்ரவி விசாரிக்க,

“கிட்டத்தட்ட இது போல ஒருத்தர பார்த்த ஞாபகம் இருக்கு சார்” என ஒரு பணிப் பெண் சொன்னார். அதாவது சென்னையிலிருந்து மதுரை வந்த விமானத்திலிருந்த பணிப் பெண் அப்படி ஒரு தகவலைத் தந்தார்.

இதில் அந்த குறிப்பிட்ட நாளின் பெங்களூர் விமான நிலைய cctvபதிவுகளை பெற்று ப்ரவி அலசி ஆராய, விமான நிலையத்தில் அதுவும் சென்னை விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் போது, படு ஸ்டைலிஷான ஒல்லி டீனேஜ் உருவ பால்கனி எதோ ஒரு பானம் வாங்கி பருகியபடி நிதானமாக நடந்து வருவது ஒரு இடத்தில் காணக் கிடைத்தது.

ஆக பால்கனி அன்று பெங்களூரிலிருந்து மதுரை வந்திருக்கிறான் எனவும் நிச்சயம்.

இப்படி இந்த எல்லா தகவல்கள் வழியாகவும் பார்க்கும் போது ப்ரவிக்கு தெளிவாகவே புரிகிறது இந்த குடோன் திருடன் பால்கனிதான் என. ஆனால் இது எதுவுமே சட்டத்தின் முன் பால்கனிதான் திருடன் என நிரூபிக்கப் போதாதே.

என்ன மாயம் செய்து திருடிய இடத்திலிருந்து அரை மணி நேரத்தில் விமான நிலையம் வந்தான்? என்ற கேள்வி முதல், அந்த நாளில் அந்த நேரத்தில் தன் பெயர் மற்றும் உருவ அடையாளத்தை மாற்றி ஒருவன் விமானத்தில் பயணம் செய்தான் என்பதாலேயே அவன்தான் திருடன் என எப்படிச் சொல்ல முடியும்? என்ற கேள்வி வரை எதற்கும் ஆதாரப் பூர்வமான பதில் ப்ரவியிடம் இல்லையே.

எல்லாவற்றுக்கும் மேலாக திருடனான பால்கனி தனியாக இப்படிச் சுற்றிக் கொண்டிருக்க, திருடிய சரக்கையும் அதை அவன் விட்டுவந்த அவனது கூட்டமும் எங்கே?  என்ன மந்திரம் போட்டு இத்தனை ரகசியமாகவும், இத்தனை வேகமாகவும் சுரங்கம் தோண்டுகிறார்கள் இவனது கூட்டம்? இந்த கும்பலின் நோக்கம்தான் என்ன? என்ற முக்கிய கேள்விக்கு விடையே இல்லையே!

இப்படி பதிலே இல்லாத கேள்விகளுடன் ஆதாரமே இல்லாத நிலையில், இவன் பால்கனியை கைது செய்தால் கூட அடுத்த நிமிஷம் வெளிய வந்துவிடுவான் அவன் என்பதுதான் நிதர்சனம்.

அதோடு பால்கனியின் கும்பல் வேறு எச்சரிக்கையாகி மொத்தமாக தப்பிவிடும், இல்லையென்றால் அவர்கள் எதையும் தாக்க திட்டம் போட்டிருந்தால் அதை ரொம்பவும் சீக்கிரமாக செய்து முடிக்க வேறு செய்வார்கள்.

அதனால் எல்லா கேள்விகளுக்கும் விடையோடும், அதற்கான முழு ஆதரங்களோடும் இந்த பால்கனியை பிடித்தால் மட்டுமே இந்த குடோன் திருட்டுப் பிரச்சனையும், வழக்கும் உண்மையில் முடிவுக்கு வரும்.

ஆக பால்கனி தானாக ஆதாரத்தோடு இவன் கையில் வந்து சிக்க வேண்டும் என்ற வகையில் அடுத்த காய்களை நகர்த்தத் துவங்கினான் ப்ரவி.

அடுத்த பக்கம்