துளி தீ நீயாவாய் 25 (11)

ஆதாரங்கள் திடமாய் கையில் கிடைக்கும் வரை அவன் மீது துளி கூட சந்தேகம் இல்லை என காட்ட வேண்டிய கட்டாயம் வேறு இருக்கிறது ப்ரவிக்கு.

இதில் அவன் வயலில் போய் இவர்கள் துப்பறிவதும் கருவிகள் தேடுவதும் எப்படி?

அதற்காகத்தான் முக்கியமாக இந்தத் திட்டம். அதாவது மீரட்டை அந்த குடோன் திருடன் கெட்டப்பில் வர வைத்து ப்ரவி குடும்பத்தை பவியின் வயலில் வைத்து மிரட்ட வைப்பது. பின் அதைச் சாக்காக வைத்து வந்து மிரட்டிய கிரிமினல் எப்படி உள்ளே வந்தான் என துப்பறிய இவர்கள் வயலைச் சுற்றிலும் இருக்கும் பால்கனியின் வயலை சல்லடையாய் சலிப்பது.

அதைக் காரணமிட்டே அங்குள்ள மரங்களில் எக்கசக்க கேமிராக்கள் அமைப்பது. ஆக கருவிகளை கண்டடைய வழி கிடைக்கலாம் இதில். அதோடு இத்தனை கேமிராக்கள் அமைத்து வைத்து, “அங்க நிறைய கேமிரா வச்சிருக்கோம்” என சொல்லியும் வைத்தால், பால்கனியோட வயலில்தான் அவனுடைய சுரங்க திருட்டு கூட்டாளிகள் இருக்கிறார்கள் எனில் அவர்கள் இப்போதைக்கு வம்பு தும்பாக எதையும் செய்ய மாட்டார்களே! அவர்களை ப்ரவியின் கூட்டம் கண்காணிக்கிறது என்ற பயம் இருக்குமே!

ஆக ஒரு வகையில் இப்போதைக்கு அவர்களை தீமை எதுவும் செய்ய விடாமல் அடக்கி வைப்பதாகிறதல்லவா?

அதே நேரம் பால்கனிக்கும் அவனைத்தான் துப்பறிகிறார்கள் என்ற எண்ணமும் வராது. கூடவே ப்ரவி குடும்பத்தை வந்து மிரட்டும் கிரிமினலை குடோன் திருடன் என்றே ப்ரவி நினைப்பதாக காட்டுவதால் தன்னை ப்ரவி சந்தேகிக்க வாய்ப்பே இல்லை என்றும் அவன் நம்பிக் கொள்வான்.

இப்படி இதையெல்லாம் நோக்கமாக வைத்துதான் அந்த புல்லட் புலிக்காரன் சீனை வடிவமைத்தான் ப்ரவி. கதை, காட்சி அமைப்பு, ஸ்க்ரிப்ட், டைரக்க்ஷன் எல்லாம் ப்ரவி. ஆர்ட் டைரக்க்ஷன் அதாங்க செட் போடுறது அதாவது இங்க குண்டு மறைச்சு வைக்கிறது, இன்ன பிற கருண்,

ஆக்க்ஷன் மீரட் மற்றும் அனைவரும். அதாவது பவி உட்பட. ப்ரவி கிணத்துக்குள்ள இறங்கி கதை சொன்னானே, அப்போ அவன் சொன்னது இந்த ட்ராமா பத்தின கதையும்தான்.

ஹனிசன்னுக்கு இடையில் இப்படி பையன் தொழிலையும் கவனிச்சான்னு நினச்சுக்கணுமா இல்ல வேலைக்கு நடுவுல லவ் ட்ராக்கையும் ஓட்டிகிட்டான்னு புரிஞ்சுக்கணுமான்றது அவங்க அவங்க விருப்பம்.

ஆனால் வேணிக்கு மட்டும் இது எதுவும் தெரியாது. ஆக அவள் பயந்துவிடக் கூடாதென பவி வேணி அருகில்தான் இருப்பதாக ஏற்பாடு. ப்ரவி பவிக்கு தனிமை கொடுக்க வேணியை வயலின் ஒரு புறமாய் அனுப்பியது கருண்தானே, அப்படி சென்ற வேணி அங்கிருந்து பவியிடம் வரவும் வெடிகுண்டை வெடிக்க வைக்க இவர்கள் நினைத்திருக்க,

கனி அவளுடன் பேசப் போய் நின்றான். கனி இப்படித்தான் செய்வான் என 100% நம்பிக்கை இருந்தாலும் கனி தனக்கு வேண்டாம் என வேணியே சொல்வாள் என அப்போது வேணியைப் பற்றி ப்ரவி குடும்பத்திடம் உறுதி இருந்ததால் இதில் இவர்கள் தலையிடவில்லை. அவளுக்கு வேண்டாததை வேண்டாம் எனச் சொல்ல அவள் பழகித்தான் ஆக வேண்டும்.

அதோடு கனியும் விபரீதமாக அவளிடம் நடந்து கொள்ள மாட்டான் என ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தான். மது வீட்டு நிகழ்விலும் சரி, அதற்கு முன் பெண் கேட்டு வந்த நிகழ்விலும் சரி, அவன் பிதற்றும் காதலை வேண்டுமானால் தவறு என்க முடியுமே தவிர, அவன் நடத்தையில் கண்ணியக் குறைவு இருந்ததென சொல்வதற்கில்லைதானே!

அதைத்தாண்டி பால்கனி எதாவது வாயோ, கையோ நீட்ட முயன்றால் அப்போது அவனை எப்படி கவனிக்க வேண்டுமோ அப்படி கவனித்துக் கொள்ள சற்று தூரத்தில் ஒரு மறைவில் கருண் நின்றுகொண்டுதான் இருந்தான்.

ஆனால் அந்த சீனுக்கான வெடிகுண்டுகள் வயர் கொண்டு இணைக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், வயர்  புதைந்திருந்த ஒரு பகுதில் ஏதோ தண்ணீர்பட்டு, அந்த இடம் மட்டும் பள்ளமாகி இருந்தது.

குழி தோண்டி மீண்டும் மூடிய இடத்தில் தண்ணீர் பட்டால் இப்படிதான் அந்த இடம் மட்டுமாய் பள்ளமாகி இங்கு சற்று முன் குழி தோண்டப்பட்டது எனக் காட்டிக் கொடுக்கும்.

தப்பித் தவறி அது பால்கனியின் கண்ணில் பட்டுவிட்டால் இவர்கள் திட்டம் மொத்தமும் சொதப்பிவிடக் கூடாதே எனதான் ப்ரவி அதைக் கண்டவுடன், திட்டத்தை அப்போதே நிறைவேற்றிவிட்டான்.

குண்டை வெடிக்கச் செய்யும் முன் அவன் கருணுக்கு மொபைலில் அழைப்பு கொடுக்க வேண்டும். அதுதான் சமிஞ்சை. அவன் அதைச் செய்ய,

கருண் தன் அருகில் இருக்கும் ஒரு லெவரை இழுக்க வேண்டும். (Lever என்பது நெம்புகோல், பேருந்தில் இருக்கும் gear rod போல் ஒன்றை நினைத்துக் கொள்ளவும்). அது முந்திய நாள் இரவே தரைக்குள் புல்லட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் ஒரு ஆளுயர கனசதுர பெட்டியை (க்யூப்) சட்டென தரைக்கு மேல் கொண்டு வரும். தரைக்கு மேல் வரவும் பெட்டியின் ஒரு பக்க கதவு திறந்து தரையோடு விழும். அந்த பெட்டிக்குள் சற்று நேரம் முன்புதான்  உள்ளே சென்று நின்றிருந்த மீரட்,

புல்லட்டை சீறிப் பாயச் செய்து கொண்டு வெளியே வர, ப்ரவி அதே நேரம் அங்கு வெடிகுண்டுகளையும், புகைக்கென்றே வைக்கப்பட்டிருந்தவைகளையும் வெடிக்கவிட,

கனி அங்கு அலறாத குறையாக ஓடி வர, மீரட் சரியாக டயலாக் பேச, எதோ அவன் கையில் கன்ட்ரோல் இருப்பது போல், ஆக்க்ஷன் காமிக்க, அதே நேரம் அடுத்த ஒரு லெவரை கருண் இழுக்க, தரைக்குள் இருந்து இன்னொரு பெட்டி மீரட் முன்னால் குதித்து வந்து உட்காரும்.

மூன்று நாள் முன் சாலையில் அடிபட்டு இறந்து போன ஒரு நாயின் உடல்தான் உள்ளே இருந்தது. புலின்னு டயலாக் பேசினா பால்கனி என்ன வந்து பெட்டிய திறந்து பார்த்தா செக் பண்ணப் போறான்?!

அடுத்த பக்கம்