துளி தீ நீயாவாய் 25 (6)

எப்போதும் ஆ வூ என பெரிதாய் அலட்டிக் கொள்ளாத ப்ரவி இப்போதும் “ஓ” என ஒற்றை வார்த்தையில் இதைக் கேட்டுக் கொண்டவன்,

“அந்தப் பொண்ணு பேரெண்ட்ஸோட கூட இருக்க முடியாத சூழ்நிலைல இப்ப நம்ம வீட்ல தங்கி இருக்கு மீரட், நான் ஹேண்டில் செய்ற கேஸ்ல உள்ள ஒரு கிரிமினல் ஏனோ அவள டார்கெட் செய்றான். நான் இப்ப கூட அந்த பொண்ணோட விஷயமாதான் கிளம்பிகிட்டு இருக்கேன். சீக்கிரம் அங்க வந்துடுவேன்” என மீரட்டிடம் சற்றாய் தகவல் கொடுத்தான். வழக்கு முடியும் முன் அது பற்றி ப்ரவி இவ்வளவுதான் சொல்ல முடியும்.

அதுவும் மீரட்டுக்கு உதவி செய்யும் சுபாவம் வெகு அதிகம். அவன் துறுதுறுப்பானவன். அதீத தைரியசாலி, மற்றும் திறமைசாலி. அபார புத்தி சாதுர்யமும் உடையவன். அட்வென்சர் விரும்பியும் கூட. எந்த சூழலுக்குள்ளும் நுழைந்து தன் காரியத்தை சாதித்துக் கொண்டு வெளிவரத் தெரிந்தவன். கூடவே துப்பாக்கிச் சுடுவதில் வெகுவாக தேர்ந்தவனும் கூட. முறையாய் லைசென்ஸ் பெற்ற பிஸ்டல் எப்போதும் அவனிடம் இருக்கும்.

அவன் கண் முன்னால் ஒரு சிறு பெண்ணுக்கு ஆபத்தென்ன, சிறு பிரச்சனை என்றால் கூட சும்மா கடந்து போய்விடுவானா என்ன? ப்ரவி வழக்கு பற்றி எதையும் சொல்லாமல்விட்டால் வேணிக்கு உதவ அவனே களத்தில் கண்டிப்பாக இறங்குவான். அது என்ன வித ப்ரச்சனைகளை கொண்டு வருமோ?

அதோடு இந்த குடோன் திருடனை தீவிரவாத இயக்கத்தோடு ஏதும் தொடர்புடையவனோ என்றெல்லாம் சந்தேகம் இருக்கும் போது, அத்தகையவனை எதிர்க்க மீரட்டை எப்படி இவன் விட இயலும்? அது மீரட்டுக்கே பெரும் ஆபத்தாகிவிடுமல்லவா? ஆக இதையெல்லாம் யோசித்த ப்ரவி

“நான் வர்ற வரைக்கும், முடிஞ்ச வரை தூரத்தில் இருந்து மானிடர் செய் மீரட். வேணிக்கு என்னை மோசமானவன்னு காமிக்க மட்டும்தான் இப்போதைக்கு தீஃப் எதோ ப்ளான் செய்றான். அவளுக்கு வேற ஆபத்து எதுவும் இப்போதைக்கு இருக்காதுன்னுதான் நம்புறேன். அதனால நாம பயந்துக்க இதில் ஒன்னுமில்ல,

இந்த இன்சிடென்ட வச்சு அந்த தீஃபை நான் லோகேட் செய்தாதான் இந்த பிரச்சனைக்கு நாம முழு தீர்வும் கொண்டுவர முடியும். அதனால எதையும் தடுக்க ட்ரைப் பண்ணாத, பெருசா வேணிக்கு ஆபத்துன்னு உனக்கு தெரிஞ்சாலொழிய நீ அவங்க யார் கண்லயும் படக் கூடாது.

யாருக்காவது உயிருக்கு ஆபத்துனாலொழிய உன் பிஸ்டல் வெளிய வரவேக் கூடாது, அதுவும் மிரட்டுறதுக்கு மட்டும்தான் வெளிய எடுப்பன்னு நான் நம்புறேன். இதோ நான் இப்பவே கிளம்பிட்டேன்” என மீரட்டிற்கு கட்டளையல்லாத கட்டளை கொடுத்து மீரட்டையும் வேணியையும் காக்க வழி செய்தான்.

ஆக அடுத்து ஆட்டோ சகதியை தாண்டும் போது, அந்த பெட்ரோல் உறிஞ்சி கொட்டியவன் ஆட்டோ ட்ரைவரிடம் ஈஈ என பேசியபடி கிளம்பிப் போவதைப் பார்த்தும் மீரட் அமைதியாகவே இருந்தான்.

வேணியை ஏற்றிக் கொண்டு இப்போது கிளம்பிய ஆட்டோ சற்று நேரத்தில் எரிபொருள் காலியாகி நின்று போக, ஆட்டோ இவன் பார்வையில் இருக்கும் வண்ணம் இன்னொரு கிளை சாலையில், முகவரி தெரியாதவன் அதை கண்டு பிடிக்க அலைவது போல் காரில் அலைந்து கொண்டிருந்தான் மீரட். அப்பதான இவன யாரும் வேணிக்காக வந்தவன்னு நினைக்க மாட்டாங்க!

பகல்வேளை என்பதால் அந்த குடியிருப்பு பகுதியில் ஆள் நடமாட்டமென யாருமே இல்லை.

இதில் வேணி ஆட்டோவைவிட்டு இறங்கவும்தான் மீரட் வெகுவாக எச்சரிக்கையாகிப் போனான். அவள் ஆட்டோவில் காத்திருப்பாள் எனதான் அதுவரை இவன் எதிர்பார்த்திருந்தது. இங்கோ வேணி இறங்கி குடுகுடுவென இவன் பார்வைக்கு மறைவான பகுதிக்கு ஓட,

வேறு வழியின்றி காரைவிட்டு இறங்கி ஆனால் வேணி செல்லும் தெருவுக்கு இணையான அடுத்த தெருவில், கூடிய வரை மறைவில் இவன் ஓட, அங்கு வேணி சாருமதியின் பின்னால் போக, இப்போது மீரட் கண்ணில் படுகிறான் அவன். ஒரு வீட்டின் மறைவிலிருந்து சட்டென வெளி வந்த அந்த ஜீன்ஸ்காரன் வேகமாய் வேணி நோக்கிப் போக,

மீரட் வேணிக்கு எதுவும் ஆபத்தோ என நினைத்துவிட்டான். ஆக வேணி இருக்கும் தெருவுக்கும் இவன் இருக்கும் தெருவுக்கும் இடையில் இருந்த இரு வரிசை வீடுகளின் சுற்றுச்சுவருக்குள் ஏறிக் குதித்து இறங்கி, வேணி நின்றிருக்கும் இடத்திற்கு அடுத்திருக்கும் வீட்டின் சுற்றுச் சுவருக்குள் இவன் நுழைய,

அப்போதுதான் அந்த ஜீன்ஸ்கார பால்கனியும் வேணியும் பேசிக் கொள்வது இவன் காதில் விழுகிறது. பால்கனியால் ஆபத்தென வேணிக்கு அப்போதைக்கு எதுவும் இல்லை எனவும், அவன் வேணியிடம் காதல், கல்யாணம் என்ற நோக்கில் பேசிக் கொண்டிருக்கிறான் எனவும் புரிகிறது மீரட்டுக்கு. அதே நேரம் அந்தக் கடிதம் பற்றியும் தெரிய வருகிறது.

வேணி கனியை ‘நீதான் இதை செய்திருப்ப’ என லாஜிக்காக மடக்கும் நேரத்தில் வரும் கனியின் உடல்மொழி மற்றும்  வெற்றுப் பார்வை எல்லாம் கடிதம் எழுதியது பால்கனியாகவே இருக்குமோ என்றும் அவனை நினைக்க வைக்கிறது.

அவர்களின் மீதே கண் வைத்துக் கொண்டு அவர்கள் புகைப்படத்தை மொபைலில் பதிப்பித்து ப்ரவிக்கு வாட்சப் செய்தான். ப்ரவியை மொபைலில் அழைத்து வேணி, கனி உரையாடல் அவனுக்கும் கேட்கும்படி செய்தான்.

ஆக அன்று வேணிக்கும் கனிக்கும் இடையில் நடந்த அனைத்தும், மது விஷயம் உட்பட ப்ரவிக்கு அப்போதே தெரியும். எதையும் காட்டிக் கொள்ளாமல் சாருமதியை சந்தித்துவிட்டு ப்ரவி திரும்ப, வேணியும் பால்கனியும் கூட கிளம்பிப் போய்விட்டனர்.

மீரட்டையும் நன்றி சொல்லி பத்திரமாக அனுப்பிவிட்டான் ப்ரவி. நேரம் அதிகமாகிவிட்டதால் பவி கருணைக் கூட சந்திக்காமல் அப்படியே கிளம்பி இருந்தான் மீரட்.

அடுத்த பக்கம்